SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருமலை விளங்கும்ஞான சத்குரு

2021-01-20@ 10:52:15

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் ‘தென்றன் மாகிரி நாடாள வந்தவ’ என்ற குறிப்பை வைத்திருக்கிறார். இது பொதிய மலையைக் குறிப்பதாகும். இங்குள்ள பாபநாசம் எனும் திருத்தலத்தில் அருணகிரியார் இரண்டு பாக்களை அருளிச் செய்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பூமியைச் சமன்படுத்துவதற்காக அகத்தியரைச் சிவபெருமான் தெற்குத் திசை அனுப்பி வைத்ததால் அவரால் இறைவன் திருமணத்தைக் கண்டுகளிக்க முடியாமல் போயிற்று. எனவே, சிவனார் அகத்தியருடன் லோபா முத்திரைக்கும் இத்தலத்தில் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார். கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என்று அழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்.

இறைவன் பாபநாசநாதர். இறைவி உலகம்மை. கோயில் வாசலில் நின்று பார்க்கும் பொழுது மலையடிவாரத்தில் பொங்கி நுரைத்துக்கொண்டு வரும். தாமிரவருணியில் மீன்கள்போல் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடும் பக்தர்களைக் காணலாம். நுழைவாயிலில் ஆறுமுக நயினாரும் தல விநாயகரும் காட்சி தருகின்றனர். வேலைப்பாடுகள் நிறைந்த பிரதான வாயிற் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். பலி பீடம், கொடிமரம், ஒரு பக்கமாய்ப் பார்த்து கொண்டிருக்கும். நந்தி இவற்றைக் கடந்து உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். தேவிக்குத் தனிச் சந்நதி உள்ளது.

வலப்புறம் நடராஜசபை உள்ளது. இவர் புனுகு சபாபதி எனப்படுகிறார். நடராஜர் சிவகாமி திருவுருவங்கள் சந்தனம் பூசப்பட்டு வெண்ணிறமாகக் காட்சியளிக்கின்றன.கருவறையைச் சுற்றிலும் கஜசம்ஹாரர், ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், அகத்தியர், புலத்தியர் ஏகபாத மூர்த்தி, கிராதர் ஆகியோரைக் காணலாம். கோஷ்டத்தில் விநாயகர், முருகன், புடைப்புச் சிற்பமாக துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோரைத் தரிசிக்கலாம்.

முதற்பிராகாரத்தில் சங்கநிதி - பதுமநிதி, சப்த மாதர்கள், விநாயகர், வீரபத்ரர், ரிஷபத்தின் மேல் கலியாண சுந்தரர், லோபா முத்திரையுடன் கூடிய அகஸ்தியர் ஆகியோரைத் தரிசிக்கலாம். விநாயகர், சொக்கர் மீனாட்சி ஆகியோரைத் தரிசித்து முருகன் சந்நதியை அடைகிறோம். இந்த முருகனை, க்ஷேத்ரக் கோவைப் பாடலில் ‘‘தென்றன் மாகிரி நாடாள வந்தவ’’ என்று அழைக்கிறார். [‘‘தென்றல் காற்றிற்குப் பிறப்பிடமான சிறந்து பொதியமலையில் வீற்றிருக்க வந்தவனே’’ என்று கூறுகிறார்] அருணகிரியாரின் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. திருப்புகழ்ப் பாக்களைப் பார்ப்போம்.

‘‘துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க    தாள வோசை
தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
 சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்

திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.’’

பொருள் : துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த சூலத்தை ஏந்திய காளியின் செங்கையிலுள்ள தாளத்தின் ஓசை சப்திக்க, சுழன்று ‘சொக்க’க் கூத்தை ஆடும் சிவபிரான் கேட்டுக்கொண்டபடி பிரணவப் பொருளை உபதேசித்தவனே! பல திக்குகளிலும் வானிலும் சென்று சூரர்கள் சிதறும்படித் தாக்கிய வீரனே! வெட்சி, பிச்சிப் பூ மாலைகளை அணிந்தவனே! மழலை வள்ளியுடன் பொதிய மலையில் குழந்தையாக விளங்கும் முருகனே!
[என் அகம் ஆவி எய்த்து நித்தமானவீன முறலாமோ?]
மற்றொரு பாவநாசப் பாடலில், முருகப் பெருமான் தனக்கு வேல் பொறி,
மயில் பொறி அளித்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய்’’
என்பார்.

‘‘ நாய்போல், முடக்கத்தைச் சம்பவிக்கச் செய்யும் பிணிகளும் வந்துகூடி வேதனைகளை உண்டாக்க, சுற்றத்தினர் அனைவரும் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்றேன். என்னைக் கவனித்து, உன் சமீபத்தில் வரச் செய்து, மகா தவசீலர்களின் கூட்டத்தில் சேரும்படி அருள்புரிவாயாக. எனக்கு ‘இவன் ஒப்பற்றவன்’ என்று கூறும்படி அருள்வாயாக’’ என்று வேண்டிக்கொள்கிறார். அப்பர் பெருமான், சிவனாரிடம், சூலக்குறி இடபக் குறி வேண்டுமெனக் கேட்டதை இங்கு நினைவுகூரலாம்.

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க் கொழுந்தே.

‘‘என் உயிர் காக்க உனக்கு விருப்பம் உண்டாகில், சூலம் இடபம் இவற்றை என் மேல் பொறிப்பாயாக; கூற்றுவன் என்னை அண்ட மாட்டான்’’ என்று அப்பர் பெருமான் சிவனாரிடம் வேண்டுகிறார். முருகன் அடியவன் என்று காட்டத் தோளில் வேல் மயில் இவற்றைப் பொறித்தருளினால் அவற்றைக் கண்டு யமன் அணுக மாட்டான். எட்டிக் குடித் திருப்புகழில் ‘தற்பொறி வைத்தாருள் பாராய் தாராய்’ என வேண்டினார். இந்த வேண்டுகோளின்படி அருணகிரியாருக்கு வேல் மயில் பொறி கிடைத்தது என்பது ‘அடைக்கலப் பொருளாமென நாயெனை அழைத்து வேல் மயில் அருள்வோனே’ என வரும் திருத்துருத்தித் திருப்புகழில் பாடியிருப்பதிலிருந்து அறியலாம்.

சனீஸ்வரர், பழமறை நாயகர், பைரவர் சோமலிங்கம், சந்திரன் ஆகியோர் திருவுருவங்களைத் தரிசிக்கிறோம். நமச்சிவாய கவிராயர் அவர்களின் சிற்பம் உள்ளது. இவர் உலகம்மை மீது பல நூல்களும், பாவநாசச் சிலேடை வெண்பா எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

‘‘குறைவற நிறைந்த  போன  நிர்க்
குணமது  பொருந்தி  வீடுறக்
குருமலை விளங்கு ஞான சற்குருநாதர்’’ என்று பாடுகிறார்.
‘‘ காமியத் தழுந்தி  இளையாதே
காலர்கைப் பிடித்து மடியாதே
ஓம்  எழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூம மெய்க்கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏம வெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத்தமர்ந்த பெருமாளே’’
- என்பது மிக அழகான சுவாமிமலைப் பாடல்.

பொருளாசையில் அழுந்தி மெலியாமல், கால தூதர்களின் கையிற் சிக்கி இறந்துபடாமல், ஓம் எனும் பிரணவப் பொருளில் அன்பு மிகவும் ஊறி, நான் சித்திரம் போன்ற மோன நிலையில் அசைவற்றிருந்து ஞான உணர்வை அடைய அருள்வாயே!நறும்புகை மணம் உடலில் பற்றப் பெற்றுள்ள பெருமாளே! சூரனைச் சங்கரித்த ஒளி வேலவனே! ஏம வெற்பு = பொன்மலை போன்று உயர்ந்த மயில் வீரா! ஏரகம் எனும் பதியில் அமர்ந்தவனே!

ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா என்பதற்குப் பல விதமாகப் பொருள் காணலாம், பொன்மலை போன்ற சிறந்து மேனியை உடையவன்; பொன்மலை போன்ற தோள்களை உடையவன்; குன்றுகள் தோறும் ஆடல் புரிந்தவன்; கனகிரி வாழ்பவன்; மேருமலையில் வீற்றிருப்பவனே! ஏம கூடம் முதலான அஷ்ட குலமலை கட்கும் மேலாகப் பறந்து திரியும் மயிலை வாகனமாக உடைய வீரனே என்பவை ஒரு சில உதாரணங்கள்.
பிரணவப் பொருளை ‘‘ஞான வித்து’’ என்பார், அருணகிரியார்.

‘‘மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் உறைவோனே
விரைய, ஞானவித்தை அருள் செய்தாதைகற்க
விவை ஓதுவித்த பெருமாளே.

பொருள்: மிகவும் நிலவொளி வீசுகின்ற அமுதச் சடையராம் சிவபெருமான் நின்று கேட்க விரும்பும் சுவாமி மலையில் வீற்றிருந்து உபதேசித்தவனே! விரைவில் ஞான மூலப் பொருளை - வித்தை - அடியார்க்கு அருள் செய்யும் தந்தை அறிய வேண்டிக் கேட்க அதை அவருக்கு விரைவாக உபதேசித்த பெருமாளே என்கிறார்.சுவாமிமலையில் தன்னை அவன் தொண்டர்களுடன் கூட்டும் வரத்தை வேண்டுகிறார்.

 ‘‘அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை  வாச மலர் கரந்தை
 அடைய  வாரிமிசை பொழிந்துன் அடிபேணி
 அவசமாகி உருகு தொண்டருடனாகி விளையும் அன்பின்
 அடிமையாகு முறைமை யொன்றை அருள்வாயே’’
 - என்பது அப்பாடல்.

மணம் வீசும் மலர்களை உன் திருவடியிலே வாரிச் சொரிந்து தன் வசமழிந்து உருகுகின்ற தொண்டருடன் கலந்து கூடி, அதனால் விளையும் அன்பின் அடிமையாகும் பேற்றை எனக்கு அருள்வாயாக என்று இங்கு அவர் கேட்ட வரத்தை முருகன் அருளினான் என்பது பின்வரும் கந்தர் அலங்காரச் செய்யுளால் விளங்குகிறது.

‘‘இடுதலைச் சற்றும் கருதேனை, போதமிலேனை அன்பால்
 கெடுதலிலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
 அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற, இச்சிறை
  விடுதலைப் பட்டது, விட்டது பாச வினை விலங்கே ’’
[ எண் - 100]

மஞ்சள் இடிக்கும் மிகப் பெரிய, பழமையான உரல் வைக்கப்பட்டுள்ளது. பரந்த திறந்த வெளிப் பிராகாரம் உள்ளது. காசி விஸ்வநாதர், விநாயகரைத் தரிசித்து வரும்போது தலவிருட்சமான களாமரம் தென்படுகிறது. நிறைய செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்
படுகின்றன. யாகசாலை, நவகிரக சந்நதியும் உள்ளன. பாபநாசம் செல்பவர்கள் அருகிலுள்ள இலஞ்சி, திருக்குற்றாலம் ஆகிய திருப்புகழ்த் திருத்தலங்
களுக்குச் சுலபமாகச் சென்று வரலாம்.

பதினாறாவதாக அருணகிரியார் க்ஷேத்ரக் கோவைப் பாடலில் குறிப்பிட்ட தலம் ‘ஜெகநாதம்’ என்பது நம்
நாட்டின் கிழக்குக் கரையிலுள்ள பூரி திருத்தலத்தில் குடி கொண்டுள்ள ஜகந்நாதரும் அவருக்கு முருகனாகக் காட்சி அளித்திருக்கலாம்; அல்லது அங்கு பண்டு முருகன் ஆலயம் ஏதேனும் இருந்திருக்கலாம்.

பதினேழாவது தலமாக அருணகிரியார் குறிப்பிடுவது ‘செஞ்சொல் ஏரகம்’ ‘குருவாக நின்று செம்மையான உபதேசச் சொல்லைத் தந்தைக்குக் கூறிய ஏரசுப்பதி’ என்று பொருள் கொள்ளலாம். சுவாமிமலையும் திருஏரகமும் வெவ்வேறு இடங்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் ‘‘ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப்பதி’’ என அருணகிரி நாதர் பாடியிருப்பதிலிருந்து சுவாமிமலையை ஏரகமும் ஆம் எனும் முடிவிற்கு வரலாம். இத்தலத்தை குருமலை என்றும் குறிப்பிடுகிறார்.

‘‘குருவாய் அரற்கும் உபதேசம் வைத் குகனே’
’என்பதால் இம்மலை குருமலை எனப்படுகிறது.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rasya-frozen9

  சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!

 • 09-03-2021

  09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • labor8

  ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

 • transgender8

  நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்