SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறள் என்னும் அமிர்தம்

2021-01-20@ 10:27:33

குறளின் குரல்: 139

என்றென்றும் நிரந்தரமாய் வாழவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆரோக்கியத்தோடு கூடிய நீண்ட ஆயுள் என்பது மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய வரங்களிலெல்லாம் மிகப் பெரிய வரம்.சாகாமல் என்றும் வாழும் தன்மையைத் தருவது அமிர்தம் என்று கருதப்படுகிறது. தேவர்களின் உணவு அமிர்தம். அதனால்தான் அதைத் தேவாமிர்தம் என்று சொல்கிறோம். தேவர்கள் என்றென்றும் இருப்பவர்கள். அழிவில்லாதவர்கள்.

அமிர்தம் என்ற சொல் தமிழில் அமிழ்தம், அமுது என்றெல்லாமும் வழங்கப்படுகிறது. திருக்குறள் முழுவதுமே அமிர்தம் தான் என்றாலும் திருக்குறளின் சில குறள்களில் அமிழ்தம் என்ற சொல்லாட்சியும் இடம்பெற்றுள்ளது.

`வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.’

(குறள் எண் 11)

மழையானது வானத்திலிருந்து உலகத்தவர்க்கு வழங்கப்படுவது. அதனால் அதை அமிர்தம் என்றே உணரவேண்டும்.வானவர்கள் தானே அமிர்தத்தை உண்பவர்கள்? எனவே அது வானுலக உணவுதானே? ஆகையால், வானத்திலிருந்து வருவது அமிர்தமாகத் தானே இருக்க வேண்டும்.`அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்.’

(குறள் எண் 64)

அவரவரது குழந்தை
களின் பிஞ்சுக் கரங்களால் அளையப்பட்ட உணவிருக்கிறதே, அடடா! அது அமிர்தத்தை விடவும் கூட இனிமையானது.
`அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்
தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.’

(குறள் எண் 720)

அறிவாற்றலில் தங்களுக்கு இணக்கமில்லாதார் கூட்டத்தில் அரிய கருத்துகளைப் பேசுதல் என்பது தூய்மையில்லாத இடத்தில் அமிர்தத்தைக் கொட்டியதுபோல் ஆகும். அமிர்தம் வீணாவதுபோல நாம் சொல்லும் அரிய கருத்துகளும் வீணாகிவிடும்.
`உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.’

(குறள் எண் 1106)

இது காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்ற நூற்றுப் பதினொன்றாம் அதிகாரத்தில், `தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் உயிர் தளிர்ப்பதால், இவளது தோள்கள் அமிர்தத்தால் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும்' என்று தலைவன் புகழ்வதாக அமைந்த குறள்.இப்படியெல்லாம் அமிர்தம் ஒப்பிட்டுப் புகழப்படுகிறதே? அமிர்தத்தின் வரலாறுதான் என்ன? அது எப்படித் தோன்றியது?

பாற்கடலில் அமிர்தம் உறைந்துள்ளதை அறிந்தார்கள் தேவர்கள். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்தார்கள். அதைச் செய்யத் தாங்கள் மட்டுமே போதாதென்ற காரணத்தால், கிடைக்கும் அமிர்தத்தில் பங்களிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அசுரர்களையும் அமிர்தம் கடைய உதவிக்கு அழைத்தார்கள்.

மந்திரமலை மத்தாக்கப்பட்டது. சிவனின் கழுத்தில் உள்ள வாசுகி என்ற பாம்பு கடலைக் கடையும் மத்துக் கயிறாக்கப் பட்டது. வாசுகி பாம்பின் ஒருபுறம் தேவர்களும் மற்றொரு புறம் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். ஆனால், என்ன சங்கடம்! சற்று நேரத்திலேயே மத்தாக உதவி வந்த மலையானது பாற்கடலுக்குள் சரசரவென்று மூழ்கத் தொடங்கியது. மத்தில்லாமல் கடைவது எப்படி எனத் திகைத்த தேவர்கள் ஒருமுகப்பட்ட மனத்தோடு திருமாலைப் பிரார்த்தித்தார்கள். தேவர்களுக்கு உதவ முடிவு செய்த திருமால், ஆமையாக அவதாரம் எடுத்து மலையின் கீழ்ப்பகுதியில் போய் அதைத் தாங்கிக் கொண்டார். கூர்மாவதாரம் தோன்றிய கதை இதுதான்.

தொடர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். ஆனால் அமிர்தம் வெளிப்படுவதற்கும் முன்பாக, என்ன சங்கடம்! கொடும் விஷம் வெளிப்பட்டது. தேவர்கள்மேல் கருணை கொண்ட சிவன் அந்த ஆலகால விஷத்தை அப்படியே அள்ளியெடுத்து முழுவதுமாகத் தாமே அருந்திவிட்டார்.

சிவனின் வயிற்றுக்குள் தானே அனைத்து உயிர்களும் உறைந்துள்ளன? சிவன் உண்ணும் விஷத்தால் அவை அத்தனையும் அழியுமே எனப் பதறினாள் கருணையே வடிவான அன்னை பார்வதி. சிவனைக் கையைப் பிடித்தவள், இப்போது அவன் கழுத்தைப் பிடித்தாள்! விஷம் வயிற்றுக்குச் செல்லாமல் கழுத்திலேயே - அதாவது கண்டத்திலேயே - தங்கிவிட்டது. அதனால் சிவபெருமான் நீலகண்டர் ஆனார்!இப்படி அமுதம் வெளிப்பட்ட நிகழ்வில் சிவன் திருமால் இருவருமே பங்கேற்றனர் என்கிறது புராணம். பாற்கடல் கடையப்பட்ட நிகழ்ச்சியைத் தமிழின் பழைய இலக்கியமான சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.

`வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினயே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை மலர்க்கமலஉந்தியாய் மாயமோ மருட்கைத்தே!’
அப்படிக் கிடைத்த அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்குபோட்டுக் கொள்ள விரும்பினர். அசுரர்களுக்கு அமிர்தம் கிடைப்பது சரியல்ல. தீயவர்கள் நிரந்தரத் தன்மை பெற்று வாழத் தொடங்கினால் இந்த உலகம் என்ன ஆகும்?

எனவே, திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அழகால் அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை வழங்கி மறைந்துவிட்டார்.
அப்போது ஓர் அரக்கன் தேவன்போல உருமாற்றிக் கொண்டு தேவர்கள் வரிசையில் போய் அமர்ந்து தானும் அமிர்தத்தைப் பருகினான். அதைப் பின்னர் அறிந்ததிருமால் தன் சக்கரத்தால் அவன் உடலைப் பிளந்தார்.

ஆனாலும், அமிர்தம் உண்டதால் அவன் அழியவில்லை. அவனே இரு துண்டாக்கப்பட்டு ராகுவாகவும் கேதுவாகவும் இரு கிரகங்களாகச் செயல்படுகிறான் என்கிறது புராணக் கதை. பதவி, அதிகாரம் என்பவை எல்லாம் கூட அமிர்தம் போன்றதுதான். பதவி என்னும் அமிர்தம் நல்லவர்களுக்குக் கிட்டும்போது நாடு தழைப்பதையும் கெட்டவர்களுக்குக் கிட்டும்போது நாடு சீரழிவதையும் வரலாறு காட்டுகிறது.

முனிவர் உத்தங்கர் மாபெரும் கிருஷ்ண பக்தர். அவர்முன் தோன்றிய கிருஷ்ணர் அவருக்கு ஏதும் வரம் வேண்டுமா எனக் கேட்டார். கண்ணனையே நேரில் கண்டபிறகு தனக்கு வேறு எதுவுமே தேவையில்லை என்று கூறி விட்டார், உத்தங்க மாமுனிவர். ஆனாலும், கிருஷ்ணர் ஏதேனும் ஒரு
வரமாவது வாங்கிக் கொள்ளுமாறு மறுபடி மறுபடி வற்புறுத்தவே, வேண்டும்போதெல்லாம் தன் தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கச் செய்யுமாறு மட்டும் வரம் கேட்டுப் பெற்றுக் கொண்டார், அவர் ஒருமுறை உத்தங்கர் வனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போது கடும் தாகமேற்பட்டுத் தவித்தார். நீர்நிலையே கண்ணில் படாத அந்த இடத்தில் வரத்தின் படித் தனக்குத் தண்ணீர் வேண்டும் எனப் பிரார்த்தித்தார்.

அப்போது கையில் தண்ணீர்ப் பானையோடு எதிர்ப்பட்டான் ஒரு புலையன். `தண்ணீர் வேண்டுமா?' எனக் கேட்டான் அவன். உத்தங்கரின் ஜாதி ஆசாரம் அவரைத் தடுத்தது. ஒரு புலையனிடமிருந்து உயர்ஜாதியினரான தாம் தண்ணீர் பெறுவதாவது? வேண்டாம் என்றார். அவன் உடனே காற்றில் கலந்து மறைந்து விட்டான்!திகைப்படைந்த உத்தங்கர் கண்ணனை நேரில் தோன்றுமாறு பிரார்த்தனை செய்தார். தோன்றினான் கண்ணன். என்ன நடந்தது எனக் கண்ணனிடம் வினவினார், உத்தங்கர். நான் உமக்குத் தண்ணீருக்கு பதிலாக அமிர்தத்தையே வழங்குமாறு இந்திரனுக்கு ஆணையிட்டேன். உமக்கு அமிர்தம் தருவதில் அவனுக்கு விருப்பமில்லை. என்றாலும் என் கட்டளைக்குக் கட்டுப்
பட்டான்.

நான் எந்த வடிவில் போய்த் தந்தாலும் அவர் பெற்றுக் கொண்டால் அமிர்தம் தருவேன் என நிபந்தனை விதித்தான். எனவே, புலையன் வடிவில் வந்தான். மெய்ஞ்ஞானியான நீர் ஜாதி வேறுபாட்டைப் பொருட்படுத்த மாட்டீர் என நான் எண்ணினேன்.கீழ் ஜாதியினர் என்று உங்களைப் போன்றோர் கருதும் மனிதர்களால் அல்லவோ உலகம் நடக்கிறது? உழவுத் தொழில் செய்வோர், மண்பாண்டம் செய்வோர், கழிவை அகற்றுவோர் போன்றோர் பணியை நிறுத்திவிட்டால் உலகம் என்ன ஆகும்? வர்ணாசிரமம் என்பது தொழில் சார்ந்த பிரிவுதானே தவிர பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற உண்மையை நீங்கள் இன்னும் உணரவில்லையே?

கீழ்ஜாதியினர் என்று ஒதுக்கப்படும் மனிதர்கள் செய்யும் தொழில் தானே அமிர்தம்? அந்த அமிர்தத்தால் அல்லவோ உலகம் அழியாது நிலைபெற்றிருக்கிறது? ஜாதி வேறுபாடு பாராட்டுபவர்களுக்கு அமிர்தம் பெற அருகதையில்லை!’ என்று சொல்லிவிட்டு மறைந்தான் கண்ணக் கடவுள்.
விக்கித்தது அமிர்தத்தை இழந்த உத்தங்கரின் மனம்.

சங்ககாலம் தொட்டே அமிர்தம் தமிழில் இனித்துக் கொண்டிருக்கிறது. கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி எழுதிய புறநானூற்றுப் பாடலொன்று அமிர்தத்தைப் பற்றிப் பேசுகிறது.  `அமிர்தத்தையே பெற்றாலும் இனியது எனத் தனியே உண்ணாமல் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல் உழைப்பவர், புகழுக்காக உயிரையும் கொடுப்பவர், உலகையே கூலியாகத் தந்தாலும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், தன்னலத்தோடு வாழாது பொதுநலத்திற்காக வாழ்பவர். இத்தகையோர் இருப்பதால் உலகம் வாழ்கிறது’ என்கிற கருத்தைச் சொல்லும் அந்தப் பாடல் இதோ:

`உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.’

(புறநானூறு 182)

மகாகவி பாரதியார் பாடல்களிலும் அமுது வருகிறது. `காற்று வெளியிடைக் கண்ணம்மா’ என்ற பாடலில் கண்ணம்மாவின் இதழ்கள் அமுதூறும் இதழ்கள் என்கிற கவிஞர், கண்ணம்மா என்று சொல்லும்போது சொல்லும் வாயிலும் அமுதூறுவதாகக் கவி புனைகிறார். பாரதியின்
கற்பனைக்கு இணை ஏது?

`காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே!
நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - எந்தன்
வாயினிலே அமுதூறுதே - கண்ணம்மா
என்ற பேர் சொல்லும் போதிலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்

சிந்தனையே என்றன் சித்தமே!’
‘ பாரதிதாசன் தமிழுக்கே அமுது
(அமிழ்தம்) என்றுதான் பேர் என்கிறார்.
 ‘`தமிழுக்கும் அமுதென்று பேர் - இன்பத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’
 ‘ என்பது அவர் பாடல்.

திரைப் பாடல்களிலும் அமுதம் இனிப்பதைப் பார்க்கலாம். `அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?’ என்றபாடல் `தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பாடலை எழுதியவர் அண்மையில் நூற்றாண்டு விழா கண்ட புகழ்பெற்ற கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம். டி.ஜி. லிங்கப்பா இசையமைப்பில் பி.சுசீலா பாடிய அந்தப் பாடல் அந்தக் காலத்திலும் ஏன் இந்தக் காலத்திலும் கூட எண்ணற்றோர் நாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தைபிறந்தால் வழிபிறக்கும் திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள
கவிஞர் சுரதாவின் கவிதையும் அமுதை நினைவு படுத்துகிறது.

`அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு?’
எனத் தன் காதலியைப் பற்றிப் பாடி மகிழ்கிறான் காதலன்.

`அமுதா’ என்றே ஒரு திரைப்படம். அந்தப் படத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் குரலில் கண்ணதாசன் கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது. அமுதக் கவிதைதான் அது. கண்ணதாசன் கவிதை என்றாலே அமுதம் தானே!

`அன்பே அமுதா நீ
பாலமுதா இல்லை தேனமுதா - இல்லை
பாற்கடல் பிறந்த கனியமுதா? - உந்தன்
சொல்லமுதா இதழ் சுவையமுதா? - கொஞ்சம்
நில்அமுதா அதைச் சொல் அமுதா!’
 வாழ்வாங்கு வாழ வழிசொல்லும்

திருக்குறளே ஓர் அமுதக் கடல். அதன் ஒவ்வொரு குறட்பாவும் அமுதத் துளிதான். திருக்குறள் என்ற அமுதத்தைப் பருகி அதன் வழி வாழ்பவர்கள் என்றும் நிலைத்திருக்கும் அமரநிலை அடைவார்கள்.`வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறது வள்ளுவம். தெய்வநிலை என்பது என்றும் நிலைத்திருக்கும் அமரநிலை தானே?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்