SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசை வடிவாய் நின்ற நாயகியே

2021-01-20@ 10:24:18

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-73

குரம்பை அடுத்து குடி புக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து
அரம்பையடுத்து அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி வாய் நின்ற நாயகியே.
- பாடல் எண் - 49

இப்பாடலானது இறப்பைப் பற்றிய அச்சத்தை நீக்க முயற்சி செய்கிறது. மேலும் மரணத்தை குறித்த ரகசியத்தையும், இறவாமை குறித்த தகவலையும், திருக்கடையூரின் மிருத்யுஞ்சய ரகசியத்தையும் அறிய உதவுகிறது. அதற்கு அடிப்படையான அச்சத்தையும், அதன் பாகுபாட்டையும் அறிதல் என்பது இப்பாடலின் புரிதலுக்கு திறவுகோலாக அமையும்.

அபிராமிபட்டர் தெய்வச்சம், இறப்பச்சம் என்ற இருவகை அச்சத்தைப் பற்றி கூறியுள்ளார். அதில், திருக்கடவூர் தலபுராணத்தோடு தொடர்புடையது இறப்பச்சம். அதை தான் அடைந்ததாகக் கூறி அதை நீக்கிக் கொள்ள திருக்கடவூர் வரும் பக்தர்களுக்கு வழிவகை சொல்கிறார்.தெய்வ அச்சம் என்பது பண்டைய சமுதாயத்தைப் பொறுத்தவரை பொய் சொல்பவர்களை தண்டிப்பதற்கு இறைவன் பெயரில் சத்தியம் செய்யச் சொல்வார்கள். செய்பவர்கள் மெய்யினால் அருளையும், தவறிப்போய் பொய் சொன்னால் தெய்வ குற்றத்தால் மிகுந்த துன்பத்துக்கும் உள்ளாவார்கள். அல்லது மரணமடைவார்கள் என்பது அனுபவ சாத்தியமாக இருந்தது.

இதனால் தெய்வத்தின்மீது பொய் சொல்பவர்களுக்கு ஒரு அச்சம் தோன்றியது. “மெய்வந்த நெஞ்சின் அல்லால். ஒரு காலும் விரகர் தங்கள் பொய் வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே” - 98 என்பதனால் தான் சொல்வது பொய்யல்ல என்பதை வலியுறுத்தி மேலும் விளக்குகிறார் பட்டர்.இறப்பச்சம் - இறப்பு என்பது பிறந்த உயிர்கள் அனைவருக்கும் அச்சத்தை தருவதாக அமைந்துள்ளது. அதைப் போக்கிக் கொள்ள தேவர்களுக்கு சாகா வரமளித்து என்றும் இளமை தந்த அமிர்தகடேஸ்வரர், மார்கண்டேயருக்காக காலனையே காலால் கடிந்து அனைத்து உயிருக்கும் இறப்பை தந்த எமனுக்கே இறப்பை தந்த அற்புத திருத்தலம் திருக்கடவூர். அதை நினைவுபடுத்தி இறப்பச்சத்தை தவிர்ப்பதற்கான சாதனமாக அமைந்துள்ளது இப்பாடல்.

இனி பாடலுக்குள் நுழைவோம்.குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - இறப்பினை வரையறை செய்கிறது இவ்வரி. உயிரானது தான் இருக்கும் உடலைவிட்டு வேறு ஒரு உடலில் புகுவதற்கு முயற்சிக்கும் செயலே இறப்பு என்கிறார். உடலை நீங்கிய ஆன்மாவிற்கு ஆவி என்று பெயர். இந்த ஆன்மாவானது எத்தகைய பண்புடையது, எதன் அடிப்படையில் உடலை எடுக்கிறது, உடலை விடுகிறது, வேறு ஒரு கூட்டை நாடி செல்கிறது என்பவற்றையெல்லாம் சாத்திரங்கள் நன்கு உணர்த்துகிறது. அதன்வழியே நின்று மிக எளிமையாக உணர்த்துகிறார் பட்டர்.

உடலோடு கூடிய ஆன்மாவை உணர்ந்து கொள்வது மிகவும் கடினம். உடலுக்கு நேர் விரோதத் தன்மை கொண்டது ஆன்மா. அழிவது உடல். அழியாதது ஆன்மா. அழுக்கானது உடல். தூய்மையானது ஆன்மா. வரையறுக்கப்பட்ட வடிவத்தை கொண்டது உடல். வடிவம் சார்ந்து தன்னை வரையறுத்துக் கொள்வது ஆன்மா. உடலை எடுத்து அனுபவிப்பது ஆன்மா. உடலை விடுவதனால் அனுபவம் நீங்குவது ஆன்மா. இறைவனோடு நேரடித் தொடர்பு கொள்வது ஆன்மா. உலகத்தோடு உள்ளத்தின் வழித் தொடர்பு கொள்வது உடல். அறியும் தன்மை பெற்றது ஆன்மா.

ரத்தம், குருதி போன்ற ஏழுவகை தாதுக்களால் ஆனது உடல். இந்த உடலையும், உயிரையும் மிகத் தெளிவாக இப்பாடல் பகுத்துக் காட்டுகிறது. அதனால்தான் “குரம் வை” என்று உடலையும் “ஆவி” என்று உயிரையும், அதனோடு அது இரண்டும் இணைவதும் பிரிவதுமாகிற செயலை மரணமென்றும், பிறவியென்றும் வதையறுத்து, அது எப்பொழுது பிரியும், எப்போது சேரும் என்ற காலத்தை கணக்கிட முயல்கின்றார்.

அதை அறிந்து கொண்டு அந்த பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க விழைகின்றார் பட்டர்.உடலை குரம்பை என்றும், உயிரை ஆவி என்றும் பார்த்தோம். இவை இரண்டையும் பிரிக்கும் செயலை செய்பவர் வெங்கூற்றுவன் என்றும், அவனுக்கு அளிக்கப்பட்ட வரம்பு என்பது அவரவர் இழைக்கும் வினை வழியே அமையும் என்பதையும், இதையெல்லாம் பகுத்து உணர இயலாத ஆன்மா உள்ளத்தில் கலக்கத்தை அடையும் என்பதை “மறுகும்” என்பதனாலும், அதை ஒவ்வொரு உடலெடுத்த ஆன்மாவும் அனுபவித்தே தீரும் என்ற உறுதிப்பாட்டை “அடுத்து” என்ற வார்த்தையாலும், அதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் நமக்கு வலியுறுத்துகிறார்.

இறக்கும் பொழுதை “அப்போது” என்கிறார். அப்போது அறிவிக்க இயலாது என்பதனால் இறைவிக்கு முன்னமயே தன் உணர்வு இருக்கும் போதே அறிவுறுத்துகின்றார். யாரும் மரணத்தை விரும்பி அழைப்பதில்லை, அதனால், அதை வேறு யாராவதுதான் அதைச் செய்தாக வேண்டும். அப்படி யார் செய்வார்கள். காலன்தான் அதைச் செய்கிறார். அந்தக் காலன் எத்தகையவன். அவனது பண்பு என்ன? காலன் இயல்பாகவே மிகுந்த கோபமுடையவன் வெவ்விய காலன் - (18) உயிர்களின் உடல் அழிவிற்கு காரணமானவன் அந்தகன் - (39) என்பதனால் அறியலாம்.

*காலனின் கையில் இருக்கும் வேலானது விரைவானதாகவும்தான் பற்றிய உயிரை தப்பவிடாமல் சூழ்ந்து கொள்கிற பண்பையும் கொண்டது.
*அவன் கையிலுள்ளது பிறர் கண்ணுக்கு தெரியாத இரகசிய ஆயுதமாகும்.
*அது சரியான காலத்தில் செயல்படும்
*மிக சரியான செயல்திறனுடன் விளங்கக்கூடியது, அனைவரையும் கட்டுப்படுத்தி வெல்லவல்ல செயல் திறனுடையது. தோல்வியே இல்லாதது.
*ஏவிய காலணிடம் மீண்டும் வந்தடையும் பண்பை கொண்டது.
*உடலையும், உயிரையும் கூறுபடுத்துகின்ற பண்பை கொண்டது.
*எமனுக்கு மட்டுமே கட்டுப்படுவது, மிகவும் கொடியது. காளி, மாரி போன்றோரிடம் உள்ள வேலை போல் அல்ல என்பதை அறியவே “கதித்த கப்பு வேலை வெங்காலன்” என்கிறார் பட்டர்.

பிற தெய்வத்திடம் இல்லாதது தனித் தன்மையுடையது எமனிடத்து மட்டும் உள்ளது. இப்படிப்பட்ட வேலை தன் கையில் வைத்துள்ளவன் காலன். காலனானவன் கருணையே இல்லாத பாசத்தை கையில் வைத்திருக்கின்றான். “அருள் அற்ற அந்தகன் கைபாசத்தில்” - (3) என்பதனால் அறியலாம். உயிரிடத்திலிருந்து வேலால் உடலை பிரித்து உயிரை பாசத்தில் கட்டி அழைத்து செல்கின்ற வேலையை செய்பவன் காலன். இதையே “அருளற்ற அந்தகன் கைபாசத்தில் அல்லற்பட இருந்தேனை - (32) என்பதனாலும் அறியலாம்.

இத்தகைய சூழலில் எமனால் பாதிக்கப்பட்ட ஒருவன் படும் துன்ப அனுபவத்தால் கலங்கி தன்னைக் காத்துக் கொள்கிற அறிவை மறந்து இடர்படுவான். இதையே “உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது” - (89) என்பதனால் அறியலாம்.

இத்தகைய கொடிய பண்புகளை கொண்ட எமனானவன் அவனுக்கு உரிய காலத்தில் வருவானென்றும் அதைத் தவிர்க்க யாராலும் இயலாது என்றும், அந்தக் கொடிய துன்ப அனுபவத்தை, தான் நன்றாக இருக்கும்போதே எண்ணி பயந்து அதைப் போக்கிக் கொள்ள விழைகின்றார் பட்டர். அதையே, “ஆவி வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது” என்று இறப்பு அச்சத்தை குறிப்பிடுகின்றார்.

“வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவயர் சூழ வந்து, அஞ்சல், என்பாய் நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே”
இந்த வரிகள் சாத்த உபாசகர்களின் முக்தி உலகத்தை வரையறுத்து விளக்கிக் கூறுவதாய் அமைகிறது. அதைப்பற்றி முதலில் அறிந்து கொள்வது இவ்வரியை புரிந்து கொள்ள துணையாய் அமையும்.

பொதுவாக, சைவர்கள் முக்தி அடைந்தால் கயிலாயம் அடைவார்கள். வைணவர்கள் முக்தி அடைந்தால் வைகுண்டம் அடைவார்கள் என்று அவரவர் கோட்பாடுகளால் அறிகின்றோம். அந்த வகையில் சாக்தர்களின் முக்தி நிலையம் சிந்தாமணி க்ரகம், மணித்வீபம் என்று கூறப்படுகின்றது. அந்த மணித்வீபத்தில் உமையம்மை ரத்தினமயமான ஒன்பது பிராகாரங்களுக்கு நடுவில் சிந்தாமணி கிரகத்தில் உலக நாயகி வீற்றிருப்பாள்.

சிந்தாமணி கிருகராந்தஸ்தாயை நமஹ...

அங்கு கணங்களான தேவிகள் கீதம் இசைப்பார்கள், அனைவரும் இசை இன்பத்தில் மகிழ்ந்திருப்பார்கள் என்றும், அங்கு தோழிகள், பணிப் பெண்கள், தேவகன்னியர், சகலமான தேவதைகள் புடை சூழ உமையம்மையானவள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என சூழ விளங்குவாள். இவ்விதம் வர்ணித்த மணித்வீபமே மஹாதேவிக்கு சகல லோகத்துக்கும் மேலான உத்தமமான இடமாகும். அதை நினைத்தாலே சகல பாவங்களும் அகன்றொழியும். பிராணன் நீங்கும் சமயத்தில் மனிதன் அதை நினைப்பானாயின் அந்த மணித்வீபத்தையே அடைவான். இக்கருத்தை வலியுறுத்துகிறது தேவிபாகவதம். இதையே, அபிராமி பட்டர் “கண்ணியது உன் புகழ்” - (12) என்று குறிப்பிடுகின்றார்.

இன்றளவும் நவராத்திரி காலத்தில் தேவி பாகவத கதைகள் மற்றும் தேவி மஹாத்மியம், ஸஹஸ்ரநாமம் போன்றவைகள் பாராயணம் செய்யப்படுகிறது. இது நமக்கு மேலும் சான்று பகர்கிறது. “கற்பது உன் நாமம்” - (12) என்று ஸஹஸ்ரநாமத்தை குறிப்பிடுகின்றார். இனி இப்பாடலின் சொற்களின் விளக்கத்தை பார்ப்போம்.

“வளைக்கை அமைத்து” - வளைக்கை என்பதற்கு முற்றுகை என்பது பொருள். பண்டைய காலத்தில் மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிடும்போது எதிரியின் கோட்டையைச் சுற்றி அவன் வெளிவராதவாறு படைபலத்தால் சூழ்ந்து தாக்குதல் செய்வதைக் குறிக்கும். மேலும், மன்னன் தன் இருப்பிடம் சூழ வளைத்து அமைத்த அரணாக இருக்கும் கோட்டையையும் குறிக்கும்.

அதை அபிராமி பட்டர் தன் நோக்கில் எமன் என்கிற எதிரியானவன் தன் உயிரைப்பறிக்க வரும்போது தன்னைச் சுற்றி கோட்டையைப்போல சூழ்ந்து நின்று பாதுகாத்து உமையம்மையின் உலகிற்கு அழைத்துச் செல்ல அவளை பிராத்திக்கின்றார்.

“அரம்பை” - இவர்கள் தேவ உலக மங்கையர்கள் பூவுலகத்தில் புண்ணியம் செய்த ஆன்மாக்களை மேல் உலகத்தில் மகிழ்விக்கப் பணிக்கப்பட்டவர்கள்.
“அரம்பையர் அடுத்த” - அரம்பை என்ற தேவப் பெண்கள் மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த அனைத்து தேவதைகளையும், அடுத்த என்ற ஒரே சொல்லால் சொர்க்கத்திலுள்ள எல்லா தேவதைகளையும் குறிப்பிடுகின்றார்.

“அறிவையர்” - என்ற சொல்லால் தேவதைகளினும் சற்று மேலான ஆற்றல் மிக்க சரஸ்வதி, இலக்கு இவர்களைக் குறித்தார். இவர்கள் உமையம்மைக்கு தோழியர் போன்றவர்கள். திருக்கடையூரில் பாலாம்பிகையின் உடனேயே இருவரும் இருப்பதை இன்றும் காணலாம். “சூழ” - என்ற சொல்லால் நவாவரணத்தில் உள்ள பிற தேவதைகள் அனைத்தையும் ஒரே சொல்லால் குறிப்பிட்டார். ஆவரண தேவதையை சூழ என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடுகின்றார்.

“வந்து” - என்ற சொல்லால் உமையம்மையின் உபாசகனானவன் தான் வேண்டுகிற பயன் சார்ந்து வெவ்வேறு தேவதைகளை பரிவாரமாகக் கொண்டு உமையம்மை ஒருத்தியையே வழிபாடு செய்து பலனை பெறுவது பற்றிய தகவலை கூறுகிறது பூஜாபத்ததி எனும் வழிபாட்டு விளக்க நூல். இதையே, பட்டர் பரமாகம பத்ததியே - (6) என்கிறார். மேலும், நாயகி நான்முகி - (50) பைரவி பஞ்சமி - (77) என்று வெவ்வேறு சூழ நின்ற தேவதைகளை வரிசைப்பட கூறியிருப்பதிலிருந்து இதை அறியலாம்.

“அஞ்சல் என்பாய்” - என்ற வார்த்தையால் கடமை தவறாதவனும், சினமுள்ளவனும், கொடுமையானவனும் ஆகிய எமனின் சூலம், பாசம் போன்ற கொடிய ஆயுதங்கள் தாக்க வரும்போது தடுக்க இயலாது என்பதனாலேயே “அஞ்சல் என்பாய்” என்று உமையம்மையை அழைக்கின்றார். அவள் தன் பரிவாரம் சூழ நேரில் வந்து ஆட்கொண்டு, தன் உலகிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி உமையம்மையே நேரில் வந்தாலன்றி எமனிடமிருந்து தப்பிக்க இயலாது என்பதால் ‘‘அஞ்சல் என்பாய்” என்கிறார் பட்டர்.

“நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற”நரம்பை அடுத்த இசை வடிவு என்பது மோட்சத்தை தரும் ஞான சரஸ்வதி என்ற உமையம்மையின் வடிவாகும். இந்த மோட்சமானது ஞானமின்றி கிடைக்காது என்கிறது சாக்த சித்தாந்தம். அந்த மோட்சத்தை தரவல்ல ஞானத்தை இசை வடிவாய் போதிப்பவளே ஞான சரஸ்வதி எனப்படுவாள். அபிராமி பட்டருக்கு அருளிய ஞான சரஸ்வதியை இன்றும் அபிராமி அம்மை ஆலயத்தின் பிராகாரத்தில் எழுந்தருளியிருப்பதை காணலாம்.

சரஸ்வதியானவள் நரம்பு வாத்தியமான வீணையை மீட்டுபவள். அவளை முதன்மைப்படுத்தி கூறாமல் அதிலிருந்து வெளிவருகின்ற இசை ஓசையை முதன்மைபடுத்தினார். இந்த இசை ஓசையானது சிற்ப சாத்திரத்தை பொறுத்தவரை ஏழு என்ற எண்ணைக் குறிப்பதாகும். இந்த ஏழு என்பது மனிதனின் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், சுஷுப்தி, ஆக்ஞா, பிரம்மரந்த்ரம் என்ற ஏழு இடத்தில் தோன்றும் யோக நிலையை குறிக்கும். நரம்பை அடுத்த இசை என்ற சொல்லைப் புரிந்து கொள்ள இசைக் கருவிகளையும் அவற்றின் பாகுபாட்டையும்
புரிவது நலம். அக்கருவிகள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.  ஜால்ரா உலோகத்தாலான இசைக்கருவி (லோகஜம்) மேளம்.

தோலால் செய்யப்பட்ட இசைக் கருவி (சர்மஜம்), புல்லாங்குழல் துளைகளால் செய்யப்பட்டது (ரந்த்ர), வீணை, யாழ், மெல்லிய நரம்புகளால் ஆனது (தந்தி), வாத்திய வகைகளில் நரம்புகளைக் கொண்டு செய்யப்படுகிற தந்தி வாத்தியங்களை முதன்மைபடுத்தி அவற்றிலிருந்து தோன்றிய இசையை இங்கு குறிப்பிடுகின்றார். இது உமையம்மையை குறித்து யோக சாதனை பழகுபவர்களுக்கு ஒவ்வொரு சக்கரத்தில் தியானம் செய்து சித்தி பெறும் போது எழுவகை தந்தி வாத்தியமான வீணையின் ஒலி வாசிக்காமலே சப்தஸ்வரம் கேட்கும் அது.

கேட்டால் முக்தியை குறித்து முன்னேறுகின்றார்கள் என்பதாகும். அதனால் ஏழுவகை தேவதைகளின் அனுக்கிரகத்தையும், “இசைவடிவாய் நின்ற நாயகி என்ற அமைப்பில் இந்த ஞான சரஸ்வதி எழுந்தருளியுள்ளார்.
ஞானம் பிறக்க முக்தி ஆரூர் என்ற வழக்காலும் “மலர் கமலை” - 1 என்கின்ற முதல்
பாட்டிலும் “குயிலால் இருக்கும் கடம்பாட
வியிடை” - (99) என்ற இனிய ஓசை தரும் குயிலையும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து நன்கு அறியலாம்.

ஆகமங்கள் ஐம்பத்தியோரு அட்சரங்களை ஏழு ஸ்தானங்களில், ஏழு ஒலியாய் தியானிக்கும் வழக்கத்தை “அந்தர் மாத்ருகா நியாசம்”
என்கிறது. இதற்கு ஸ்வர நியாசம், அட்சரநியாசம், கீத நியாசம் என்ற வெவ்வேறு பெயரைக் கொண்டு அறியலாம். ஞான வடிவான சரஸ்வதியையே “நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற” என்கிறார்.

“நாயகி” என்ற சொல்லானது அழைத்துச் செல்வது ஆள்வது, உதவுவது, வளர்ப்பது, செம்மையுறச் செய்வது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. துன்பமற்று இன்பமான வாழ்வைக் குறித்து தடுமாறும் ஆன்மாக்களுக்கு ஐந்து விதமான வழிகாட்டுதலுடன் அழைத்து செல்வதனால் இப்பெயரை கொண்டு உமையம்மை அழைக்கப்படுகின்றாள்.

இனி இறக்கும் நேரத்தில் உமையம்யையை  அழைக்கும் காரணம் பார்ப்போம். பொதுவாக மிகச்சிறந்த புத்தியினால் ஒவ்வொரு உயிரும் தனக்கான துன்பம் ஏற்படுகின்றபோது அதை எதிர்த்துத் தாக்கவோ, தவிர்க்கவோ தப்பிக்கவோ முயலும். அதற்கு உதவுவது எதுவே அதுவே புத்தி. அப்படிப்பட்ட புத்தியை அதன் உள்ளிருந்து அழைத்துச் செல்லுகின்றவள் உமையம்மையே புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புறத்தை அன்றே - (29) என்கிறார்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்