SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியனின் மகள் திருமணம்

2021-01-19@ 14:28:17

சூரியனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சாவித்திரி. சூரியனின் மகளாகையால், அவளை சூர்யா சாவித்திரி என்றே எல்லோரும் அழைத்தார்கள். ரிக் வேதத்தில், சூரியா-சாவித்திரியின் திருமணம் ஒன்றுதான் சடங்கை விவரிப்பதாக அமைந்துள்ளது. இது ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள 85வது சூக்தமாகும். வேதம் சொல்லும் சடங்கைச் சற்று நோக்குவோம்.

இந்த சூக்தத்தை ஊன்றிக் கவனிக்கும் பொழுதும், இந்தச் சடங்கு பெண் வீட்டில் நடக்கிறது என்பது புலனாகிறது. கன்னிப் பெண்ணைக் காக்கும் கந்தர்வனான விசுவாவசுவை முதலில் வணங்குகிறார்கள். மணப் பெண்ணை விட்டுவிட்டு, வேறு சிறு கன்னிப் பெண்ணைக் காக்கப் போகும்படி அவனை வேண்டுகிறார்கள்.

அரியமான், மகன், பூஷன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரு பெண்ணுக்கு இல்வாழ்க்கையில் முறையே நேர்மை, நல்ல அதிர்ஷ்டம், செல்வச் செழிப்பு ஆகியவைகளுக்கு அதிதேவதைகளாக விளங்குகிறார்கள். ஆகையால், இம்மூன்று தெய்வங்களுக்கும் அக்கினியில் ஆஹூதிகளை வழங்குகிறார்கள். மணமகன் தனது வலது கையால் மணமகளின் வலது கையைப் பிடித்துக் கொள்கிறான். மணப் பெண்ணைத் தன் தகப்பன் வீட்டிலிருந்து பிரித்துப் புருஷன் குடும்பத்துடன் சேர்த்து விடுகிறார்கள்.

அப்பொழுது அவளைத் தேரில் ஏறி, புருஷன் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் செல்லும் படிக் கூறுகிறார்கள்.
அச்சமயம் பின்வரும் ரிக்கை ஓதுகிறார்கள்
ஸுமங்கலீரியம் வதூ:
இமாம் ஸமேத பச்யத I
ஸெள பாக்யமஸ்மை தத்வாயா:
அதாஸ் தம் விபரேதந ll
இதன் பொருள் வருமாறு:

“சௌமங்கல்யமான குறிகள் இந்த மணப் பெண்ணிடத்தில் தென்படுகின்றன. நீங்கள் எல்லோரும் சேர்ந்து வந்து இவளைப் பாருங்கள். எல்லா சௌபாக்கியங்களையும் அவளுக்கு அருளி விட்டுத் தத்தம் வீடுகளுக்குச் செல்லுங்கள்.”

இந்த வேத மந்திரம் மூன்று இடங்களுக்குப் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மணப் பெண் தன் தகப்பன் வீட்டை விட்டுப் புருஷன் வீட்டிற்குப் போகும் பொழுதும் இது பொருந்தும். தேரில் மணமக்கள் போகும் பொழுது, வழியில் அவர்களைப்
பார்க்கக் குழுமியிருக்கும் மக்களிடம் இதைச் சொல்வதும் ஏற்றதாக இருக்கும். புருஷன் வீட்டிற்குச் சென்றவுடன் அவர்களைப் பார்க்க வரும் மக்களிடம் சொல்வதாகவும் இது பொருந்தும்.இன்றும் நம் நாட்டில் திருமணச் சடங்குகளில் இந்த மந்திரம் ஓதப்படுவதை நாம் கேட்கலாம்.

சவிதா

வேதகாலத்திலும், பிற்காலத்திலும் சவிதா சூரியனின் மற்றொரு பெயராகவே விளங்குகிறது. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஆதித்திய இருதயம் என்ற துதியில் ‘‘ஆதித்ய : ஸவிதா சூரிய: கக: பூஷா கபஸ்திவான்’’ என்ற சூரியனுடைய மற்ற பெயர்களின் வரிசையில் சவிதா சேர்ந்துள்ளது. ஆனாலும், வேதகாலத்தில் சவிதாவிற்கும் சூரியனுக்கும் ஒரு நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம்.

யாஸ்கர் எனும் அறிஞர், இருள் நீங்கிய பிறகு விண்ணில் தென்படுவதுதான் சவிதா என்று கூறுகிறார். (நிருக்தம்  XII.12)‘‘எவனொருவன், பகலை உண்டு பண்ணும் சூரியனை இழுக்கிறானோ (பிரஸௌதி), அவனே சவிதா’’ என்று ஸெளனகர் கூறுகிறார். ( பிருஹத்தேவதா  II.62) ரிக்  வேதத்திற்கு  உரை  எழுதிய  ஸாயனர்  உதயத்திற்கு முன் உள்ள சூரியன் சவிதா எனப்படுவான் என்று கூறுகிறார்.

(ரி.வே. V.81.4. ஸாயனரின் உரை). ரிக் வேதமே, ‘‘மிகுந்த அருளுடைய தெய்வமான சவிதா எல்லா ஜீவ ராசிகளை (அதிகாலையில்) எழுப்பியும் (இரவில்) தூங்கச் செய்தும் உலகில் ஆட்சி புரிகிறான்.’’ இங்கு சவிதா உதயமாவதற்கு முன் உள்ளதும், அஸ்தமிக்கும் சமயத்தில் இருப்பதும் ஆன சூரியனைக் குறிக்கிறது என தெரிகிறது.

தூங்கச் செய்பவனும் சவிதா. எழுப்புகிறவனும் சவிதா என்ற இதே கருத்தை இன்னுமொரு ரிக்கும் கூறுகிறது. (VII.45.1)சவிதா தேவதையாக விளங்கும் ஒரு அழகான ஸூக்தத்தில் அஸ்தமிக்கும் சூரியனுக்குப் பொருந்தும் பல குறிப்புகளை காணலாம். (ரி.வே. 11.38). ‘‘வேகமாக ஓடும் குதிரைகளை சவிதா அவிழ்த்து விடுவான்; விரைந்து செல்லும் தேரை அவன் நிறுத்துவான், பாம்புகளைப்போல சறுக்கிக் கொண்டே போகும் அவைகளை அவன் கட்டுப்படுத்துவான்.

அவனுடைய ஆட்சியை நெருங்கி இரவு பின்பற்றுகிறது. வறண்ட பிரதேசங்களில் வனவிலங்குள் தங்கள் பங்குக்கான நீரைத் தேடிப் போகின்றன. காடுகள் பறவைகளுக்கு ஒதுக்கப்பட்டன. தெய்வமான சவிதாவின் இந்தக் கட்டளைகளை யாரும் மீற முடியாது. அந்திவேளையில், வருணன், ஓய்வில்லாத அவசரத்துடன், நீரில் உள்ள தன் இருப்பிடத்திற்கு விரைகிறான்; பிறகு, ஒவ்வொரு பறவையும் தன் கூட்டைத் தேடுகிறது; விலங்குகள் தங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்லுகின்றன; இப்படியாக சவிதா ஒவ்வொரு பிராணியையும் அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறான்.

ஹரிணி வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்