SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்

2021-01-12@ 10:21:26

சூரியனே உலகிற்கு ஒளிகாட்டும் தெய்வமாகும். அந்தச் சூரியனே ஈசனை வழிபட்டுப் பேறு பெற்று ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக்  காட்டுகிறது. இது திருவேதிக்குடி தலபுராணத்தில் இடம் பெற்றுள்ளதாகும்.
கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
பண்பரிதி  நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார்
பனங்காட் டூர் நெல்லிக்  காவேழும் பொற்
பரிதி பூசனை செய்யூர்.
 - என்பதாகும். இதன்பொருள் 1. கண்டியூர்  (2) வேதிக்குடி (3) நல்ல குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் கும்பகோணம்  நாகேஸ்வரர் ஆலயம் (4) பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர்  கோயில் (5) பாங்கான திரித்தெளிச்சேரியான கோயில்பத்து (6) பொன் புறவார்  பனங்காட்டூர் எனும் (பனங்காட்டூர்) (7) நெல்லிக்கா ஆகிய ஏழும் பொன்போல்  பிரகாசிக்கும் சூரியன் சிவபெருமானைப் பூசிக்கும் பதிகளாகும்.

வியாசர்பாடி ரவீஸ்வரர்

சூரியனின் வம்சாவளியில் திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர் வேதவியாசர் ஆவார். இந்த  வியாசரே வேதங்களையும் பதினெண் புராணங்களையும் தொகுத்தவர். இவர் ஒருசமயம் பூவுலகம் வந்து ஒரு பர்ணசாலை அமைத்து தவம் செய்தார். அவருடைய தவச்சாலைக்கு எழுந்தருளிய சூரியன். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபாடும் செய்தான். அந்த இடமே இந்நாளில் வியாசர்பாடி என வழங்குகின்றது. அங்கு சூரியன் அமைத்த லிங்கம் ரவீஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். அம்பிகை  மரகதாம்பிகை என்று அழைக்கப்படுகின்றாள்.வியாசர்பாடி சென்னையின் வடமேற்குப் பகுதியில் பாரிமுனையிலிருந்து மூலகொத்தளம் செல்லும்வழியில் எருக்கஞ்சேரிக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலில் அழகிய ராஜகோபுரமும் விமானங்களும் உள்ளன. வேத வியாசருக்கு தனிச் சந்நதி மேற்குப் பிராகாரத்தில்  உள்ளது. ஆதித்தியனுக்கு அபயம் திருநீடூர் அம்பிகை  சோழ நாட்டு தேவாரத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநீடூர் ஆகும்.  மயிலாடுதுறையில் இருந்து நீடூருக்குப் பேருந்து வசதி உள்ளது. இங்கு முதல் யுகத்தில் சூரியன் வழிபட்டான் என்பர். இங்குள்ள இறைவன் சோமநாதேஸ்வரர்  என்றழைக்கப்படுகின்றார். இறைவிக்கு ஆதித்திய அபயப்பிரதாம்பிகை என்று பெயர்.

சூரியன் வழிபடும் மங்கலநாயகி

சூரியனால் வழிபாடு செய்யப்பட்டு சிறப்பு பெற்ற திருத்தலங்களில் உள்ள அம்பிகைக்கு மங்கலநாயகி என்பதே பெயராகி விளங்குகின்றது. இத்தலங்களில் உள்ள  தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் என்றே அழைக்கப்படுவதும்  குறிக்கப்படுவதாகும். நெல்லிக்கா, பருதி நியமம், மங்கலக்குடி, குடந்தை,  சிறுகுடி முதலிய தலங்கள் யாவும் சூரியன் தன்பெயரால் தீர்த்தம் அமைத்து சிவ  வழிபாடு செய்த தலங்களாகும்.இங்குள்ள அம்பிகைகளின் பெயர்கள் யாவும் ‘‘மங்கல நாயகி’’ என்றே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும். காசியில் சூரியன்  அமைத்து வழிபட்ட சிவலிங்கம் கபஸ்தீசுவரர் என்றும் அம்பிகை மங்கள கௌரி என்று  வழங்குவதும் இங்கு எண்ணத் தக்கதாகும். எனவே சூரியன் வழிபட்ட அம்பிகைக்கு  மங்கலநாயகி என்பது சிறப்புப்பெயராக விளங்குவதை அறியலாம்.

பக்குவம் தரும் பரிதி நியமம்

பரிதி என்றால் சூரியன்- நியமம் என்றால் கோயில், சூரியன் வழிபட்டுப் பேறுபெற்ற கோயில் பரிதி நியமம் என்று அழைக்கப்படுகின்றது என்பர். இந்நாளில் இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என வழங்குகிறது. சுவாமிக்கு பாஸ்கரேஸ்வரர்  பருதியப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இது தாங்கமுடியாத வெப்பத்துடன்  விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழச் சித்திரைமாதப் பௌர்ணமி நாளில்  மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் என்பர். சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன்னேயுள்ளது. சூரியன் பூசித்ததை  நினைவுகூரும் வகையில் பங்குனிமாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் சூரியக்  கிரணங்கள் சுவாமியின் மீது படிகின்றன. அம்பிகையின் பெயர் மங்கலநாயகி  என்பதாகும். திருநாவுக்கரசர் ‘‘பருதி நியமத்தார்  பன்னிருநாள்’’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதனை  பன்னிருநாள் பருதிநியமம் என்று குறித்து பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன்  வழிபட்டான் என்பர். இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையில்  இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இது சூரியனின்  கோயிலாக இருந்து பின்னாளில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று  ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கருவறைக்கு முன்பு அமைந்துள்ள நந்தி பலி பீடத்திற்குப் பின்புறம் சூரியன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்கழுக்குன்றமான பாஸ்கரபுரி

சிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன் 2. விவசுவான் 3.  மார்த்தாண்டன் 4. பாஸ்கரன் 5. இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி  8.சுவிக்கிரமன் 9. ஆதித்தன் 10. சூரன் 11. அஞ்சுமாலி 12. திவாகரன் என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம்  இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக்கொண்டனர். பிரமன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி ஆணையிட்டார். அவர்கள் அப்படிப் பணி செய்யும் காலத்தில் உதயவேளையில் மந்தேகர் முதலிய அசுரர்கள் தடைகளை உண்டாக்கினர். அவர்கள் மீண்டும் பிரமனை அடைந்து தமது குறையை முறையிட்டனர். அவர் அவர்களைத்  திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வழிபடும்படிக் கூறினார். அதன்படியே அவர்கள் உருத்திரகோடியாகிய திருக்கழுக்குன்றத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டனர். அங்கு அவர்களுடைய பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அவர்கள்  முன்பு தோன்றிக்காட்சியளித்து தடைகள் நீங்கி உதிக்க எனவே  திருக்கழுக்குன்றத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்தியபுரி என்பன  பெயராயிற்று. இதனைக் திருக்கழுக்குன்றத்து உலா. திருக்கழுக்குன்றபுரணம் முதலியவற்றால் அறியலாம்.

சூரியன் வழிபட்ட ஆவினன்குடி

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் கூடி திருக்கயிலாய மலையை அடைந்து சிவபெருமானைத்  துதித்து நின்றனர். அப்போது மகதி என்ற யாழை ஏந்திய நாரதன் சூரியனை நோக்கி  நீ ஒளிபரப்பாவிடில் உலக உயிர்கள் வருந்துமே என்றான். அதைக் கேட்ட சூரியன் அகங்காரம் கொண்டு அப்படித்தான் நான் ஒளிபரப்பவில்லை யென்றால் உலக உயிர்கள் அழியும் என்றான். இந்த அகங்காரத்தால் தன் கதிர்களை மறைத்துக்கொண்டு உலத்தை இருளில் மூழ்கடித்தான்.இதை அறிந்த சிவபெருமான் தனது கண்களை விழித்தார். இவ்வாறு நீண்ட காலம் கடந்தன. சூரியன் இல்லாமலேயே சிவனின் விழியின் ஔியினால் இந்த உலகம் செழிப்புடன் நடைபெற்றது இதனை உணர்ந்த அவன் சிவபெருமானைப் பன்முறை வணங்கி ஆற்றாதவனாய் மண்ணுலகம் வந்து நெல்லி மரக்காட்டில்  சிவலிங்கம் அமைத்து தவம் செய்தான். அவனாலும் காமதேனுவாலும், திருமகளாலும் போற்றப்பட்டதால் அப்பதி திரு+ ஆ+ இனன் குடி என்றாயிற்று. அதுவே பழனிமலையின்  அடிவாரத்தில் திருவாவினன்குடியாக இன்று

மங்கலன் வழிபடும் மங்கலக்குடி

மங்கலக் குடியீசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வனும் விண்ணோடு மண்ணும் சங்கு சக்ரதாரி சதுமுகன் நேர் அங்ககத்தியனும் அர்ச்சித்தாரன்றே
 - அப்பர் குறுந்தொகை தேவாரத்தில்  சிவபெருமானைச் சூரியன் வழிபட்டதாக குறிப்புள்ள தலங்கள் சிலவேயாகும்.  அவற்றி லொன்றே திரு மங்கலக்குடியாகும் . இங்கு சூரியனும் எட்டுக் கிரகங்களும்  சிவபெருமானை வழிபட்டன என்பர். இக்கோயில் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருமங்கலக்குடியில் உள்ளது.  அதற்கான புராணக்கதை வருமாறு.ஒரு சமயம் காலவர் எனும் முனிவர் வாழ்ந்துவந்தார். அவர் ஒரு நாள் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது தமக்கும் தனது சந்ததி களுக்கும் கிரகநிலை மாறுதல்களால்  கடுந்துன்பம் நேரப்போவதை அறிந்தார். எனவே நவகிரகங்களைக் குறித்து தவம் செய்தார். நவகிரகங்கள் அவர் முன்னே தோன்றின. அவர் அவற்றை மகிழ்வித்து வணங்கித் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் நேராதிருக்க வரம்  வேண்டுமென்று கேட்டார். நவகிரக நாயகர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி

இதையறிந்த நவகிரக தேவதைகளின் அதிபர்களும், காலதேவனும் கோபம் கொண்டனர். ஒருவனின் விதியை மாற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை.  வரம்பு மீறி வரமளித்தால் நீங்கள் குஷ்டநோய் பிடித்துத் துன்புறுங்கள் என்று  சாபம் கொடுத்தனர்.  இதனால் வருந்திய நவகிரகங்கள் பூமிக்கு வந்து  சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தனர்.அவர்களுக்கு சிவபெருமான் அருள்  புரிந்து நோய் நீக்கம் செய்தார்.மங்கலனாகிய சூரியனால் வழிபடப்பட்டதால்  இவ்வூர் மங்கலக்குடி என்றானதென்பர். இங்கு சூரியனால் வழிபடப்பட்ட பெருமான்  பிராண வரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்கலநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இதன் அருகில்தான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்ட பின்னரே சூரியனார் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகும்.

இங்கு கார்த்திகை மாதம் ஞாயிறு தொடங்கி (மொத்தம் பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து இங்குள்ள மங்கல தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை நிவேதித்து வழிபட்டால் தொல்லை தரும் பரம்பரை வியாதிகளில் இருந்து விடுபடலாம் என்பது  நம்பிக்கையாகும்.

பூசை.ச.அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

 • uk-lockdown13

  பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

 • mask_ramadaaa1

  சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

 • chenaabbb11

  இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

 • 13-04-2021

  13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்