SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜீவபரியங்கத்துள் கிடந்த கந்தன்

2021-01-06@ 10:00:05

அருணகிரி உலா-111

அருணகிரிநாதர் எழுதிய க்ஷேத்ரக் கோவை பாடலில் ஜம்புகேஸ்வரம் (10) திருஆடானை (11) இன்புறுசெந்தில் (12) திரு ஏடகம் (13) இவற்றைத் தொடர்ந்து பதினான்கவதாக நாம் பார்க்க இருப்பது பழமுதிர்சோலை. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில் ஆறாவது ஆற்றுப் படைத்தலம் இத்தலமே. மதுரையிலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள அழகர் கோயில் மலையடிவாரத்திலிருந்து மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் இத்தலத்தை அடையலாம். வெகுகாலம் வரை இங்கு வேலை மட்டுமே பூசிக்கப்பட்டு வந்தது.

இன்று வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். தனிச் சந்நதியிலுள்ள வேலிற்கு இன்றும் பக்தர்கள் பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்கின்றனர். ஔவைப் பிராட்டியிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாப்பழம் வேண்டுமா’ என்று கேட்டு முருகன் விளையாடிய திருத்தலம். நாவல் தலமரமாக விளங்குகிறது.நக்கீரர் தமது நூலான  திருமுருகாற்றுப் படையை ‘‘பழமுதிர் சோலைமலைக் கிழவோனே’’ என்று நிறைவு செய்கிறார். இது அந்நிலத்திற்குரியவன் என்று பொருள்படுகிறது. ஆனால், அருணகிரிநாதர் சற்று நகைச்சுவையாக கீழ்வரும் கந்தரலங்காரச் செய்யுளில் பாடியிருக்கிறார்.

 ‘‘திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை
திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி
யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ
விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.’’
- என்பார்.

சரவணப் பூந்தொட்டிலை ‘ராஜீவ பரியங்கம்’ என்பார் மயில் விருத்தத்தில். ராஜீவபரியங்கத்தில் கிடந்து சாதாரண மானுடக் குழந்தை கார்த்திகை மாதரின் முலைப்பாலமுதம் உண்ண அழுது கொண்டிருக்கும் குழந்தையை உலகம் குறிஞ்சிக் கிழவன் என்கிறதே என்பார்! கிழவன் என்ற சொல்லை முதியவன் என்ற பொருளுக்கு உரியதாக்கிக் கூறும் விதம் ரசிக்கத்தக்கது.

முருகன் நிரந்தரமாகக் குடிகொண்ட தலங்களின் பெயரைக் கூறினாலே புண்ணியமுண்டு என்ற கருத்தைக் கந்தர் அந்தாதி. முதற் செய்யுளில் முன் வைக்கிறார். முதல் ஐந்து ஆற்றுப்படைத் தலங்களையும் சொல்லிவிட்டு ஆறாவதாகப் பழமுதிர்சோலை பற்றிப் பின்வருமாறு பாடுகிறார்.
‘‘சென்று அதிர் உவா  
இனன்  குடி  கொண்ட
  தண்கார்  வரை  
செப்புமினே!’’ என்பார்.

[ பூமி அதிர நடக்கும் யானைக் கூட்டங்கள் வாழ்கின்ற குளிர்ந்த கருமேகங்கள் சூழ்ந்த
பழமுதிர் சோலையையும் துதி
செய்யுங்கள்]
‘‘தினைப்புன தந்தி  சமுக  வேதனை
நண்ணு தண்கார் வரை சேர்பவரே
. . . . உக வேதனை ஈறிலும் ஈறிலர் ’’
 - என்று மற்றொரு கந்தர்அந்தாதிச் செய்யுளில் கூறுகிறார். ‘‘வேலாயுதன்
வசிக்கும், தினைக் காடு
களையும், யானைகளின் கூட்டங்களையும் மூங்கில் மரங்களையும் தன்னுடன் பொருந்தி இருக்கும் குளிர்ந்த மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை அடைந்து இடைவிடாது தியானிப்பவர்கள் யுக முடிவிலும் துன்பமுற்று அழியாது நித்ய சூரியராய் இருப்பர்’’ என்று சொல்கிறார்.பழமுதிர் சோலையிலுள்ள சிலம்பாறு எனப்படும் நூபுரகங்கையைப் பற்றிய குறிப்பு ஒரு பாடலில் உள்ளது.

‘‘ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு ...... துறைசேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள்....
ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.’’

 - என்று ‘வாரணமுகம்’ எனத் துவங்கும் சோலைமலைத் திருப்புகழின் பிற்பகுதி. வேதம் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான. மடங்களும், தவம், ஓமப்புகை இவை நடைபெறும் இடங்களும் விளங்குகின்ற வீதிகளும் உள்ளன; பல கிளையாக பரந்து வரும் நூபுர கங்கை சிலம்பாறு ஆரஅமர நிரம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த்துறைகள் பொருந்தி உள்ளன; தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரம் நெருங்கி நின்று சூழ்ந்துள்ள அழகிய பொலிவுள்ள மண்டபங்களும், சூரியன் போல ஒளிவீசும் அழகிய மாளிகைகளும் விளங்குகின்றன. இத்தகு அழகிய சோலைமலை வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே! உன் ஆடக பதம் (கூத்துக்கு இயன்ற  திருவடி) பதம் பணிந்து அதைப் பூசிக்கும் தொண்டன் இவன் என்று  கூறும்படியான ஒருநாள் வருமா? என்கிறார்.

“துடிகொள் நோய்கள்’ எனத் துவங்கும்
பாடலில்
‘‘முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.’’
 - என்று போற்றுகிறார்.

 முடுகி வந்த சூரபத்மன் முதலானோர் தலையில் உள்ள மூளையானது தூளாகும்படி ஆடிய நடனமயில் வீரா!  முனிவர்களும் தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தத் தலமான சோலைமாமலையில் வீற்றிருக்கும் வேலனே! தியாக மூர்த்தியாக சிவபெருமான் ஈன்ற பெருமாளே! முருகப் பெருமான் சூரனைச் சங்கரித்தவுடன் ஆடிய கூத்து துடி எனப்படும். சூரன், பதுமன், சிங்க முகன், தாரகன் எனும் நான்கு பூதர்கள், கருடன் ஆகிய ஊர்திகளுக்கு இடையூறு செய்ததால், முருகன் அவரை அசுரர்களாகுமாறு சபித்தான். சாபம் நீங்கப் பெற்றபோது, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப சிங்கமுகன் துர்க்கையின் சிங்க வாகனமாயினன். தாரகன் ஐயனாருக்கு யானை வாகனமாகவும், சூரன் கந்தவேளுக்கு மயில்வாகனமாகவும், பதுமன் சேவற் கொடியாகவும் ஆனார்கள்.

மதுரையை அடுத்த ஊராதலால் சிவபிரான், குதிரை வியாபாரியாகவும், வைகைக் கரையை அடைக்க மண் சுமந்த இளைஞனாகவும் மாணிக்கவாசகருக்காக வந்த குறிப்புகளும் சோலைமலைப் பாடலில் உள்ளன.

‘‘கூடற்கே வைகையில் கரை கட்டிட
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடி ......படுவோனோடு’’
[ பிட்டுக்கு மண் சுமந்த மன்னனிடம்
பிரம்படி பட்ட குறிப்பு ]
‘‘வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
  மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண .....செங்கையாளி’’
[ குதிரை வியாபாரியாக வந்து
குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட மாணிக்கவாசகரை அடிமைகொண்ட கருணாமூர்த்தி, பொன் உருவத்தினன். நல்ல வடிவுடன் இருந்த குதிரைச் சவுக்கு வகைகளைக் கொண்ட செவ்விய  கையைக் கொண்டவராம், சிவபெருமான்].

‘பாசத்தால்’ எனத்  துவங்கும் பாடலில் தேவாரக் குறிப்பொன்றும் உள்ளது. பரவை நாச்சியாரைத் திருவாரூரில் மணம் செய்திருந்த சுந்தரர் பின்னர் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்தார். இதனை அறிந்த பரவையார் சுந்தரர் திருவாரூரை அடைந்தபோது, அவரைத் தன் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறித் தடுத்து விட்டார். சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபிரான் பரவை நாச்சியார் வீட்டிற்கு ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது நடந்து இருவரையும் கூட்டி வைத்தார்.

‘‘தேடிப்  பாடிய  சொற்புலவர்க்கு
இதமாகத்  தூது செல்  அத்தரில்  கற்பக’’
என்று முருகனைச் சிவபிரானிடத்தில் வந்த கற்பகமே என்று விளிக்கிறார்.
  முதுமைப் பருவம் பற்றிய பல பாக்களைப் பாடியுள்ள  அருணகிரியார், ‘தலைமயிர் கொக்குக்கு’ எனத் துவங்கும் சோலைமலைப் பாடலில், வடிவுதிரங்கி உயிர் போமுன் உன் திருப்புகழைக்
கற்று அப்புகழ்ச் சொற்களை
நிரம்பக்கூறி உன் திருவடியை வணங்க அருள் தருவாயாக
என வேண்டிக் கொள்கிறார்.

‘‘தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ......
தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
  சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ......

பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
  தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ......டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
  செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய்’’

 - என்று  வேண்டிக்கொள்கிறார்.
‘‘மீனுண் கொக்கின் தூவியன்ன வானரைக் கூந்தல்’’ என்று புறநானூற்றில் கூறியுள்ளதுபோல முதுமைப் பருவத்தைக் குறிக்கும்படி தலைமுடி கொக்கு போல நரைக்கிறது; பற்களின் கட்டு விடுகின்றது. நடை தளர்கிறது. தடியின் உதவி வேண்டி வருகிறது. உணவு உண்ண முடியாத விக்கல் எடுக்கிறது; வாந்தி வருகிறது; சளி மிகுத்துப் பித்தம் அதிகரிக்கிறது; எண்ணெயிலிட்டது போல் உடல் எரிகிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் இவை மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி இவை சேர்த்துத் தெளிய வடித்துற்று அக்கஷாயத்தைப் பருகி உடல் மடிந்து உயிர் போவதற்கு முன்பாக திருப்புகழ் கற்று உனை நிரம்பத் துதித்து, பிறவியலை ஆற்றினில் புகுதா வண்ணம் மேலான முக்தி இன்பத்தைப் பெற அருள்பாலிப்பாயாக’’ என்கிறார்.
இதே கருத்தைக் கந்தர் அலங்காரச் செய்யுளில் பின்வருமாறு பாடுகிறார்.

‘‘அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி
மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.’’
 பிறவிப் பிணியை நீக்கும் வேலவனைப் போற்றும் பாடல்களை அன்பால் பிழையில்லாமல்
கற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்களே! அனல் கக்கும் கண்களுடன் கூற்றுவன் வந்து பாசக் கயிற்றால் கட்டி இழுக்கும் நாளிலா திருப்புகழை கற்றுக்கொள்வது? [ யமபயம் ஏற்படுமுன் முருகன் திருப்புகழைக்
கற்றுக் கொண்டுவிடுங்கள் என்கிறார்]

அகரமுமாகி எனத்  துவங்கும் சோலைமலைப் பாடலில், ‘வனமுறை வேடன்
அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உடையோனே’ என்ற குறிப்பு வந்துள்ளது. முருகப் பெருமானின் சாபத்தால் பிரமன் பூமியில் அந்திமான் எனும் வேடனாகப் பிறந்தான். பசி மிகுதியால் களைத்துப் போனபோது எதிரில் வந்த பிப்லாத முனிவரை வழிமறித்தான். முனிவரோ முருகப் பெருமானின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல்களைப் பாடினார். வேடனுக்கு தன் முற்பிறப்பின் நினைவு திரும்பவே முனிவரின் அறிவுரைப்படி கதிர்காம முருகனை வணங்கி கிருத்திகை விரதமிருந்து இடைவள்ளல்களுள் ஒருவன் ஆனான். மேலும், தவமிருந்து பிரம்ம பதவி பெற்றான்.

கதிர்காமம்தான் பழமுதிர்சோலை என்ற கருத்து நிலவிவருகிறது. இப்பாடலில் ‘ககிர்காமம்’ பற்றிய குறிப்பு வந்துள்ளதால் மட்டுமே கதிர்காமமே பழமுதிர்சோலை என்ற முடிவுக்கு வரமுடியாது. கதிர்காமத்தில் அருணகிரியார் பாடிய பதினான்கு பாடல்களிலும் ‘கதிர்காமம்’ என்ற தலக்குறிப்பு வந்துள்ளது. இப்பாடலில் கதிர்காமம் எனும் தலப்பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பாடல் ‘‘திருமலிவான பழமுதிர்சோலைமலை மிசை மேவு
பெருமாளே’’ என்றுதான் நிறைவுபெறுகிறது.

நூபுர கங்கை பற்றிய குறிப்பு வந்துள்ளதையும் மற்றொரு பாடலில் ஏற்கனவே பார்த்தோம். உதாரணமாக சுவாமி
மலையில் ‘அதிசயம் அநேகமுற்ற பழநி’ என்றிருந்தாலும் பாடல் ‘திருஏரகத்தின் முருகோனே’ என்று நிறைவு பெற்றிருப்பதால், அப்பாடல் சுவாமி மலைக்குரியதாகவே கருதப்படுகிறது.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்