SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐந்தொழில் நடத்தும் ஆனந்தத் தாண்டவம்

2020-12-29@ 12:39:31

தில்லைக் கூத்தன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐவகைத் தொழிலை உணர்த்தும் தாண்டவங்களை பெருமான் தனித்தனியே நிகழ்த்தி ஆடும் கோலங்களை பல்வேறு  தலங்களில் கண்டு மகிழ்ந்திருப்போம். இந்த ஐவகைத் தாண்டவங்களையும் ஓருருவில் காட்டி ஆடும் ஆனந்த மாநடனத்தை இப்போது கண்டு மகிழலாம் வாருங்கள்.இறைவன் இந்த நடனத்தை  பூமண்டலத்தின் இருதய கமலமாக விளங்கும் ‘‘சிதம்பரம்’’ என்னும் தில்லையம்பதியில் ஆடிக்கொண்டிருக்கின்றான். அன்பர்கள் இதனை பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம் என்று போற்றுகின்றனர்.  இதை நாதாந்த நடனம் எனவும் கூறுவர்.

வலக்காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலை வலப் புறமாக வீசித் தூக்கி அதற்கிணையாக இடது கரத்தை வீசியவாறு ஆடுகின்றான். அபயம் காட்டும் வலது கரத்தில் ஒரு பாம்பு சுற்றிக்கொண்டு  படம் எடுத்து ஆடுகின்றது. வலது மேற்கரம் துடியை முழக்க இடது மேற்கரம் அனலை ஏந்துகிறது. ஆனந்த நடனத்தில் வேகம் அதிகமின்மையால் சடைகள் பின்னே தாழ்ந்து கிடக்கின்றன.  ஆட்டத்திற்கேற்ப தலையைச் சற்றே சாய்த்துள்ளான். அவனது வலது கை துடியை முழக்கி உலகினைப் படைத்துக் கொண்டே யிருக்கின்றது. இடது கரத்திலுள்ள தீ ஓயாது அழித்தல் தொழிலை  நடத்துகின்றது. அபயம் காட்டும் வலது முன்கை காத்தல் தொழிலைச் செய்கிறது. ஊன்றிய பாதத்தால் மறைப்புத் தொழிலும், தூக்கிய திருவடியால் மாறாத இன்பத்தில் நிலைத்திருக்கச் செய்யும் அருளல்  எனப்படும் முக்தியருளும் தொழிலும் நடைபெறுகின்றன. ஆனந்த நடனத்தைக் கண்டு அவரது தூக்கிய திருவடியைச் சிந்தையுள் நிறுத்தி வழிபடுவோர்க்கு முத்தியன்பம் எளிதாகும்.திருமந்திரம், உண்மை விளக்கம், குமரகுருபரர் பிரபந்தம் முதலியவற்றில் இக்கருத்து மனதில் பதியுமாறு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

திருமூலர் திருமந்திரத்தில்,
அதன்துடிதோற்றம் அமைப்பில் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே!

- என்றும், மனவாசகம் கடந்தார். உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலில்,
தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாம்
 ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
 நான்ற மலர்ப்பதத்தே நாடு

- என்று அருளிச் செய்துள்ளனர்.குமரகுருபரர்,

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர்  வரைப்பில் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண்ணீங்குயிரும்
தானே வகுத்ததும் தமருகக் கரமே என்று
(கற்பக மலர்கள் நிறைந்த தேவர்கள் உலகத்தையும் கடல் சூழ்ந்த இந்த நானிலமாகிய பூமண்டலத்தையும் மற்றைய புவனங்களையும், அதிலுள்ள உயிர்த் தொகுதிகளையும்)
     துடியேந்திய கரம் படைப்பதையும்
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும்  காப்பது உன் அமைத்த
பொற்கரமே

- என்று (தனித்தனியே  உயிர்களுக்கென இன்ப துன்பங்களை வகுத்து அசைவன, அசையாதன என்ற அனைத்தையும்) பொற்கரமான அபயகரம் காப்பதையும்,
தோன்று நிற்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்தோர் கரமே

 - என்று (தோன்றி  நிலைபெற்றுள்ள பழமையான அனைத்து உலகங்களையும் ஒரு நொடியில் அழிப்பது) அழல் ஏந்திய கையால் என்று அழித்தல் தொழில் நடைபெறுவதையும்,
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து     நின்று
ஊட்டுவதாகும் நின்  ஊன்றிய பாதமே

 - என்று (உயிர்கள் தம்மனதிற்கேற்ப செயல்களை நடத்தி அதனால் பெற்ற நல்வினை தீவினை ஆகிய இருவகை வினைப்பயனைப் பெறுகின்றன. அதை அனுபவிக்குமாறு செய்து மலங்களும் நீங்கி  இறையருள் பெறத் தகுதி உடையதாக ஆக்குவதாகிய) மறைத்தல் தொழில் முயலகன் மீது ஊன்றிய திருவடியால் நடைபெறுவதையும்,
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சிதபாதமே

- என்று உயிர்களுக்கு அளவில்லாத பேரின்பத்தை நல்குவது தூக்கி வளைந்த திருவடி என்றும் விவரித்திருப்பதை காண்கிறோம்.

ஒரு சில ஆலயங்களில் சிறப்பு கருதி சதுரத் தாண்டவ வடிவங்களை எழுந்தருளுவித்திருந்த போதிலும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆனந்தக் கூத்தனான நடராச மூர்த்தியே எழுந்தருளி  அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

உலக இயக்கத்திற்கு மூலமாக உள்ள ஐந்தொழிலை பரமன் ஐந்தெழுத்தாலே நடத்துகின்றான். அந்த ஐந்தெழுத்தும் அவன் திருமேனியாக விளங்குகிறது. இதையொட்டியே நமச்சிவாய வாழ்க என்று  தொடங்கி சிவபுராணப் பாடலில் மணிவாசகர் இறைவனை வாழ்த்துகின்றார்.நடராசரின் திருமேனி ஐந்தெழுத்தின் வடிவானதாகும். அவரது துடியேந்தி கரம் ‘‘சி’’ என்பதாகவும், வீசுகின்ற கரம் ‘‘வா’’ என்றும்,  அபயகரம் ‘‘ய’’ எனும் எழுத்தாயும் தழல் (நெருப்பு) ஏந்திய கரம் ‘‘ந’’ என்னும் எழுத்தையும் முயலகனால் தாங்கப்படும் திருவடி ‘‘ம’’ என்ற எழுத்தையும் குறிக்கின்றன என்பது இதையொட்டி இறைவன்  திருமேனியே பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்தாக) இருக்கிறதென்பர்.

இந்த ஆனந்தத் தாண்டவத்தை உலக மக்கள் எல்லோரும் கண்டுகளிக்கின்றனர். இந்த நடனமே இம்மையில் மக்கட் செல்வம், கல்விச் செல்வம், மனையறச் செல்வம் முதலான பல்வகைச் செல்வங்களை  வழங்கி இன்பமாக வாழ வைப்பதுடன் மறுமையில் மாறாத இன்ப வெள்ளத்துள் மூழ்கிக் களித்திருக்கும் பேரின்பமாகிய மோட்சத்தையும் தருகின்றது.
இதனாலேயே...

செல்வநெடுமாடம் சென்று சேணாங்கி
செல்வமதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் தில்லை சிற்றம்பலம் மேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே
- என்று தேவாரத்துள், திருநாவுக்கரசர் அருளிச் செய்துள்ளார். எண்ணற்றதைக் குறிக்க ஏழு என்ற சொல்லால் குறிப்பர். ஏழு பிறப்பு, ஏழ் கடல் என வருவது காண்க. இப்பாடலிலும் அளவற்ற  செல்வத்தைப் பெருமான் திருவடி நல்குகின்றது என்பதை ஏழுமுறை செல்வம் எனும் சொல் வரும்படி இப்பாடல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்