SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காத்தருள்கிறார் கற்பக விநாயகர்:வாசகர் ஆன்மிக அனுபவம்

2020-12-16@ 10:08:35


அண்ணாமலையாரால் அன்னம் கிடைத்தது

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னால் நானும் என் கணவரும் சென்னை மருத்துவ மனைக்கு சென்றோம்.மறுநாள் தீபாவளியன்று காலையில் அந்த பகுதியில் எந்த உணவகமும்  திறக்கவில்லை. அதனால் பசியோடு நடந்து வந்தோம். வரும் வழியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்கள் குடும்பத்தோடு அப்பகுதி வீடுகளில் பெறப்பட்ட இட்லி, தோசைகளை சாப்பிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தனர். அதைப் பார்த்து அண்ணாமலையாரே, ஏன் எங்களை பட்டினி போட்டுவிட்டாய்! காசு இருந்தும் சாப்பிட முடியவில்லையே என்று அங்கலாய்த்தோம். என்ன ஆச்சரியம் சிறிது தூரம் நடந்து சென்றதும் அவ்வீதி வீட்டின் எதிரே நின்றுகொண்டிருந்தவர்கள் எங்களை அப்பா, அம்மா என்று கூப்பிட்டு நாங்கள் எங்கள் வீட்டில் தீபாவளியன்று என் அப்பா, அம்மாவோடுதான் சாப்பிட்டுவந்தோம். இந்த தீபாவளிக்கு அவர்கள் வரமுடியாத சூழ்நிலை. ஆகவே நீங்கள் இருவரும் எங்களோடு அமர்ந்து உண்ண வேண்டும் என அழைத்ததன் பேரில் வீட்டின் உள்ளே சென்று அவர்
களோடு அமர்ந்து சாப்பிட்டோம். அப்பொழுது அண்ணாமலையாரை மானசீகமாக நினைத்து கண்ணீர்விட்டு சாப்பிட்டு முடித்தேன்.
- E. திலகவதி, கீழ்பென்னாத்தூர் - 604601.

வழித்துணையாய் வந்த வடிவேலன்

நான் அரசு பணியில் சிறிய பதவியில் (கிராம சேவகர்) சேர்ந்து இலாக்கா தேர்வு எழுதி பாஸ் செய்து ஆணையாளராக பதவி ஏற்று 1993ல் ஓய்வு பெற்றேன். நான் சிறு வயதில் இருந்தே முருக பக்தன். வருடத்தின் முதல் நாள் பழனி சென்று முருகனை தரிசித்து வருவேன். 1958-ல் திருமணம் ஆகி தர்மபுரி வட்டாரத்தில் கிராமசேவைகளுக்கு ஆலங்கரை என்ற கிராமத்தில் குடியிருந்தேன். ஆலங்கரை தர்மபுரி to திருப்பத்தூர் சாலையில் டவுனை விட்டு சிறிது தூரம் தள்ளி இருந்தது. எனது சொந்த ஊர் ஆத்தூர் தாண்டவராயபுரம். எனது தந்தையார் கொடுத்த அரிசி 50 கிலோவும் கடலை எண்ணெய் 1 சிறிய டின்னும் எடுத்துக்கொண்டு திரும்ப போனேன். ஆத்தூரில் இருந்தே நல்ல மழை. ஆத்தூரில் 6 மணிக்கு மேல் புறப்பட்டு 9 மணிக்கு மேல் தர்மபுரி போய் சேர்ந்தேன். அரிசியை கணக்குப் பிள்ளை வீட்டில் வைத்துவிட்டு தூறலில் நனைந்துகொண்டே எண்ணெயை எடுத்துக்கொண்டு டவுனை விட்டு ரோட்டில் இருந்து சோளக்காட்டில் ஒத்தையடி நடைபாதையில் இறங்கி நடக்க வேண்டும். பயம் எடுக்க முருகனை வேண்டி இறங்கி நடந்தேன். பயம் மேலே நடக்க முடியவில்லை. மீண்டும் முருகனை வேண்டினேன். எனக்கு முன் சிறிது தூரத்தில் எனக்கு நன்றாக கேட்கும் படி யாரோ சிலர் பேசிக்கொண்டு போனார்கள். அவர்களை தொடர்ந்து நானும் சென்றுவிட்டேன். ஊர் போய் சேர்ந்ததும் அங்கு ஊர் எல்லையிலுள்ள பள்ளியில் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் நான் ‘‘ஏம்பா! யார் தற்பொழுது என் முன்னால் பேசிக்கொண்டு ஊர் வந்தார்கள்'' என்று கேட்டேன். அவர்கள் ‘‘ 2 நாட்களாகவே மழை பெய்து கொண்டிருக்கிறது. யாருமே டவுனுக்கு போகவும் இல்லை, வரவும் இல்லை'' என்று கூறினார்கள். எனக்கு அப்பொழுதுதான் முருகன்கருணை தெரிந்தது. வழித்துணையாக எனக்கு முன்வந்து துணை செய்தது எனது முருகன் தான் என உணர்ந்தேன்.
‘‘நம்பினோர் கை விடப்படார்’’
- ஆர். செங்கமலை  

காத்தருள்கிறார் கற்பக விநாயகர்

நான் வங்கி பணியிலிருந்து (பாங்க் ஆஃப் இந்தியா) பணி ஓய்வு பெற்றுள்ளேன். பணியில் இருந்த போது, எல்லா நாட்களிலும் கூட்டம் இருந்தாலும், மாதத்தின் முதல், இரண்டாம் நாட்களில் பென்ஷனர் கூட்டம் அதிகமாக இருக்கும். பென்ஷனர்  Payment வாங்கி செல்லும்போது மகிழ்ச்சியுடன் செல்வார்கள். ஒரு மாதத்தின் 15 அல்லது 16ஆம் தேதியில் பென்ஷனர் ஒருவர் பணம் பெறுவதற்கு  டோக்கன் வாங்கிக்கொண்டு எதிரில் அமர்ந்திருந்தார். அவர் டோக்கன் வந்தபின் டோக்கன் நம்பர் மற்றும் பெயர் (திவ்யராஜ், ஓய்வு ஆசிரியர்) சொல்லி அழைத்தேன். அவருடைய  பணம் Rs. 75,000/- அருகில் வந்து  கவுன்டரில் குனிந்து ஏதோ சொன்னார். எனக்கு சரியாக கேட்கவில்லை. நானும் சற்று குனிந்து என்னவென்று கேட்டேன். சார் அந்த பணத்தில் ஒரு 500/- ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் ஏன், எதற்கு என்று கேட்டேன். சார் எனக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை (அரியர்ஸ் 1,75,000/- ரூபாய்.) இதை நான் பெறுவதற்கு பலமுறை அலைந்து திரிந்து விட்டேன். மேலும் நிறைய பணமும் செலவு செய்து விட்டேன். ஆனால் இங்கு நான் வந்தவுடன் டோக்கன் கொடுத்து அமரவைத்து, சிறிது நேரத்தில் பணம் கொடுக்கின்றீர்கள். எனவே ரூ.500/- எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஐயா உங்களுக்கு  பணத்தை எண்ணி கொடுப்பதற்கும், செலுத்தும் பணத்தை சரியாக வாங்கிக் கொள்ளவும்தான் நான் இங்கு பணி செய்கிறேன். வங்கியில் எனக்கு நிறைவான சம்பளம் கொடுக்கிறார்கள். நான் மட்டும் அல்ல, இங்கு இருக்கும் யாருக்கும் நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். யாரும்  பணம் வாங்க மாட்டார்கள். எனவே உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி பணம் கொடுத்தனுப்பினேன்.

ஒரு சில மாதத்திற்கு பின் அவருடைய பாஸ்புக் மற்றும் பணம் எடுக்கும் செக் உடன் ஒருவர் வந்தார். சார் அவருக்கு (திவ்யராஜ்) உடல் நிலை சரியில்லை. வெளியில் காரில் அமர்ந்து இருக்கிறார். நான் கார் டிரைவர் குமார் என்று சொன்னார். இவரும் தெரிந்த வாடிக்கையாளர்தான். பணத்தை எடுத்துக்கொண்டு குமாரையும் அழைத்துக்கொண்டு கார் அருகில் சென்று, ஐயா உடல்நிலை சரியில்லையா, நன்றாக உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லி பணத்தைக் கொடுத்தேன். சார் நீங்களே நேரில் வந்து பணம் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி என சொல்லி பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் சில மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் வீட்டின் முன்னே கார் ஒன்று வந்து நின்றது. காரிலிருந்து டிரைவர் குமார் மற்றும் திவ்யராஜ் அவர்களும் வந்து இறங்கினார்கள். எனக்கு பெரிய ஆச்சரியம். ஐயா எப்படி வீடு கண்டுபிடித்து வந்தீர்கள் என கேட்டேன். வழியில் உங்கள் பெயரை சொல்லி கேட்டுக்கொண்டே வந்துவிட்டோம் என்று சொன்னார்கள். வீட்டிற்குள் அமர வைத்து முதலில் தண்ணீர் கொடுத்தேன். என் மனைவியிடம்  காபி போட சொன்னேன். வந்தவர் என்னிடம் கற்பக விநாயகர் சாமி படம் ஒன்றை கொடுத்து இதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டார். வேறுவழியில்லாமல் சற்று தயக்கத்துடன் பெற்றுக் கொண்டேன். இன்றும் என் வீட்டில் ஹாலில் மாட்டி வைத்துள்ளேன். கொடுத்து விட்டு உடனே புறப்பட்டு விட்டார். நம்பமாட்டீர்கள். 10 நிமிடம் கூட ஆகியிருக்காது. காபி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொண்டேன். பரவாயில்லை நாங்கள் புறப்படுகிறோம் என்று சொன்னார். டிரைவர் குமாரை தனியாக அழைத்து என்ன குமார் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என கேட்டேன். சார் வீட்டில் இருந்து கிளம்பும் போதே, டேய் குமார் சார் வீட்டிற்கு சென்று 10 நிமிடத்தில் புறப்படவேண்டும், அவருக்கு நாம் தொல்லை தரக்கூடாது, என்று சொல்லித்தான் புறப்பட்டு வந்தோம். வருத்தப்படாதீர்கள். மீண்டும் ஒருமுறை வருகிறோம் என்று சொன்னார். நானும் மனமில்லாமல் அனுப்பிவைத்தேன். சில நாட்களுக்கு பிறகு நான் அவருக்கு தூய இருதய ஆண்டவர் படம் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவர் வீட்டின் முகப்பில் மாட்டி வைத்துள்ளார். அந்த அன்புள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் இந்த ஆண்டின் துவக்கத்தில் காலமானார். அந்த சமயம் நான் பெங்களூருவில் இருந்தேன். இங்கு வந்த பின் செய்தி அறிந்தேன். அவர் அளித்த விநாயகர் படத்தை தொட்டு வணங்கினேன். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்பும். பண்பும், பாசமும், மரியாதையும், கலந்த அந்த மா மனிதர் என் நெஞ்சில் நிலைத்திருக்கின்றார்.  
- R. கோவிந்தராஜன், திருச்சி - 621601.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்