SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலாய் வருவான் காத்தவராயன்

2020-12-14@ 09:49:49

காவல் தெய்வங்களில் ஒருவர் காத்தவராயன். மானிடப் பிறப்பெடுத்து வாழ்ந்து காதல் மாயையில் சிக்கி கழுமரம் ஏற்றப்பட்டு மரணம் அடைகிறான். அவனது ஆத்மாவை சாந்தப்படுத்தி தனக்கு காவலாக  அமர்த்துகிறாள் காமாட்சி அம்மன்.கடம்ப வனத்தில், பர்வதபுரியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண்ணொருத்தி காமாட்சி அழகான ஆண் குழந்தை ஒன்றை கரம்தனில் ஏந்தியபடி, குழந்தையின் முகம்  பார்த்துக் கொண்டிருக்க, குழந்தையோ அழுதுகொண்டிருக்க, அவ்வழியே வந்த கொல்லிமலை குறத்தியர்கள் அவ்விடத்தைக் கடக்கும்பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பெண்ணிடம்  நலம்  விசாரித்தனர். ‘‘நாங்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகள். பெரியவள் வீட்டில் இருக்கிறாள். எங்களுக்கு குழந்தை இல்லை, பிள்ளை இல்லை என்று புழுங்கி சாகிறோம். இந்த குழந்தையை  எங்களிடம் கொடுத்தால் நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவோம்.’’

உடனே காமாட்சி,
‘‘அன்போடு வளர்ப்போம் என்று
ஆர்வத்துடனே கேட்பதால்
இல்லை என்று மறுக்காமல்
ஈகை செய்கிறேன்.’’ இவன் பெயர் காத்தவராயன் என்றபடி குழந்தையை கொடுத்து அனுப்புகிறாள். காத்தவராயன் கொல்லிமலையில் வளர்கிறான்.

(தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை. இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மலையில்  உள்ளன. நாமக்கல்லை கடந்து நாமகிரிப் பேட்டை வழியாக  கொல்லிமலையில் ஏற  ஆரம்பித்தால், 5  நிமிடத்திற்கு ஒருமுறை கொண்டைஊசி வளைவுகள் வரும். இங்கு மொத்தம் 72 கொண்டைஊசி வளைவுகளை கடந்து சென்றால் கொல்லிமலையை  அடையலாம். கொல்லிமலையில் அறப்பலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகிலேயே ஆகாயகங்கை அருவி பாய்கிறது.) (இங்கு சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் அவர்கள்  கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஏதேனும் ஒரு உயிரினத்தின் உடலில் புகுந்து வாழ்கிறார்கள் என்பதும் இம்மலை ரகசியமாகும். எனவேதான் கொல்லிமலை ரகசியம்  என்று கூறுவர்).

காத்தவராயனை அப்பெண்கள் கொல்லிமலைக்கு கொண்டுவருகிறார்கள். அவர்களின் சகோதரி தனது இருப்பிடமான திருச்சி அருகே வாத்தலை கிராமத்தில் மலைப்பகுதிக்கு கொண்டு சென்று  வளர்க்கிறாள். ஆதிகுலத்தில் வளரும் காத்தவராயன் தனது தந்தையின் மூலம் இந்திரஜாலம், மந்திரஜாலம், கோகரணம், கஜகரணம், கூடுவிட்டுக்  கூடுபாயும் வித்தை உள்ளிட்ட சகலவிதமான வித்தைகளும் கற்றுக்கொண்டான்.  இந்த நாளிலே திருசிரபுரம் (திருச்சி) நாட்டை ஆரியப்பூராஜன் என்கிற அரசன் ஆண்டு வந்தான். மன்னனுக்கு ஆலோசகராக குருதேவ் என்கிற அந்தணர் ஒருவர்  இருந்தார். நீண்ட காலம் குழந்தையின்றி இருந்த அவருக்கு அகவை ஐம்பத்தொன்று ஆனபோது அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தநேரம் குறித்து ஆருடம் பார்க்க ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்து மன்னன் முன்னால் ஜாதகம் கணிக்கச் சொன்னார் குருதேவ். அதன்படி ஜோதிடர் வந்தார். ஆருடம் கணித்தார்.  அப்போது இந்த பெண்குழந்தை பிறந்த அதே நாளில், அதே நாழிகையில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கழுமரமும் முளைவிட்டுள்ளது. இது நல்லதல்ல. இந்த பெண் அகவை பதினாறு பெற்று  நிற்கும்போது வேற்று இனத்தானால் சிறையெடுக்கப்பட்டு, குலக்கவுரவம் கெட்டு, அவனும் மரணம் எய்தி, இவளும் மண்ணில் வாழும் நிலையின்றி போகும் என்று கூறினார். உடனே குருதேவ் குறுக்கிட்டு  இதை தடுக்க பரிகாரம் இல்லையா என்று கேட்க, ஒருக்காலும் முடியாது என ஜோதிடர் கூற, அப்படியானால் குழந்தையை எனக்கு சுவீகாரம் கொடுங்கள் அவள் எனது மகளாக இந்த அரண்மனையிலே  பாதுகாப்போடு வளரட்டும் என்று மன்னன் கூறினார். அதன் காரணமாக குருதேவ் தனது குழந்தையை மன்னனுக்கு சுவீகாரம் செய்து கொடுத்தார்.

ஆரிய நகருக்குள் ஆரிய பூராஜாவுக்கு மகளாக வந்துதித்ததாலே இந்த குழந்தைக்கு ஆரியமாலா என்று பெயர் சூட்டுகிறேன் என்று வேதியர் நாமம் வைக்க, குழந்தையை பெற்றுக்கொள்கிறான் மன்னன்.  ஆரியமாலா அரண்மனையில் செல்வச்செழிப்போடு வளர்ந்து வருகிறாள். திருச்சி அருகே வாத்தலை கிராமத்தில் ஆதி குலத்தில் காத்தவராயன் வளர்கிறான். அங்கு ஆதிகுலத்து மக்களிடையே அன்பு  பாராட்டி வளர்ந்து வரும் நாளிலே வாலிப வயதை அடைகிறான். பெற்றோருக்கு  நல்ல பிள்ளையாக இருந்து வருகிறான். இசைக்கருவிகளை வாசிப்பது, குறிப்பாக பறை அடிப்பதிலும், கின்னரி(யாழ்)  வாசிப்பதிலும் கை தேர்ந்து விளங்கினான்  காத்தவராயன்.

வாத்தலையின் வனத்தில் மானை வேட்டையாடச் சென்றான் காத்தவராயன். அதே நாள், ஆரியப்பூராஜனுக்கு தெரியாமல் ஆரியமாலாவும் அவளது  தோழிகளும் வனாந்தரம் சுற்றிப்பார்க்கச் சென்றனர்.  அடர்ந்த அவ்வனத்தில்  கொடிய விலங்குகளின் நடமாட்டமும் விஷ ஜந்துக்களும் இருப்பதை உணர்ந்த தோழிகள் கோட்டைக்குச் செல்லலாம் என்று ஆரியமாலையிடம் வலியுறுத்தினர். ஆனால்  ஆரியமாலை அவர்களின் அறிவுரையை கேளாமல் தொடர்ந்து சென்றாள். ஆரியமாலை தனியாக காட்டிற்குள் நெடுந்தொலைவு பயணம் செய்ததால் களைப்படைந்தாள். தண்ணீரைத் தேடி கம்பா நதிக்கரை  வந்தாள். அப்பொழுது, காத்தவராயன் குளித்துக்கொண்டிருந்தான். தண்ணீரை உள்ளங்கைகளால் அள்ளிப் பருகினாள். அப்பொழுது தண்ணீருக்குள் இருந்த  காத்தவராயன் மேலெழுந்தார். காத்தவராயனும்  ஆரியமாலாவும் ஒருவரை ஒருவர் நோக்கினர். என் தந்தை ஆரியப்பூராஜன் தினமும் மாலை வேளையில் கோட்டை நிலவரங்களை மேற்பார்வையிட வருவார். அவருக்குத் தெரியாமல் காட்டிற்கு   வந்ததால் இப்பொழுது கோட்டையில் இல்லாவிடில் பெரும் பிரச்னை ஆகிவிடும்  என்று காத்தவராயனிடம் சொல்லி, ஏதேனும் உபாயம்  இருந்தால் கூறச் சொன்னாள். காத்தவராயன் தனது உருமாறும்  சக்தியைப் பயன்படுத்தி அவளை கோட்டைக்குள் சென்று விட்டு வந்தார். அன்றிலிருந்து  அவர்களின் காதல் உரமிட்ட செடி போல ஊட்டமுடன் வளர்ந்தது. காதல் மாயையில் இருந்த காத்தவராயன்  ஆரியமாலாவை காணமுடியாமல் ஆறாத ஏக்கத்தில் அவளது இருப்பிடம் தேடி வந்து கின்னரம் இசைக்க, அந்த இசைகேட்டு ஆரியமாலா விழித்து வெளியே வர முற்பட, வாயிற் காவலர்கள்  காத்தவராயனை பிடித்து இழுத்து

வாத்தலையிலிருந்து 11 கி.மீ  தொலைவில் பாச்சூர் கிராமம் இருக்கிறது. பாச்சூர் மணல்மேடைக்குக் கொண்டுவருகிறார்கள். வேதியர்கள், சேனைகள், மந்திரிகள் மற்றும் ஊர் மக்கள் ஆகியோருடன்   ஆரியப்பூராஜனும் கழுவடிக்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுது அவ்வழியே காத்தவராயனின் மாமன் கருப்பனுடைய மனைவி நல்லதங்கம் தயிருள்ள பானையை தலையில் சுமந்து வந்து கொண்டிருந்தாள்.  வானுயர்ந்த கழுமரத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டு நடந்த பொழுது கால் இடறி கீழே விழுந்ததில்  தயிர்ப்பானையும் உடைந்தது. பானை உடைந்து தயிர் வீணான விரக்தியாலும்  கணவனுக்கும்,  மாமியாருக்கும் தெரிந்தால் சண்டையாகும் என்ற பயத்தாலும் அழுத  நல்லதங்கம் இத்தனையும் காத்தவராயனால் நேர்ந்தது என்று அவனை  சபித்தாள். இதைக் கண்ட காத்தவராயன் அவளை  சமாதானப்படுத்த, “நான் கழுவிருக்க போகும் பொழுதும் கனல் வார்த்தை கேட்கணுமா!  பத்தினி நீ சபித்தால் பாவம் வந்து சேர்ந்திடுமே!  மண்பானைத் தயிருக்காக என்னை மரணம் தீண்ட சபிக்காதே.  பானைக்கும் ஏற்ற பணத்தை நான் கொடுக்கிறேன். உன் வாயால் என்னைச் சபிக்காதே. நீ கொடுத்த சாபத்தை நலமாக திரும்ப பெற்றுவிடு, என் அத்தையே!” என்று கோரிக்கை செய்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நல்லதங்கம், “நீ கழுவில் இருந்தாலும் காய்ந்து உலர்ந்து சாக மாட்டாய். மரக்கழுவில்  இருந்தாலும் மாண்டு மடிய மாட்டாய்.” என்று காத்தவராயனுக்கு வரம்  கொடுத்தாள். அதனையடுத்து, காத்தவராயனின் உடனிருக்கும் சின்னானை அழைத்து காத்தவராயனுக்கு அலங்காரம் செய்யச்  சொன்னார். அத்தர் தொட்டு பன்னீரை அள்ளி தெளித்துவிட்டான். தலையில் தங்கஜரிகை  வேய்ந்த பட்டுத் துண்டால் உருமால் கட்டி விட்டு நெற்றியில் குங்குமத் திலகம் வைத்தான். இடுப்பில் மாதுளம்பூ போன்ற  சல்லடத்தோடு காவிக்கச்சையை சுங்கு வைத்துக் கட்டி விட்டான். அதனோடு  கைகளில் கடக ஆரமும் போட்டு மலர்மாலை மாட்டி காத்தவராயனை  அலங்கரித்தான். ராஜ அலங்காரத்தில் கழுவடிக்கு  வந்த காத்தவராயன் கூடியிருந்த அனைவரையும் கைதொழுது வணங்கி விட்டு   கழுமரத்தில் சரசரவென ஏறி உச்சியில் நின்று கழுவேறினார். அவர் கைவைத்த  இடங்களிலும் கால் வைத்த இடங்களிலும் கடையாணி தைத்தது. அவர் கண்கள் பிதுங்கி உயிரெல்லாம் சோர்ந்து  உதிரமாய் மெல்லமெல்ல வடிந்து கொண்டிருந்தது. கழுவடியில் கூடி யிருந்த அனைவரும் காத்தவராயனை கைகூப்பி வணங்கி நின்றார்கள். காத்தவராயன் மாண்டுபோன தகவலைக் கேட்ட  ஆரியமாலாவும் மயங்கி விழுந்தார்.

உயிர் பிரியாமல் உடல் வாட, காத்தவராயன் காமாட்சியை வேண்ட, பெரியண்ணன் உருவில் மகாவிஷ்ணு வந்து காத்தவராயன் கழுத்தை தூண்டிலில் இருந்து எடுத்துவிட, உடலை விட்டு உயிர் பிரிந்தது  காத்தவராயனுக்கு. ஆர்யமாலா, காத்தவராயன் இருவரின் ஆத்மாவும் சிவலோகம் அடைந்தது. மாண்டு போன காத்தவராயனின் ஆத்மாவை சாந்தப்படுத்த அவரை வளர்த்த ஆதிகுலத்தவர்கள் நடுகல்  வைத்து படையல் போட்டு வணங்கினர். பின்னர் அவரது உருவில் சிலை நிறுத்தி கோயில் எழுப்பி வழிபடலானார்கள். திருச்சி முக்கொம்பு  அருகே காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது  வாத்தலை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள காத்தவராயன் கோயில் ஆதி முதன்மையானது என்றும் இங்கிருந்து பிடி மண்  எடுத்துச் சென்றுதான் மற்றஊர்களில் காத்தவராயனுக்கு கோயில்  அமைத்திருக்கிறார்கள் என்றும் காத்தவராயன் வாழ்ந்த இந்த ஊர்தான் அவனுக்குப்பூர்வீகம் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள கோயிலில் காத்தவராயனுக்கு இரு பக்கமும்  இரண்டு பெண்கள்  நிற்கின்றார்கள்.

ஒருவர் ஆரியமாலா. மற்றொருவர் ஓந்தாயி. மூவருக்கும் வலப்புறத்தில் பெரியண்ணன் நிற்கிறார். இவர் காத்தவராயனின் மாமன். கழுமரத்தில் காத்தவராயன் தொங்கியபோது அதன் கழுத்துத் தூண்டிலை  அவிழ்த்துவிட்டவர். என்கிறார்கள். பாச்சூர் கிராமத்தில் காத்தவராயன் கழுமரம் ஏற்றப்பட்ட ‘கழுமேடை’  இருக்கிறது. காத்தவராயன் ஏறிய 60 அடி கழுமரம் இன்றும் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு  வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியின்போது காத்தவராயன் கழுமரம் ஏறும் விழா நடைபெறுகிறது. இந்த இடத்திலும் காத்தவராயனுக்குக் கோயில் இருக்கிறது. காத்தவராயனுக்கு நடுகல் ஒன்றும்

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்