வேதத்தில் அக்னி
2020-12-08@ 17:46:01

1. அக்னிமீடே புரோஹிதம்
யஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம் ரத்னதாதமம்
அக்னிம் - அக்னி பகவானை
ஈடே - வணங்குகிறேன்
புரோஹிதம் - கண்கண்ட தெய்வமாய், நாம் கண்களால் காணும்படி கருணையினால் முன் நிற்பவர் அக்னி பகவான்.
தேவம் - ஒளிவீசியபடி திகழ்பவர்.
யஜ்ஞஸ்ய ரித்விஜம் - வேள்விகளை நிறைவேற்றி நடத்தித் தருபவர்.
ஹோதாரம் - அன்பர்களை அழைத்து அருள்புரிபவர்.
ரத்னதாதமம் - உயர்ந்த ரத்தினங்களை நமக்கு அருளிக்கொண்டே இருப்பவர்.
கண்கண்ட தெய்வமாய் ஒளிவீசிக் கொண்டு வேள்விகளை நிறைவேற்றித் தருபவரும், அன்பர்களை அழைத்து அருள்புரிபவரும், உயர்ந்த ரத்தினங்களை நமக்கு அருளிக்கொண்டே இருப்பவருமான அக்னி பகவானை வணங்குகிறேன்.
இது ரிக் வேதத்தின் முதல் மந்திரம்.
2. அக்ன ஆயாஹி வீதயே
க்ருணானோ ஹவ்யதாதயே
நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
அக்னே - அழகிய அங்கங்களை உடைய அக்னி தேவனே
ஆயாஹி - வருவீராக
வீதயே - அடியார்கள் வேள்வியில் சமர்ப்பிக்கும் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக
க்ருணான - இனிதே அவற்றை
அநுபவிப்பவனாக
ஹவ்யதாதயே - அடியார்களுக்கு உயர்ந்த பிரசாதத்தையும் உனது
அருளையும் பகிர்ந்தளிக்க
நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி - தர்ப்பையில் வந்து நீ அமர வேண்டும்
அழகிய அங்கங்களை உடைய அக்னி தேவனே! அடியார்கள் வேள்வியில் சமர்ப்பிக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றை இனிதே அநுபவித்து, அந்த அடியார்களுக்கு உயர்ந்த பிரசாதத்தையும் உனது அருளையும் பகிர்ந்து அளிப்பதற்காக நீ இங்கே வருக! தர்ப்பையின் மேலே அமர்க!
இது சாம வேதத்தின் முதல் மந்திரம்.
3. ஸேதக்னே அஸ்து ஸுபகஸ்ஸுதானு:
யஸ்த்வா நித்யேன ஹவிஷா ய உக்தை:
பிப்ரீஷதி ஸ்வ ஆயுஷி துரோணே
விச்வவேதஸ்மை ஸுதினா ஸுதினா ஸாஸதிஷ்டி:
இது யஜுர்வேதத்தில் ராக்ஷோக்னம் என்ற அனுவாகத்தின் ஏழாவது மந்திரம் ஆகும்.அக்னியே! யார் ஒருவன் தனது இல்லத்தில் உன்னை ஏற்றி வைத்தும், உன்னிடத்தில் ஆகுதிகளைச் சமர்ப்பித்தும், உன்னை வழிபட்டும், துதி செய்தும் உன்னை மகிழ்விக்கிறானோ, அவன் பாக்கியசாலியாகவும், வள்ளல் தன்மை மிக்கவனாகவும் விளங்கட்டும். அக்னியான உன்னை வீட்டில் ஏற்றி வணங்குபவனுக்கு வாழ்வில் எல்லா நாட்களுமே ஆனந்தமான நாட்களாக அமையட்டும். தினந்தோறும் மங்களங்கள் பெருகட்டும். இதுவே உனது அவாவாக இருக்கட்டும்.
4. யஸ்த்வா ஸ்வச்வஸ் ஸுஹிரண்யோ அக்ந உபயாதி வஸுமதா ரதேன
தஸ்ய த்ராதா பவஸி தஸ்ய ஸகா
யஸ்த ஆதித்யமாநுஷக் ஜுஜோஷத்
யஜுர் வேதம் ராக்ஷோக்னம்
அனுவாகத்தின் பத்தாவது மந்திரம் இது.
அக்னியே நல் வழியில் செல்லும் புலன்களோடும், நியாய வழியில் ஈட்டப்பட்ட செல்வத்தோடும், நற்குணங்களோடும், நல்ல அறிவோடும் கூடிய ஒருவன் உன்னை வந்து அடிபணிந்து, தினந்தோறும் உன்னை மகிழ்ச்சியோடு வழிபட்டானாகில், அவனுக்கு ரட்சகனாகவும் உற்ற தோழனாகவும் நீயே இருந்து காக்கிறாய்.
5. வைச்வானரஸ்ய ஸுமதௌ
ஸ்யாம ராஜா ஹிகம் புவனானாம் அபிஸ்ரீ: (ரிக் வேத சம்ஹிதை 1-98-1)
வைச்வானரன் என்று போற்றப்படும் அக்னி பகவானுடைய சுபமான எண்ணத்தில் நாங்கள் இலக்காவோம். செல்வம் சூழ்ந்த அந்த அக்னி தேவனே உலகங்களின் அரசன் ஆவான்.
6. இமாம் அக்னி:
த்ராயதாம் கார்ஹபத்ய:
ப்ரஜாம் அஸ்யை நயது தீர்க்கம் ஆயு:
இது திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்களுள் ஒன்றாகும்.
கார்ஹபத்யம் எனப்படும் அக்னிஹோத்ர அக்னியானது எனது மனைவியை எப்போதும் நன்றாகக் காக்கட்டும். இந்தப் பெண்ணுக்கு நல்ல பிள்ளைகளையும், நீண்ட ஆயுளையும் இந்த அக்னி பகவான் அருள்புரியட்டும்.
7. சாந்தோக்ய உபநிஷத்தில்
அக்னியைப் பற்றிய கதை:
உபகோசலன் என்ற மாணவன்
சத்தியகாமர் என்ற குருவிடம் பாடம் பயின்று வந்தான். குருநாதர் அவனுக்கு எந்த உபதேசமும் செய்யாமல், தனது வீட்டில் உள்ள அக்னியைப் பராமரிக்கும் பணியை மட்டும் அவனைச் செய்யச் சொன்னார். இப்படியே பன்னிரண்டு வருடங்கள் கழிந்தன.ஒருநாள் சத்தியகாமர் வெளியே சென்றிருந்த வேளையில், குருநாதர் தனக்கு உபதேசம் செய்யாததை எண்ணி வருந்தினான் உபகோசலன். அவன் இத்தனை நாட்களும் பராமரித்து வந்த அக்னி அவனைப் பார்த்துப் பேசத் தொடங்கியது, “உபகோசலா! நீ வருந்தாதே! உனக்கு நான் பரமாத்மாவைப் பற்றி உபதேசம் செய்கிறேன்!” என்றது அக்னி.
“வானத்தைப் போல எல்லையற்றவனாகவும், ஆனந்தமே வடிவெடுத்தவனாகவும் இறைவன் இருக்கிறான்!” என்று தொடங்கி அக்னியே அவனுக்கு அனைத்து உபதேசத்தையும் செய்தது.வீடு திரும்பிய குரு, உபகோசலன் முகத்தில் உள்ள பொலிவைப் பார்த்து அவனுக்கு ஞானம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின் அந்த இறைவனைத் தியானிக்கும் முறையைச் சத்தியகாமர் அவனுக்கு உபதேசித்து, அவனது ஆத்மா நற்கதி அடைய வழிகாட்டினார்.இவ்வாறு தனக்குப் பணிவிடை செய்து பராமரித்த சீடனுக்கு, அக்னியே உபதேசம் செய்த வரலாறு சாந்தோக்ய உபநிஷத்தின் நான்காம் அத்தியாயத்தில் உள்ளது.
திருக்குடந்தை சு.நாகராஜன்
மேலும் செய்திகள்
ஸ்ரீ அருணகிரிநாதர்
பெரியோர் காட்டும் வழி!
சுற்றத்துடன் வாழ்க!
சிறப்புகள் அள்ளித்தரும் செங்கதிரோன்
சகலமும் அருளும் சமத்துவ நாயகன்
மூவாக்னி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்