SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயம் போக்கும் பைரவர்

2020-12-03@ 10:07:39

சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்கு அமைந்துள்ள தீர்த்தங்களையும் காவல்புரிபவர் ஸ்ரீபைரவர் ஆவார். அவர் க்ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் க்ஷேத்ரபாலகன் என்றும்; கடல் முதலான பெரிய தண்ணீர்ப் பகுதிகள் பொங்கி பூமியை அழித்துவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகன் என்றும், பலநூறு பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

உலகினையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவபெருமானுக்கே உரியது என்பதால் அவருடைய ஒருகூறே பைரவ மூர்த்தியாக எழுந்தருளி வந்து அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகின்றது. அது அவரைப்போலவே சந்திரபிறை அணிந்து,  சூலம் ஏந்தி நிற்கின்றது. அவர் உயிர்களுக்கு ரோதனம் செய்யும் பகைவர்களுக்குப் பயங்கரமானவராக இருப்பதால் பைரவர் என்றும்; வஜ்ஜிரக்கோட்டை போல் விளங்கி தன்னை அண்டிய பக்தர்களைக் காப்பதால் வயிரவமூர்த்தி என்றும் அழைக்கப்படுகின்றார்.

பைரவர் ஞானிகளிடம் அறிவுச்சோதியை விளக்கும் ஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன் தாமே பெரிய யோகியாகவும் விளங்கி யோக பைரவராகவும்; மகாவீரர்களிடம் உக்ர பைரவராகவும்; தண்ணீர், தீ, ஆகாயம், நிலம், காற்று முதலியவற்றால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் அனேக வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள்புரிகின்றார். இவருடைய பெருமைகள் எல்லையற்றதாகும்.

இப்படி அனேக பைரவர்கள் சிவனருளால் தோன்றி உலகத்தைக் காத்து வந்தாலும் உலகில் துன்பங்கள் அளவு கடந்து விடும்போது  சிவபெருமானே வைரவனாகி மண்மேல் வந்து  உயிர்களின் துன்பத்தை நீக்கி இன்பத்தைப் பெருகவைத்த நிகழ்ச்சிகளையும் புராணங்கள் தனிச்சிறப்புடன் குறிக்கின்றன. பைரவர் உக்கிரமயமான தேவராக இருந்தாலும் பெருங் கருணைமிக்கவர்.

அன்பர்களுக்கு அளவற்ற செல்வங்களையும் இன்பங்களையும் அளிப்பவர். இதனால் அனைத்து சமயங்களும் பைரவரைத் தனிச் சிறப்புடன் போற்றுகின்றன. பைரவர் வழிபாடு சிவாலயங்களில் ஒரு அங்கமாக உள்ளது. வேதவழிப்பட்ட சாத்த, கௌமார, சௌர சமயங்களும், ஜைனம், பௌத்தம் முதலான பிற சமயங்களும் வைரவரைத் தனிச்சிறப்புடன் போற்றுகின்றன. வைரவர் மந்திர தந்திரங்களின் நாயகர், பூத, வேதாள,பிரேத, பிசாசுக்  கூட்டங்களை  அடக்கி அதன் தலைவராக இருப்பவர். அவற்றால் உயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்குபவர்.

பைரவர் - வைரவர்  - பெயர் விளக்கம்

பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இது பீரு என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு அச்சம் என்பது  பொருளாகும். பைரவர் என்ற சொல்லுக்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்க்கு அருள்பாலிப்பதால் பெருமானுக்குப் பைரவர் என்பது பெயராயிற்று.

மேலும், ப - (பரணம்), என்பது உலகில் உயிர்களைத் தோற்றுவித்து நிரப்பும் படைப்புத் தொழில் புரிவதையும், ர-( ரமணம்) என்பது தோன்றிய உயிர்களைக் காப்பதையும் வ- (வமனம்) என்பது நெடுங்காலம் வாழ்ந்து சோர்ந்து உயிர்களை அழித்துத் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதையும் குறிக்கின்றன. இந்த முத்தொழிலையும் ஆற்றுவதால் இறைவன் பைரவன் என்று அழைக்கப்படுகின்றார்.

சில நூல்களில் பைரவம் - என்பதற்கு பயந்த சுபாவத்தை உடைய பெண்கள் கூட்டம் என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது. (பீரூணாம் ஸமூஹ : பைரவம்). தர்மத்தின்மீது பயங்கொண்டவர்களே உலகில் சிறப்பான கற்புக்கரசிகளாக விளங்குகின்றனர். அவர்களுக்குக் காவலாக இருந்து தர்மத்தைக் காப்பதால் சிவபெருமான் பைரவர் எனப்படுகின்றார்.

இனி வைரவர் என்ற சொல்லின் பொருளைக் காணலாம். பைரவர் என்பதிலிருந்து மருவிய சொல்லே வைரவர் என்று பலர் குறிக்கின்றனர். ஆனால், வைரம் போன்று திண்மையான தேகம் படைத்தவராகவும், பக்தர்களுக்கு வைரத்தாலான கோட்டை போன்று காவல் தெய்வமாக விளங்குவதாலும் சிவபெருமானின் காவல் திருக்கோலம் வைரவர் என அழைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வைரம் பாய்ந்த தன்மையைக்குறிக்கும் ‘‘காழ்’’ என்பதன்  அடிப்படையாகத் தோன்றிய சீர்காழி வைரவரின் தலைமையிடமாக  இருப்பதும் இங்கு எண்ணத்தக்கதாகும். மேலும் வைரவருக்கு வடுகன், சட்டநாதன் என்ற பெயர்களும் வழங்குகின்றன.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்