SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

2020-12-03@ 09:55:32

297. காந்தாய நமஹ (Kaanthaaya namaha)

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. முனைவர். கருணாகராச்சாரியார் சுவாமி மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் பயின்று வந்த சமயம். அவருடன் படித்து வந்த சக மாணவர் ஒருவரோடு கருணாகராச்சாரியார் சுவாமி மதுரை கள்ளழகர் கோயிலுக்குச் சென்றார்.

அழகே வடிவான அழகரின் திருமுன்பே கருணாகராச்சாரியார் உருகி நிற்பதை அவரது நண்பர் கவனித்தார். சந்நதியில் இருந்து வெளியே வரும் போது, “கருணாகரா! நாங்கள் எல்லாம் கோயிலுக்குப் போனால், ஏதோ சுவாமியைப் பார்த்தோமா, கூட்டத்தில் சிக்காமல் திரும்பி வந்தோமா என்ற அளவில்தான் இருப்போம். நீ மட்டும் எப்படி இறைவனின் அழகில் இவ்வளவு தூரம் ஈடுபட்டு ரசித்து வணங்குகிறாய்?” என்று கேட்டார் நண்பர்.

அதற்குக் கருணாகராச்சாரியார், “உனக்குக் காயத்திரி மந்திரம் உபதேசம் ஆகி இருக்கிறதா?” என்று நண்பரைப் பார்த்துக் கேட்டார். “ஆம்!” என்று விடையளித்தார் நண்பர். “அந்த காயத்திரி மந்திரத்தின் பொருளை உணர்ந்து தினமும் மூன்று வேளை அம்மந்திரத்தை ஜெபித்தால், இறைவன் மீது காதல் பொங்கி வரும். அதன்பின் நீயும் கோயிலுக்கு வந்தால், இறைவனின் அழகில் ஈடுபட்டு உருகத் தொடங்குவாய்!” என்றார் கருணாகராச்சாரியார்.

“எப்படி?” என்று கேட்டார் நண்பர்.“காயத்திரி மந்திரத்தின் பொருளை முதலில் அறிந்து கொள்!” என்று சொன்ன கருணாகராச்சாரியார், அழகர் கோயிலில் இருந்து அவர்கள் வெளியே நடந்து வரும் வேளையில் காயத்திரி மந்திரத்தின் பொருளை நண்பருக்குக் கீழ்க்கண்டவாறு கூறலானார்:
“தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்” என்பது தான் காயத்திரி மந்திரம். அதற்கு முன் ப்ரணவத்தையும் (ஓம்), பூ:, புவ:, ஸுவ: என்ற வியாஹ்ருதிகளையும் இணைத்து நாம் சொல்கிறோம். (மந்திரங்களை முறைப்படி உபதேசம் பெறாமல் சொல்லக்கூடாது என்ற மரபு இருப்பதால், முழு மந்திரம் இங்கே கொடுக்கப்படவில்லை).

இம்மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், மந்திரப் பகுதியிலுள்ள எழுத்துகளை அதற்குரிய
வரிசையில் மாற்றியமைக்க வேண்டும்:“ஸவிது: தேவஸ்ய பர்க: தத் வரேண்யம் தீமஹி, ந: திய: ய: ப்ரசோதயாத்”
ஸவிது: தேவஸ்ய - சூரியனுக்குள் அந்தர்யாமியாகத் திகழும் திருமால், சூரிய நாராயணன்.
பர்க: - அந்தத் திருமாலின் திருமேனி ஒளி.

தத் - அத்திருமேனி ஒளி, நமக்கு அவன்மீது அன்பையும் பக்தியையும் கிளர்ந்து எழச் செய்ய வல்லது.வரேண்யம் - அவனது திருமேனி ஒளி அனைவராலும் விரும்பத்தக்கதாக இருக்கிறது.தீமஹி - அத்தகைய திருமேனி ஒளியை நெஞ்சில் வைத்துப் போற்றுவோம்.ந: திய: ய: ப்ரசோதயாத் - அந்த ஒளி நம் புத்தியை நல்வழியில், இறைவனை நோக்கிச் செலுத்தும்.

எனவே, காயத்திரி மந்திரம் சொல்லும் கருத்து - நம் நெஞ்சில் அன்பைக் கிளர்ந்தெழச் செய்ய வல்லதும், அனைவராலும் விரும்பத்தக்கதுமான திருமாலின் திருமேனி ஒளியை நம் நெஞ்சில் வைத்துப் போற்றுவோம். அத்திருமேனி ஒளியை நாம் தியானித்தால், அவ்வொளி நம் புத்தியை நல்
வழியில் இறைவனை நோக்கிச் செலுத்தும்.

“இந்தக் காயத்திரி மந்திரத்தைத் தினமும் மூன்று வேளை நீ சொல்லி, திருமாலின் அழகையும் அவரது திருமேனி ஒளியையும் மனதாரத் தியானித்து வா! அந்த அழகும் ஒளியும் உன் உள்ளத்தில் திருமால் மீதான அன்பைக் கிளர்ந்தெழச் செய்து உன்னை அவர்பால் ஈர்த்துவிடும்!” என்று நண்பரிடம் சொன்னார் கருணாகராச்சாரியார். அவ்வாறே செய்த அந்த நண்பரும் பின்னாளில் மிகச்சிறந்த திருமால் அடியாராக மாறினார்.

காயத்திரி மந்திரம் கூறுவது போல் தனது அழகு மற்றும் திருமேனி ஒளியினால், அடியார்களின் மனங்களைத் தன்பால் ஈர்ப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘காந்த:’ என்றழைக்கப்படுகிறார். ‘காந்த:’ என்றால் அனைவரையும் ஈர்க்கவல்ல அழகை உடையவர் என்று பொருள். அதுவே
ஸஹஸ்ரநாமத்தின் 297வது திருநாமம்.

“காந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பேரழகர்களாக விளங்கும் படித் திருமால் அருள்புரிவார்.

298. காமாய நமஹ (Kaamaaya namaha)

இறைவனின் அழகில் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடும்போது, அவர்களுக்கு இயல்பாகவே பெண் தன்மை வந்துவிடும். ‘ஞானத்தில் பெண் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு’ என்று இதைப் பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். இவ்வாறு கவிஞர் தன்னை ஒரு பெண்ணாகவும், இறைவனையே தன் நாயகனாகவும் கொண்டு பக்தி இலக்கியம் பாடுவதை ‘நாயக-நாயகி பாவம்’ என்பார்கள்.

நம்மாழ்வார் திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில் கோயில் கொண்டிருக்கும் திருக்குறுங்குடி நம்பி என்று பெயர் பெற்ற பெருமாளைத் தரிசித்த அளவில், அப்பெருமாளின் வடிவழகு நம்மாழ்வாரை ஆட்கொண்டது. அதனால் நம்மாழ்வாருக்குப் பெண் பாவம் வந்து விட்டது. ‘பராங்குச நாயகி’ என்னும் பெண்ணானார் நம்மாழ்வார்.

அந்தப் பராங்குச நாயகி, திருக்குறுங்குடி நம்பியிடம் மயங்கிக் கிடப்பதைக் கண்ட அவளது தாய், “மகளே! நீ என்ன பித்துப் பிடித்தாற்போல் ஆகிவிட்டாய்! என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்கிறாள். “நான் திருக்குறுங்குடி நம்பியை மணந்து கொள்ளப் போகிறேன்!” என்று பதிலளிக்கிறாள் நாயகி. “என்ன உளறுகிறாய்?” என்று மிரட்டும் தொனியில் கோபத்துடன் கேட்கிறாள் தாய்.

அதற்குப் பராங்குச நாயகி விடையளிக்கிறாள்:
“எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே”

“தாயே! நீ என்னை நோக்கிக் கோபம் கொள்வதால் எந்தப் பயனுமில்லை! நீ திருக்குறுங்குடி நம்பியின் மீதும் அவனது அழகின் மீதும்தான் கோபம் கொள்ள வேண்டும்!” என்கிறாள் நாயகி.

“நான் ஏன் திருமால் மேல் கோபம் கொள்ள வேண்டும்?” என்று அன்னை கேட்க, “அவன் இவ்வளவு அழகாக இருப்பதால்தானே நான் அவனிடம் மயங்கினேன்? இதில் என்மீது தவறில்லை, அவன் அழகின் மீதுதான் தவறு! எனவே அவனிடம்தான் நீ கோபம் கொள்ள வேண்டும்!” என்கிறாள் நாயகி.

“இப்படிக் காதல் செய்வது நம் குலவழக்கத்துக்குத் தகுமோ?” என்று கேட்கிறாள் அன்னை. “நான் யாரோ பர புருஷனையா காதலிக்கிறேன்? பரம புருஷனான திருமாலைத் தானே காதலிக்கிறேன்? இதிலென்ன தவறு? அவனது அழகை நீங்களும் பாருங்கள்! அவனைப் பற்றி மனத்தால் நினைக்கும் போதே, அவனது சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் சிவந்த வாயும் என் மனக்கண் முன்னே உருவெளிப்பாடாக வந்து தோன்றுகின்றன! என் மனத்தை அவை கொள்ளை கொள்கின்றன!” என்கிறாள், பராங்குச நாயகி.

“நாங்களும்தானே திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்கிறோம்? நாங்களும்தானே அதே நம்பியைத் தரிசனம் செய்கிறோம்? எங்களுக்கெல்லாம் இத்தகைய உணர்வுகள் வரவில்லை! உனக்கு மட்டும் ஏன் இப்படி எண்ணத் தோன்றுகிறது?” என்று பரிவுடன் கேட்கிறாள் அன்னை.
அதற்குப் பராங்குச நாயகி,“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனையாதே”

என்று விடையளிக்கிறாள். அதாவது, “உங்கள் நெஞ்சால் பார்த்தால் என் நிலை உங்களுக்குப் புரியாது! என் நெஞ்சை இரவலாக உங்களுக்குத் தருகிறேன்! என் நெஞ்சைக் கொண்டு நீங்கள் திருக்குறுங்குடி
நம்பியைக் கண்டால்,

“மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திருமருவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
வந்தெங்கும் நிற்குமே”
அவனது மேகம் போன்ற மேனியில் மின்னல் போன்ற பூணூல், மகர குண்டலமும், திருமார்பிலுள்ள ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், அவனது திவ்ய ஆபரணங்களும், நான்கு திருத்தோள்களும் நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களைப் பின்தொடர்ந்து வரும்! அப்பேர்ப்பட்ட பேரழகன் அவன்!” என்று பதில் சொல்கிறாள் நாயகி.

இந்தப் பாடல்களின் மூலம், திருமாலின் வடிவழகும் அவருடைய கல்யாண குணங்களும் அடியார்களின் மனங்களை எந்த அளவுக்கு மயக்கி அவன்பால் ஈர்க்கின்றன என்பதை அறிய முடிகிறதல்லவா? இப்படித் தனது அழகால் உலகனைத்தையும் மயக்கி விடுவதால், திருமால் ‘காம:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘காம:’ என்றால் தன் அழகால் அனைவரையும் மயக்குபவன் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 297-வது திருநாமம்.
(குறிப்பு: திருமாலின் பேரழகில் இருந்து ஒரு துளியைப் பெற்றதால் தான் மன்மதனும் பிறரை மயக்கும் ஆற்றலைப் பெற்றான். மயக்கும் ஆற்றல் பெற்றதால் மன்மதனுக்கும் ‘காம:’ என்று பெயர் உண்டு. எனினும், அந்த மன்மதனுக்கும் அத்தன்மையை அளித்தவராக, மன்மத மன்மதனாகத் திருமால் திகழ்கிறார் என்பதையே ‘காம:’ என்ற இத்திருநாமம் உணர்த்துகிறது.)“காமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலின் அழகில் மயங்கி, உயர்ந்த பக்தியில் ஈடுபடும்படி திருமால் அருள்புரிவார்.

299. காமப்ரதாய நமஹ (Kaamapradhaaya namaha)

ராமாயணம் என்பதே சரணாகதி சாஸ்திரம். ராமாயணத்தில் தொட்ட இடங்களில் எல்லாம் சரணாகதி இருப்பதை நாம் காணலாம். தேவர்கள் சரணாகதி, திரிசங்கு சரணாகதி, சனச்சேப சரணாகதி, லட்சுமண சரணாகதி, பரத சரணாகதி, முனிவர்கள் சரணாகதி, சுக்ரீவ சரணாகதி, விபீஷண சரணாகதி எனப் பலப்பல சரணாகதி வரலாறுகளை நாம் ராமாயணத்தில் காண்கிறோம்.

இத்தகைய சரணாகதி சாஸ்திரமான ராமாயணத்தை ராமாநுஜருக்கு அவரது தாய்மாமாவான திருமலை நம்பிகள் கீழத் திருப்பதியில் உபதேசம் செய்தார். அவ்வாறு உபதேசம் பெற்ற ராமாநுஜர், திருமலை நம்பியிடம், “சுவாமி! சரணாகதி சாஸ்திரமான ராமாயணத்தில் பரதனின் சரணாகதி பலித்ததா? இல்லையா? என்பதைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

உடனிருந்த ராமாநுஜரின் சகோதரரான எம்பாரைப் பார்த்துத் திருமலை நம்பி, “நீ என்ன நினைக்கிறாய்? பரதனின் சரணாகதி பலித்ததா? இல்லையா?” என்று கேட்டார். “ராமன் வனம் சென்றிருந்த நிலையில், முடிசூடிக் கொள்ள மறுத்த பரதன், ராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர விழைந்தான். நால்வகைச் சேனையோடு சித்திரகூடத்திலிருந்த ராமனிடம் சென்றான். ராமனின் திருவடிகளில் சரணாகதி செய்து நாட்டுக்குத் திரும்ப வருமாறு வேண்டினான். ஆனால் அவனது கோரிக்கையை ஏற்கும் நிலையில் ராமன் இல்லை. அதனால் தனக்குப் பதிலாகத் தனது பாதுகையைப் பரதனிடம் வழங்கிவிட்டு ராமன் வனம் சென்று விட்டான்.

ராமனது பாதுகையோடு நந்திக்கிராமத்துக்குச் சென்ற பரதன், அங்கிருந்தபடி பதினான்கு ஆண்டுகள் பாதுகையின் பிரதிநிதியாக ஆட்சி செய்தான். இதில் பரதனின் கோரிக்கையை ராமன் ஏற்றதாகத் தெரியவில்லையே!” என்றார் எம்பார்.

அதைக் கேட்ட திருமலை நம்பி, “முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரதனின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழலில் ராமன் இருந்தான். ராமாவதாரத்துக்கு முன், தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று, பூமியில் அவதாரம் செய்து ராவணனை வதம் செய்யுமாறு பிரார்த்தித்து சரணாகதி செய்தார்கள். பரதன் சொன்னபடி ராமன் நாட்டுக்குத் திரும்பி இருந்தால், ராவணன் சீதையை அபகரித்துச் சென்றிருக்க மாட்டான்.

ராவண வதம் நடந்திருக்காது. ராவணனை வதம்செய்யக் கோரி தேவர்கள் செய்த சரணாகதி பலிக்காமல் போயிருக்கும். எனவே, பரதனுக்கு முன்பே சரணாகதி செய்த தேவர்களின் காரியத்தை முதலில் நடத்திக் கொடுக்க விழைந்தான் ராமன். அதனால் தான் அவனால் பரதனின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை!” என்றார்.

“அப்படியானால் பரதனின் சரணாகதி பலன் அளிக்கவில்லை என்று தானே அர்த்தம்?” என்று எம்பார் கேட்க, திருமலை நம்பி, “பரதனின் சரணாகதிக்கு அவன் கேட்டதை விட அதிகமாகவே பலன் கிட்டியது!” என்று பதிலளித்தார்.

“எப்படி?” என்று ராமாநுஜரும் எம்பாரும் வினவ, அதற்குத் திருமலை நம்பி, “பரதனின் சரணாகதியை ஏற்றதால், தன்னை விடவும் உயர்ந்ததான தனது பாதுகையை உடனடியாகப் பரதனுக்கு வழங்கி விட்டான் ராமன். உண்மையில் ராமனை விட ராமனின் பாதுகைகள் உயர்ந்தவை என்பது சம்பிரதாயம். எனவே முதல் பலனாய், கேட்டதை விட (ராமனைவிட) உயர்ந்த பலன் (பாதுகை) பரதனுக்குக் கிட்டிவிட்டது.

அடுத்து, பரதனின் கோரிக்கையையும் ராமன் நிராகரிக்கவில்லை. அன்றைய சூழலில் அதை ஏற்கமுடியாததால் பதினான்கு வருடம் வனம் சென்ற ராமன், அந்த வனவாசத்தை நிறைவு செய்தவுடன், பரதன் விரும்பியபடி பட்டாபிஷேகம் செய்து கொண்டான். இது இரண்டாவது பலன். மூன்றாவதாக ஒரு பலனையும் அளித்தான் ராமன். ராமன் வந்து நாடாள வேண்டும் என்று கோரி பரதன் சரணாகதி செய்தானல்லவா? அது அயோத்தி மக்கள் அனைவரின் சார்பிலும் பரதன் செய்த சரணாகதி.

எனவே அதை அயோத்தி மக்கள் அனைவரும் செய்த சரணாகதியாகவே கருதிய ராமன், தனது அவதாரத்தை நிறைவுசெய்து கொண்டு வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளையில் அயோத்தியில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியளித்தான். அயோத்தி மக்கள் ஒவ்வொருவரும் தனியாக சரணாகதி செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் அனைவரின் சார்பிலும் பரதன் சரணாகதி செய்ததால், அந்த சரணாகதிக்கான மூன்றாவது பலனாக அயோத்தியின் அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளித்தான் ராமன்!” என்று விளக்கினார்.

இங்கே பரதன் கேட்டது ராமன் நாடாள வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான். ஆனால் அவனுக்குத் தன்னை விட உயர்ந்த தன் பாதுகை, (பதினான்கு வருடங்கள் கழித்து) அவன் விரும்பிய ஸ்ரீராம பட்டாபிஷேகம், அயோத்தியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி என மும்மடங்காகப் பலனளித்தான் ராமன்.

‘காம’ என்றால் விருப்பம் என்று பொருள். ‘ப்ரத:’ என்றால் அருள்பவர். விருப்பங்களை அருள்வதோடு மட்டுமின்றி, அந்த விருப்பங்களை விடவும் அதிகமான நற்பலன்களையும் சேர்த்து அருள்வதால் திருமால் ‘காமப்ரத:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 299-வது திருநாமம். “காமப்ரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் பலன்களை விடவும் அதிகமாகத் திருமால் அனுக்கிரகம் புரிவார்.

300. ப்ரபவே நமஹ (Prabhave namaha)

சீதாதேவியை ராவணன் அபகரித்துச் சென்ற நிலையில், அவளைத் தேடிக் கொண்டு வந்த ராமனும் லட்சுமணனும் ரிஷ்யமுக மலையை அடைந்தார்கள். அந்த மலையில்தான் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ஒளிந்திருந்தான் சுக்ரீவன். அவனோடு அனுமான், ஜாம்பவான் உள்ளிட்ட நான்கு மந்திரிகள் அங்கே இருந்தார்கள்.

ராமனும் லட்சுமணனும் ரிஷ்யமுக மலையை நோக்கி வருவதைத் தூரத்தில் இருந்து கண்ட சுக்ரீவன் திகைத்துப் போனான். அனுமானை அழைத்து, “அதோ இரண்டு வீரர்கள் வருகிறார்கள் பார்! அவர்கள் பார்ப்பதற்குப் புஜபலப் பராக்கிரமசாலிகளாகத் தெரிகிறார்கள். எனினும் அரச குமாரர்கள் போல் தோன்றும் இவர்கள் ராஜ அலங்காரத்தில் இல்லாமல் மரவுரி அணிந்திருக்கிறார்கள். தபஸ்விகளைப் போல் மரவுரி அணிந்திருந்தாலும், கையில் கமண்டலம் வைத்திருக்கவில்லை! வில் அம்புகளை ஏந்தி இருக்கிறார்கள்! இவர்கள் ராஜ குமாரர்களா? முனிவர்களா? போர் வீரர்களா? ஒன்றும் புரியவில்லையே!” என்று சொன்னான் சுக்ரீவன். அனுமான் சுக்ரீவனைப் பார்த்து, “அஞ்ச வேண்டாம்! யாராக இருந்தாலும் அவர்கள் நம்மிடம் வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாமே!” என்று சாந்தமாக விடையளித்தார். ஆனால் அவர்கள் மலையை நோக்கி வர வர, சுக்ரீவனின் அச்சம் அதிகரித்தது.

ஏற்கனவே வாலியை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த சுக்ரீவன், “அனுமனே! எனக்கு ஓர் ஐயம் எழுகிறது. என் அண்ணன் வாலி இந்த ரிஷ்யமுக மலைக்கு வரக்கூடாது என்று அவனை மதங்க முனிவர் சபித்து விட்டார். அதனால் வாலி நேரடியாக வராமல் இந்த முரண்பாடான தோற்றத்தோடு கூடிய இந்த இருவரையும் என்னைக் கொல்வதற்காக அனுப்பி இருக்கிறான் போலும்!” என்று அச்சத்துடன் சொன்னான். அவனைத் தேற்றிய அனுமான், “நீங்கள் சற்றுப் பொறுங்கள்! அவர்கள் யார் என்பதை நான் போய் அறிந்து வருகிறேன்!” என்று சுக்ரீவனிடம் சொல்லி விட்டு, ராம லட்சுமணர்களை நோக்கி வந்தார்.

ராமனையும் லட்சுமணனையும் வணங்கி அவர்களைப் பணிவுடன் வரவேற்ற அனுமான், “தாங்கள் யார்? தங்கள் வருகைக்கான காரணத்தை நான் அறியலாமா?” என்று கேட்டார். நவ வியாகரண பண்டிதரான அனுமனின் பேச்சினால் மிகவும் கவரப்பட்ட  ராமன், ‘சொல்லின் செல்வன்’ என்று அனுமனைப் பாராட்டினான். லட்சுமணனைப் பார்த்து, “நாம் யார் என்பதை இவரிடம் தெரிவிப்பாயாக!” என்று சொன்னான் ராமன். லட்சுமணன் முதலில் அனுமனுக்கு ராமனை அறிமுகம் செய்து வைத்தான். அதன்பின், “நீங்கள் யார்?” என்று லட்சுமணனைப் பார்த்து அனுமான் கேட்க,

“அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:”

என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் லட்சுமணன். “லட்சுமணனாகிய நான் ராமனின் தம்பி. ராமனின் குணங்களால் கவரப்பட்டு அவருக்குத் தொண்டனாக ஆனவன்!” என்பது இதன் பொருளாகும். லட்சுமணன் இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பின்னணியில் ஒரு சூட்சுமம் உள்ளது.

அது என்ன?

இங்கே லட்சுமணன் தானாக அனுமனிடம் பேசவில்லை. ராமன் தன் சார்பில் லட்சுமணனைப் பேசச் சொல்லியிருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம் அல்லவா? இப்போது “நீங்கள் யார்?” என்று லட்சுமணனைப் பார்த்து அனுமான் கேட்ட போது, லட்சுமணனுக்குத் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டு விட்டதாம்! அது யாதெனில், “நான் யார் என்று அனுமான் கேட்கிறாரே! இப்போது நான் யார் என்பது பற்றிய ராமனின் அபிப்பிராயத்தை ராமனின் சார்பில் சொல்வதா? அல்லது நான் யார் என்பது பற்றிய எனது கருத்தைச் சொல்வதா?” என்று சிந்திக்கத் தொடங்கினான் லட்சுமணன்.

சிறிது நேரம் சிந்தித்து விட்டு, இரண்டையுமே சொல்லி விடுவோம் என்று கருதி, முதலில் ராமனின் பார்வையில், “அஹம் அஸ்ய அவரோ ப்ராதா”, “நான் ராமனுக்குத் தம்பி! இது ராமனின் கருத்தாகும்!” என்றும், அதன்பின் தனது கருத்தைத் தெரிவிக்கும் விதமாக, “குணை: தாஸ்யம் உபாகத:”, “அவர் என்னைத் தம்பியாக நினைத்தாலும், நான் உண்மையில் அவருக்குத் தொண்டனாகத் தான் என்னைக் கருதுகிறேன். அவரது குணங்களால் கவரப்பட்டு, அந்த குணங்களுக்குத் தோற்று அவருக்குத் தொண்டனாக நான் இருக்கிறேன். என்றென்றும் அவருக்குத் தொண்டனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்!” என்றும் லட்சுமணன் பதில் சொன்னான்.

குணை: தாஸ்யம் உபாகத: - அவர் குணங்களால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் தொண்டனானேன் என்று லட்சுமணன் சொன்னது போல், தனது குணங்களாலே நம் அனைவரின் மனங்களையும் ஈர்த்து, கவர்ந்து செல்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ப்ரபு:’ என்றழைக்கப்படுகிறார். ப்ரபு என்றால் மனங்களை ஈர்ப்பவர் என்று பொருள்.

(குறிப்பு: விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திருநாமமும் ‘ப்ரபு:’ ஆகும். அங்கே உரையாசிரியரான பராசர பட்டர், ‘ப்ரபு:’ என்ற சொல்லுக்குப் பூமியில் அவதரித்தாலும் மேன்மை குன்றாதவர் என்று பொருள் உரைத்துள்ளார். 300-வது திருநாமமான ‘ப்ரபு:’ என்பதற்கு,
நம் மனங்களை ஈர்ப்பவர் என்று பொருள் உரைத்துள்ளார். எனவே ஒரே திருப்பெயர் இரண்டு இடங்களில் வந்தாலும்,
இடத்துக்குத் தக்கபடி பொருளிலே மாற்றம் உண்டு.)

“ப்ரபவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பிறரை ஈர்க்கவல்ல நற்குணங்கள் உண்டாகும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 • penguin24

  உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்