SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு நனவாகும்..!

2020-11-30@ 10:33:48

?எனது இடத்தை ஒருவனுக்கு பரிதாபப்பட்டு வாடகைக்கு விட்டேன். அவன் பத்து வருடங்களாக அந்த இடத்தில் இருந்துகொண்டு வாடகை சரியாகத்தருவதில்லை. காலி செய்யச் சொன்னால் செய்ய முடியாது என்று கூறுகிறான். நான் என்ன செய்தால் அவன் காலி செய்வான், எந்த கடவுளை வணங்க வேண்டும்?
- சாந்தி, சேலம்.


ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டு காலமாக உங்களுக்கு சனி தசை நடந்து வருகிறது. சனி கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் இருப்பதால் இதுபோன்ற சிரமத்தை சந்தித்து வருகிறீர்கள். என்றாலும் வருகின்ற 08.04.2021 முதல் சாதகமான சூழல் உருவாகிறது. அது முதல் அந்த இடத்தில் இருந்து வரும் பிரச்னைகள் விலகி வருமானம் வரக்காண்பீர்கள். தற்போது நடந்து வரும் சூரிய புக்தியின் காலம் நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள துணைபுரியும். தயக்கம் ஏதுமின்றி காவல்துறையின் உதவியோடு நீங்கள் அவரை உங்கள் இடத்திலிருந்து காலி செய்ய வைக்க இயலும். இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களை எதிர்கொள்ள பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஆனைமலைக்குச் சென்று மாசாணி அம்மனை வழிபடுங்கள். கீழ்க்கண்ட மந்திரத்தை காலை, மாலை இருவேளையும் பூஜையறையில் 18 முறை ஜபம் செய்து வர உங்கள் பிரச்னை தீரும்.

“ஓம் ஹ்ராம் கார்த்த்யவீர்யார்ஜூனானாம் ராஜா பாஹூ சஹஸ்ரவான்
யஸ்யஸ்மரண மாத்ரேண கதம் நஷ்ட்யஞ்ச லப்யதே.”

?அமாவாசை நாளில் பிறந்த எனது கணவர் நன்றாக சம்பாதிக்கிறார். ஆனால் தவறான வழியில் செலவு செய்கிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. அவர் திருந்த என்ன வழி? அமாவாசையில் பிறந்திருப்பதால் இவ்வாறு உள்ளாரா?
- விஜயலட்சுமி, திண்டிவனம்.


மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அமாவாசையில் பிறந்தவர்கள் தகாத வழியில் செலவு செய்வார்கள் என்று சொல்வது தவறு. அதோடு உங்கள் கணவரின் பிறந்த நேரம் என்று நீங்கள் எழுதி அனுப்பியிருப்பதைக் கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் அமாவாசை முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் நேரத்தில் தான் அவர் பிறந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கணவரின் மனநிலையிலும் உடல்நிலையிலும் கவனத்தை செலுத்துங்கள். அவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கும், ராசிக்கும் அதிபதி ஆகிய புதன் 12ல் அமர்ந்திருப்பதால் அதிகப்படியான அலைச்சலை சந்தித்து வருகிறார். அவர் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமைந்து வருகிறது. இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற்று வருகிறார். ஆழ்மனதில் உள்ள அவரது ஆசைகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. அவரை நல்வழிப்படுத்த கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் அவரது மனைவியாகிய உங்களால் நிச்சயமாக இயலும். உங்கள் ஊரில் உள்ள திந்திரிணீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் மரகதாம்பிகை சந்நதிக்கு புதன்கிழமை தோறும் சென்று ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது உங்கள் கணவரையும் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அம்பிகையை வழிபடச் செய்யுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவரது நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

?சுமார் 50 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது ஐந்து செண்ட் மனை வாங்கியுள்ளேன். குடியிருக்க ஒரு வீடு கட்ட முயற்சிக்கிறேன். இத்துடன் என் மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். என் மனக்கவலையை போக்க ஒரு வழி சொல்லுங்கள்.
- பாண்டியன், அகஸ்தீஸ்வரம்.


மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக உள்ளது. தந்தை ஆகிய நீங்கள் சொந்தமாக வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். அவசரம் ஏதுமின்றி நிதானமாக திட்டமிட்டு செயல்படுங்கள். வெளியில் தனி மனிதர்களிடம் வட்டிக்கு கடன் வாங்காமல் அரசுத் தரப்பு வங்கிகளின் மூலமாக கடனுதவி பெற்று வீடு கட்ட முயற்சியுங்கள். உங்கள் மகனின் நேரம் நன்றாக உள்ளதால் அவரை முன்னிறுத்தியும் அவரது பெயரையும் ஜாய்ன்ட்டில் சேர்த்து கடன் பெற முயற்சிக்கலாம். இத்தனை காலமாக பொறுமை காத்து வந்த நீங்கள் தற்பொழுதும் அதே பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் மகனின் ஜாதகப்படி வருகின்ற 21.11.2021 முதல் துவங்க உள்ள சந்திர தசையின் காலம் சொந்த வீட்டினைப் பெற்றிருப்பதற்கான காலமாக உள்ளதால் அந்த நேரத்தில் அதாவது அடுத்த வருடம் கார்த்திகை மாதத்திற்குள் உங்களால் க்ருஹப்ரவேசத்தை நடத்திவிட இயலும். மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து சுப்ரமணிய ஸ்வாமியை பிரார்த்தனை செய்து வாருங்கள். வீடு கட்டி முடிந்தவுடன் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை குடும்பத்துடன் தரிசிப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். சுப்ரமணியரின் திருவருளால் சொந்தவீடு கனவு, வரும் வருடத்திற்குள் நனவாகிவிடும்.

?எனக்கு அரசு வேலை கிடைத்தும் கொரோனா காரணமாக வேலையில் சேர இயலவில்லை. இந்த பணி நிரந்தரமாக இருக்குமா? நான் ஒருவரை நேசித்தேன். தற்போது பின்வாங்கி விட்டேன். என் வாழ்வில் எல்லாமே குழப்பமாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உரிய வழி காட்டுங்கள்.
- சிந்தியா, நாகர்கோவில்.


பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் நீச பலம் பெற்று ராகுவுடன் இணைந்து சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் அவ்வப்போது தேவையில்லாத மன சஞ்சலத்திற்கு ஆளாகி வருகிறீர்கள். கால தாமதம் செய்யாமல் விரைவில் பணியில் சேர்வதற்கு முயற்சியுங்கள். தற்போது கிடைத்திருக்கும் வேலையானது நிரந்தரமாகிவிடும். வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாலே மனக்குழப்பம் குறைய ஆரம்பித்துவிடும். 24 வயதை கடந்திருக்கும் நீங்கள் திருமண வயது வந்துவிட்டதா என்றும் கேட்டிருக்கிறீர்கள். திருமண வாழ்வினைப் பற்றிச்சொல்லும் ஏழாம் வீட்டில் ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகிய புதன் அமர்ந்திருப்பதால் மனதிற்குப் பிடித்தமான வாழ்வு நிச்சயமாக அமையும். அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்களை விரும்புகின்ற நபர் நிச்சயமாக உங்கள் வாழ்விற்கு நல்ல துணையாக அமைவார். மனதில் இருந்து வரும் குழப்பத்தினை விட்டொழித்து குடும்பத்தினரிடம் சொல்லி உங்களுக்கு பிடித்தமான நபரை கரம்பற்றுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 08.12.2021 வரை திருமண யோகம் நன்றாக உள்ளதால் அதற்குள் திருமணம் நடந்துவிடும். வெள்ளிக்கிழமை தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது புல் வாங்கிக் கொடுத்து வாருங்கள். பசுவைத் தொட்டு தரிசனம் செய்து வருவதன் மூலம் உங்கள் மனதில் இருந்து வரும் குழப்பம் விலகக் காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 • penguin24

  உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்