SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்றும் ஆரோக்கியம் தரும் நாராயண நாமம் எது?

2020-11-25@ 11:48:49

ஸ்வயம்பவே நமஹ என்கிற நாமத்தைச் சொல்லுங்கள். அது குறித்த சிறு கதையை பார்ப்போமா! கண்ணன் துவாரகையை ஆண்டு வந்த காலம். ஒரு மாலை நேரத்தில் அரண்மனையில் கண்ணன் அர்ஜுனனோடு உரையாடிக் கொண்டிருக்கையில், அந்தணர் ஒருவர் வேகத்தோடும் கோபத்தோடும் அரண்மனைக்குள் நுழைந்தார். “கண்ணா! இதுதான் நீ ஆட்சிபுரியும் லட்சணமா? உன் பிரஜை களைப் பற்றி உனக்குக் கவலையே இல்லையா?” என்று கேட்டார். அருகில் இருந்த அர்ஜுனன் மலைத்துப் போனான். “அந்தணரே! உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டான். “என் குழந்தைகள் பிறந்தவுடனேயே மறைந்து காணாமல் போய்விடுகிறார்கள். இதுவரை ஐந்து பிள்ளைகள் எனக்குப் பிறந்தார்கள். ஒவ்வொருவரும் பிறந்த அடுத்தநொடியே காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அரசனான கண்ணன் நாட்டில் நடக்கும் இச்சம்பவத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உன்னுடன் கதை பேசிக் கொண்டிருக்கிறான்!” என்றார் அந்த அந்தணர்.“நீங்கள் இதைப் பற்றிக் கண்ணனிடம் முறையிட்டீர்களா?” என்று கேட்டான் அர்ஜுனன்.

“ஒவ்வொரு முறை குழந்தை மறைந்தபோதும் கண்ணனிடம் வந்து முறையிட்டேன். அடுத்த முறை காணாமல் போகாது என்று அவனும் ஒவ்வொரு முறையும் உறுதியளித்துக் கொண்டே இருந்தான். ஆனால் குழந்தைகள் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன!” என்றார். உருகிப்போன அர்ஜுனன், “அடுத்தமுறை உங்கள் மனைவி பிரசவிப்பதற்கு முன் என்னிடம் சொல்லுங்கள். உங்களது ஆறாவது குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு!” என்றான். மகிழ்ச்சியுடன் “சரி!” என்று சொல்லிவிட்டு அந்தணர் புறப்பட்டார். மாதங்கள் கடந்தன. அந்தணரின் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்ட அர்ஜுனன் அவரது இல்லத்துக்கு விரைந்தான். தன்னுடைய பாணங்களால் அந்தணரின் வீட்டைச் சுற்றி ஒரு கோட்டையையே எழுப்பினான். “என் அம்புக் கோட்டையைத் தாண்டிக் குழந்தையை யார் தூக்கிச் செல்கிறார்கள் என்று பார்க்கிறேன்!” என்று பெருமிதத்துடன் சொன்னான் அர்ஜுனன். குழந்தை பிறந்தது. அந்தணர் ஆசையுடன் குழந்தையைக் கையில் ஏந்தப் போனார். ஆனால் குழந்தை காணாமல் போய்விட்டது.

“உன்னை நம்பியதற்குக் கண்ணனையே நம்பி இருக்கலாம் போலிருக்கிறதே!” என்று விரக்தியின் விளிம்பில் அந்தணர் புலம்பினார். தன் தோல்வியால் மனம் கலங்கிய அர்ஜுனன் உயிரையே மாய்த்துக் கொள்வதென முடிவெடுத்தான். அப்போது குறுக்கிட்ட கண்ணன், “அர்ஜுனா! அவசரப்படாதே!” என்று சொல்லி, அவனையும் அந்த அந்தணரையும் தன் தேரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். கண்ணன் தன் சக்ராயுதத்தை தேருக்கு முன் செலுத்த, அந்தச் சக்கரத்தின் ஒளியில் தேரோட்டி தேரை ஓட்டிச் சென்றான். தாங்கள் எங்கே செல்கிறோம் என்று அந்தணருக்கும் அர்ஜுனனுக்கும் புரியவில்லை. “நாம் வைகுந்தத்தை நெருங்கிவிட்டோம்!” என்றான் கண்ணன். வைகுந்த வாசலில் தேர் நின்றது. இருவரையும் அழைத்துக் கொண்டு கண்ணன் உள்ளே சென்றான். கண்ணனைப் போலவே உருவமுள்ள ஒருவரை அங்கே அவர்கள் கண்டார்கள். அவர்தான் திருமால் எனப் புரிந்து கொண்டார்கள். அவர் ஆதிசேஷன் மேலே அமர்ந்திருந்தார்.

அவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவிகள் அமர்ந்திருந்தார்கள். “கண்ணா! வருக! வருக!” என வரவேற்றாள் ஸ்ரீதேவி. “நீ தேடி வந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள்!” என்று புன்னகையுடன் தெரிவித்தாள். “நீ மனிதனைப் போல அவதரித்தாலும், உன் திருமேனி சாதாரண மனித உடல்களைப் போலப் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, பஞ்ச சக்திகளால் ஆக்கப்பட்ட திவ்வியமான திருமேனி என்பதை பூதேவிக்கும் நீளாதேவிக்கும் காட்டவிழைந்தேன். உன்னை இங்கே வரவழைத்து அதைக் காட்டவே அந்த அந்தணரின் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து ஒளித்துவைத்தேன்!” என்றாள் மகாலட்சுமி. “இனிமேல் இப்படி எல்லாம் விளையாடாதீர்கள்!” என்று சிரித்தபடியே ஸ்ரீ,பூ,நீளா தேவிகளிடம் கண்ணன் சொல்லிவிட்டு அந்தணரின் ஆறு பிள்ளைகளையும் அவரிடம் ஒப்படைத்தான். இச்சம்பவத்தை நம்மாழ்வார்,

“இடரின்றியே ஒருநாள் ஒருபோழ்தில் எல்லா உலகும் கழியப்
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண்தேர்க் கடவிச்
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே”

என்று திருவாய்மொழியில் பாடியுள்ளார்.

இந்தச் சரித்திரத்தில் மகாலட்சுமி சொன்னாற்போல், பஞ்சபூதங்களாலான மனித உடலைப் போலல்லாத திவ்விய மங்களத் திருமேனியைத் தனது விருப்பத்தால் எம்பெருமான் எடுத்துக் கொண்டு அவதரிப்பதால் அவன் ‘ஸ்வயம்பூ:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 37-வது திருநாமம்.“ஸ்வயம்புவே நமஹ:” என்று தினமும் ஜபம் செய்பவர்கள் குன்றாத இளமையோடும் ஆரோக்கியத்தோடும் திகழ்வார்கள்.

- குடந்தை உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

 • 26-01-2021

  26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்