SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரி வலம் எனும் இருதய ஸ்தானம்

2020-11-23@ 16:49:37

ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் மலையை வலம் வர கௌதமர், பார்வதி தேவி உள்ளிட்ட ரிஷிகளும், முனிவர்களும், வேதியர்களும் தயாராயினர். மெல்ல கண்கள் மூடி கைகளிரண்டையும் உயர்த்தி வணங்கினர். கிரி வடிவிலுள்ள ஈசனை வலம் வரத் தயாராயினர். ஒரு வேதியர் கௌதமரை நமஸ்கரித்தார். வாய் பொத்தி வினா ஒன்றைத் தொடுத்தார். ‘‘நாம் இந்த கிரியை வலம் வரப் போகிறோம். அதில் வலம் வருதல் என்றால் என்ன?’’ எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைக்குள் ஏதேனும் சூட்சுமப் பொருள் இருக்குமா என்கிற ஐயத்தோடு கேட்டார்.

‘‘வெறுமே சுற்றுதல் என்பது நேர் பொருளாக அமையும். யாரை நாம் வலம் வருகிறோமோ அவரை நாம் பணிகிறோம் என்றும் ஓர் அர்த்தம் உண்டு. ஆனால், உண்மையான வலம் வருதல் அதாவது பிரதட்சணம் என்பதே முற்றிலும் வேறு மாதிரியான பொருளைக் கொண்டவை. யோக ரூபமான அர்த்தத்தை கொண்டவை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க ஆத்மா வரை கொண்டு செல்லும் வார்த்தை இது. ஆத்ம ஸ்தானத்தை உணர்த்தும் வார்த்தை இது’’ சொல்லி விட்டு மௌனமானார். ‘‘எப்படி இந்த வார்த்தைக்கு பொருள் கொள்ள வேண்டும் மகரிஷி’’ மீண்டும் ஒரு முனிவர் தாழ்மையோடு கேட்டார்.

‘‘நாம் நம்மை சரீரமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை குறிப்பிடும்போது நான் என்று சொல்கிறீர்கள். அப்போது சர்வ சகஜமாக உங்களின் மார்புப் பகுதியை சுட்டிக் காட்டியே நான் என்று சொல்கிறீர்கள். இயல்பாகவே தெரிந்தோ தெரியாமலோ இதைச் செய்கிறீர்கள். உற்று நோக்கினால் நீங்கள் சுட்டிக் காட்டும் இடமென்பது வலது மார்புப் பகுதியாகும். ஏனெனில், இந்த உடலிலுள்ள அந்த ஸ்தானத்தையே யோக சாஸ்திரங்களும், அஷ்டாங்க யோகமும் இருதய ஸ்தானம் என்கின்றன. ரத்தத்தை சுத்தி செய்து உடலெங்கும் அனுப்பும் இதயம் என்பது இடப்புறம் அமைந்திருக்கும்.

இந்த உடலை மட்டும் இயக்கும் மையம் அதுவாக இருப்பதால் அதற்கும் இதயம் என்றுவைத்திருக்கின்றனர். நடு மார்பிலிருந்து வலது பக்கமாக மூன்று விரற்கடை தள்ளியுள்ள பக்கத்தில்தான் இருதய ஸ்தானம் அமைந்துள்ளது. இதுவே ஆத்மாவின் ஸ்தானமும் கூட. இதுவே பிராணனின் உற்பத்தி ஸ்தானம். இதுவே மனத்தின் உற்பத்தி ஸ்தானமுமாகும். இதையே இருதய குகை என்றும் இதன் நடுவேதான் சர்வேஸ்வரன், மகா சக்தி அனைத்தையும் இயக்கும் சக்தி குடியிருக்கிறது என்றும் அவரே அனைத்தின் மையமாகவும் விளங்குகிறார் என்றெல்லாம் ஞானிகள் தங்கள் அனுபவத்தில் விளக்குகின்றனர். உங்களின் நான் என்கிற அகங்கார ரூபமான எண்ணம் இந்த ஆத்ம ஸ்தானத்திலிருந்தே எழுகிறது.

ஆனால், தன்னுடைய உற்பத்தி ஸ்தானம் இதுதான் என்று தெரியாமல் ஏதோ ஒரு உடலை இது நான்தான் என்று அபிமானித்துக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் பல்வேறு பிறவிகளாக ஏதோ ஒரு ஸ்தூல ரூபத்தில், பல்வேறு வடிவங்களோடு பிணைத்துக் கொண்டு அபிமானித்து மயங்குகிறது. இந்த உடலே நான் என்றும் அதிலிருந்து பல்வேறு சுகங்கள் கிடைப்பதாகவும் நின்று விடுகிறது. கொஞ்சம் இப்போது புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் இப்போது இருக்கும் நான் என்ற உணர்வானது இந்த இருதய ஸ்தானத்திலிருந்து உற்பத்தி ஆனதுதான். புரிகிறதா?’’‘‘இன்னும் கொஞ்சம் புரிய வையுங்களேன்’’ என்று கைகூப்பி சீடர் கேட்டுக் கொண்டார்.

‘‘நீங்கள் நான் வருகிறேன்.... நான் செய்கிறேன்... நான் உண்கிறேன்... என்பதில் செயலை தவிர்த்து விட்டு நீங்கள் சொல்லும் நான் என்பது யார் என்று கேட்டிருக்கிறீர்களா’’ கூர்மையாக கேட்டார்.‘‘நான் எனும் உணர்வை நான் அறிகிறேன். ஆனால், இந்த உடலோடு சேர்த்துத்தான் அதை உணர்கிறேன். இதை எப்படி முழுவதுமாக உணர்வது?’’ சந்தேகத்தை யதார்த்தமாகக் கேட்டார், வேதியர் ஒருவர்.  

‘‘ஆஹா... மிகச் சரியான கேள்வி. ஆமாம், நான் என்று அழைக்கும்போது நீங்கள் உங்கள் உடலைத் திருப்பித்தான் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் அல்லவா? இப்போது இந்த நான் என்கிற ஸ்புரணம், ஸ்பூர்த்தியை நீங்கள் தொடர்ந்து உணர்கிறீர்கள் அல்லவா?’’ ‘‘நான் என்கிற ஸ்புரணமா? ஸ்பூர்த்தியா? அப்படியெனில்?’’ வேதம் பயிலும் மாணவன் கண் சுருக்கி ஐயத்தோடு வினவினான்.

‘‘ஒன்றும் இல்லை. இந்த வார்த்தைகளைக் கேட்டு ஏதோ பெரிய விஷயம் என்று பயப்படாதீர்கள். ஒவ்வொருவரும் நாம் நம்மை இன்னார் என்று ஏதோ ஒருவிதத்தில் அடையாளப்படுத்திக் கொள்வோம். இந்த தேகம் நான் என்பதில் தேகம் என்பதையே தனியாகப் பிரித்து விடலாம். எனக்கு தலை வலிக்கிறது என்பதில் எனக்கு என்கிற நான் தனியே ஆகும். தலை வலி என்பது தலையில் வந்த வலியாகும். இந்த தலைவலி எப்போதும் நான் என்கிற நம்முடைய உணர்வோடு இல்லாமல் எப்பொழுதாவது வந்து போகும் விஷயமாகும்.

இதில் நான் என்பதும், தலை என்பதும், அதற்கு வலி வந்தது என்பதும் வேறு வேறாக பிரிந்து போகிற விஷயமாக இருப்பதில்லையா? இதுபோன்றே எல்லா நம்முடைய உணர்வுகளுக்கும் அப்பால் நான்.... நான்... நான்... என்கிற ஒரு தொடர் ஸ்புரணம்.... தொடர்ச்சியான ஒழுக்கு நமக்கு எப்போதும் இருப்பதை உணரலாம். இந்த அழியாத தொடர் உணர்வே ஸ்புரணம் எனப்படும்.

உங்களுக்கு ஐந்து வயதாகும் போதும் நீங்கள் இருக்கிறீர்கள். ஐம்பது வயதிலும் நீங்கள் இருக்கிறீர்கள். ஒன்றை கவனித்தால் உங்களை நீங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் உடல் தனியாக இருப்பதும், அது தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதையும் உணரும்போது இந்த மாறாத நான் என்கிற உணர்வு எப்போதும் இருப்பதை அறியலாம். இன்னொரு விதமாகவும் சொல்கிறேன். ஓர் இருள் அறையில் உங்களை தனியாக விட்டு விடுகிறேன்.

உங்கள் கை கால்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. கண்கள் வெறும் இருளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது எதிரே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதும் தெரியாது. அப்போது உங்களை நோக்கி நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நீங்கள் இருப்பது பற்றி ஏதேனும் சந்தேகம் வருமா? எதுவுமே தெரியாதபோதும் நீங்கள் இருக்கிறீர்கள்.

அதாவது நான் இருக்கிறேன் என்கிற உணர்வு உங்களிடம் போய்விடுகிறதா? எதிரேயுள்ள முன்னிலை மற்றும் படர்க்கை பொருட்களை அறிவதற்கு ஐம்புலன்களின் உதவி தேவை. ஆனால், நான் இருக்கிறேன் என்கிற உணர்வை அறிந்து கொள்ள உங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. ஏனெனில், அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வே சுயம் பிரகாசமாகும். ஆத்மாவின் திவலையான நான் எனும் உணர்வு இந்த உடம்பையே நான் என்று பற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் செய்ய வேண்டியது இந்த நான் என்கிற உணர்வின் மீது கவனத்தை திருப்ப வேண்டும். புரிகிறதா?’’ ‘‘கொஞ்சம் புரிகிறது. ஆனாலும், சந்தேகம் நீடித்தபடி இருக்கிறது’’ வேதியர் கவலையோடு கேட்டார். தேவி மிகப் பரவசமாக கௌதமர் கூறும் வேதாந்த விளக்கத்தை ஆவலோடு கேட்டபடி இருந்தாள்.

‘‘அந்தணரே, நீங்கள் ஒரு வீட்டில் வசிக்கிறீர்கள். நீங்கள் வெளியே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருக்கிறீர்கள். அதிலிருந்து வெளியே போகத் துடிக்கிறீர்கள். அந்த வீடும் இருள் மயமாக இருக்கிறது. சட்டென்று அந்த குடிசையின் மையத்து ஓலையின் சிறு துளி வழியாக சூரியனின் கிரணம் வந்து விழுகிறது. இப்போது நீங்கள் அந்த சூரிய ஒளியின் சிறு கிரணம் எங்கிருந்து வருகிறது என்று விவேகமாக பார்த்தபடி மெல்ல அந்த வெளிச்சத்தை பற்றிக்கொண்டு கூரையின் அருகே சென்று வெளியேயுள்ள சூரியனை தரிசிக்க வேண்டும்.

அதன்பிறகே இந்த கூரைக்கு அப்பாலும் மிகப் பெரிய பிரபஞ்சம் இருப்பதை அறிய முடியும். சிறிய கூரையின் வழியே வரும் ஒளிக்கு அப்பால் சூரியன் என்பது இருக்கிறது என்பதே தெரியும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது அந்த கிரணம் வரும் திசையை பற்றிக்  கொண்டு கவனமாக வெளியேறும் வழியே ஆகும்.

அதுபோல இந்த உடலுக்குள், உடலை நீங்கள் மறந்த தூக்கத்திலும் சரிதான் நான்... நான்... என்கிற உணர்வு எப்போதும் தொடர்ந்து இடையறாது உங்களுக்குள் இருப்பதின் மீது நீங்கள் உங்களின் கவனச் சக்தியை திருப்ப வேண்டும். கவனம் இந்த நான் என்கிற உணர்வின் மீது, அதாவது நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது திரும்பத் திரும்ப அழுத்தமாகப் பதியப் பதிய அந்த உணர்வு ஆச்சரியமாக தனது பிறப்பிடத்தை நோக்கி நகரும்.

உடல் எனும் வீட்டிற்குள் இறைவன் அதாவது ஆத்மாவானது நான் எனும் பேருணர்வாக எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதன் மீது கவனம் திருப்பப்படாததால் அது நமக்கு தெரிவதில்லை. எனவே, நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீதும், நான் எனும் அகங்கார வடிவிலான இந்த எண்ணம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது என்பதை திருப்பவதற்கே இத்தனை வழிபாடுகளும், சாஸ்திரங்களும் உள்ளன.’’ என்று கௌதமர் சொல்லி  நிறுத்தினார்.

கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்