SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லைத் தங்கமாக்கிய ஈசன்-

2020-11-19@ 12:11:26

திருப்புகலூர்

வாதாபி, வில்வலன் என்ற இரண்டு அசுரர்களுக்கும் அஞ்சிய தேவர்கள், அகத்தியரால் அவர்கள் அழிக்கப்படும் வரையில் இத்தலத்தில் (புகல்) அடைக்கலமாக இருந்ததால் இவ்வூர் திருப்புகலூர் என வழங்கப்பட்டது.  தேவர்கள் சரண்புகுந்ததால் சரண்யபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அக்னி தேவனின் கர்வம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், தன் தகப்பனான வாயுவின் எதிரேயே  தொடை தட்டிப் பேசிக்கொண்டிருந்தான். ‘‘நான் ஒருவனே என்னை எதிர்த்தாரை சுட்டுப் பொசுக்கு கிறேன். நான் தாக்கத்தொடங்கினால் அது மலையானாலும் சுக்குநூறாகிவிடும். நான் சுட்டெரித்த தூய்மையான திருநீற்றையே பெருமான் நெற்றியில் அணிகிறார்’’ என்று கர்வத்தோடு பேசினான்.

‘‘அக்னியே, என்னிடமிருந்துதானே நீ தோன்றினாய். ஆனால், என்னிடம் இல்லாத ஒரு தீய குணம் உன்னிடம் வந்துவிட்டதே. உயர்வு, தாழ்வு இல்லாது எல்லாவற்றையும் உண்கிறாய். அதில் கர்வம் வேறு. இப்போது தந்தை என்றும் பாராமல் என்னோடு வாதாடுகிறாய். உன் ஆற்றல் ஒழிந்து  மங்கிப் போகட்டும்.  எல்லாவற்றையும் உண்டு ருசிக்கும் உனக்கு பெரும் பசி எடுக்கட்டும்’’ என்று சாபமிட்டார். தன் பலம் குன்றி, தன் பசி அதிகரித்துக்கொண்டே போவதை அக்னி தேவன் உணர்ந்தான். அவசரமாக தன் ஆச்சார்யனான, குருபகவானின் காலில் விழுந்தான்.

சாப நீக்கத்துக்கான வழி கேட்டு சோர்வாய் சரிந்தான். குரு கண் திறந்தார். பிரகாசம் மங்கிய அக்னியைப் பார்த்தவாறு பேச ஆரம்பித்தார். ‘‘தகப்பன் சாபம் தகாதது. இப்படியே இருந்தால் அது முற்றிலும் உன்னை தகர்த்துவிடும். சாபம் தீர ஒரே வழிதான் உண்டு. சோழ நாட்டிலே புன்னாகவனம் என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று நாற்புறமும் அகழியைத் தோண்டி சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் ஈசனை பூஜை செய்து வா. எந்த சாபமும் உன்னை நெருங்காது’’ என்று ஆசீர்வதித்தார். அக்னி மெல்ல சுடர் விட்டு எரிய ஆரம்பித்தான். குருவின் குளுமையான வார்த்தைகளால் அவன் புத்தி பிரகாசமாய் ஒளிர்ந்தது.

மெல்ல அங்கிருந்து நகர்ந்து புன்னாகவனம் எனும் புகலூரில் சுடராய் தவழ்ந்து தரையிறங்கினான். எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாய், பெருஞ்சுடராய் தகதகத்துக் கொண்டிருந்தார். அந்த தீஞ்சுடருக்கு முன் தன்னை ஒரு தீப்பொறியாய் அக்னி உணர்ந்தான். அகிலத்தையே ஆளும் ஆண்டவன் இவனே என்று அவன் திருவடியில் தன் சுடர் நிழலை பதித்தான். அத்தலத்திலேயே தங்கி தவம் செய்தான். தன் அகங்காரம் கரைந்து பெரும்பழமாய் கனிந்தான்.
சுயம்பு மூர்த்தியான சிவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். தன் காலடியில் கனன்று கிடந்தவனை கனிவோடுபார்த்தார்.

அக்னி அந்த பேரொளியைக் கண்டு பரிதவித்தான். தான் பெரும் பாவம் செய்து விட்டதாய் குரல் உடைந்து பேசினான். ‘‘ஆனால், என் தந்தையின் சாபம் தனயனான என்னை தாக்குமே என்று பயந்தேன். உங்களை தரிசித்த உடனேயே என் சித்தம் தெளிவானதை உணர்கிறேன்’’ அவன் நா தழுதழுக்க பேசுவதை சிவன், செவிசாய்த்துக் கேட்க ஆரம்பித்தார். ‘‘நான் எதைத் தீண்டினாலும் என் புனிதம் போகாது இனி காக்க வேண்டும். இங்கு வழிபடும் மக்களை தாங்கள் பதம் சேர்த்தருள வேண்டும். நான் என்றென்றும் தகப்பனுக்கு அடங்கிய பிள்ளையாய் இருத்தல் வேண்டும்’’ என வரம் கோரினான்.

ஈசன் அக்னியை அணைத்துக் கொண்டார். அவன் அகத்தை கொழுந்து விட்டு எரியச் செய்தார். ஒரு கணத்தில் அவன் முழு சக்தியையும் பிரபஞ்சம் முழுவதும் பொருத்தினார். அக்னி பகவானும் ஈசனின் எதிரே கைகூப்பி அமர்ந்தார். எந்நாளும் அந்தத் தலத்திலேயே தங்கும் பெரும் பேரு பெற்றார். இன்று வரையிலும் வாயுவின் காலடித் தடம் பற்றியே அக்னியின் போக்கு இருக்கிறது. வாயு இல்லாத இடத்தில் அக்னி என்றுமே இருக்க முடியாது. அதற்குமாபெரும் சாட்சியே திருப்புகலூர் தலம்.  அக்னி பகவானுக்கு அருள்புரிந்ததால்அக்னீஸ்வரர் எனப் பேர் பெற்றார்.

வாணாசூரன் எனும் அசுரன் தேவர்களை துன்புறுத்திக் கொண்டேயிருந்தான். வாணாசூரனின் மகள் உஷை, அநிருத்தனைக் காதலித்தாள். அதனால் கோபமுற்ற அசுரன், அநிருத்தனுடன் கடும் போர் புரிந்தான். தோற்ற அசுரன், அரச பதவியையும், வலிமையையும் இழந்து தலைதெறிக்க ஓடினான். அது முதல்  சிவனை நோக்கிக் கடுமையாக தவமிருந்தான். இடையறாது சிவ பூஜை செய்தான். சிவனருளால் மீண்டும் அரசன் ஆனான். அதனால் தன் தாயை இடைவிடாது ஈசனை பூஜிக்கச் சொன்னான். ஒரு நாளைக்கு ஒரு லிங்கம் என கொணர்ந்து கொடுத்தான். அவளும் விடாது பூஜிப்பாள். அபிஷேகங்கள் பலதும் செய்து மகிழ்வாள்.

ஒருமுறை புன்னாகவனமாகிய புகலூர் பக்கம் வந்தான். சுயம்பு லிங்கத்தில் தீச்சுடராய் ஒளிர்ந்த அக்னீசனைக் கண்டு பிரமித்தான். ஈசனைப் பெயர்த்து எடுத்து, தாயின் பூஜையில் சேர்த்துவிட உறுதி கொண்டான். மெல்ல கருவறை நோக்கி நகர்ந்தான். சுயம்பு லிங்கத்தை சுலபமாய் பெயர்த்துவிடலாம் என்று நினைத்தான். இருகைகளாலும் மெல்ல அணைத்து தூக்கினான். அவன் கைகள் வழுக்கியதே தவிர அக்னீசனை அசைக்க முடியவில்லை. தன் பலம் கொண்ட மட்டும் இழுத்தான். வளைத்து விடலாமா என நினைத்தான். லிங்கத்தையே சுற்றிச் சுற்றி வந்து யோசித்தான்.

பல்வேறு விதங்களில் தன் பலம் மொத்தமும் திரட்டி முயற்சித்தான். முடியாமல் சுருண்டு விழுந்தான். அவன் சேட்டையை ஈசன் ரசித்தார். அவனை நோக்கினார். இப்போது வேண்டுமானால் அசைத்துப் பாரேன் என்பது போல் வெகு அழகாக, குழைவாக தன் திருமுடியை மட்டும் அவன் பக்கம் வளைத்தார். ஒருவித கோணலாக சிம்மாசனத்தில் சாய்ந்து திரும்புவது போல அவனைப் பார்த்தார். அசுரன் திகைத்தான். அசையாது அவரையே பார்த்தான். அவ்வளவுதான். அதற்குப்பிறகு ஈசன் தன் திருமுடியை திருப்பவேயில்லை. ஈசன் இங்கு கோணலானதால் கோணபிரான் என்றே அழைக்கப்படுகிறார்.

இத்தலத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவர் அப்பர் சுவாமிகள். இத்தலத்தில்தான் ஆன்மிகத்தின் நிறைவு நிலையான அத்வைத அனுபவத்தை எய்தினார். ஈசனோடு ஈசனாய் தனக்கும் இறைவனுக்கும் எவ்வித பேதமுமில்லாத நிலையை அடைந்தார். தான் வேறு இறைவன் வேறு என்ற பிரிவு உடைந்து ஏகமாய் ஈசனோடு கலந்தார். அப்பர் சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்த தலம் இதுவேயாகும். எனவே, இது முக்தி க்ஷேத்திரமாகும். இங்கு அப்பர் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார்.  முருகநாயனார் இத்தலத்திலேயே அவதரித்தார். இண்டை, கொண்டை, தோடு என்று பல மாலை வகைகளை சாத்தி மகிழும் பெருந்தொண்டு செய்து வந்தார்.

சிவனடியார்கள் யார் வரினும் தம் திருமடத்துக்கு அழைத்து, சுவையான அன்னமிட்டு உபசரிப்பார். அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்றோர் வந்து தங்குவது வழக்கம். ஞான சம்பந்தப் பெருமானோடு பெருமணம் எனும் தலத்தில் சிவஜோதியில் கலந்தார். முருகநாயனார் திருமடம் இன்றும் உள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள அகழி பார்ப்பதற்கு அழகானது. இக்கோயிலின் அற்புதம் இது. வானுயர்ந்த கோபுரங்களும், நீண்ட பிராகாரங்களும் தொன்மையின் இனிமையை பறைசாற்றுகின்றன. இத்தலத்து மூலவரின் திருநாமம் அக்னீஸ்வரர்.

இவருக்கு கோணபிரான், சரண்யபுரீஸ்வரர், புன்னாகவனநாதர் என்று பல பெயர்கள் உண்டு. அம்பாள் கருந்தாழ்குழலி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நதி, ராஜகோபுரம் தாண்டி தனியே உள்ளது. இவ்வூர் மக்கள் எப்போதும், ‘எல்லாம் கருந்தாள் அனுக்கிரகம்’ என அடிக்கடி சொல்வது வழக்கம். கருந்தாழ் குழலாள் கருணையை நம்பியே இவர்கள் வாழ்கிறார்கள். தல விநாயகராக வாதாபி கணபதி கன்னி மூலையில் அழகாக வீற்றிருக்கிறார். வில்வலன், வாதாபி இருவரும் வழிபட்டமையால் இவர் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார்.

இக்கோயிலுக்குள்ளேயே பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யதேஸ்வரர் என்று முக்காலத்தையும் உணர்த்தும் தெய்வமாக விளங்குகிறார்கள். உட்பிராகாரத்து ஈசான்ய மூலையில் நடராஜர் திருச்சபை அழகாக விளங்குகிறது.  தலவிருட்சம் புன்னை மரம். இத்தலத்து திருமால், முரன் என்ற அசுரனைக் கொன்ற பாவம் தீர இங்கு வழிபட்டு வந்தார்.

இறைவனும் சிவலிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்டு அருள் செய்தார். உடனே திருமால், ‘நான் என் அம்சமான புன்னையாக இங்கிருந்து, என் நிழலில் பெருமான் அடியார்களுக்கு அருள் புரிய வேண்டும்’ என வேண்டிக்கொண்டார். அதன்படியே அவர் விருப்பம்போல் புன்னை மரமாக மாறினார். இது மிகஅதிர்வுள்ள மரம்.

மந்திரஜபத்துக்கு ஏற்ற இடம். இவ்வூர் திருவண்ணாமலைக்கு நிகரான ஒரு முக்தித் தலம். பிறவி என்பது பிரிக்கப் பிரிக்க பின்னிக்கொள்ளும் சிலந்திப்பூச்சி. இன்பமும், துன்பமும் மாறிமாறி வீசும் சுழற்காற்று. மாட்டிக்கொண்டால் மணலில் சொருகும் நீர்ச்சுழல். அதனாலேயே ஞானிகள் இதைப் பிறவிப் பெருங்கடல் என்கின்றனர்.

ஞான சொரூபனான ஈசனே எல்லாரையும் மீட்டு கரைசேர்க்கிறான். இங்குள்ள ஈசன் எல்லா ஜீவன்களுக்கும் புகலிடமாகத் திகழ்கிறான். எல்லா உயிர்களையும் கரைசேர்க்க கங்கணம் (காப்பு) கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறான். மகரிஷிகளும், ஞானிகளும் அப்படி புகலிடமாய் திகழும் ஈசன் உறையுமிடத்திற்குள் புகுந்து, புகழ்ந்து, பரவசமாகிய ஓர் அற்புத தலமே திருப்புகலூர். இந்தத் திருத்தலம் நாகை மாவட்டத்தில், நன்னிலத்திலிருந்து  கிழக்கே ஆறு கி. மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவப்பணியின் செலவுக்கு பொன், பணம் வேண்டும் என்று திருப்புகலூரை அடைந்தார். அங்கேயே வழிபட்டு  தங்கினார். ஆலயத் திருப்பணிக்காக வந்திருந்த செங்கல் சிலவற்றை தலையணையாக்கிப் படுத்தார். விடியலில் விழித்தெழுந்து பார்த்தபோது செங்கல் அனைத்தும், பசும்பொன்கட்டிகளாக மாறியிருப்பது கண்டு வியந்தார். அப்போதே ஈசன் மீது பதிகங்கள் பாடினார்.

அதனால்தான் ஈசனை வாஸ்து பகவானாகவும் நினைத்து மக்கள் வழிபடுகிறார்கள் என இவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள். சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஈசனை வேண்டிக்கொள்ள, விரைவிலேயே வீடு கட்டிவிடுகிறார்களாம். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்