SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்றழகிய சிங்கர்

2020-11-18@ 10:20:27

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-37

நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் “தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால், நரசிம்மனே உன்னைச் சரணடைகிறேன் என்கிறது.

குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு அழைத்தவுடனே அஞ்சேல் என அடுத்த கணமே திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீநரசிம்ம அவதாரம் ஆகும். பல்வேறு தலங்களில் பல்வேறு கோலங்களில் கோயில்கொண்டிருக்கும் நம்பெருமாள் குடிகொண்டுள்ள திருவரங்கம். இத்தலத்துடன் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் என மூன்று நரசிங்கங்கள் தொடர்புடையன. இவற்றுள் ஆற்றழகியசிங்கர் கோயில் கொண்ட வரலாற்றினை காண்போம்.

நரசிம்மாவதாரத்தில் தூணிலிருந்து வெளி வந்தார். அதனால் ஆற்றழகிய சிங்கர் பூமிக்கு அடியில் இருந்து வந்தவர். திருச்சி திருவெறும்பூருக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமம். சோழமாதேவி. ராஜராஜ சோழன் துணைவி சோழமாதேவி என்றும் இந்த அரசி பெருமாள் பெயரில் பக்தி கொண்டு எழுதிவைத்த ஊர் அவ்வூரில் ராஜராஜ விண்ணகர் என்ற பெயரில் ஒரு திருமால் கோயிலையும் எடுத்து பல்வகை நிவந்தங்களையும் அளித்திருந்தாள். சோழ சாம்ராஜ்யம் மெல்ல வலுவிழந்து பிற்காலப் பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் சோழ தமிழகத்தைப் பிரித்து தனித்தனியாக ஆளத் துவங்கிய நேரம் எதோ காரணங்களால் கோயில் சிதைந்து அழிந்து மண்மூடிப்போய் விளை நிலமானது.

நாளடைவில் ஒரு விவசாயி கோயில் இருந்த இடத்தை உழுதுகொண்டிருந்தபோது ஏர்முனை பட்டு பூமிக்குள் இருந்து வெளியே வந்தார், லட்சுமி நரசிம்மர். ஊரார் அனைவரும் கூடி புதுக்கோயில் அமைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து சிங்கம் ஒன்றின் பிளிறல் ஒலி கேட்டது. ஒருவர் மீது அருள் இறங்கி, காவிரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராக இருந்து விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பதுபோல் துஷ்டர்களிடமிருந்து தென்கரையில் அமர்ந்து மக்களை காக்கப் போவதாகக் கூறியது. அங்கே சிறிய திருவடி தனக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் தன்னைக் கிழக்கு நோக்கி நிறுவுக என அசரீரியாய் ஒலித்தது.

கடவுள் கட்டளையை கருத்தாய் ஏற்ற மக்கள் மெல்ல நரசிம்ம மூர்த்தியை காவிரி தென்கரையில் அமைந்திருந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அத்தல அதிபதியாக வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நரசிம்மர் வரவுக்காக காத்திருப்பது போல நின்றிருந்தார், நெற்றிக்கண் ஆஞ்சநேயர். நரசிம்மரை பிரதிஷ்டை செய்த பிறகு மண்டபமே நிறைவானதுபோல் அமைந்தது. அதுமுதல் அங்கு தினமும் வழிபாடுகள் குறைவின்றி நடந்தன. ஆற்றழகிய சிங்கரின் அருள் மாதம் மும்மாரி பெய்து நாடும் சுபிட்சம் அடைந்தது, ஆற்றங்கரையில் வாராது வந்து அமர்ந்து மாமணி அமர்ந்த பகுதி சிந்தாமணி எனவும் பெயர் பெற்றது.

நரசிம்மர் வந்தமர்ந்த பின்பு அந்த இடம் செல்வமும் நலமும் பெற்று வளரத் துவங்கியது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் திருவரங்கன்பால் மிக்க ஈடுபாடு கொண்டு பல திருப்பணிகளையும் செய்யும்போது ஆற்றங்கரையில் அமர்ந்து பல நலன்களை செய்து கொண்டிருந்த ஓடைக்கரை நரசிம்மர் மீதும் அவர்கள் கவனம் திரும்பியது.

வீரபூபதி உடையார் என்பவர் அந்தச் சிறிய மண்டபத்தை எடுத்துப் பிரித்து அழகிய கருவறை அமைத்து பெரியதாக்கினார். ஓடத்தில் செல்வோர் நரசிம்மரையும் நெற்றிக்கண் அனுமனையும் வணங்கி விட்டு இக்கரை அல்லது அக்கரையில் சென்று தரிசனம் செய்வது என்பது நடைமுறையாகிப் போனது. அழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால் காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது.

எந்தவகையான வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக இருந்தது. ஆதலால், அவற்றைக் கடந்து செல்பவர்களும் வருபவர்களும் அதனை வணங்கி விட்டுச் செல்லுவதும் பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது. எதிரில் அனுமன் காட்சி தருவதால் கஷ்டங்கள் அனைத்தையும் தாண்டி கரை சேர்க்கும் தெய்வமாக விளங்குகிறார். இதுவொரு சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாகவும் உள்ளது.

கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப் பெருமாள் தன் மடியினில் லட்சுமியை அமர்த்திக்கொண்டு லட்சுமி நரசிம்மராக ஆற்றழகிய சிங்கர் என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். உற்சவர்க்கு அழகிய மணவாளன் என்பது பெயராகும். மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப் பெருமாள் சந்நதிக்கு எதிர்புறம் மேற்கு நோக்கியபடி கருடாழ்வார் அமர்ந்திருக்கின்றார். கருடாழ்வார் தவிர ஸ்ரீநம்மாழ்வார், பெருமாள் ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீராமானுஜர் மற்றும் மணவாள மாமுனி சந்நதிகள் அமைந்துள்ளன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் தான் இந்தக் கோயில் உள்ளது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல் அதற்கு சற்று முன்பே, வலது புறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனிவழிப்பாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்தக்கோயில் வந்துவிடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-02-2021

  28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்