SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞானத் திகிரி

2020-11-18@ 10:13:55

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-57

மங்கல நிகழ்வுகள், மணவிழா கொண்டாட்டங்கள், பண்டிகை வைபவங்கள் போன்றவை வருகிறது என்றாலே நம் அனைவருக்கும் - உல்லாசம் ஊற்றெடுக்கிறது.மனத்திற்குள் ஆனந்த மழை பொழிவிக்கும் அத்தகைய நிகழ்ச்சிகள் தினந்தோறும் வராதா என்று பலபேர் ஆசைப்படுகின்றார்கள். பாரதியார்  பாடுகின்றார் :

 ‘‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற எண்ணமதை
திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்துவாழ்வீர் !’’
 பாரதியாரின்  உபதேசத்தை ஏற்றுக்கொண்டு சென்ற காலத்தைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், வருங்காலம் என்னென்ன நடக்குமோ என்று அச்சப்படாமல், கையில் கிடைத்துள்ள கற்பகக் கனியான  நிகழ் காலத்தை முழுவதுமாக அனுபவிக்கக்கற்றுக்கொண்டால் தினந்தோறும் நமக்கு தீபாவளி தான் ! பிறக்கும் நாள் அனைத்தும் பண்டிகை வைபவங்கள்தான் !

ஐப்பசி மாதம் அமாவாசையில் பெரும்பாலும் அனைத்து மக்களும் கொண்டாடி மகிழும் பண்டிகையாக ‘தீப ஒளித்திருநாள்’ திகழ்கின்றது. இந்துக்கள் மட்டுமின்றி சமணர்களும், சீக்கியர்களும் இத்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.  பாரதத்தில் மட்டுமின்ரி உலகின் பிறநாடுகளிலும் இப்பண்டிகையை மக்கள் பின்பற்றுவதால் மங்கலத் திருநாட்களில இப்பண்டிகை முதன்மை பெற்றுவிளங்குகிறது.

பூவுலகின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் பொருளாதாரம் தானே மூலகாரணம். அச்செல்வத்தை அருளும் மகாலட்சுமி பூஜை தினமாகவும் இம்மங்கல நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

‘திருநாள் தலைவி தீபாவளிப் பெண்
குறுநகை  புரிந்து வருகின்றாள் !
திசைகள் மகிழ்ந்து இசைகள் பொழிந்திட
தெவிட்டா இன்பம் தருகின்றாள் !
கண்ணைக் கவரும் வண்ண ஒளியுடன்
கண்கள் மலர்ந்தது  இன்று !
கண்ணன் குழலிசை காதில் ஒலித்திட
கண்கள் மலர்தந்து நன்று !

என்று கவிஞர்கள் பாடி மகிழ்கின்றனர்.

தினசரி இருட்டாக இருக்கும் பொழுது இன்று வெளிச்சமயமாகி விளங்குகின்றது.
இன்மையினின்று உண்மையை நோக்கிச் செல் !
இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கிச்  செல் !
மரணத்தினின்று அமுதமயமான நிலையை நாடு !
என்ற உபநிடத வரிகளை உண்மையாக்கும் பண்டிகையாக தீபாவளி நாள் ஒளிமயமான திருவிழாவாகத் திகழ்கின்றது.

பூமாதேவியின் புதல்வனான நரகாசுரன் தான் பெற்ற வரத்தின்பலத்தால் முனிவர்கள், பெண்கள், பொது மக்கள் என அனைவருக்கும் தீமைகள் பலபுரிந்து கொடுங்கோலனாக விளங்கினான்.

தீங்குகள் ஓங்கும்போது திருமாலின்
அவதாரம் நிகழும் அல்லவா !

கண்ண பெருமானின் கருணையால் தீயவனான நரகாசுரன் அழிந்தான்.

பூமிதேவி தன் புதல்வன் மறைந்ததற்காக மனம் வருந்தாமல் மகனின் பிரிவு என்னை துயரத்தில் ஆழ்த்தினாலும், மக்கள் இந்நாளை இன்பமுடன் கொண்டாடவேண்டும் என கண்ணனை வேண்டினாள்.

‘பொலிக ! பொலிக! பொலிக
போயிற்று வல்லுயிர்ச் சாபம் !
நயியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை !


கலியும் கெடும் கண்டு கொள்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழிதரக் கண்டோம் !
என்று பாடுகிறார் ஆழ்வார் !

காஞ்சி மாமுனிவர் கூறுகின்றார்.

‘நம்முடைய சுக துக்கங்கள் எல்லாம் என்றைக்கும் இருக்கிறது. இவற்றைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருக்காமல் நம்மால் இந்த உலகத்திற்கு சிறிதாவது சந்தோஷம், சுகம் உண்டாகும் என்றால் அதையே பிரார்த்தித்துக்கொள்கிற மனப்பக்குவம் பெறுவதையே தீபாவளிப் பண்டிகை போதிக்கிறது.கவியரசர் கண்ணதாசனும் இக்கருத்தையே திரைப்பாடல் ஒன்றில் தெரிவிக்கின்றார்.

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம் !
அடுத்தவர் நலத்தை நினைப்பவர்தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் !

திருமுருக கிருபானந்த வாரியாரின் தீபாவளியைப் பற்றிய விளக்கத்தைப்பார்ப்போமா?
வரிசையாக  விளக்குகளை ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடுகிற புண்ணிய நாளே தீபாவளி. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை.

‘அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி !
ஆயிரம் ஆயிரம் அணிவிளக்கு ஏற்றிடுக’
என்று பாடுகின்றார் இராமலிங்க
அடிகள்.
இருள் இரண்டு வகைப்படும்
ஒன்று புறஇருள். மற்றொன்று அக இருள்.
 அக இருள் என்பது ஆணவம்.
புற இருள் பொருள்களை மறைக்கும். ஆனால் தன்னைக் காட்டும்.

ஆணவ இருள் தன்னையும். மறைத்து, பிற எல்லாவற்றையும் மறைக்கும் எனவே வெளியே ஒளியை விளங்கச் செய்வது போல் தெய்வ அருளைச் சிந்தித்து ஞான விளக்கை உள்ள வௌியில் ஒளிரச் செய்து அகந்தையை அடியோடு நீக்க வேண்டும்.

யான் என்து என்னும் செருக்கு  அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
என்கின்றார் திருவள்ளுவர்.
தீபாவளியைப் பற்றி திருவண்ணாமலை ரமணர் இருவெண்பா எழுதியுள்ளார்.

நரகாசுரனைக் கண்ணபெருமான் வதம் செய்ததால் தான் தீபாவளி வந்தது.இந்த உடம்புதான் நான் என்ற எண்ணம் உள்ளவரை நாமும் நம் உடம்பு மீது சற்றும் பற்று வைக்காமல் புத்திப் பூர்வமாகவாவது ஆத்மாவே நான் என்றும், பிறகு அனுபவத்திலும் ஆத்மா அழியாதது என்கிற பேருண்மையை புரிந்து கொள்வதே தீபாவளி தத்துவம் என்கிறார், ஸ்ரீரமணர் இங்கு நரகாசுரன் என்பது தேகம் நான் எனும் அபிமானமே ஆகும்.

நரக உருவா நடலையில் உடல
கிரகம் அகம் எனவே கெட்ட  நரகனாம்
மாயாவியை நாடி மாய்த்துத் தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி


மகான் .. தெரிவித்தது போல பண்டிகை களின் உள்ளீட்டை உணர்ந்து ஆணவத்தை அடியோடு அகற்றி அசுர குணங்களைக் களைவோம். புத்தாடை, பூவாணம், தித்திக்கும் இனிப்பு, விருந்தினர்கள் வருகை இவற்றோடு … விழுவதல்ல தீபாவளி !

நரகனை அழித்த நாராயணர் போல் ஆசை, கோபம், களவு, அகந்தை, பொய்மை ஆகியவற்றை ஒவ்வொருவரும் அழித்து மானுட நேயமுடன் சமுதாயத்தை

விளங்கச் செய்வோம் !
கீழ்மைகளை அழித்து
கீதை சொன்ன கண்ணனின்
பாதையிலேயே
இனிநாம் பயணப்படுவோம் !
இந்தவைராக்கியத்தை
வரித்துக்கொண்டால் தான்
விடியற் காலையிலேயே
நாம் விழித்தவர்கள் ஆவோம் !
புனித கங்கையில்
குளித்தவர்கள் ஆவோம் !


(தொடரும்)

தொடரும்: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-vaccine12

  கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்