SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

2020-11-17@ 09:56:56

293. பாவனாய நமஹ (Paavanaaya namaha)

சூரியகுலத்தைச் சேர்ந்த சகரன் என்னும் சக்கரவர்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியான அம்பைக்கு அசமஞ்ஜன் என்ற ஒரு மகனும், இளைய மனைவியான சுமதிக்கு 60,000 மகன்களும் பிறந்திருந்தார்கள். அசமஞ்ஜனின் மகன் அம்சுமான்.99 அசுவமேத வேள்விகள் செய்த சகரச் சக்கரவர்த்தி, தனது நூறாவது அசுவமேத வேள்வியைச் செய்ய முற்பட்ட போது, அதைத் தடுக்க நினைத்த இந்திரன், வேள்வி செய்வதற்குரிய குதிரையைக் கவர்ந்து சென்று, பாதாள லோகத்திலுள்ள கபில முனிவரின் ஆசிரமத்துக்கு எதிரே கட்டிவைத்தான். களவு போன குதிரையைத் தேடிச் சென்ற சகர மன்னரின் 60,000 மகன்களும், கபிலரின் ஆசிரமத்துக்கு எதிரே குதிரை இருப்பதைக் கண்டு, கபில முனிவரைக் “கள்வா!” என்று அழைத்து ஆரவாரம் செய்தார்கள்.

தவம் கலைந்து கபிலர் கண் விழித்துப் பார்க்கவே, அவரது பார்வைத் தீயில் அறுபதாயிரம் பேரும் சாம்பலானார்கள்.குதிரையைத் தேடிப் போன தன் சிற்றப்பன்மார்கள் மீளாததால், அம்சுமான் அவர்களைத் தேடிச் சென்றான். கபிலருடைய குடிலின் வாசலில் அறுபதாயிரம் சடலங்களைக் கண்டு அயர்ந்து போனான். இறந்து போனவர்களுக்கு அங்கேயே தர்ப்பணம் செய்ய நினைத்தான் அம்சுமான்.

அப்போது அங்கே கருடன் தோன்றினார். இறந்தவர்களின் தாயான சுமதி, கருடனுக்குத் தூரத்து உறவினள் ஆவாள். இறந்த உறவினர்களைக் காண வந்த கருடன், அம்சுமானிடம், “சாதாரண நீரால் நீ இவர்களுக்குத் தர்ப்பணம் செய்வது பலன் அளிக்காது! கபிலரின் கோபத்துக்கு உள்ளாகி இவர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே திருமாலின் திருவடி தீர்த்தமாகிய கங்கை நீரைக் கொண்டு இவர்களுக்குத் தர்ப்பணம் செய்தால்தான் இவர்களுக்கு நற்கதி கிட்டும்!” என்று அறிவுறுத்தினார்.

“கங்கை எங்கே இருக்கிறது?” என்று அம்சுமான் கேட்க, “முன்பு திருமால் உலகளந்த போது, பிரம்மதேவர் அவரது திருவடிகளுக்குத் தன் கமண்டலத்திலுள்ள நீரால் அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேக நீர் தான் கங்கையாக உருவானது. அது பிரம்ம லோகத்தில் தொடங்கி, சொர்க்க லோகம் வரை பாய்கிறது. அந்த கங்கா நீரைப் பூமிக்குக் கொண்டு வரவேண்டும்!” என்றார் கருடன்.

கருடனின் ஆலோசனையை ஏற்ற அம்சுமான், கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர என்ன வழி என்று சிந்தித்து, எந்த வழியும் புலப்படாத நிலையில், அந்தக் கவலையிலேயே மாண்டு போனான். அம்சுமானின் மகன் திலீபனும் அதே கவலையில் மாண்டு போனான். திலீபனின் மகனான பகீரதன் எப்படியாவது கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தே தீரவேண்டும் எனத் தீர்மானித்தான்.

பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான் பகீரதன். கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வழிகாட்டும் படி, பிரம்மாவிடம் பிரார்த்தித்தான். அவனுக்குக் காட்சி தந்த பிரம்மா, “கங்கை வெள்ளம் பூமியை அடித்துச் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், சிவபெருமான் அதை முதலில் தனது சடையில் தாங்கி, அதன்பின் மெதுவாகப் பூமியில் செலுத்த வேண்டும்!” என்றார்.

பிரம்மாவின் அறிவுரைப்படி சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்த பகீரதனுக்கு சிவன் காட்சி தந்தார். கங்கையைத் தன் தலையில் தாங்கிட ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் பூமிக்கு வர விரும்பாத கங்கை, கோபத்துடன் வேகமாகப் பரமசிவனின் சடையில் வந்து விழுந்தாள். அவளது இறுமாப்பை அடக்க எண்ணிய சிவன், அவளைத் தன் சடைக்குள் அடைத்து வைத்தார்.

கங்கை பூமிக்கு வராததால் மீண்டும் தவித்தான் பகீரதன். மீண்டும் தவம் புரிந்து பரமசிவனைப் பிரார்த்தித்தான். அவனது பிரார்த்தனையை ஏற்று கங்கை பூமியில் வந்து விழ ஏற்பாடு செய்தார் பரமசிவன். சிவனின் சடையில் இருந்து கங்கை பூமியை அடைந்த நன்னாள்தான் அக்ஷயத்ருதீயை என்னும் பொன்னாள். அந்த கங்கா ஜலத்தில் தனது முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் பகீரதன் தர்ப்பணம் செய்தான். இத்தனை கடும் முயற்சி மேற்கொண்டு பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்ததன் நினைவாக, மனிதர்கள் யாரேனும் கடுமையாக உழைத்தால், ‘பகீரதப் பிரயத்தனம்’ என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த கங்கா நதி இன்றளவும் பூமியில் ஓடிக் கொண்டு, எண்ணற்ற மனிதர்களின் பாபங்களைப் போக்கி அவர்களைப் புனிதமாக்கி வருகிறது. இவ்வாறு கங்கை உலகனைத்தையும் தூய்மைப் படுத்துவதற்கு என்ன காரணம்?  

பிறரைத் தூய்மைப் படுத்தும் ஆற்றல் கங்கைக்கு எப்படி உண்டானது நமது அழுக்குகளையும் பாபங்களையும் கங்கையில் நாம் கழித்தால், அவற்றால் கங்கை அசுத்தமாகாதா இக்கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் - திருமாலின் தூய திருவடிகளோடு ஏற்பட்ட தொடர்பினாலே, தூய்மைப்படுத்தும் பண்பைப் பெற்றது கங்காநதி. திருமாலின் திருவடிகளோடு தொடர்பு பெற்றதால் அதில் எந்த தோஷமும் ஒட்டாது. அறிவியல் ரீதியிலும் கங்கை நீரை எத்தனை நாட்கள் வீட்டில் சேமித்து வைத்தாலும், அதில் எந்தக் கிருமிகளும் இருப்பதில்லை என்கிறார்கள்.

‘பாவன:’ என்றால் தூய்மைப் படுத்துதல் என்று பொருள். தன்னைச் சார்ந்தோரைத் தூய்மை ஆக்குவதோடு மட்டுமின்றி, பிறரைத் தூய்மைப் படுத்தும் ஆற்றலையும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அருள்வதால் திருமால் ‘பாவன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 293-வது திருநாமம்.
“பாவனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

294. அனலாய நமஹ (Analaaya namaha)

திருவரங்கத்தில் வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த ஒருவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல நேரிட்டது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால், திருவரங்கநாதன் கோயிலின் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்.

திட்டமிட்டபடி வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியை அடைந்தார். தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டார். மீண்டும் தெற்குவாசல் வழியாகக் கோயிலுக்குள்ளே நுழைந்தார்.வடக்கு வாசலை நெருங்கும் சமயம். இடப்புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார்.

அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும் தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமது கைகளைக் கூப்பி ஒரே ஒரு முறை
ரங்கநாயகித் தாயாரை வணங்கினார்.

உள்ளிருக்கும் ரங்கநாயகியோ இவரது வணக்கத்தைக் கண்டு மிகவும் உளம் மகிழ்ந்தாள். உடனே தனது கணவனான அரங்கனிடம், “என்னை நோக்கி நம் குழந்தை கைகூப்பி விட்டானே! இவனுக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டாள். அரங்கனோ, “ரங்கநாயகி! நீ தான் செல்வங்களுக்கு எல்லாம் தலைவி! இவனுக்கு நல்ல செல்வத்தை அருளலாமே!” என்றார்.

ரங்கநாயகித் தாயாரும் அவ்வாறே உயர்ந்த செல்வங்களை அந்த நபருக்கு வழங்கி விட்டாள். அதன்பின் சற்றே சிந்தித்தாள் ரங்கநாயகி. “சுவாமி! அவன் கைகூப்பி வணங்கி அஞ்ஜலி முத்திரையை என்னை நோக்கிக் காட்டி விட்டானே! அதற்கு நான் கொடுத்த செல்வம் என்பது ஈடாகாது! அதைவிடப் பெரிதாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்!” என்று அரங்கனைப் பார்த்துச் சொன்னாள் ரங்கநாயகித் தாயார்.

“ஆம்! ஆம்! இந்தச் செல்வம் போதாது! அழியாத செல்வமான ஆத்ம அநுபவத்தை அவனுக்குக் கொடுத்து விடு!” என்றார் அரங்கன். அவ்வாறே ரங்கநாயகித் தாயாரும் ஆத்மா தன்னைத்தானே அநுபவிக்கும் நிலையான கைவல்ய நிலையை அந்த நபருக்கு அருளினாள். அதன் பின் சிந்தித்த ரங்கநாயகி, மீண்டும் அரங்கனைப் பார்த்து, “அவன் அஞ்ஜலி முத்திரை அல்லவோ காட்டியிருக்கிறான்? நாம் தந்த செல்வமோ, ஆத்ம அநுபவமோ அதற்கு ஈடாகாது! நீங்கள் அந்தக் குழந்தைக்கு முக்தியைத் தந்து விடுங்கள்!” என்றாள்.

ரங்கநாயகியின் கூற்றை ஏற்ற அரங்கன் அந்த நபருக்கு வைகுண்ட லோகத்தையே அளித்து விட்டான். அந்த நபரும் முக்தி பெற்று விட்டார். “இப்போது திருப்தியா?” என்று அரங்கன் ரங்கநாயகியிடம் கேட்டார். “இல்லை சுவாமி!” என்றாள் ரங்கநாயகி. “ஏன்?” என்று அரங்கன் வினவ, “அந்தக் குழந்தை காட்டிய அஞ்ஜலி முத்திரைக்கு நாம் அவனுக்குத் தந்த செல்வம், ஆத்ம அநுபவம், முக்தி ஆகிய எதுவுமே ஈடாகாது. ஆனால் முக்திக்கு மேல் கொடுப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லையே! அதனால் தான் எனக்கு வெட்கமாக உள்ளது!” என்று பதிலளித்த ரங்கநாயகித் தாயார் வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டாளாம்.

பராசர பட்டர் ஸ்ரீகுணரத்ன கோசம் எனும் நூலில் இந்தக் கதையை அப்படியே ஒரு ஸ்லோகமாகப் பாடுகிறார்:
“ஐச்வர்யம் அக்ஷரகதிம் பரமம் பதம் வாகஸ்மைசித் அஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இத்யதாம்பத்வம் லஜ்ஜஸே கதய கோயம் உதாரபாவ:”
ஏதோ போகிற போக்கில் கைகூப்பிய அந்த நபருக்கு மிக உயர்ந்த முக்தி உட்பட அனைத்தையும் தந்து விட்டு இனி கொடுக்க ஒன்றுமில்லையே என வெட்கம் கொண்டு இன்றளவும் ரங்கநாயகித் தாயார் தலைகுனிந்து கொண்டே கோயில் கொண்டிருப்பதாக இந்த ஸ்லோகத்திலே அநுபவிக்கிறார் பராசர பட்டர்.

இதிலிருந்து அடியார்களுக்கு எவ்வளவு பெரிய அநுக்கிரகத்தைப் பண்ணினாலும், திருமாலுக்கும் திருமகளுக்கும் திருப்தி உண்டாவதில்லை, மேலும் மேலும் அடியார்களுக்கு அவர்கள் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதல்லவா? ‘அலம்’ என்றால் போதும் என்று பொருள். ‘அனல:’ என்றால் போதும் என்று எண்ணாதவர். அலம் (போதும்) என்று எண்ணாமல் அடியார்களுக்கு மீண்டும் மீண்டும் அருளை வாரி வழங்கிக் கொண்டே இருப்பதால், திருமால் ‘அனல:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 294-வது திருநாமம்.

“அனலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் மேன்மேலும் அநுக்கிரகத்தைப் பொழிந்து கொண்டே இருப்பார்.

295. காமக்னே நமஹ (Kaamaghne namaha)

உத்தானபாதன் என்ற மன்னன் உலகனைத்தையும் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சுநீதிக்கு துருவன் என்றொரு மகனும், இரண்டாவது மனைவியான சுருசிக்கு உத்தமன் என்றொரு மகனும் பிறந்திருந்தார்கள். இரண்டாவது மனைவியிடமும் அவளது மகனான உத்தமனிடமுமே அதிக அன்பு காட்டி வந்த உத்தானபாதன், முதல் மனைவி சுநீதியையும் அவள் மகன் துருவனையும் வெறுத்தான். ஒருநாள் உத்தமனைத் தனது மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் உத்தானபாதன். அதைக் கண்ட துருவன், ஆசையுடன் தந்தையின் மடியில் அமரப் போனான்.

ஆனால் உத்தானபாதனோ துருவனைத் தடுத்தான். மாற்றுத் தாயான சுருசி, துருவனைப் பார்த்து, “ஏய் சிறுவா! இவர் மடியில் நீ அமர வேண்டும் என்றால் இவரது மகனாக இருந்தால் மட்டும் போதாது! என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்! உனக்கு இவர் மடியில் உட்கார அருகதை இல்லை!” என்று சுடுசொற்களால் ஏசினாள்.

அழுது கொண்டே தன் தாய் சுநீதியிடம் சென்று நடந்தவற்றைச் சொன்ன துருவன், ஓர் இளவரசனுக்கே உள்ள ரோஷத்தோடு, “தாயே! தந்தை தன் மடியை உத்தமனுக்கு அளித்துவிட்டார். அது அவனுக்கு நான் இட்ட பிச்சையாகவே இருக்கட்டும்! எனக்கு அது வேண்டாம்! அந்தத் தந்தையின் மடியைவிட உயர்ந்த ஸ்தானத்தை நான் பெறப் போகிறேன்!” என்று சொல்லி விட்டுக் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் சப்தரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு முனிவர்கள் துருவனைச் சந்தித்தார்கள். அந்த முனிவர்கள், “குழந்தாய்! நீ திருமாலைக் குறித்துத் தவம் செய்! அவரது அருள் இருந்தால் மிக உயர்ந்த ஸ்தானங்களும் பதவிகளும் தானே உன்னைத் தேடி வரும்!” என அறிவுறுத்தித் திருமாலைக் குறித்துத் தவம் இயற்றும் முறையைத் துருவனுக்கு உபதேசம் செய்தார்கள். அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு மதுவனம் என்ற கானகத்தை அடைந்தான் துருவன்.

ஒற்றைக் காலில் நின்றபடி, இதயத்தில் திருமாலை நன்கு நிலைநிறுத்திக் கொண்டு, கடுந்தவம் புரிந்தான் துருவன். அவன் தவத்தில் ஆழ ஆழ, அவனது உடல் எடை மிகவும் அதிகரித்தது. அவன் எந்தத் திசைநோக்கிச் சாய்கிறானோ, அந்தத் திசை நோக்கி அகிலமெல்லாம் சாயத் தொடங்கியது. அவனது தவ நெருப்பு தேவர்களையும் சுட்டது. இனியும் தாமதிக்கலாகாது என எண்ணிய திருமால் துருவன் முன்னே வந்து தோன்றினார்.

திருமாலைத் தரிசித்த ஆனந்தப் பரவசத்தில் அவரைத் துதிக்க விழைந்தான் துருவன். ஆனால் அந்தப் பச்சிளம் பாலகனுக்குக் கவிபாடத் தெரியவில்லை. திருமால் தன் சங்கினால் துருவனின் கன்னத்தைத் தடவவே, அதனால் ஞானம்பெற்றுத் திருமாலைத் துதிசெய்தான். “உனக்கு என்ன வரம்?” வேண்டும் என்று திருமால் கேட்டார். அதற்கு விடையளித்த துருவன், “இறைவா! என் தந்தையின் மடியாகிய பதவியில் என் தம்பி அமர்ந்து விட்டான். அதனால் அதைக் காட்டிலும் உயர்ந்த பதவியைப் பெற வேண்டும் என்று எண்ணித் தவம் புரிந்தேன். இப்போது உன்னைத் தரிசித்த பின், பதவிகளில் உள்ள ஆசைகள் எல்லாம் என் மனதில் இருந்து விலகி விட்டன. உன்னிடம் ஆசை என்மனத்தில் பெருகி வருகிறது. என்றென்றும் உனக்கே தொண்டனாக இருந்து, உனது குணங்களை அனுபவித்துக் கொண்டு, உனக்குக் கைங்கரியம் செய்ய விழைகிறேன்!” என்றான்.

திருமாலோ, “துருவா! எனது தரிசனம் என்றுமே வீண்போகாது! உனக்கு இரு வித வரங்களையும் தருகிறேன். முதலில் நீ முன்பு கேட்டபடியே மூவுலகங்களுக்கும் மேலே உள்ள துருவ ஸ்தானம் என்ற பதவியை உனக்கு அளிக்கிறேன். உலகமே அண்ணாந்து பார்க்கும்படி அப்பதவியை அலங்கரிப்பாயாக! இரண்டாவதாக, அந்த துருவ பதவியில் இந்தக் கல்ப காலம் முழுவதும் இருந்தபின் என்னை வந்து அடைந்து எனக்குத் தொண்டனாவாய்!” என்று அருள்புரிந்தார்.

“திருமாலே! எனக்குப் பதவியில் இப்போது நாட்டமில்லாவிட்டாலும், உன் பிரசாதமாக எண்ணி நீ தந்த துருவ பதவியை ஏற்கிறேன்! உனது திருவடிகளை வந்து சேரும் நாளை எதிர்நோக்கி அங்கே காத்திருப்பேன்!” என்றான் துருவன்.பெரும் பதவியை அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் புரிந்த துருவன், திருமாலைக் கண்டவுடன் அந்த ஆசையை மாற்றிக் கொண்டு திருமாலுக்குத் தொண்டனாக வேண்டும் என்று வரம் கேட்டானே! அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், திருமாலை நாம் ஒருமுறை தரிசித்து விட்டால், நம் மனதில் உள்ள பிற ஆசைகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்ப்பவர்கள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியை விரும்புவதில்லை, சொகுசு காரில் பயணம் செய்பவர்கள் சாதாரண ஊர்திகளை விரும்புவதில்லை என்பதை எல்லாம் உலகியலில் நாம் காண்கிறோம். அவ்வாறே மிக உயர்ந்த அமுதமான இறைவனின் அழகை அநுபவித்தவர்கள், அதன்பின் உலகியல் விஷயங்களில் நாட்டம் கொள்வதில்லை.

இவ்வாறு தனது அழகையும் குணங்களையும் காட்டி, அடியார்களின் மற்ற ஆசைகளைப் போக்குவதால், திருமால் ‘காமஹா’ என்றழைக்கப்படுகிறார். ‘காம’ என்றால் ஆசை என்று பொருள். ‘காமஹா’ என்றால் ‘தன்னைத் தவிர்ந்த பிற விஷயங்களில் உள்ள ஆசைகளைப் போக்குபவர்’ என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 295-வது திருநாமம்.“காமக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனத்தில் உள்ள உலகியல் ஆசைகளைத் திருமால் நீக்கி அருள்வார்.

296. காமக்ருதே நமஹ (Kaamakruthe namaha)

ஒரு பங்குனி உத்திர நன்னாளிலே, திருவரங்கத்துத் திவ்ய தம்பதியான ஸ்ரீரங்கநாயகித் தாயாரும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனும் சேர்த்தியில் எழுந்தருளி இருந்த வேளையில், தமது சீடர்களுடன் திருக்கோயிலுக்கு வந்த ராமாநுஜர், திருமகள் மற்றும் திருமாலின் திருவடிகளில் சரணாகதி செய்தார். இறைவனுக்குச் சீற்றம் பிறக்கும் போதெல்லாம் அதை ஆற்றுபவளும், இறைவனை அருள்புரிய வைப்பவளுமான இறைவியை முதலில் சரணடைந்த ராமாநுஜர், “அரங்கனின் குணங்களுக்கு இணையான மங்கலகுணங்களை உடைய அன்னை அரங்கநாயகியே! கருணையில் அரங்கனையும் விஞ்சி இருப்பவளே! வேறு புகலற்றவர்களுக்கெல்லாம் புகலாக இருப்பவளே! அடியேனுக்கு ஒரே புகலிடமாக இருக்கும் நீதான் அடியேனைக் காத்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

“என்னைச் சரணடைந்த உனக்கு நீ விரும்பிய அனைத்தும் கிடைக்கட்டும்! உயர்ந்த பக்தியும் இறைவனுக்குத் தொண்டாற்றும் பேறும் உனக்குக் கிட்டட்டும்!” என்று அருள்புரிந்தாள் ரங்கநாயகித் தாயார். இவ்வாறு தாயாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டபின், அவளது பரிந்துரையோடு அரங்கனை அணுகினார் ராமாநுஜர்.“பிராட்டியோடு எப்போதும் கூடியிருப்பவனும், எல்லையில்லாத கல்யாண குணங்களுக்கு இருப்பிடமானவனுமான ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் அடியேன் அடைக்கலம் புகுகிறேன்!

அரங்கா! நீயே எனக்குத் தாயாய்த் தந்தையாய் உறவாய்க் குருவாய் அறிவாய் நெறியாய் மற்றுமாய் முற்றுமாய்த் திகழ்கிறாய்! இதுவரை அடியேன் செய்த அனைத்து முன்வினைகளையும் நீயே போக்கி அருள வேண்டும்! உயர்ந்த பக்தியை அடியேனுக்கு அருள வேண்டும்! என்றென்றும் உனக்குத் தொண்டனாக இருந்து அனைத்து விதக் கைங்கரியங்களும் செய்யும் பேற்றை அடியேனுக்கு அருள வேண்டும்!” என்று நம்பெருமாளான அரங்கனை நோக்கிப் பிரார்த்தித்தார் ராமாநுஜர்.

ராமாநுஜரின் வார்த்தைகளைக் கேட்டு உகந்த அரங்கன், தானே திருவாய் மலர்ந்து ராமாநுஜரிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்:“ராமாநுஜரே! உமக்கு உயர்ந்த ஞானத்தை அருள்கிறேன். உங்களது முன்வினைகள் அனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போல் எரிந்து விட்டன. உயர்ந்த பக்தியையும் உங்களுக்கு அருள்கிறேன். ஆத்மஞானத்தைப் பெற்று, நீங்கள் எனது தொண்டன் என்பதை அநுபவ பூர்வமாக உணர்ந்து, எனக்குத் தலைசிறந்த தொண்டராக விளங்குவீராக! இந்தப் பிறவி முடிந்தவாறே நீங்கள் என் லோகமான வைகுண்டத்தை வந்து அடைவீர்!” என்று அருள்புரிந்தான்.

ஆனால் ராமாநுஜரோ, “இறைவா! அவ்வளவு காலம் என்னால் காத்திருக்க இயலாதே இப்போதே என் மனம் உன்னை அடையத் துடிக்கிறதே!” என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.“முக்தி அடைந்தவன் எப்படி எனக்குத் தொண்டு செய்வானோ, அதே தொண்டை இந்தப் பூமியில் இருந்தபடியே எனக்குப்
புரியும்படி உமக்கு அருள்புரிகிறேன்! ராமாநுஜரே! உலகியலுக்கு அப்பாற்பட்டதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருவரங்கத்தில் நீங்கள் முக்தி அடையும் காலம் வரை வாழ்வீராக! பக்தர்கள் அநுபவித்து மகிழத் தானே இந்தத் திருவரங்கம் என்கிற தலத்தையே நான் உருவாக்கியுள்ளேன்! இங்கே பக்தியோடும் ஆனந்தத்தோடும் எனக்குத் தொண்டு செய்து வரும் உமது உடல் தளர்ந்து விழும் தருணத்தில், நான் உம்மை நினைவில் கொண்டு, காத்து, வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்வேன்! இதில் சந்தேகம் வேண்டாம்!” என்று உறுதியளித்தான் அரங்கன்.

அவ்வாறே சரணாகதி செய்த நாள் முதல், அரங்கன் தன்னுடைய திருமேனி அழகு மற்றும் குணங்களை ஸ்ரீரங்கத்தில் இருந்தபடி அநுபவித்து மகிழும் பேற்றை ராமாநுஜருக்கு அருளினான். உரிய காலத்தில் முக்தி அடைந்து, ஸ்ரீவைகுண்ட லோகத்துக்குச் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் திருமகளுக்கும் திருமாலுக்கும் தொண்டாற்றி மகிழும் பேற்றையும் அருளினான்.

இந்த வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

ஒரு பக்தன் திருமாலிடம் சரணாகதி செய்து விட்டால், அவனுக்கு அப்பிறவியின் முடிவிலேயே முக்தியைத் தரத் திருமால் தயாராகி விடுகிறார். ஆனால் சரணாகதி செய்த நாள் முதல் முக்தியடையும் நாள்வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், இறையநுபவம் இன்றி அந்த பக்தனைத் தவிக்க விடக் கூடாது என்பதற்காகவே, அர்ச்சாவதார வடிவில் பற்பல கோயில்களில் எழுந்தருளியிருந்து, அவருக்குத் தொண்டாற்றி மகிழும் பேற்றை அருள்கிறார். முக்தி அடைந்த பின் அதே தொண்டை வைகுண்டத்தில் செய்து மகிழும் பேற்றையும் அருளுகிறார்.

‘காம’ என்றால் அநுபவித்து மகிழத் தக்க பொருட்கள் என்று பொருள். ‘க்ருத்’ என்றால் உருவாக்கியவர். நாம் இவ்வுலகில் வாழும் காலத்தில் நாம் அநுபவித்து மகிழக் கூடிய திருத்தலங்களையும் திவ்ய தேசங்களையும் உருவாக்கி, அவ்வுலகான வைகுண்டத்தை அடைந்தபின் அங்கே அநுபவித்து மகிழக்கூடிய பொருட்களையும் உருவாக்கியிருப்பதால், திருமால் ‘காமக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘காமக்ருத்’ என்றால் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் அநுபவித்து மகிழ்வதற்குரிய பொருள்களைப் படைத்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 296-வது திருநாமமாகும்.“காமக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல பொருட்கள் அனைத்தும் அவர்களை வந்தடையும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-vaccine12

  கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்