SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலையெழுத்தையே மாற்றும் விஷ்ணுவின் நாமம் எது?

2020-11-17@ 09:46:47

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தாதுருத்தமாய நமஹ எனும் நாமத்திற்கு அத்தகைய தலையெழுத்தையே மாற்றும் மகிமை உண்டு. படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள்.

பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார். ‘ஹல்யம்’ என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்தக் குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா. அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும் அழித்து விட்டார். ‘ஹல்யா’ என்று ஆகிவிட்டது. ஹல்யா என்றால் குற்றமுள்ளவள் என்று பொருள். சரஸ்வதி சொன்னபடி நாரதர் அப்பெண்ணுக்குக் குறையை உண்டாக்கிவிட்டார். பெயர்தான் அஹல்யா (குற்றமற்றவள்), ஆனால், தலையெழுத்தில் ஹல்யா (குற்றமுள்ளவள்) என்று உள்ளது. பிரம்மாவும் இதைக் கவனிக்கவில்லை.

அஹல்யாவுக்குத் திருமண வயது வரவே, பல தேவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பினார்கள். நாரதரின் ஆலோசனைப்படி பிரம்மா, “யார் மூவுலகையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் பெண் கொடுப்பேன்!” என்று கூறிவிட்டார். இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறினான், அக்னி பகவான் ஆட்டின்மேலும், வருண பகவான் முதலையின் மீதும், வாயு பகவான் மானின் மீதும் ஏறி மூவுலகைச் சுற்றினார்கள். அதற்குள் மிகவும் முதியவரான கௌதம மகரிஷியைப் பிரம்மாவிடம் அழைத்து வந்தார் நாரதர். கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைப் பிரதட்சிணம் செய்யுமாறு கௌதமரிடம் நாரதர் வேண்டினார். அவரும் பிரதட்சிணம் செய்தார். பிரம்மாவிடம், “கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைச் சுற்றினால் மூவுலகங்களையும் சுற்றியதற்குச் சமம். இதோ கௌதமர் சுற்றிவிட்டார். அஹல்யாவை இவருக்கு மணமுடித்துத் தாருங்கள்!” என்றார் நாரதர்.

அதை ஏற்றுக் கொண்டு அஹல்யாவைக் கௌதமருக்கு மணமுடித்துத் தந்தார் பிரம்மா. மூவுலகங்களையும் சுற்றிவிட்டு வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். எப்படியாவது அஹல்யாவை அடைந்தே தீரவேண்டும் என்று இந்திரன் முடிவு செய்தான். அதற்கு இந்திரன் எவ்வாறு திட்டம் தீட்டினான் என்பதும், அஹல்யாவைக் கல்லாகப் போகும்படி கௌதமர் சபித்ததும் ராமாயணத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். கல்லாக இருந்த அஹல்யாவின் மீது ராமபிரானுடைய திருவடித் துகள் பட்டவாறே அவள் மீண்டும் பெண் ஆனாள். அதைக் கம்பன் கூறும் போது,
“கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்”என்கிறார்.

‘பண்டை வண்ணமாய் நின்றனள்’ என்றால் கௌதமர் திருமணம் செய்து கொள்ளும் போது எப்படிக் கற்புடைய தூய இளம்பெண்ணாக இருந்தாளோ, அந்த இளமையை மீண்டும் பெற்றுத் தூய்மையானவளாக எழுந்து நின்றாள் என்று பொருள். ராமன் திருவடித் துகள் அவள் மேல் பட்டபோது அவளது தலையெழுத்தில் இருந்த ‘ஹல்யா’ என்பது ‘அஹல்யா’ என்று மாறிவிட்டது. அதனால் தான் அவள் இப்போது குற்றமற்றவள் ஆனாள். இவ்வாறு பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை எம்பெருமானுடைய திருவடிகளுக்கும் பாதுகைகளுக்கும் உள்ளதென்று ஸ்ரீவேதாந்த தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் அருளிச் செய்துள்ளார்.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு “தாத்ரு” (Dhaathru) என்று பெயருண்டு. அந்த தாத்ருவான பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்து கொண்டு, அவர் நம் தலைகளில் எழுதும் தலையெழுத்தையே மாற்றவல்லவனாக விளங்கும் எம்பெருமான் ‘தாதுருத்தம:’ - பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்த படைப்பாளி என்று போற்றப்படுகிறான். நம் தலையெழுத்தையும் நல்ல விதமாக மாற்றி அமைக்க ஸ்ரீராமனையும் அவனது பாதுகைகளையும் வேண்டிக் கொண்டு “தாதுருத்தமாய நமஹ” என்று தினமும் சொல்வோம்.

தொகுப்பு: ஹரிணி வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்