SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தில் காத்திடுவாள் ஆச்சியம்மன்

2020-11-16@ 09:44:36

இரண்டு பெண் குழந்தைகளுடன்  ஆச்சியம்மன்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள்ளது இளையநயினார்குளம். இந்த கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அந்தணர்குலத்து பெண், அவப்பெயருக்கு ஆளானதால் தன்னிரண்டு குழந்தைகளோடு கிணற்றில் விழுந்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். அவளே தெய்வமாகி ஊர் தெய்வங்களோடு தெய்வமாக நின்று ஊரை காத்தும் வருகிறாள். ஆச்சி என்றால் பெரியவள் என்று பொருள். (குமரி, சிவகங்கை - காரைக்குடி, தேனி - கூடலூர் பகுதிகளில் பாட்டியை ஆச்சி என்று அழைப்பதுண்டு). உண்மையில் குடும்பத்தில் பெரிய ஆண்மகனை, வயதில் மூத்தவரை தாத்தா என்று அழைப்பதுண்டு. காரணம் குடும்பத்தின் இன்ப, துன்பங்களை, சுமைகளை தாங்குபவர், குடும்ப பொறுப்புக்களை தன்னுள் தாங்கி வழிநடத்துபவர் என்பதால் அவர் தாத்தா எனவும் பாட்டியை குடும்பத்தில் பெரியவள் என்பதால் ஆச்சி எனவும் அழைப்பதுண்டு.

இதில் அப்பாவின் அம்மாவை அப்பாச்சி என்றும், அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்றும் அழைப்பதுண்டு. இதன் சுருக்கமே கேரளாவில் பாட்டியை அம்மச்சி என்றே அழைக்கின்றனர். பாட்டியின் பெயரை முதல் பெண் குழந்தைக்கு வைக்கப்பட்டால் அந்தக் குழந்தையின் பெயரை பெற்றவள் கூறி அழைக்காமல் ஆச்சி என்று செல்லமாக அழைப்பதுண்டு. காரணம் மாமியார் பெயரைக் கூறி மகளை அழைப்பது, மாமியாரை மரியாதை குறைவாக நடத்துவது போன்றது எனக் கருதி ஆச்சி என்றழைப்பர். அந்த வகையில் ஆச்சியம்மாள் பெயர் வழக்கத்தில் வந்தது. இளையநயினார்குளம் ஊரில் கோயில் கொண்டு அருளும் ஸ்ரீமுத்தாரம்மன் -
ஸ்ரீஉச்சிமாகாளி அம்மனுக்கு பூஜை செய்வதற்காக, ராதாபுரம் அக்ரஹாரத்திலிருந்து சுப்பிரமணிய ஐய்யரை நியமிக்கின்றனர் ஊர் பெரியவர்கள். பூசாரிக்கு ஊரின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஊர் கிணற்றின் தென் பகுதியில் வீடு கட்டி கொடுக்கின்றனர்.

அவருடன் மனைவி - காமாட்சி, மணமுடித்து கொடுக்கப்பட்டு கணவன் வெளியூரில் பணி செய்வதால் இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் மகள் ஆச்சியம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். எல்லா வசதிகளும் வீட்டில் இருக்க, குடி தண்ணீருக்கான ஊர் பொதுக்கிணறும் சுப்பிரமணிய ஐய்யர் வீட்டருகே இருந்தது. இதனால் அவருக்கு மேலும் வசதியாக போயிற்று. சம்பளமாக பூவுக்கு ஒரு கோட்டை நெல் வழங்கப்பட்டு வந்தது. (பூவுக்கு என்றால் ஒரு அறுவடைக்காலம் என்று பொருள்.) ஒருநாள் ஊர் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த ஆச்சியம்மாளை பார்த்தான் ஊர் தலையாரி, கந்தைய்யா தேவர் மகன் வீரமுத்துப்பாண்டி. வீரமுத்துப்பாண்டி இருபத்தைந்து வயது நிரம்பிய கட்டிளம் காளை. வீட்டுக்கும், ஊருக்கும் பொறுப்புள்ளவனாகத்தான் திகழ்ந்தான் வீரமுத்துப்பாண்டி.

இருப்பினும் ஆச்சியம்மாளின் அழகில் மதி மயங்கி போனதால் தன்னை மறந்து, மணமுடித்து கொடுக்கப்பட்டு மழலைகள் இரண்டு பெற்றவள் என்றும்
பாராமல் ஆச்சியம்மாளிடம் தான் விரும்புவதாக கூறிவிடுகிறான். இமை தட்டாமல் பார்த்த விழி பார்த்தபடி பலநாள் பார்த்தவன். ஒரு நாள் வார்த்தையை உதிர்த்ததால் இனியும் பொறுக்கலாகாது என்றெண்ணிய வஞ்சியவள் ஆச்சியம்மாள். தன் தந்தையிடம் நடந்தவற்றை கூறினாள். மகள் பேசியதைக் கேட்டதும் மனம் பொறுக்காத சுப்பிரமணிய ஐய்யர், ஊர் பெரியவர்களிடம் முறையிடுகிறார். பெரியவர்கள் இன்று மாலை ஊர் அம்மன் கோயிலில் ஊர் மக்கள் யாவரும் ஒன்று கூடுவார்கள். அங்கே வந்து கூறுங்க சாமி, நிச்சயம் நல்லது நடக்கும். கலங்காமல் போங்க என்று கூறி அனுப்பி வைக்கின்றனர்.

ஊர் அம்மன் கோயிலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். அம்மன் கொண்டாடி(அம்மனுக்கு சாமி ஆடும் நபர்) சிவ சங்கரவேல்பிள்ளை, கோமரத்தாடி(சுடலைமாட சுவாமிக்கு சாமி ஆடுபவர்) சிவன் கோனார், மற்றும் பெருமாள் தேவர் ஆகியோரின் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெறுகிறது. அந்த பஞ்சாயத்துக்கு ஊர் தலையாரி கந்தைய்யாதேவரும் வருகிறார். அப்போது பெருமாள்தேவர், அர்ச்சகரிடம் ‘‘சாமி, பஞ்சாயத்த கூட்டினீங்க என்ன சங்கதி’’ என்று கேட்க, நம்ம ஊரு பையன் ஒருவன் என் மகளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான்... சொன்னதும். ‘‘கந்தைய்யா தேவன் இருக்கிற ஊருல வாலாட்ட எந்த பயலுக்கு தில்லு இருக்கு... ?’’

‘‘தேவரய்யா... ஊர காக்கிற சாமிக்கு பணிவிடை செய்ய வந்த எனக்கு, என் குடும்பத்த காப்பாத்தா முடியாம போயிடுமோ என்கிற பயம் இருக்கிறதய்யா’’
இவ்வாறு சுப்பிரமணிய ஐய்யர் கூறியதும் அவன் யாரென்று இப்போது சொல்லுங்க சாமி. அவன் தலையை துண்டா எடுத்திருகேன் என்றார் தலையாரி கந்தைய்யா தேவர். சற்றே தயக்கத்துடன் அர்ச்சகர் கூறினார் நம்ம ஊரு மைனரு வீரமுத்துப்பாண்டி தான் அந்த பையன் என்று. மறுகனமே தன் மகனென்றும் பாராமல் வீரமுத்துப்பாண்டியின் தலையினை ஒரே வெட்டாக வெட்டி தலை வேறு, முண்டம் வேறாக வெட்டி சாய்த்தார். கந்தைய்யா தேவர். இச்சம்பவத்தை காதில் கேட்ட ஆச்சியம்மாள் திடுக்கிட்டாள். வாலிப துடுக்கில் அறியாது செய்த அவனது செயலுக்கு மரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தண்டனை, ஐயோ! ஆதிபராசக்தி நான் பெரும் பாவம் செய்து விட்டேன். ஒரு உயிர் போவதற்கு நான் காரணமாகி விட்டேனே.

இனி நான் இம்மண்ணில் வாழலாகாது. நான் மாண்டு போனாலும் இன்னார் மகன் சாவுக்கு இந்த பிள்ளைங்களோட அம்மாதான் காரணம் என்று அவனது வம்சா வழியினர் என் பிள்ளைகளையும் பழிக்குமே என்று கலங்கினாள். ஊர் தூங்கும் சாம வேளையில் தான் தூங்காமல் ஒரு முடிவெடுத்தாள். தான் சாக வேண்டும். தன் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துச் செல்லவேண்டும். உடனே தன் பெண் பிள்ளைகள் இருவரையும் அழைத்தாள். அலங்கரித்தாள். பண்டிக்கைக்காக வாங்கி வைத்திருந்த புது பட்டுப்பாவாடை சட்டைகளை அணிவித்தாள். ‘‘அம்மா நாம எங்க போறோம். தாத்தா ஆச்சிகிட்டெல்லாம் சொல்ல வேண்டாமா? ’’
‘‘வேண்டாம்.’’‘‘ஏம்மா’’கேள்வி கேட்காம வாங்க என்று எச்சரித்துக் கொண்டு மகள்களை அழைத்து வந்த ஆச்சியம்மாள் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலுக்கு வந்தாள். கண்ணீர் விட்டு அழுதாள், கரம் கூப்பி தொழுதாள்.

தாயே! என்னால ஒரு உயிர் பலியாகி போனது. இந்த பழியினை சுமந்துக் கொண்டு இனிமேல் என்னால் உயிர் வாழ முடியாது என அம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து வணங்கிவிட்டு ஊர் கிணற்றுக்கு வருகிறாள். பிள்ளைகளை ஒருவர் பின் ஒருவராக தூக்கி போடுகிறாள். இருள் சூழ்ந்திருந்த நேரம், தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளின் குரல் யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக உடனே கிணற்றில் குதித்தாள் ஆச்சியம் மாள். தன் குழந்தைகள் இருவரையும் மார்போடு அணைத்தப்படி முத்தாரம்மன் நாமத்தை சொல்லியபடியே மூழ்கினாள். நாட்கள் சில கடந்த நிலையில் ஊர் கிணற்றில் இருந்து நள்ளிரவு நேரம் அழுகை சத்தமும், கொலுசு ஒலியும் கேட்கத் தொடங்கியது. பருவப்பெண்களுக்கும், வாலிபர்களுக்கும் பிணிகள் உண்டானது. ஊர் இளசுகள்
சக்தியிழந்தவர்கள் போல இருந்தனர்.

இவ்வாறு இருக்க... ஓர் செவ்வாய்க்கிழமை அந்தி கருக்கல் நேரம் ஊர் கிணற்றிலிருந்து ஓர் பெண்ணின் குரல்.... நான் தான் ஆச்சியம்மாள். எனக்கு முத்தாரம்மன் வீற்றிருக்கும் கோயிலின் அருகே, எனக்கும் என் இரு குழந்தைகளுக்கும் கிழக்கு திசை நோக்கி நிலையம் போட்டு பூஜை செய்து வாருங்கள். ஊரு பிள்ளைங்களுக்கு இருக்கும் பிணி மாறும். உங்க வம்சா வழியை வளமாக்கி தருவேன் என்றாள். ஆச்சியம்மாள் கூறியபடியே ஆச்சியம்மாளுக்கும் அவளது இரு குழந்தைகளுக்கும் பீடம் போட்டு கொடுத்தனர். ஆச்சியம்மாள் ஸ்ரீஆச்சியம்மன் என்ற நாமத்தோடு வணங்கப்பட்டு வருகிறாள்.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

படங்கள்: எம்.மணிகண்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்