SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாவீரரின் வீடுபேறும் தீபாவளியும்...

2020-11-13@ 11:50:43

தீபாவளித் திருநாள் இருள் மற்றும் ஒளியுடன் தொடர்புடையது. அன்று நரகாசுரன் இறந்ததற்காக இந்து சமயத்தவரும், மகாவீரர் நிர்வாண நிலை [வீடுபேறு] அடைந்ததற்காக சமணரும், தீபாவளி கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் இருட்டை விரட்டும் வகையில் தீபங்களை வரிசையாக [ஆவளி] வைத்து ஒளியேற்றும் சடங்கு நடைபெற்றது.

இன்று அதற்குப் பல்வேறு காரணங்களை பல்வேறு சமயத்தார் உருவாக்கிக் கொண்டனர். ஹர்ஷவர்த்தனர் எழுதிய நாகநந்த என்ற நுலில் தீப பிரதிபாதோத்சவா என்றும் யக்ஷி ராத்திரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஷியை நினைவு கூரும் ராத்திரியாக இந்நாள் ஏழாம் நூற்றாண்டு வரை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயற்றப்பட்ட விஷ்ணு புராணம் [நரக சதுர்த்தசி] பத்ம புராணம் [லட்சுமி பிறப்பு] போன்றவற்றில் இந்நாள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றன.

உலகச் சமயங்களில் இறந்தோர் வழிபாடுசமணம், பௌத்தம், வைணவம், கிறிஸ்தவம் [கத்தோலிக்க சமயம்] என பல்வேறு சமயத்தவர்களும் இறந்தவர்களை ஒரு நாள் நினைத்து போற்றுகின்றனர். சீனா, ஜப்பான், கொரியா நாடுகளில் பவுத்த சமயம் பரவுவதற்கு முன்பு கன்ஃபுஷியம் ஷின்தொயியம் ஆகிய சமயங்கள் இறந்தோர் வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தன. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துவம் பரவுவதற்கு முன்பிருந்த வேளாண் குடி மக்கள் ஆவி வழிபாடு, இறந்தோர் வழிபாடு, பல தெய்வ வழிபாடுகளைச் செய்துவந்தனர். இவர்களின் சமயத்தை நகரத்து மேட்டுக்குடியினர் மற்றும் படித்தவர்கள் நாட்டார் சமயம் [paganism] எனக் குறைவாக மதித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் இயேசு கிறிஸ்து, மேரி மாதா என்று ஓர் இறை கோட்பாடு வந்த பிறகு அதன் செல்வாக்கு மிகுந்ததால் கிராமத்துச் சாமியாடிகளும் நாட்டு மருத்துவர்களும் ஜோதிடர்களும் குறி சொல்வோரும் பிசாசு பிடித்தவர்கள் என்று குற்றம் சுமத்தி தண்டிக்கப்பட்டனர். எனவே, பாகனிசம் என்ற பழஞ்சமயம் செல்வாக்கு இழந்தது.

இன்றைக்கு இந்தியாவிலும் இந்நிலை தோன்றிவிட்டது. இசக்கி, மாடன், கருப்பன் என்று கிராமத் தெய்வங்களை தமது குல தெய்வம் என்று தெரிவிக்காமல் சில பெருந் தெய்வங்களையும், பிரபலமான மகான்களையும் தங்களின் தெய்வங்களென மேட்டுக்குடி மரபில் சொல்லிக் கொள்ளும் வழக்கம் மிகுந்துள்ளது. இதனால் unity in diversity என்ற இந்தியாவின் தனித்தன்மையுடைய கலாச்சாரப் பண்பு [unique cultural aspect]  குறைந்துவருகிறது.

இருட்டும் இறந்தோரும் அமாவாசை இருள் மயமானது. அன்று இறந்தோரின் ஆவி பூமியில் திரியும் என்றும் அதற்குச் சாந்தி செய்வதற்கு விருப்பமான உணவை வழங்க வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் பண்டைய நம்பிக்கை ஆகும். இன்றும் இந்த நம்பிக்கை பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சமயங்களிலும் பண்டிகையாக சிறப்புத் தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பௌர்ணமியை ஆணும் பெண்ணும் கூடிக் களித்து குழந்தை பிறக்க உதவுகின்ற தினமாக கொண்டாடிய பண்டைய மனித இனம் அமாவாசையை இருட்டுடன் ஆவியுடன் இணைத்தது. அன்று இறந்தோருக்கு சடங்குகள் செய்வதால் அவை நம்மை துன்புறுத்தாது என்ற எண்ணமும் மேலோங்கிற்று. அமாவாசைகளில் மறந்து விட்டால் மகாளய அமாவாசை காலத்தில் அல்லது ஆடி அமாவாசை, தை அமாவாசை  நாட்களில் நீத்தார் கடன் கழிக்க வேண்டும். மாசி அமாவாசை அன்று இறந்த அனைத்து முன்னோருக்காகவும் இரவு முழுக்க விழித்திருந்து அவர்களுக்கு சடங்குகள் செய்து சாந்தி செய்யும் முறை காலங்காலமாக இருந்து வருகிறது.

அமாவாசை இருட்டு நிறைந்த நாள் என்பதால் அன்று கிராமங்களில் இறந்தோருக்கு நடத்தப்படும் பூஜைகள் நள்ளிரவில் நடைபெறுவதுண்டு. வங்காளத்திலும் ஒடிஷாவிலும் காளி பூஜை அன்று நள்ளிரவில் நடைபெறும். இம்மாநிலங்கள் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபு சார்ந்தன. அங்கு இன்றும் தீபாவளி காளி பூஜையுடன் கூடிய நள்ளிரவு  விழாவாக நடைபெறுகிறது.

தீபாவளியும் பல்வேறு முறை கொண்டாட்டங்களும்மனிதன் தோன்றிய நாள் தொட்டு தனது நம்பிக்கைகளையும் அச்சத்தையும் அதற்கான தீர்வையும் மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களையும் வெளித் தோற்றத்தையும் மட்டுமே மாற்றினான். எப்பாடுபட்டாவது நம்பிக்கை சார்ந்த அதே சடங்கு முறைகளை நவீனமாகச் செய்து முடித்தான்.

சித்திரை முதல் பங்குனி வரையில் அல்லது சூரியன் மேஷ ராசியில் புகுந்து இறுதியில் மீன ராசியில் சஞ்சரிக்கும் ஆண்டுக்கணக்கில் ஒரு ஆண்டின் நடு மாதம் [ஐப்பசி] வரும் அமாவாசை ஆண்டில் அதிக இருட்டு மிகுந்த இரவு அன்று இரவு முழுக்க விளக்கேற்றி வைத்து இருட்டின் அச்சத்தில் இருந்து தன்னை விடுவித்தான். நாகரிகமும் புதிய சமயங்களும் தோன்றிய பிறகும் அவன் அந்த நம்பிக்கை சார்ந்த சடங்குகளை விட்டுவிடவில்லை. தொடர்ந்து வேறு பெயரில் வேறு காரணங்களைக் கூறி செய்துவந்தான்.

தீப ஆவளி - தீப  வரிசையின் வரவேற்புக் காரணங்கள் தீபாவளி அன்று வீட்டில் வரிசையாக தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் வட இந்தியாவில் காணப்படுகிறது. அங்கு தீபாவளி அன்று நடக்கும் இருட்டு - ஒளிச் சடங்குகளுக்கு சொல்லப்படும் காரணங்கள் பற்பல. இந்து சமயத்தில் ராவணனைத் தோற்கடித்து அயோத்தி திரும்பிய ராமனை வரவேற்க தீபங்கள் ஏற்றி வைப்பதாக ஒரு ஐதீகம். வனவாசம் முடிந்து  அஸ்தினாபுரம் திரும்பிய பஞ்ச பாண்டவர்களை வரவேற்க இரவு முழுக்க  தீபங்களாக ஏற்றி வைப்பதாக ஒரு நம்பிக்கை.

சீக்கிய சமயத்தில் ஆறாவது குருவான  ஹர் கோவிந்த் சிங்கை மொகலாயப் பேரரசர் குவாலியர் கோட்டை சிறைச்சாலையில் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று விடுவித்தார். அவர் ஊர் திரும்பிய நாள் என்பதால் தீபாவளி அன்று தீபங்கள் ஏற்றி அவரை இன்றும் வரவேற்கின்றனர்.
அசோகர் புத்த சமயத்தை ஏற்றுக்கொண்ட நாள் என்பதால் அவரது அறியாமை இருளகன்று அறிவொளி பெற்ற திருநாள் என்று ஐப்பசி அமாவாசை அன்று பவுத்தர்கள் தீபமேற்றி வணங்குகின்றனர்.

நீத்தார் கடன் தீர்க்கும் தீபாவளிஇறந்தோருக்கான சடங்குகளை ஆண்டின் ஆறாவது மாதமான ஐப்பசியின் அமாவாசை அன்று செய்வது மிகவும் உகந்தது என்று நம்பிய மக்கள் சமண மதத்தைத் தழுவிய பிறகும் அதனைத் தொடர்ந்து செய்தனர். இவர்களுக்குக் கிடைத்த காரணம் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் நிர்வாண நிலை [முக்தி] அடைந்த நாள் அதுவாகும். இரவு முழுக்க மன்னனின் அரண்மனையில் அமர்ந்து சமயப் பேருரை நிகழ்த்திய மகாவீரர் அதிகாலையில் அமர்ந்த நிலையில் (விதேக கைவல்யம் - அதாவது ஞானிகள் தேகத்தையும் விடுதல்) உயிர் நீத்தார்.

அவர் உயிர் நீத்ததால் நாடெங்கும் இருள் சூழ்ந்துள்ளது. அதனால் வீடுதோறும் விளக்குகள் ஏற்றுங்கள் என்று மன்னன் ஆணையிட்டதால் அனைவரும் தத்தம் இல்லங்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றினர். இக்கதையில் அல்லது காரணத்தில் சாவும் தீபமும் சேர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்து சமயத்தில் இறந்தோர் கடனைத் தீர்த்தல் என்ற நம்பிக்கையும் நடைமுறையும் தொடர்வதற்கு பல்வேறு காரணங்கள் காட்டப்படுகின்றன. நரகாசுரனை கொன்ற நாள் என்பதாலும் அவன்  திருமாலிடம்  தனது  இறப்பை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதனாலும் அவர்கள் தீபாவளியை பட்டாசு வெடித்து இனிப்புகள் செய்து பரிமாறி கொண்டாடுகின்றனர்.

சமணம் தென்னகம் வந்த கதை‘மவுரியப் பேரரசன் சந்திரகுப்தரின்(கிமு322-298) குரு சமணத் துறவி பத்ரபாகு. ‘பீகாரில் (பாடலிபுத்திரம்) 12ஆண்டுகள் கடும் பஞ்சம் வரும்’ என்று தன்  ஜோதிட அறிவில் இவர் கணித்துச் சொன்னார். இந்த கொடும் பஞ்சத்திலிருந்து தப்பும் நோக்கில் பத்ரபாகு வழிகாட்டுதலில் பெரும் எண்ணிக்கையில் சமண மக்கள் தென்னகம் இடம்பெயர்ந்து, கர்நாடகத்தின் சிரவணபெல்கோலா பகுதிக்கு வந்தனர்.

தொடர்ந்து சமணத்துறவி விசாகச்சாரியார் தலைமையில் குழுவினர் கிமு 3ம் நூற்றாண்டில் கொங்கு நாடு வழி தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளுக்கும் வந்து தங்கினர்’ என்று மயிலை சீனி வேங்கடசாமி சமணம் தென்னகம் வந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றார். இவர்கள் திண்டிவனம், வந்தவாசி, மதுரை ஆகிய பகுதிகளில் ஏராளமாக இருக்கின்றனர். இவர்கள் அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து தலைமுழுகி மகாவீரரின் இறப்பை அனுஷ்டிக்கின்றனர். இவர்களின் சமணர் கோயில்கள் நயினார் கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.

செல்வம் கொழிக்க லட்சுமி - குபேரர் பூஜை ஐப்பசி அமாவாசை அன்று முன்னோர்களை வணங்கித் தொழிலை அல்லது புதுக் கணக்கை அல்லது நகை, தங்கம், வெள்ளி வாங்கி வைத்தல் போன்றவற்றைச் செய்தால் செல்வம் சேரும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் அன்று புதுக்கணக்கு தொடங்குவதும் லட்சுமி பூஜை செய்வதும் குபேர பூஜை செய்வதும் உண்டு. இதற்கும் ஒரு கதையும் காரணமும் உண்டு. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது லட்சுமி உதித்தாள். அன்று ஐப்பசி அமாவாசை. அதனால் அன்று லட்சுமிக்குப் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. இக்கதை பத்ம புராணத்தில் உள்ளது.

ஐந்து நாள் விரிவாக்கம்

நேபாளிகள் [வஜ்ராயன பவுத்தர்கள்] அன்றைய தினத்தை  திக்ஹார் அல்லது சுவர்னி என்று அழைக்கின்றனர். இவர்கள் ஐந்து நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். காகம், பசு, நாய் ஆகியவற்றுக்கு தனித்தனியாக ஒவ்வொரு நாள் கொண்டாடிவிட்டு அடுத்து நான்காவது நாள் கோவர்த்தன பூஜையும், பின் சகோதர நலம் காக்கும் பூஜையும் செய்து சகோதர்களுக்கு பரிசும் இனிப்பும் அளித்து மகிழ்கின்றனர்.

வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முதல்நாள் தான திரயோதசி எனப்படும். அன்று தங்கம் வெள்ளி வாங்குவதுண்டு. அடுத்த நாள் நரகாசுரனை கொன்ற சதுர்த்தசி என்பதால் நரக சதுர்த்தசி எனப்படுகிறது. இந்நாளை சின்ன தீபாவளி என்றும் குறிப்பிடுவர்.மூன்றாம் நாள் தீபம் ஏற்றி இனிப்பு வழங்கி பட்டாசு கொளுத்தும் தீபாவளித் திருநாள்.

நான்காம் நாள், தம்பதி பூஜை அதாவது தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக  சுமங்கலிகள் கேதார கெளரி விரதம் மேற்கொள்கின்றனர்.
ஐந்தாம் நாள் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கோவர்த்தன் பூஜை நடைபெறும் அன்று விச்வகர்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அமாவாசையும் நம்பிக்கைகளும்வட இந்தியாவில் அமாவாசையை நல்ல நாள் எனக் கொண்டு பல நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்குவர்.  அங்கு செவ்வாய்க்கிழமை மங்கல் வார்  எனப்படுவதால் பல மங்கல காரியங்கள் அன்று தொடங்கப்படும். ஆனால், தென்னிந்தியாவில் அமாவாசையை கரி நாளாகக் கொண்டு அன்று எந்த நல்ல செயலும் தொடங்குவதில்லை.

செவ்வாய்க்கிழமையை ‘செவ்வாயோ வெறும் வாயோ’ என்று நம்புவதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எந்த நற்செயலும் தொடங்குவது கிடையாது. ஒரே நாடு என்று கருதப்படும் எல்லைப் பரப்புக்குள் அடிப்படை நம்பிக்கைகளில் பல மாற்றங்கள் இருப்பதைக் காணலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்