SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமன் தலைதீபாவளியை எங்கே கொண்டாடினார்?

2020-11-13@ 11:48:15

ஐப்பசி மாத அமாவாசை நாளில் நாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். இப்பண்டிகைக்கான பல காரணங்களுள் பிரசித்தமான ஒன்று என்னவென்றால், இந்நாளில்தான் கண்ணன் நரகாசுரனை வதம் செய்தான்.இதை இட்டு எல்லோரும் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்பார்கள், ராமன் தனது தலைதீபாவளியை எங்கே கொண்டாடினார்? அயோத்தியிலா மிதிலையிலா?  நாம் ஏதோ ஒரு பதிலைச் சொன்னால், அது தவறு. கிருஷ்ணாவதாரத்துக்குப் பின்தானே தீபாவளியே வந்தது. ராமன் வாழ்ந்த காலத்தில் தீபாவளிப் பண்டிகையே கிடையாதே என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால், இந்தக் கூற்றின் உண்மைத் தன்மை சற்றே ஆராயப்பட வேண்டிய விஷயமாகும். ஏனெனில், ராமாவதாரத்துக்கு முன்பும் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகையில், அதிலிருந்து அமுதமும் லட்சுமி தேவியும் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாகத் தேவர்களும் முனிவர்களும் வரிசையாகத் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். வடமொழியில் ‘ஆவளி’ என்றால் வரிசை.

(இறைவனின் திருநாமங்களை வரிசையாகச் சொல்லும் போது அதை ‘நாமாவளி’ என்று சொல்கிறோம் அல்லவா?) லட்சுமிதேவியை வரவேற்கும் பொருட்டு வரிசையாகத் தீபங்கள் ஏற்றப்பட்டதால், ஐப்பசி அமாவாசை நாள் ‘தீபாவளி’ (தீப + ஆவளி, தீபங்களின் வரிசை) என்று பெயர் பெற்றது. ‘லட்சுமி பூஜை’ என்ற மற்றொரு பெயரும் தீபாவளிப் பண்டிகைக்கு உண்டு.

லட்சுமிதேவி தீபாவளி நன்னாளில் பாற்கடலில் இருந்து தோன்றியதால், அவளது வருகையைக் கொண்டாடும் விதமாக நிறைய இனிப்புப் பட்சணங்கள் செய்து தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். அனைத்து நோய்களையும் குணப்படுத்த வல்ல அமுதம் இந்நாளில் தோன்றியதன் நினைவாகத்தான் தீபாவளி மருந்து என்னும் லேகியம் தயாரிக்கப்படுகிறது.

நான்கு யுகங்களுள் முதல் யுகமான கிருதயுகம் தொடங்கியே இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பெற்று வருவதாகப் பாஞ்சராத்திர ஆகமம் கூறுகிறது. அப்பய்ய தீட்சிதர் தமது யாதவாப்யுதய விளக்க உரையிலும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.துவாபர யுகத்தில் அவதரித்த கண்ணன், நரகாசுரன் என்னும் அசுரனை ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியின் இரவில் வதம் செய்தான் (ஐப்பசி அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு).

இந்திரனின் வெண்கொற்றக்குடையையும், இந்திரனின் தாயான அதிதி தேவியின் வைரத் தோடுகளையும் அபகரித்துச் சென்றிருந்தான் நரகாசுரன். அவற்றை மீட்டுத் தருமாறு கண்ணனிடம் இந்திரன் பிரார்த்திக்கவே, சத்யபாமாவோடு கருட வாகனத்தில் நரகாசுரனின் இருப்பிடமான ப்ராக்ஜ்யோதிஷபுரத்தை அடைந்தான் கண்ணன்.

பூமியை மீட்க அவதரித்த வராகப் பெருமாளுக்கும், பூமிதேவிக்கும் பிறந்த மகன்தான் இந்த நரகாசுரன். தனது தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று பிரம்மாவிடம் வரமும் பெற்றிருந்தான்.அவனுடன் போரிட்ட கண்ணன், நரகாசுரனின் பாணத்தால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்ததுபோல் நடித்தான். அதனால் கோபம்கொண்ட சத்யபாமா (பூமிதேவியின் அம்சமாக அவதரித்த சத்யபாமா) நரகாசுரன் மேல் பாணத்தை ஏவினாள். தனது தாயான பூமிதேவியின் மறுவடிவான சத்யபாமா தாக்கியதால், நரகாசுரன் அங்கேயே விழுந்து மாண்டான்.

மயங்கிக் கிடந்தவன்போல் நடித்த கண்ணன், புன்னகையுடன் எழுந்து, அவன் கவர்ந்து வந்திருந்த இந்திரனின் உடைமைகளையும், அவன் சிறை வைத்திருந்த பதினாறாயிரம் இளவரசிகளையும் மீட்டான். இறக்கும் தருவாயில் நரகாசுரன் கண்ணனிடம், “நாளைய தினம் மக்களுக்கு நல்விடிவாக விடியவுள்ளது. எனவே நாளை (ஐப்பசி அமாவாசை அன்று) விடியற்காலையில் யாரெல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடுகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் கங்கையில் நீராடிய புண்ணியத்தை நீ அருளவேண்டும். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு ஐப்பசி அமாவாசை காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர்க்கு இவ்வருளை நீ புரிய வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டு உயிர் நீத்தான். கண்ணனும் அதை ஏற்று அவ்வரத்தை அளித்தான்.

இதன் விளைவாகவே ‘நரக சதுர்த்தசி ஸ்நானம்’ என்பது ஏற்கனவே ஐப்பசி அமாவாசையில் கொண்டாடப்பட்டு வந்த தீபாவளியோடு இணைக்கப்பட்டது. எனவே தீபாவளிப் பண்டிகை என்பது நரகாசுர வதத்துக்கும் நீண்டகாலம் முன்பிருந்தே ஏற்பட்ட பண்டிகையாகும். கங்கா ஸ்நானத்தை மட்டும்தான் அத்துடன் இணைத்தான் நரகாசுரன்.அப்படியானால், ராமனின் காலத்திலும் தீபாவளிப் பண்டிகை உண்டு. சீதையுடன் ஆனந்தமாக மிதிலைக்குச் சென்று, தனது மாமனார் வீட்டில் தனது தலை தீபாவளியை நிச்சயமாக ராமன் கொண்டாடி இருப்பான் என்றே நாம் ரசிக்க வேண்டும்.

அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளியைத் தரவல்ல திருநாள் தீபாவளித் திருநாளாகும். இந்நாளில் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளைச் சமர்ப்பித்தும் லட்சுமி தேவியை வழிபடுவோர்களின் இல்லங்களில் மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள், அவர்களின் வாழ்வில் தினந்தினம் தீபாவளியாய் அமையும்.

தொகுப்பு: ஹரிணி வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்