SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கோயில் விழாக்களும் தீபாவளி வழிபாடும்!

2020-11-13@ 11:45:45

தமிழக வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் தங்கள் ஊர்களில் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் விழாக்கள் எடுப்பதை மரபாகப் போற்றி வந்துள்ளனர். அவ்விழாக்கள் பன்னிரு மாதங்களுக்குரியவையாகவும், அதுவும் குறிப்பிட்ட விண்மீன் நாளிலோ அல்லது பட்சத்திலோ கொண்டாடும் வகையில் பண்டு முதல் இன்று வரை அமைந்துள்ளன.

சங்கத் தமிழ் நூலான அகநானூற்றில் நக்கீரர் உரோகிணி சந்திரனுடன் இணையக்கூடிய பூரண நிலவு நாளில் வீதிகள்தோறும் இல்லங்களில் விளக்குகளை ஏற்றி திருக்கார்த்திகை விழா கொண்டாடுவதை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே நூலில் உறையூர் முதுகூத்தனார் எனும் புலவர் காவிரி நடுவண் தீவாகத் திகழும் திருவரங்கத்தில் பங்குனி மாதத்து விழா (உத்திர நாள் விழா) நிகழ்ந்தமையை உரைத்துள்ளார். திருமுருகாற்றுப்படையில் ஊர்கள்தோறும் கோழிக்கொடியை ஏற்றி முருகப்பெருமானுக்காகக் கொண்டாடப்பெற்ற விழா பற்றிய செய்தியை, வாரணம் கொடியொடு வயின்பட நிறீஇ ஊர்கொண்ட சீர்கெழு விழவினும் என நக்கீரர் பாடியுள்ளார்.

சிலம்பில் இந்திரனுக்காகச் சித்திரை முழுநிலவு நாளில் கொண்டாடப்பெற்ற இந்திர விழா பற்றிய செய்திகள் பேசப்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தப் பெருமானார் திருமயிலாப்பூர் கபாலீச்சரம் எனும் திருக்கோயிலை வழிபடச் சென்றபோது சிவநேசர் என்பார் காழிப் பிள்ளையாரிடம் தங்களுக்கு மணம் முடிப்பதற்காகவே தான் பெற்று வளர்த்த பூம்பாவை எனும் பெண் ஏழு வயதில் விடம் தீண்டி இறந்ததாகவும், அவள் உடலை எரியூட்டி வெந்த சாம்பலையும், எலும்பையும் குடத்திலிட்டு கன்னி மாடத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார். இதனைக் கேட்ட பிள்ளையாரின் கூற்றுப்படி சிவநேசர் அம் மண்குடத்தை கபாலீச்சரத்தின் மதிலின் புறத்தே கிழக்கு வாயில் அருகில் எடுத்து வந்து வைத்தார். அதன்முன்பு சென்ற ஞானசம்பந்தர், ‘‘மட்டிட்ட புள்ளயங்கானல்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

பாடல்தோறும் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் நிகழும் விழா ஒன்றினைக் குறிப்பிட்டு அவ்விழாவினைக் ‘‘காணாதே போதியோ பூம்பாவாய்” எனக் குறிப்பிட்டு பதிகம் ஒன்றினைப் பாடத் தொடங்கினார். முதல் பாடலிலேயே எலும்புக் குடத்துள் தோன்ற ஆரம்பித்த அவள் உருவம் ஒன்பதாம் பாடல் பாடுமளவில் பன்னிரு வயதுடன் முழு உருவில் குடத்திலிருந்து வெளிவந்தாள். எழுந்து வந்த பூம்பாவையை சிவநேசர் சம்பந்தரிடம் அழைத்து வந்து ‘‘அடியேன் பெற்ற பாவையை திருமணம் புரிந்தருள் செய்யும்'' என விண்ணப்பம் செய்தார். ஞானசம்பந்தரோ ‘‘நீர் பெற்ற பெண் விடத்தினால் இறந்துவிட்டாள்.

திருமயிலைப் பெருமான் அருளால் உற்பவித்த இப்பெண் என்னுடைய பெண்” என்று கூறி மகளாகவே ஏற்றுக்கொண்டார். எரிந்து சாம்பலான பூம்பாவையை உயிர்ப்பித்து எழச்செய்தது காழிவேந்தரின் நாவில் உதித்த தமிழ் என்பதை நாம் உணர்தல் வேண்டும். அத்தகு வலிமையுடைய தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களும் தமிழகக் கோயில்களில் பண்டு நிகழ்ந்த பத்து திருவிழாக்களைக் குறிப்பனவாகும். பல்லவப் பேரரசர்கள் வாழ்ந்த அக்காலகட்டத்தில் (கி.பி. 6 - 8ஆம் நூற்றாண்டுகளில்) புரட்டாசியில் நிகழும் மாகேசுவரர்களுக்கு அன்னமிடும் திருவிழா, ஐப்பசியில் நிகழும் திருவோண விழா, கார்த்திகை மாதத்து விளக்கீடு விழா, மார்கழி திருவாதிரை விழா, தை மாதத்துத் தைப்பூச விழா, மாசி மக நீராட்டுவிழா, பங்குனி மாதத்து உத்திரநாள் விழா, சித்திரை அட்டமி விழா, வைகாசி மாதத்து பொன்னூஞ்சல்  விழா (வசந்த விழா) ஆனி மாதத்து பெருஞ்சாந்தி விழா (சம்வத்சரா அபிடேகம்) ஆகிய திருவிழாக்களைச் சுட்டும் வகையில் இப்பதிகம் அமைந்துள்ளது.

பண்டு திருக்கோயில்களில் நிகழ்ந்த விழாக்களை விரிவுற தம் தேவாரப் பாடல்களில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர் ஒருமுறை திருப்புகலூரில் முருக நாயனாருடன் தங்கியிருந்தார். அப்போது திருவாரூரில் மார்கழி திருவாதிரை விழாக் காண திருநாவுக்கரசு பெருமானார் அங்கு தங்கியிருந்தார். விழா முடிந்தவுடன் சம்பந்தரைக் காணவேண்டிய பெருவிருப்பத்துடன் ஆரூரிலிருந்து புறப்பட்டு திருப்புகலூர் நோக்கிச் சென்றார். அப்பரடிகள் தன்னைக் காண வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை முன்கூட்டியே அறிந்த சம்பந்தர் முருக நாடனாருடன் புகலூர் எல்லை கடந்து ஆரூர் செல்லும் நெடுவழியில் எதிர்காணக் காத்திருந்தார்.

அப்பர் வந்தவுடன் எதிர்சென்ற சம்பந்தர் அப்பரைக் கட்டித் தழுவி வணங்கினார். உடன், ‘‘அப்பரே நீர் வருநாளில் திருவாரூரில் நிகழ்ந்த பெருமை வகுத்து உரைப்பீர்” என்றார். உடன் அப்பரடிகள் ‘‘முத்து விதானம் மணிபொற்கவரி” என்ற பதிகத்தைப் பாடி தாம் ஆரூரில் கண்ட திரு ஆதிரை விழாவின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.

அப்பதிகத்தில் வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஔிதோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
என்பது போன்று பத்துப் பாடல்கள்வழி தாம் ஆரூரில் கண்ட ஆதிரை விழாவினை எடுத்துரைத்தார். புகலூர் எல்லையில் இப்பதிகத்தினை செவிமடுத்த சம்பந்தர் அப்பரடிகளை முருகநாயனாருடன் புகலூர் திருமடத்தில் தங்க அனுப்பிவிட்டு அங்கிருந்தபடியே ஆரூரைத் தரிசிக்க வேண்டும் எனப் புறப்பட்டு ஆரூர் சென்று பெருமானை வழிபட்டு பின்பே புகலூர் திரும்பினார். ஒரு விழாவின் பெருமையைக் கேட்ட அளவிலேயே சம்பந்தர் அத்தலத்துப் பெருமானைக் காணப் புறப்பட்டார் என்றால் பண்டு நிகழ்ந்த கோயில் விழாக்களின் சீர்மையை யாரே அளவிடல் முடியும்?

திருவாரூரில் உள்ள புற்றிடங்கொண்டார் திருக்கோயிலின் ஆழித்தேர் விழாவில் வீதிகளில் பவனி வருபவர் வீதிவிடங்கப் பெருமான் எனும் தியாகேசர் ஆவார். அவருக்குரிய கோயில் செங்கற் தளியாக இருந்தது. அணுக்கியார் பரவை நங்கையார் என்ற பெண் ஒருவரின் வேண்டுகோளுக்காகக் கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் அக்கோயிலைக் கற்றளியாகப் புதுப்பித்ததோடு அதன் உள்ளும் புறமும் தங்கத் தகடுகளைப் போர்த்தி பொற்கோயிலாக அதனை மாற்றினான்.

அக்கோயிலில் அவள் வெட்டுவித்த கல்வெட்டுச் சாசனத்தில் ஸ்ரீமூலஸ்தான முடையார் புதிது அமுது செய்யும் திருநாள், திருமுளையூட்டும் திருநாள் (பாலிகையில் நவதானியம் முளைக்கச் செய்ய இடும் விழா), திருச்சுண்ணம் இடிக்கும் (மஞ்சள் பொடி இடிக்கும்) விழா, மார்கழித் திருவாதிரை விழா, திருப்பூர நாள் விழா, ஆவணி அவிட்ட நாள் விழா, ஆண்டு சித்திரை மகோத்சவம், தன் அய்யன் (இராஜராஜ சோழன்) பிறந்த ஐப்பசி சதய நாள் விழா, தான் (இராஜேந்திர சோழன்) பிறந்த ஆடித் திருவாதிரை நாள் ஆகிய விழாக்களுக்கும் ஆரூர் கோயிலிலேயே உள்ள மற்றொரு தேவாரத் தலமான திருஅரநெறி இறைவனுக்கு கொண்டாடப்பெறும் விழாவில் தளியிலார் எனும் ஆடல் அணங்குகள் அரங்கேறி நாட்டியமாடும் திருவிழா, அப்பெருமான் திருவேட்டை (பரிவேட்டை விழா) செல்லும் நாளில் அரங்கமேறி நாட்டியம் நிகழும் விழா போன்ற திருவிழாக்களுக்கு அம்மன்னவன் வகுத்த அறக்கொடைகள் பற்றி அக்கல்வெட்டு விவரிக்கின்றது. வரலாற்றுச் சிறப்புடைய இக்கல்வெட்டுச் சான்றால் திருக்கோயில்களில் இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகிய பெருவேந்தர்களின் பிறந்த நட்சத்திர நாட்களின்போது மிகு சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்பெற்றதை அறிகிறோம்.

திருக்கோயிலில் நிகழ்ந்த விழாக்கள் பற்றி பல நூறு கல்வெட்டுச் சாசனங்கள் இருந்தபோதும் திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்து மேற்குப்புற சுவரில் உள்ள அனபாயன் எனப்பெறும் இரண்டாம் குலோத்துங்கன் கி.பி. 1140ஆம் ஆண்டில் வெட்டுவித்த ஒரு சாசனம் ஒரு தனிச்சிறப்புடையதாகும்.
அக்காலகட்டத்தில் சேக்கிழார் பெருமானின் திருவாக்காலேயே 63 நாயன்மார்கள் வரலாறும் 10 தொகையடியார் சிறப்பும் கேட்கும் பெரு வாய்ப்பு அம்மன்னவனுக்குக் கிட்டியது. திருத்தொண்டர் வரலாறு உலகமறியக் காரணமாக இருந்த சுந்தரர் அவர்தம் துணைவியார் பரவையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பெருமை உணர்ந்த அனபாயச் சோழன் திருவாரூர் கோயிலுக்குச் சென்றான். பெருமானை வணங்கியபின் திருவாரூர் மூலஸ்தானமுடையார் கோயிலினுள் எழுந்தருளி இருக்கும் ஆளுடைய நம்பியான சுந்தரர் அவர் தேவி பரவை நங்கை ஆகிய திருமேனிகளுக்கு விழா எடுப்பதற்காக மருகல் நாட்டிலுள்ள திருவாதிரைமங்கலம், ஆமூர், அரங்கமங்கலம் எனும் ஊர்களில் நிலங்களை வழங்கினான்.

அவற்றின் வருவாயிலிருந்து சுந்தரர்க்கும் பரவையார்க்கும் விழாக்களை வகுத்தான். அதன்படி அவ்விரு திருமேனிகளும் திருவீதி பார்க்க எழுந்தருளும் திருவிழா நாட்களாக அமாவாசை திருநாள் 12, சங்கராந்தி திருநாள் 8, விஷு அயனத் திருநாள் 12, கிராணத் திருநாள் 2, மார்கழித் திருவாதிரை நாள் 1, தைப்பூசத் திருநாள் 1, ஆடிப்பூரத்திருநாள் 1, சித்திரை மாதத்து சித்திரைத் திருநாள் 1, ஆவணி அவிட்டத் திருநாள் 1, ஐப்பசி சதய நாளில் எழுந்தருளும் திருநாள் 6, திருப்பங்குனி உத்திரத்துக்கு கொடி ஏற்றுத் திருநாள் 1, தீர்த்தத்துக்கு திருமுளை சார்த்தும் நாள் 1, உத்திர விழாவிற்காக எழுந்தருளும் நாள் 4, ஆடி மாதத்து திருவாதிரை நாள் 6, கார்த்திகைத் திருநாள் 1 என சுந்தரரும் பரவை நங்கையாரும் திருவீதி உலா செல்லும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.

இதனை அடுத்து இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஆளுடைய பிள்ளையார், திருநாவுக்கரசர் ஆகிய இருவர்க்கும் பூசைகளுக்கும், திருவிழாக்களுக்கும் முதலீடாக மருகல் நாட்டில் கங்கை கொண்ட சோழநல்லூரான சிவபாதசேகர நல்லூரில் தனித்தனியாக நிலக்கொடை அளித்தான். அதன் வருவாயிலிருந்து பங்குனி உத்திர நாளிலும், ஐப்பசி சதய நாளிலும், ஆடித்திருவாதிரை நாளிலும் இவ்விருவர் பிரதிமங்களும் திருவீதி பார்க்க எழுந்தருளும் நாட்களாக வகுத்து விழா செலவுகளுக்கும், நாட்பூசைகளுக்கும் வழிசெய்தான்.

இக்கல்வெட்டுச் சாசனத்தில் சித்திரை மாதத்து சித்திரை நாளில் சுந்தரர்க்கும் பரவைநாச்சியாருக்கும் திருத்தமனகம் எனப்பெறும் மருக்கொழுந்து சார்த்தும் நிகழ்வு நடைபெற்றது குறிக்கப்பெற்றுள்ளது. அரிய செய்தி யாக இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகியோர் பிறந்த ஐப்பசி மற்றும் ஆடித்திருவாதிரை நாள் விழாக்களாக சுந்தரர் பரவைநங்கையார் ஆறு நாட்களும், ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஒருநாளும் வீதி உலா சென்றனர் என்பது நோக்கத்தக்கதாகும். அப்பெருவேந்தர்கள் மறைந்து 150 ஆண்டுகள் கடந்தும் அவ்விழாக்கள் நடைபெற்றுள்ளன.

திருவாரூர் திருக்கோயில் தேவாசிரிய மண்டபத்து விதானத்தில் கி.பி. 1700 காலகட்டத்தில் தீட்டப்பெற்ற முசுகுந்த புராண ஓவியக் காட்சிகள் உள்ளன. அதன் இறுதிப்பகுதியில் ஆரூர் கோயிலில் நிகழ்ந்த துவஜாரோகணம் முதல் நடந்த பெருந்திருவிழா காட்சிகள் தமிழில் எழுதப்பெற்ற விளக்கக் குறிப்புகளுடன் காணப்பெறுகின்றன. சிங்காதனம் எனும் ஓவியனால் வரையப்பெற்ற அவ்வண்ணக் காட்சிகளில், விழாக்களின் பெயர்கள், அன்று பங்கேற்ற முக்கிய மாந்தர் தம் பெயர்கள், இசை நாட்டிய நிகழ்வுகள், வாணவேடிக்கைக் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தற்காலத்திய தீபாவளி விழாக்களில் நாம் பயன்படுத்தக்கூடிய பலவகையான வாணங்களை அங்கு காட்டி ஒன்றில்  ‘‘நிலச்சக்கரவாணம்” என்ற பெயர் எழுதப்பெற்றுள்ளது.

தீபாவளி என்று நாம் கொண்டாடும் இவ்விழா 16ஆம் நூற்றாண்டு முதல் திருக்கோயில்களில் இடம்பெற்று கொண்டாடப்பெற்றது என்பதை சில அரிய ஆவணங்கள் நமக்குக் காட்டி நிற்கின்றன. திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள கி.பி. 1542ல் பொறிக்கப்பெற்ற ஒரு தமிழ்க் கல்வெட்டில் ‘‘தீபளிகை நாள் அதிரசப்படி இரண்டு” என்ற குறிப்பு உள்ளது. தீபாவளி அன்று வேங்கடவனுக்கு அதிரசம் அமுது படியாகப் படைக்கப்பெற்றது என்பதை இதன்மூலம் அறிய முடிகின்றது.

7.12.1753இல் எழுதப்பெற்ற தஞ்சை அரசர் பிரதாபசிம்மன் காலத்துச் செப்பேடு ஒன்றில் திருவாரூரினை அடுத்த சித்தாய்மூர் பொன்வைத்த நாதர் கோயில் திருவிழாக்களுக்காகச் சித்தாய்மூர் மாகாணத்துச் சித்தாய்மூர், நத்தப்பள்ளம், பள்ளியமூலை போன்ற 14 கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து தாங்கள் பெறும் கூலி வருவாயிலிருந்து இறைவனுக்குக் கூலிப்பிச்சையாக நெல்லும், காசும் கொடுத்து கொண்டாடச் செய்துள்ளனர். அதில் குறிப்பிடப்பெறும் விழாக்களில் ஒன்றாகத் தீபாவளி நாளில் பொன்வைத்தநாதருக்கு செய்யப்பெறும் தீபாவளி அபிடேக செலவினை அந்த மாகாணத்து நோட்டக்காரன் (பொன்மதிப்பு அறிவதும், வரி வசூல் செய்வதும் ஆகிய அரசு அதிகாரி) ஏற்பது என்பதும் ஒப்புக்கொள்ளப்பெற்று செப்பேட்டைப் பதிவு செய்துள்ளனர்.

திருக்கொள்ளம்பூதூர் எனும் சோழநாட்டுத் தேவாரத் தலத்தில் திருஞானசம்பந்தர் ‘‘கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்” எனும் பதிகத்தைப் பாடி ஓடக்காரன் இல்லாமல் தமிழால் பெருவள்ளத்தில் ஓடத்தைச் செலுத்தி கொள்ளம்பூதூரினை அடைந்தார். அதன் நினைவாக ஆண்டுதோறும் தீபாவளி நாளினை ஒட்டி அங்கு ஓடத் திருவிழா நிகழ்கின்றது.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்