SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

2020-11-09@ 10:10:26

நேரில் வந்த அனுமன்

சிறுவயதிலிருந்தே அனுமனின் பக்தை நான். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் அனுமனின் படத்திற்கு வெற்றிலை மாலை சாத்தி முடித்து நைவேத்யம் செய்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம் என் மகனுக்கு காலை 6 மணிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. மருந்துக் கடைகளும் திறக்காத நிலையில் என்ன செய்வது என திகைத்தேன். அனுமனின் திருவுருவபடத்தை மனதாற வணங்கி வேண்டினேன். சில நொடிகளில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கிடு கிடுவென எங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி இரண்டு இளநீர்களை பறித்துப் போட்டுவிட்டு எங்கள் வீட்டை ஒருமுறை சுற்றிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்து போனது. அந்த இளநீர்களை வெட்டிக் குடித்ததும் என் மகனின் வயிற்றுப் போக்கு நின்றது. அதற்கு அடுத்து அடுத்த அற்புதமும் நிகழ்ந்தது. ஆந்திர மாநில கிராமக் கலைஞர் ஒருவர் அனுமன் வேடமிட்டு கையில் ராம... ராம... என ஹார்மோனியப் பெட்டியுடன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார். அது சாட்சாத் அந்த அனுமனே நேரில் வந்ததுபோல் இருந்தது. சீதாராமரின் துயர் தீர்த்த அனுமன் அன்று என் துயரத்தையும் தீர்த்ததில் வியப்பென்ன?
- ரேவதி ரமேஷ், சோளிங்கர்.

ஆசையை நிறைவேற்றிய அம்பிகை

சிறு வயதிலிருந்தே லலிதா ஸஹஸ்ர
நாமத்தை பாராயணம்  செய்வதென்றால் எனக்கு மிகவும் இஷ்டம். சில வருடங்களுக்கு முன் மாம்பலம் உண்ணாமுலையம்மாள் தெருவில் உள்ள என் உடன்பிறவா சகோதரியைப் போன்ற தோழி   கல்யாணிமாமி வீட்டில் லலிதா ஸஹஸ்ரநாம கோடியர்ச்சனை நடந்தது. அதில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன். அச்சமயத்தில் நான் 420 சதுர அடி கொண்ட வீட்டில் வசித்து வந்தேன். நவராத்திரி கொலு வைப்பதில் எனக்கு மிகவும் ஆர்வம். அந்த வீட்டில் நடக்க மட்டும் இடம் விட்டுவிட்டு மற்ற இடமெல்லாம் கொலுவைத்து மகிழ்வேன். லட்சார்ச்சனை சமயத்தில் நமக்கும் பெரிய வீடு அமைந்தால் லலிதாஸஹஸ்ரநாம கோடி அர்ச்சனை செய்து பெரிய அளவில் கொலு வைத்து மகிழலாமே என நினைத்தேன். அது தேவியின் திருச்செவிகளில் விழுந்தது போலும். அடுத்த சில மாதங்களிலேயே சென்னை கெருகம்பாக்கதில் 420 சதுர அடி வரவேற்பறை மட்டும் கொண்ட அழகிய சொந்த வீடு அமைந்தது. தேவியின்
அருளாணைப்படி 81 நாட்களிலேயே வெளியூர் உள்ளூர் பக்தர்களால் ஒருகோடி ஜபம் பூர்த்தியானது. தினமும் பாராயணம், அன்னதானம் என நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை. என் ஆசையை ஆசையோடு நிறைவேற்றிய தேவியின் கருணையே என் வாழ்வின் அற்புதம்.
- ஜெயஜோதி, கெருகம்பாக்கம்.

ஆபத்தில் காத்த ஐங்கரன்

விநாயகப் பெருமான் மேல் தீரா பக்தி எனக்கு. விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடுவது எங்கள் வீட்டு வழக்கம். கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பூஜையன்று விநாயகர் சிலைக்கு இரண்டு சவரன் தங்கச் சங்கிலி போட்டு அலங்கரித்து பூஜைகள் செய்தோம். அடுத்த நாள் புனர்பூஜை செய்து வீட்டுக் கிணற்றுக்குள் விநாயகரை போட்டு விட்டோம். பிறகுதான் ஞாபகம் வந்தது, தங்கச் சங்கிலியோடு அவரை கிணற்றினுள் போட்டது. பின்னர் அருகிலுள்ள கிணற்றில் இறங்கும் நபரை தேடிப் பிடித்து விஷயத்தைக் கூறினோம். கிணற்றில் இறங்கிய அவர் பாதி கிணறு சென்றவுடனேயே இதோ கிடைத்துவிட்டது உங்கள் சங்கிலி என்றார். எட்டிப் பார்த்தால் கிணற்றில் முளைத்திருந்த எருக்கஞ் செடியில் அந்த சங்கிலி மாட்டியிருந்தது. அவருக்கு மிகவும் பிடித்தமான செடி வடிவிலேயே விநாயகரே வந்து என் சங்கிலியைக் காத்தார் என்பதே இன்றும் என் அசைக்க முடியாத நம்பிக்கை.
- சரோஜா கிருஷ்ணன், விழுப்புரம்.

குழந்தை வரம் அருளும் ஈசன்

நான் 2001ம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தேன். எனது சொந்த ஊர் திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தூரம் உள்ள திருப்பள்ளி முக்கூடல் ஆகும். இந்த ஊரின் புராணப் பெயர் குருவி ராமேஸ்வம் ஆகும். இங்குள்ள சிவன் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் முக்கோணநாதர் இறைவி மைமேவுங் கண்ணி என்பதாகும். திருநாவுக்கரசு நாயனரால் தேவராப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ஜடாயு மோட்சம் அடைந்த ஸ்தலம். கோயிலின் எதிர்புறம் தீர்த்தக் குளம் உள்ளது. இந்த தீர்த்தம் திருவேணிசங்கமத்திற்கு நிகரானது இதில் மூழ்குவோரிக்கு கங்கையின் தீர்த்தச் சிறப்பை போல் பதினாறு மடங்கு பலம் தரும். ‘‘ஷோட சேது’’எனப்படும். இந்தக் கோயிலுக்கு 2001ம் ஆண்டு சிவராத்திரிக்கு ஒரு கால அபிஷேகம் செய்வதற்காக சென்னையில் இருந்து திருப்பள்ளி முக்கூடல் திருத்தலத்திற்கு வந்தேன். முதல் கால பூஜை முடிந்ததும் பக்தர்கள் சென்று விட்டார்கள். நான் மட்டும் கோயிலில் இருந்தேன். அப்போது திருவாரூர் ஜவுளிக் கடையில் கணக்கராக வேலை பார்க்கும் ஒருவர் கோயிலுக்கு வந்தார். ஜவுளிக்கடை உரிமையாளர் ஒரு காலம் அபிஷேகம் செய்யப் போவதாகவும், ஜவுளிக்கடை உரிமையாளர் மகனுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது என்றும் குழந்தை பாக்கியம் இல்லை என்றும் கூறினார். ஒருமணி நேரம் கழித்து கடை உரிமையாளரின் மகனும், மருமகளும் கோயிலுக்கு வர இருப்பதாகவும் கூறினார். அவர் சொன்ன படியே இருவரும் கோயிலுக்கு வந்தார்கள். அப்போது என் வசம் தேவாரத்திரட்டு என்னும் நூல் இருந்தது. அதில் குழந்தை வரம் பெறுபவர்கள் திருவெண்காட்டுப் பதிகம் படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஞானசம்மந்தர் பாடிய பதிகம் ஆகும். ‘‘கண்காட்டு நுதலானுங் கனல் காட்டும் கையானுங்’’ என்று தொடங்கும் பதிகம். இந்த நூலை அவர்களிடம் கொடுத்து 48 நாட்கள் காலை வேளையில் படிக்கச் சொன்னேன். அவர்களும் படிப்பதாக சொல்லி நூலை வாங்கி சென்றார்கள். நான் பூஜை முடிந்து பிறகு சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்னைக்குத் திரும்பினேன். 2002ம் ஆண்டு மறுமுறையும் சிவராத்திரிக்கு சென்னையிலிருந்து திருவாரூர் வந்தேன். திருவாரூர் ஜவுளிக் கடைக்கு சென்று கடை உரிமையாளரின் மகனைப் பார்த்து இன்று சிவராத்திரி கோயிலுக்கு வருவீர்களா என்று கேட்டேன். அதற்கு நான் மட்டும்தான் வருவேன் என்றும், எனது மனைவிக்கு குழந்தை பிறந்த 15 நாட்கள் ஆகிறது என்று சொன்னார். இதை கேட்டதும் சிவபெருமானின் கருணையையும் திருமுறையின் ஆற்றலையும் நினைத்து நெகிழ்ந்து போனேன்.
- கே. கணேசன், திருச்சி.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்