SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளியன்று நீத்தார் கடனை நிறைவேற்றும் பெருமாள்

2020-11-09@ 10:08:14

சார்ங்கபாணி கோயில், கும்பகோணம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்த ராஜகோபுரத்தை கட்டியவனுக்காக ஆரவாமுதன் வேறொரு கடனை நிறைவேற்றினான். அது என்ன கடனென்று ராஜகோபுரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த கோயிலில் பணியாற்றும் பட்டாச்சார்யாரிடம் கேட்டபோது கண்களை மூடிக் கொண்டார். கோபுரத்து மாடங்களில் புறாக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தன. மெல்ல சிரித்து சொல்லத் தொடங்கினார். ‘‘ஆரவாமுதன். உச்சரிக்கும் போதே உள்ளத்தில் அமுதூறும் அழகான திருப்பெயர். ஆதலாலே ‘‘ஆரா அமுதன் எனும் நாமமே இப்படி மயக்குவிக்கிறதே. தொண்டையில் சிக்கிக் கொண்ட பிரதிமையைப்போல் எனக்குள் மையம் கொண்டாயோ’’ என ஆழ்வார்கள் உன்மத்த அவஸ்தையில் திளைத்த திவ்யதேசமே, கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் கோயில்.  
எல்லோரும் தீபாவளியன்று பெருமாளை கொண்டாடுவர். நரகாசுரனை வதம் செய்த நாளன்று நரக சதுர்த்தி என மாலவனாம் கிருஷ்ணனை ஆராதிப்பர். ஆனால், கும்பகோணம் சார்ங்கபாணி எனும் ஆராவமுதன் தானே மகனாய், தந்தையாய், பரம்பரையில் ஒருவனாக அமர்ந்து சிராத்தம் எனும் திதி செய்தான். அதுவும் ஊர் கூடி தீபாவளியில் களித்திருக்க உள்ளம் கனிந்து ஒரு அடியவனுக்காக திவச அன்னம் கொடுத்து ஆற்றுப்படுத்தினான், ஆரவாமுதன். அது யதேச்சையாக ஐப்பசியும், தீபாவளியும், அமாவாசையும் ஒன்றாக சங்கமிக்கும் நாளில் நிகழ்ந்தது.அது நாயக்கர்களின் காலம். தென் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். காஞ்சிக்கும், வந்தவாசிக்கும் அருகேயுள்ள நாவல்பாக்கம் எனும் தலத்தில்  அய்யா குமாரதாதா தேசிகன் எனும் மகான் வளர்ந்து கொண்டிருந்தார். முக்காலமும் வேதத்தை ஓதினார். கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுத்தார். வேள்விகள் செய்து நாட்டின் வளத்தை பெருக்கினார். ஞானத் தாகத்தோடு அருகே நின்றவர்களுக்கு பாசுரங்களையே தீர்த்தமாகக் கொடுத்தார். தாகம் தணிந்து சாந்தமுற்றோர்களை நாலா திக்கும் அனுப்பினார். வைகுந்தனின் வாசத்தை விண்ணுலகம் வரை பரப்புங்கள் என பயணிக்க பாதை காட்டினார்.   

அச்சுதப்ப நாயக்கர் இவரின் அருட்பெருமையை அறிந்தார். ‘‘உங்களின் திருவடி என்றும் என் சிரசில்’’ என பணிந்து வணங்கினான். எங்களின் எல்லா தலைமுறைக்கும் தாங்களே குருவாக இருத்தல் வேண்டும் என வேண்டினான். ‘‘திருமலை பெருமாளின் சித்தம் அதுவெனில் ஏற்கிறேன்’’ என ஆசி கூறினார். ஞான ஊற்றொன்று மெல்ல பொங்கியது. அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என மூன்று தலைமுறையையும் அருளால் நனைத்தது.பாத்திரா பாத்திரம் பார்க்காது நிறைக்கும் அட்சய பாத்திரம் எங்கோ குருவருளை வேண்டி ஒரு ஜீவன் நிற்பதை அகக் கண்ணில் கண்டது. அதுவும் இவர் வருவாரா என காத்துக் கிடந்தது. குடந்தை சார்ங்கபாணி கோயில் வாயிலில் ஒரு பக்தன் கண்களில் நீர் துளிர்க்க வானம் பார்த்துக் கொண்டிருந்தான். முழங்கால் அளவு வேட்டி. இடுப்பில் ஒரு துண்டு. கட்டுக் குடுமியும், நெற்றி நிறைய திருமண்ணோடும் நின்றிருந்தான்.  ‘‘என்னடா பார்க்கற. யாராவது மேல போறாளா’’ விஷமமாக சில இளைஞர்கள் லஷ்மி நாராயணன் எனும் அந்த பிரம்மச்சாரியை சீண்டினார்கள்.‘‘ஆமா... என்னிக்காவது ஒருநாள் வானம் முட்டற கோபுரம் பெருமாளுக்கு எப்போ வரும்னும் பார்க்கறேன். ராஜா மட்டும் மாளிகைல உசரமா இருக்கார். நம்ம சாரங்க ராஜாக்கு மட்டும் மொட்டை கோபுரமா. வரட்டும் கேட்கறேன்.’’ விளக்கம் சொன்னான்.

‘‘ சரி.. சரி... உனக்கொரு இடத்தை பார்த்துக்கோ. அப்புறம் பெருமாளுக்கு திருமாளிகை... கோபுரம்னு கட்டுவ.’’ அலுப்போடு ஒருவன் அலட்சியம் செய்தான்.
‘‘கட்டிக்கவே துணியில்லை. இதுல கோபுரம் கட்டுவானா இவன்’’ தெருவோடு போகிறவன் சொன்னான்.அவன் காதில் விழவில்லை. கேட்கக் கூடாது என்று காதுக்கு உத்தரவிட்டிருந்தான். அமுதனின் புகழல்லாது வேறொன்றையும் என் காதில் போடாதே என்று பெருமாளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.  அய்யா குமாரதாதா தேசிகன் எப்போது வருவார் என்று மட்டும் எல்லோரிடமும் விசாரிப்பான். ‘‘வாசல்லயே நின்னுண்டேயிரு. வந்துடுவார்’’ என்று விஷமமாக ஒரு கிழவர் சொன்னார்.தினமும் பல மணிநேரம் காத்துக் கிடப்பான். நாளை வந்துவிடுவார் என தனக்குள் தேற்றிக் கொள்வான். இப்போதும் அதுபோன்று காத்திருந்தான். ஆரவாமுதா... சாரங்கராஜா.. என்று தொலைதூரத்தினின்று குழுவாக பாடிக் கொண்டு வரும் நாதம் காற்றில் வந்தது. மெல்ல திரும்பினான். ஆனந்த அதிர்ச்சியில் தன் வயமிழந்தான். ஆஹா... சீடனை காத்திருக்க வைக்க வேண்டாமே என அந்த ஞானகுருவும் இவனைக் காணும் ஆவலில் நெருங்கி வந்தது. காலமும், தேசமும் சம்பமந்தமில்லாத அந்த குரு சீடனின் உறவு ஜென்மாந்திர விஷயம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவனை நெருங்கினார்.

செந்தாமரை போன்று மலர்ந்திருந்த அந்த திருமுகத்தை கண்டவன் தழுதழுத்தான். ஏன் நான் உங்களையே நினைத்தேன் என்று புரியாத உணர்வு அவன் முகத்தில் படர்ந்தது. இதற்கெல்லாம் எனக்கு ஏதேனும் தகுதி உள்ளதா என உடல் விதிர்த்துப் போட்டது. இரண்டடி நடுக்கத்தோடே கைகளைக் கட்டிக் கொண்டு தள்ளி நின்றான். ஞான சூரியன் விடாது உள் வரை ஊடுருவியது. உயிரை உரசியது. நெடுமரம் தானாக விழுவதைபோல அவர் திருவடியில் தடேரென்று விழுந்தான். பாத தூளியை சிரசில் ஏற்றான். தலைதூக்கி வானம் பார்க்க, சிரித்துக் கொண்டே மகான் நகர்ந்தார். வயதான சிங்கமொன்று கம்பீரம் குறையாது நடப்பது போன்றிருந்தது அவர் நடந்துபோவது.முதல் தரிசனம் லஷ்மி நாராயணனை முற்றிலும் மாற்றியிருந்தது. முன்னிலும் அதீத தெளிவும், அமைதியும் அவனுக்குள் குடி கொண்டிருந்தது. அவருக்கு அருகேயே சென்று கைங்கர்யங்களை செய்யும் பாக்கியத்தை பெற்றான். உள்ளுக்குள் கனிந்தான். வெகுநாட்களாக மனதுள் இருந்த தனது வேட்கையை வெளிவிட்டான். இடுப்பில் அங்கவஸ்திரத்தைக் கட்டிக் கொண்டு வினயமாக வாய்பொத்தி குனிந்து அவரிடம் பேசத் தொடங்கினான்.

‘‘தேவரீர்...  எனக்கு மாதா, பிதா எல்லாமும் ஆரவாமுதன்தான். நான் நினைவு தெரியாத நாள்லயே கும்பகோணத்துக்கு பெருமாள் அழைச்சுண்டதா சொல்றா. என் அம்மா, அப்பாக்கு ஒரு மாளிகை கட்டித் தருவேனோல்லியோ. அது மாதிரி எனக்கு எல்லாமுமா இருக்கற பெருமாளுக்கு ராஜகோபுரம் கட்டித்தரணும்ங்கிற ஆசை இருக்கு. பெருமாள்கிட்ட விண்ணப்பித்திண்டிருக்கேன். தேவரீரும் அருள் செய்யணும்’’ என்று அழுதான். வேறெதுவும் பேசத் தோன்றாது நமஸ்கரித்து நிமிர்ந்தான்.‘‘நான் போய் சொல்றேன். அவனும் உனக்கு எல்லாம் செய்வான். உனக்குப் பிறகும் உனக்காக செய்வான்’’ என்று அவன் பேசிய மொழியிலேயே பதிலுரைத்தார். ஆனந்தமாக சென்றான். இரண்டொரு நாளில் ஆராத துயர செய்தியொன்று இடியாக அவனுக்குள் இறங்கியது. தனது ஆச்சார்யனான அய்யா குமாரதாதா தேசிகன் வைகுந்தத்திற்கு ஏகிவிட்டார் என்பதே அது. திருவுடலை தரிசிக்கக்கூட மனதில் பலமில்லாது தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.பிரம்ம மேத சம்ஸ்காரங்கள் எனப்படும் மாபெரும் ரிஷிக்குரிய ஒரு மரியாதையுடன் நாயக்க மன்னர்கள் சூழ திருவுடலுக்குரிய கிரியைகள் செய்தனர். பத்து நாட்களும் விதம் விதமான தானங்களை விஜயராகவ நாயக்கர் அளித்தார். பதினோராவது நாள் விடியற்காலை இருளில் கோயிலின் ஒரு மூலையிலிருந்து விசும்பல் சத்தம் வெளிப்பட்டது. ஒரு தூணோரம் லஷ்மி நாராயணன் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
‘சார்ங்கா... இப்போது என்னவர்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த ஆச்சார்யன் இல்லை. குருநாதர் நான் சென்ற பிறகு என்று அன்று கூறினாரே. இந்த மூடனுக்கு புரியவில்லையே’ என கோயில் தூணில் சாய்ந்தபடி கண்மூடி கிடந்தான்.

‘‘குடந்தையிலுள்ளோர் லஷ்மி நாராயணன் என்ன பண்ணப் போறான்’’ என்ற அளவுக்கு குருவாகவும், சிஷ்யராகவும் பேசினார்கள். அந்த அளவு குருவை நெஞ்சு முழுதும் நினைத்துச் சுமந்தான். அவர் பரமபதம் பதித்த பதினோராவது நாள் சூரியன் குருவின் கிருபை எனும் கிரணங்களை சுமந்து வியாபித்தான். நாயக்க மன்னன் பரிவாரங்களோடு வந்தான். ஒரு வயதான அந்தணர் லஷ்மி நாராயணனை சுட்டிக்காட்டி பேசினார். மன்னன் ஆச்சரியத்தில் விழி விரித்தார்.விஜயராகவ நாயக்கர் லஷ்மி நாராயணனுக்கு அருகே சென்றார். அவனின் தோள் தொட்டு ‘‘என்ன பாக்கியம் செய்திருக்கிறாய். உன்னிடம் நிறைய பேசியிருப்பாரே. உன்னிடம் என்ன கேட்டார்.’’‘‘அவருக்கென்று கேட்க எதுவுமில்லாத நிலையில் இருந்தார். ஏதேனும் வேண்டுமெனில் நாம்தான் கேட்க வேண்டும். நான் கேட்டேன் மன்னா...’’
‘‘என்ன கேட்டாய்’’ தன்னையேகூட கொடுக்கும் அளவுக்கு அருகே சென்றார்.‘‘ராஜகோபுரம் கட்டித் தர அருள் புரியவேணும் என வேண்டிக் கொண்டிருந்தேன்’’.நாயக்கருக்கு ‘சுருக்’ என்றிருந்தது. நான் செய்ய வேண்டியதை இவன் ஆசைப்பட்டிருக்கிறானே. ஆழ யோசித்தபடி குனிந்திருந்த மன்னர் நிமிர்ந்தார். கண்களில் குளமாக நீர் தேங்கி நின்றது. நாராயணா... என விளித்தார். கண்ணீர் கன்னம் வழிந்தது.

‘‘நீயே வானம் தொடும் அளவுக்கு கோபுரம் கட்டு. இந்தா... என சகல தானங்களையும், பொற்கட்டியுமாக கொடுத்தான். குருவருளும், குடந்தை ஆரவாமுதனின்  அருளும் சேர்ந்து கொட்டியது. கோபுரமாக உயர்ந்தது. பதினோராவது நாள் கிரியையான ஏகோதிஷ்டகம் என்றழைக்கப்படும் நாளன்று கொடுக்கப்பட்ட தானத்தால் நிமிர்ந்த ராஜகோபுரமாக இருந்ததால் பதினோரு நிலைகள் இடம் பெற்றிருந்தன.
லஷ்மி நாராயணர் வயோதிகரானார். சார்ங்கணின் கைங்கர்யத்தில் இளைஞனைப்போல இருந்தார்.  குடந்தை மக்கள் தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தூணோரமாக அமர்ந்தார். கண் மூடினார். காம்பினின்று உதிரும் மலர்போல உயிர் தனியே பிரிந்தது. ஊர் மக்கள் தகனக் கிரியைகளை செய்தனர். திதி எப்படி கொடுப்பது என்று யோசித்தனர். அப்படியே மறந்தும் போயினர். ஆனால், சார்ங்கபாணி எழுந்து அமர்ந்தான்.

ஆத்ம சக்தியாக சூட்சுமத்திற்குள் உறைந்திருந்த உயிர் திரட்சியை கண்டார். அது சரியாக பயணித்து அதற்குரிய உலகத்திற்குள் செல்ல வேண்டுமே என சாத்திரப் பார்வையில் பார்த்தார். மனித உருவில் கோயிலில் அமர்ந்தார். கைகளில் தர்ப்பைப்புல் ஏந்தி, பஞ்சபாத்திர உத்தரணியில் தீர்த்தமும், எள்ளும் எடுத்துக் கொடுத்து திவச அன்னங்கள் சமைத்து பிண்டம் வைத்து திதி கொடுத்தார். இவை யாவும் எவரும் கவனியாமலேயே நிகழ்ந்தன. மறுநாள் கோயிலின் கருவறையை திறந்த பட்டாச்சார்யார் அதிர்ச்சியடைந்தார். உற்சவ மூர்த்தியான பெருமாள் ஈர வஸ்திரத்துடன், அபர காரியங்களின் போது பூணுலை வலமிருந்து இடம் அணிவது போல அணிந்து, ஆங்காங்கு தர்ப்பைப்புல்லும், எள்ளும் இறைந்திருந்தன. ஆபரணங்கள் எல்லாமும் சிதறிக்கிடந்தது. ஒரு திதி செய்தவர்களுடைய முகம் எந்த அலங்காரமுமில்லாமல் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. பட்டாச்சார்யார் மயங்கினார். சுற்றியுள்ளோர் உடல் விதிர்த்தபடி நடுங்கி நின்றனர். அசரீரி ஒலித்தது.
‘‘லட்சுமி நாராயணான என் பக்தனுக்கு இனி நானே வருடா வருடா திதி கொடுப்பேன். சிராத்தம்  செய்து வைப்பேன். திவச அன்னங்கள் கொடுத்து பசியாறச் செய்வேன். ஒவ்வொரு ஐப்பசி அமாவாசையன்றும் இது போன்று நிகழும்’’ என்றார். தொடர்ந்து இதை செய்ய வேண்டுமென அருளாணையிட்டார்.

நீத்தாருக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லையென எண்ண வேண்டாம். என் பக்தன் என்னோடு நெருங்கிய ஸ்நேகம் கொண்டவன். பூவுலகை விட்டு மறைந்தாலும், வைகுந்தம் வரையில் அவனைதாங்கிச் செல்வேன் என உறுதியோடு சொன்ன தலம் குடந்தை. சகலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பெருமாளின் கருணையை நினைத்து உருகினர். இன்றும் தீபாவளி அமாவாசையன்றும், ஐப்பசி மாதம் அமாவாசை இணைந்து வரும் திதியில் சார்ங்கபாணி பெருமாள் சிராத்தம் கொடுக்கிறார். கோயிலுக்குள்ளேயே கோமளவல்லித் தாயார் சந்நதிக்கு எதிரேயே குமாரதாதா தேசிகன் தனிச் சந்நதியில் குடி கொண்டிருக்கிறார்’’ என்று உணர்ச்சி பாவத்தோடு கண்களில் நீர் துளிர்க்க சொல்ல, ராஜகோபுரத்துப் புறாக்கள் ஜிவ்வென்று கூட்டமாக சிறகடித்து மேலே கிளம்பியது.  
திதி கொடுக்கப்படும் தேசிகர் சந்நதிற்கு அழைத்துச் சென்றார்.‘‘இங்கதான் திதி கொடுக்கறது வழக்கம். இப்போ நினைச்சாலும் அந்த சரித்ரம் உள்ளத்தை உருக்கும். பாராயணத்திற்குரிய ஒரு சரித்ரம்னுதான் நினைக்கிறேன். ஏன்னா... கேட்கறச்சேயே பக்தி திடப்படறது. அந்த காலத்துல இதை கதையா சொல்றச்சே கதறி அழுதவா உண்டு. பெருமாளுக்கு சிராத்தம் செய்யறச்சே யாரும் பார்க்க முடியாது. கோயிலையே சாத்திடுவோம். நாங்க மட்டும் மூணு நாலு பிராமணர்களா தேசிகன் சந்நதிகிட்ட உட்கார்ந்துண்டு பண்ணுவோம். பெருமாள் நாமத்தை மட்டும் சொல்லி சிராத்தம் செய்வோம். திவச சாப்பாடுதான் அன்னிக்கு வைப்போம். சாதாரண மனுஷாளுக்கு சொல்ற மந்த்ரங்கள் கிடையாது. ஏன்னா... பண்றவரே பெருமாளா இருக்கறச்சே அவர் திருநாமம்தான் முக்கியம். எல்லாத்தையும் முடிச்சுட்டு கோயிலை திறப்போம். கிட்டத்தட்ட நானூத்தி அம்பது வருஷத்துக்கும் மேல இது நடந்துண்டு வரது. சிராத்தத்தை தான் பண்றேங்கற விஷயத்தை தவிர, எங்கேயோ இருந்த பிஞ்சு பக்தனுக்காக, அதையும் தாண்டி குருவை பிடிச்சுண்டா போதும் என்னை அடைஞ்சுடலாம்கறதைதான் இந்த கதை சொல்றது’’ என முத்தாய்ப்போடு முடித்தபோது தேசிகர் சந்நதியில் காய்ந்திருந்த தர்ப்பைப் புல்லிலும் பச்சை வாசனை கூடித்தான் இருந்தது.

வெ. கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-02-2021

  28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-02-2021

  27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-02-2021

  26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • modipuudddhh

  புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

 • maaaaaaaaa

  பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்