SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழியாமுக்தி

2020-11-05@ 16:48:27

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் -69

வாழும்படி  ஒன்று கண்டு கொண்டேன்  மனத்தே  ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை  நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

பாடல் எண்  - 47


இப்பாடல் ஒரு மின்னஞ்சல் [Email] முகவரியைப் போன்றது. அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் வரியும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றாலும், அல்லது முன் பின்னாக மாற்றிப் புரிந்துகொண்டாலும் அது சரியான புரிதலைத் தரலாகாது. சுகத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் துக்கத்தை விலக்கிக் கொள்வதற்காகவும், அறிவை அடைவதற்காகவும் உடலைப் பெறுவது எதுவோ அது ஆன்மா.

உடலானது ஐந்து வகை காரணங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அந்த உடலானது இறைவியின் ஆணையின் பேரில் ஏவலர்களாகிய பரிவார தேவதைகளால் வழங்கப்படுகிறது.உடல் எடுத்து அதை பயன்படுத்திய ஆன்மாக்கள் அடையும் பக்குவம் சார்ந்து மீண்டும் உடல், உலகம் தேர்வு செய்யப்படுகிறது. உடல் எடுத்தஆன்மா  ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐவகை மலங்களை பெற்றதனால் ‘‘கயவர்’’ என்ற நிலைக்கு வந்து பாழ்நரகக் குழியில் சென்று அழுந்தும். இதையே பாழ்நரக்குழிக்கே - 79 என்கிறார்.

ஆன்மாக்கள் ஆணவம், கன்மம், மாயை மாயேயம் என்ற நான்கு மலம் பெற்றபோது மனிதராக இப்பூவுலகத்தை அடையும் இதையே. மனிதரும் - 4 என்கிறார். ஆன்மாக்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலம் உள்ள ஆவிநிலையில் யாதனா சரீரம் பெற்று பித்ரு உலகத்தை அடையும்.ஆன்மாக்கள் ஆணவம், கன்மம் என்ற இரண்டு மலத்தை பெற்ற நிலையில் தேவராகி சொர்க்க லோகத்தை அடைவர். ஆன்மாக்கள் ஆணவ மலத்தை பெற்ற நிலையில் மாயா முனிவராகி இருந்த இடத்திலேயே அழியாத் தன்மையை பெறுவர். இதையே அழியாமுத்தி வீடும் அன்றோ - 15 என்கிறார்.

ஆன்மாக்கள் ஐந்து மலங்களும் நீங்கிய நிலையில் இறைவியோடு இரண்டறக்
கலப்பதையே ‘‘ஆனந்தமாய் என் அறிவாய்’’- 11 என்கிறார்.

இந்த கருத்துக்களை மனதில் கொண்டுஅபிராமி பட்டர் ஆன்மாவை பற்றி வரையறுப்பதே இந்தப் பாடல்ஆத்ம  ஞானம் , பசு ஞானம், பெறுவதைத் தவிர ஆன்மாக்கள் உய்வு அடைவதற்கு  வேறு வழியில்லை.உய்வடைய செய்வதற்கு  உமையன்றி வேறு கதியில்லை. உய்வடைவதற்கு நாம் செய்ய வேண்டியது பூசனையன்றி  வேறு  செயலில்லை.அந்த பூசனையை முறையாக செய்வதற்கு ஞானத்தைத் தரும் குருவன்றி வழிகாட்டுவோர் இல்லை. பெற வேண்டியது உமையம்மையின் அருள் அனுபவமின்றி ஆன்மா அடையவேண்டியது வேறில்லை. இந்த நிலைகளைப் பற்றிய விளக்கங்கள் சார்ந்தே இப்பாடலின் கருத்து அமைகின்றது.

ஆன்மாவைப் பற்றிய விளக்கமன்றி இப்பாடல் வரிகள் கடினமானதாலேயே இத்தகைய விரிவான முன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இனி பாடலுக்குள் செல்வோம்.

‘‘வாழும்படி’’ உடம்புக்கும், உயிருக்கும் உண்டானஉறவையே வாழ்கை என்றும், உடம்புக்கும், உயிருக்கும் உண்டான உறவு அற்றுப் போகின்ற போது மரணம் என்றும் கூறுவர். இதையே பட்டர்.உடம்போடு உயிர் உறவு அற்று அறிவுமறக்கும் - 89 என்கிறார்.

இந்த பொருளில் அவர் வாழ்கையைக் குறிப்பிடவில்லை. துன்பமில்லாது இருத்தல், சுகத்தை அனுபவித்தல் , ‘‘ஒரு துன்பமில்லாத வாழ்வும்’’ - அபிராமி பதிகம் - 2  என்று விரும்பிய வாழ்வைவேண்டுகிறார்.

அது என்ன என்பதை அறத்தின் வழி நின்று வரையறுக்கின்றார். பதினாறு பேறும் பெற்று வாழ்வதையே வாழ்க்கை என்கிறார்.

அகிலமதில் நோயின்மை  கல்வி, தனம், தானியம் அழகு, புகழ், பெருமை, இளமைஅறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி ஆகு நல்லூழ்  நுகர்ச்சிதொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ

சுகானந்த வாழ்வளிப்பாய்  (பதிகம் - 22)

இத்தகைய வாழ்க்கையைத்தான் வாழ விரும்புவதையே வாழும்படி என்று சொன்னார். வாழ்க்கையைப் பற்றியும் தான் அடைந்த துன்பத்தைப் பற்றியும் சில இடங்களில் கூறுகின்றார். பிறரிடம் கையேந்தி நிற்க பட்டர் விரும்பவில்லை என்பதை ‘‘இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற் சென்று இழிவுபட்டு நில்லாமை’’ - 54 அதே சமயத்தில் மிகுந்த ஆசைப்பட்டு அல்லற்படவும் விரும்பவில்லை என்பதை, ‘‘ஆசைக்  கடலுள் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் கை பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’’ - 32 என்றும் பாவ புண்ணிய கருமத்தின் வழி மீண்டும்இப்பூவுலகத்தில் பிறக்கவும் விரும்பவில்லை.

பின்னும் எய்துவரோ குடரும் கொழவும் குருதியும் தோயும் குரம்பையிலே - 48
என தான் விரும்பாத வாழ்க்கையையும் விரும்பிய வாழ்க்கையையும் அவரே பதிவு செய்கிறார்.‘‘ஒன்று’’ இப்பாடலை பொறுத்தவரை ‘‘ஒன்று’’ என்ற வார்தையை அபிராமி பட்டர் ஏழு பொருள்களில் பயன்படுத்தியுள்ளார். அவை அனைத்தையும் அறிவது இந்த சொல்லின் நுட்பத்தை அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொன்றாய் இனி . . .  உமையம்மை ஒருத்தியை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை என்ற எண்ணத்தை குறிப்பிடுகின்றார். இதையே ‘‘வணங்கேன் ஒருவரை’’- 81 இதை விஜாதிய பேதம் என்கிறது சாத்திரம்.

வேறு தெய்வம் என்பது உமையம்மையை தவிர மற்றவர்களை ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தங்கோன் போதில் பிரமன், புராரி, முராரி பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன். . . 97 சூட்டுகின்றார்.  உமையம்மை பல வடிவங்களை கொண்டிருந்தார் . அவளின் அனைத்து வடிவங்களையும் வணங்குவதில்லை. ஒன்றாக திகழ்கிற ஒப்பற்ற உமையம்மையை மட்டுமே ‘‘ஒன்றே’’ என்ற பதத்தில் குறிப்பிடுகின்றார். இது திருக்கடையூரில் உள்ள உமையம்மையை மட்டுமே குறிப்பதாகும். பதிகத்தில் ஆதிக் கடவூரின் வாழ்வே என்பதனாலும் அறியலாம். இதை சஜாதிய பேதம் என்கிறது சாத்திரம்.

‘‘பயிரவி , பஞ்சமி, பாசாங்குசை’’ - 76 என்பதிலிருந்து பிரித்து உமையம்மையை மட்டுமே வணங்குகிறார். உமையம்மையை தான் வழி படுவது என்பது அவள் அருள் ஒன்றால் மட்டுமே, தன் முயற்சியாலோ தியானம், ஜெபம் போன்ற சாதனங்களாலோ, ஆலயத்திலே பணி செய்வதனாலோ, இன்ன பிற  காரணங்களாலோ அல்ல என்பதை வலியுறுத்துகின்றார். இதையே ‘‘எங்கட்டு ஒரு தவம் எய்தியவர்’’- 35 என்பதனால் அறியலாம்.

அபிராமி அம்மையின் அருளை முழுவதும் தான் அறிந்து, உணர்ந்து, அனுபவத்தில் பெற்றதால் அனைத்தையும் அடைந்ததால், இனி அடைய வேண்டியது ஒன்றும் இல்லாததால், அவர் தன்நிறைவு பெற்றதால் வேறு தெய்வங்களிடம் கையேந்தி நிற்க வேண்டியதில்லை என்பதை ‘‘இனியொரு தெய்வம் முண்டாக மெய் தொண்டு செய்தே’’ - 44 என்கிறார்.

உமையம்மையே அனைத்து வடிவத்திலும் இருக்கிறாள் என்பதை ‘‘பார்க்கும் திசைதோறும் பனிசிறை வண்டும் ஆர்க்கும் புது மலர் ஐந்தும்’’- 85 என்கிறார்.வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உமையம்மையை வழிபாடு செய்வது எனக்கு தெரிந்த ஒன்றாகும். பிற வகையில் என் தேவையை பூர்த்தி செய்யும் வழிகளை அறியேன் என்பதை பட்டர், வல்லபம்  ஒன்றறியேன் - 66, நான் அறிவது ஒன்றேயும் இல்லை - 95 வழிபாடு செய்வதனால் நன்மைகளை நான் சிறப்பாக அடையாது இருந்தாலும், வாழ்வில் எந்த தீங்குமின்றி பாதுகாப்பாக வாழ்கிறேன் என்பதை ‘‘ஒரு தீங்கில்லையே’’ - 101 என்கிறார்.

ஒன்றாக இருப்பவளும், எங்களுக்கு வழிபடும் வாய்ப்பளித்தவளும், பிறரிடம் சென்று வேண்டும் படி  இல்லாது எங்களுக்கு எல்லாவற்றையும் வழங்கியவளும் உமையம்மை ஒருத்தியே. அவளை அடைய எனக்கு தெரிந்த தீங்கில்லாத வழி ‘‘ஒன்று’’ தான் வழிபாடு என்பதை நமக்கு சூட்டுகிறார். ‘‘கண்டு’’ உபாசனையின் மூலம் அகத்திலே இறைவியை எளிதில் கண்டுகொள்ளலாம். புறத்தில் காண்பது அரிதிலும் அரிது என்கிறது. ஸஹஸ்ரநாமம் அந்தர்முக - ஸமாராத்யா பஹிர்முக - ஸூதுர்லபா . இதை ‘‘காணுதற்கண்ணியள்’’ 40 என்பதனால் அறியலாம்பட்டர்.

அரிதிலும் அரிதாகிய உமையம்மையை புறத்தில் தாம் கண்டுகொண்டதாக ‘‘கண்டு’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். அப்படி கண்டதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ‘‘கண்களிக்கும்படி கண்டுகொண்டேன்’’- 70 என்கிறார்.வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தேன் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை - 19‘‘கண்டு’’ என்ற வார்த்தையால் அறிந்து, உணர்ந்து அனுபவித்து, செயல்படுவது என்கிற பொருளில் ஆச்சார, அனுஷ்டான, சம்ஸ்காரம் போன்றவற்றை குறிப்பிடுகின்றார். இதை ‘‘கண்டு செய்தால்’’- 45 என்பதனால் அறியலாம்.

கண் குறைபாடு உடையவர்களாலும் காண இயலாது. காணுதற்கு கண்ணியல் அல்லாத - 40, கண்ணுக்கு காண இயலாது - படர் விசும்பும் - 68 கண்கள் சரிவர இருந்தாலும் புறத்தில் இருள் இருந்தால் காண இயலாது ‘‘இருளேதுமின்றி’’- 36 மொழி அறிவிலாதார் அந்த எழுத்துக்களை கண்ட போதும் அதன் பொருள்காண, இயலாது அறிவொன்றிலேன் - 81 இவைகளை தாண்டி அன்பு, காதல், அறிவு போன்ற உணர்வுகளையும் காண இயலாது - உணர்வுடையோர் - 1

இவ்வத்துணை பண்புகளும் சரிவர அமைந்தாலும் காண இயலாதவள் உமையம்மை, அப்படிப்பட்ட உமையம்மையை அகத்திலும், புறத்திலும் கண்டு மகிழ்ந்ததனால் ‘‘கண்டு’’ என்று குறிப்பிடுகின்றார்.தன் இயலாமையை சட்டி, தன் துன்பத்தை போக்கி கொள்வதற்கு, மகிழ்சியாக வாழ்வதற்கு, தன் உடைமையெல்லாம் ஒருவரிடத்து ஒப்படைத்து அவரிடம் கையேந்தி நிற்கின்ற பண்பை தஞ்சம் என்பர்.  அப்படி ஒப்படைப்பவர் தஞ்சமடைபவர். யாரிடம் ஒப்படைக்கின்றாரோ அவரை தஞ்சமளிப்பவர் என்று குறிப்பிடுவர்.

அதுபோல் அரசர்கள் வேறு அரசர்களிடமும் குடிமக்கள் அரசரிடமும், குருவினிடத்து சிஷ்யனும் தஞ்சமடைவர். அபிராமி பட்டரோ அபிராமியிடத்து தஞ்சமடைகின்றார். தஞ்சமடைவதற்கு வேறு ஒருவர் இல்லை என்பதை ‘‘கண்டிலேன்’- 58 என்கிறார். ஒருமுறை உமையம்மையை ‘‘கண்டு’’ தரிசித்த அனுபவமானது வாழ்நாள் மறையும் வரை தொடர்ந்து மனதில் மறவாமல் நின்று மகிழ்ச்சியளிக்கும் என்பதையே கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா - 80 என்பதனால் அறியலாம்.

‘‘கொண்டேன்’’ என்ற சொல் இறை அருள் அனுபவத்தை அடைந்ததைக் குறிக்கும். பொதுவாக உலகியல் பொருட்களை நாம் அனுபவிப்பதற்கு உடலில் ஆரோக்கியமும், எது அனுபவப் பொருளோ அது பற்றிய மனதின் பதிவும், கைவரப் பெற்ற தன்மையும், இந்த மூன்றையும் பொருத்துகிற செயல். [ தனு - உடல், உள்ளம், புவன - பொருள்] அனுபவம். (போகம்) எனப்படுகிறது. உதாரணமாக மாம்பழ சுவையை அறிவதற்கு முதலில் மாம்பழம் வேண்டும். அதை புசிப்பதற்கான மனநிலை, மாம்பழத்தை உண்பதற்கான ஆரோக்யம் இது மூன்றையும் ஒருங்கினைக்கின்ற உண்ணுதலாகிற செயல் நடைபெறும் போது அறிந்து, அடைந்து அதன் சுவையை அனுபவிக்க இயலும்.

இதில் மாம்பழம் இல்லை என்றாலும், மனநிலை இல்லை என்றாலும், ஆரோக்கியமான உடல்நிலை இல்லை என்றாலும், அந்த அனுபவத்தை அடைதல் என்பது இயலாது.ஆனால் அபிராமி பட்டரோ‘‘ மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத’’87 உமையை எந்த ஒன்றினாலும் பற்றி அடைய முடியாததை தான் ‘‘கொண்டேன்’’ என்கிறார். தான் அறிந்து அனுபவித்தேன் என்கிறார்.இது உமையம்மையின் அருளினால் மட்டுமே அபிராமி பட்டருக்கு சாத்தியப்பட்டது. இது தனிப்பட்ட முயற்சியாலும் உமையம்மையின் அருளினாலும் என்கிறார். அது என்ன என்பதை அடுத்தவரியில் சொல்கிறார்.

‘‘மனத்தே ஒருவர் வீழழும் படி அன்று’’முயற்சி தோல்வி அடைகின்ற போது தளர்ந்து விடுகின்றோம். இறையருளை அடையும் முயற்சியாதென்று தெரியவில்லை, இப்படிப்பட்ட நிலையில் சில முயற்சிகளை செய்தாலும் உதாரணமாய் - ‘‘தோத்திரம் செய்வது . . . தொழுவது - 67 போன்ற முயற்சியை செய்தாலும் அதில் சொன்னபடி முழுப்பயனையும் அடைய இயலவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அருள் தேடும் முயற்சியானது வீழ்ச்சியடைகிறது.

ஆனால் அபிராமி பட்டரோ அவ்வாறு வீழ்ச்சி அடையாமல் கண்டிப்பாக பலனைத் தரும் என்கிறார். அதை தானே நிரூபித்தும் காட்டியுள்ளார். என மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன் அருள் - 36.அதனால் உமையம்மையின் அருளினாலேயன்றி வேறு வகையில் அடைதல் என்பது இயலாது. அவள் அருள் இருந்தால் வேறு எந்த முயற்சியும் தேவையில்லை என்பதை ‘‘மனத்தே ஒருவர் வீழும்படி அன்று’’ என்கிறார்.
‘‘வில்லும் படி அன்று ’’ என்று சொல்லிற்கு சொல்லொணாதது என்பது பொருள்.

அபிராமி தனக்கு அருளியதையோ, அதன் வழி தான் பெற்ற நன்மையையோ, தீங்கில்லாமல் இருத்தலையே உமையம்மை தனக்கு காட்சி கொடுத்ததையோ எக்காலத்தும், யாரிடத்திலும் கேட்டதுமில்லை, சொன்னதுமில்லை.அவரின் ஆச்சார, அனுட்டானம் இவற்றை பின்பற்றுவது, தனியான வகையில் வழிபாடு நடத்துவது இவற்றை பிறர் கண்டு அவர்கள் சொல்லும் விமர்சனத்தில் தன்னை மாற்றிக் கொள்ளவோ, தான் வருத்தப்படவோ, புகழ்ந்த போது மகிழவோ இல்லை மௌனமாகவே இருந்தார். யாரிடத்திலும் எச்சூழலிலும்
எதையும் வெளிப்படுத்தியதில்லை.

சத சூத்ர ப்ரமாணம் ஏற்பாடு செய்து அதன்மேல் ஏறி நின்று அவர் பாடியபோது தான் அவருக்கு தமிழிலே கவிதை இயற்றும் திறன் உள்ளதை மக்கள் உணர்ந்தார்கள். அதுவைர அவர் எந்த வெளிப்பாட்டையும் செய்யவில்லை.அமாவாசையை பௌர்ணமியாக்குவேன் நிலவு வரும் என்று அரசர் ஒருவரைத் தவிர வேறு யாரிடத்திலும் கூறவில்லை.

உமையம்மையே அதை வெளிப்படுத்தட்டும். அவள் அருளன்றி அதை சொல்ல முடியாது என்ற எண்ணம் தான் அவரை ஆட்கொண்டது. ஆகையினால் ‘‘வில்லும் படி அன்று’’ என்ற சொல்லை வரையறுத்து சொல்கின்றார். ஆன்மீக அனுபவம் மொழிக்கு உட்பட்டதாக அமைக்கப்படுவது அருளன்றி முற்றிலும் இயலாது. அந்த அருளினாலே முழுவதுமாய் அமையும். அதனால் அதைபற்றி வரையறுத்து உண்மையை சொல்ல இயலாது என்பதையே ‘‘வில்லும் படி அன்று’’ என்கிறார்.

(தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-vaccine12

  கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்