SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளக்கிற்கு ஏது முகம்?

2020-11-04@ 10:36:03

தெளிவு பெறுஓம்

?ஒவ்வொரு வருடமும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் தீபாவளி ஒரே நாளில் வருவதில்லையே? ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறதே, அது ஏன்?
- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.


ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடு வதற்கு என்று ஒரு விதிமுறை உண்டு. அந்த விதிகளின்படி அந்த பண்டிகைகள் வருகின்ற நாட்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பது சூரியன் துலாம் மாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அதற்கான விதி. அதாவது ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முன்னர் வருகின்ற சதுர்த்தசி திதியானது அதிகாலை நேரத்தில் என்று வியாபித்திருக்கிறதோ, அந்த நாளே தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய நாள் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாலை நேரத்தில் செய்கின்ற ஸ்நானத்திற்கு நரக சதுர்த்தசி ஸ்நானம் என்று பெயர். அதாவது நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் என்பதால் அவ்வாறு பெயர் பெற்றது. நரகாசுரன் இறைவனிடம் கேட்ட வரத்தின்படி அவனது இறப்பினை உலக மக்கள் யாவரும் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் பொங்கல் பண்டிகை என்பது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை துவங்குகின்ற உத்தராயணத்தின் முதல்நாள் கொண்டாட வேண்டிய பண்டிகை ஆகும். இந்தநாள் சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சூரியன் மகரத்திற்குள் நுழையும் நாளே தை மாதம் ஒன்றாம் தேதி. ஆக, இந்த நாள் எந்த வருடமும் மாறாமல் நிரந்தரமாக பொங்கல் பண்டிகை நாள் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
 
?இறைவனை வணங்கும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் அது அபசகுனமா?
- மு. மதிவாணன், அரூர்.

நிச்சயமாக இல்லை. மின்சார ஒளியில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது தவறு. தீப ஜோதியில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தில்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் சந்நதியிலும் வீட்டில் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறார்கள். இறைவனை வணங்கும்போது மின்சாரம் தடைபட்டால் கூட அங்கே தீப ஒளி வீசிக் கொண்டிருப்பதால் சகுனத்தடை என்ற பேச்சிற்கே இடமில்லை. இறைவனை வணங்கும்போது மட்டுமல்ல, எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் அங்கே முதலில் விளக்கை ஏற்றி வைத்துவிட வேண்டும். திருமணம், க்ருஹப்ரவேசம், நிச்சயதார்த்தம் என எல்லா சடங்குகளின் போதும் அங்கே விளக்கு ஏற்றப்பட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் பட்சத்தில் மின்சாரம் தடைபட்டால் அதனை அபசகுனமாக கருத வேண்டிய அவசியமில்லை.
 
?விளக்கினை கிழக்கு நோக்கித்தான் ஏற்ற வேண்டுமா? மற்ற திசைகளை நோக்கி ஏற்றக்கூடாதா?
- வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு.


விளக்கிற்கு ஏது முகம்? சாதாரணமாக ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்துப் பாருங்கள். அந்த விளக்கின் ஒளியானது எல்லா திசைகளிலும்தான் பரவும். கிழக்கு நோக்கி ஏற்றுகிறோம், வடக்கு நோக்கி ஏற்றுகிறோம் என்பதெல்லாம் நம் மனதில் தோன்றும் கற்பனையே. உண்மையின் விளக்கின் ஒளி அனைத்து திசைகளுக்கும் பரவுவதால் விளக்கிற்கு என்று முகம் கிடையாது. எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் விளக்கினை ஏற்றி வைக்கலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.
 
?திருமண பாக்கியத்திற்கு குரு பார்வை அவசியம் என்று சொல்வது ஏன்?
- யாழினி பர்வதம், சென்னை -78.


இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில் திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும். குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று சொல்லப்படுகின்ற விஷயங்கள் அந்தந்த வயதினில் அவரவருக்கு தேவையான விஷயங்களை தடையின்றி நடத்தக்கூடிய வலிமையைத் தரும் அவ்வளவுதான். அதனால் குருபார்வை இருந்தால்தான் திருமணம் நடக்கும் என்பது சொல்வது தவறு. உதாரணத்திற்கு தற்பொழுது நடைபெற உள்ள குருபெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய மூன்று ராசிகள் மட்டுமே குருவின் பார்வையைப் பெறுகின்றன. அதனால் இந்த மூன்று ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்வது தவறு. அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிலும், கும்ப ராசிக்காரர்களுக்கு 12ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பார் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் திருமண யோகம் கிடையாது என்றும் சொல்லக் கூடாது. திருமண யோகம் என்பது அவரவரது தனிப்பட்ட ஜாதக பலத்தினைப் பொறுத்தது. ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி மட்டுமே திருமணம் நடக்க வேண்டிய காலத்தை நிர்ணயம் செய்யும். குருவின் பார்வை என்பது கூடுதலாக ஒரு உந்துதலைத் தரும். அவ்வளவுதான். அதனால் திருமண பாக்கியத்திற்கு குருபார்வை அவசியம் என்று சொல்லப்
படும் கருத்து தவறானதே. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? வழிபாட்டு முறைகள் என்ன? கடைபிடிக்க வேண்டிய ஆச்சாரங்கள் என்ன?
 - சுப்ரமணியம், சேலம்.


மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இது சாக்தம் என்று சொல்லப்படுகின்ற சக்தி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அம்பாள் உபாசனை என்பது இதற்கு அவசியம். ஆதிபராசக்தியின் அம்சமே இந்த மேரு என்கிற விக்கிரகம். அம்பிகையின் யந்திர ரூபமே ஸ்ரீசக்கரம். இந்த இரண்டையும் பூஜிப்பதற்கு அம்பாள் உபாசனை என்பது அவசியம் தேவை. அதற்கு முதலில் ஒரு குருவை அணுக வேண்டும். அவர் ஸ்ரீவித்யா உபாசனையைத் தொடர்ந்து செய்து வருபவராக இருக்க வேண்டும். அவரிடம் இருந்து உபதேசம் பெற்றுக்கொண்டு அவர் அனுமதி அளித்த பிறகே மேருவை வைத்து பூஜிக்க வேண்டும். ஒரு சிலரது இல்லங்களில் பரம்பரை பரம்பரையாக இந்த வழிபாடு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். அவ்வாறு பரம்பரையில் ஸ்ரீவித்யா உபாசனை என்பது இருக்கும் பட்சத்தில் இவர்கள் தனியாக குருவைத்தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. தனது பரம்பரையில் உள்ள பெரியவர்களையே குருவாகக் கொண்டு உபாசனையைத் தொடங்கிவிடலாம். மேரு விக்கிரகத்தை வைத்து வழிபட வேண்டிய விதிமுறைகளையும், ஆச்சார அனுஷ்டானங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குருவின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள இயலும். குருவருள் இருந்தால் திருவருளை எளிதாக அடைந்துவிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

  • penguin24

    உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

  • 24-02-2021

    24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்