SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

2020-11-03@ 09:41:00

வேல் வாங்கித் தந்த பாபா

எங்கள் வீட்டருகே இருக்கும் அம்மன் கோயிலில் 2019 ஜனவரி 01 அன்று வழிபட்டு விட்டு திரும்பும்போது, எதிரே வந்த ஒரு பெரியவர், ஒரு காகிதச் சுருளை நீட்டி ‘‘ஹேப்பி நியு இயர்’’ என்றார். அந்த காகிதச் சுருளை வாங்கி விரித்து பார்த்தேன். சாய்பாபா படம் போட்ட காலண்டர். எனக்கு மகான் வழிபாட்டில் ஈடுபாடு இல்லாததால் அம்மன் படம் போட்ட காலண்டர் இருந்தால் கொடுங்கள் என்றேன். ‘‘இல்லை தம்பி. என்னிடம் இருப்பதெல்லாம் பாபா காலண்டர்தான். பாபாவே உங்களை நாடி வருகிறார். ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்றார். அந்த பெரியவர். வாங்கி வந்து வீட்டில் மாட்டினேன். அதே போல, சாயங்காலம் வந்த நண்பன் புது டைரியோடு கொடுத்த கீ செயினிலும் சாய்பாபா பொம்மை! அது மட்டுமா, குங்குமம் குழுமத்தின் ஆன்மிகம் பலன் இதழ் நடத்திய ஒரு போட்டியில் வெற்றி பெற்று இலவசமாக ஷீரடி செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. சிலிர்த்துப்போனேன். நாடி வரும் பாபாவிடம் நம் கோரிக்கையை வைக்கலாமே! என்று உடனே குடும்பத்துடன் மைலாப்பூர் சாய்பாபா கோயிலுக்குப் போய் ஒரு விண்ணப்பம் வைத்து பிராத்தித்தேன். 20 ஆண்டுகளாக சொந்த வீட்டை விட்டு வெளியேறி வசிக்கும் எனக்கு பாகப்பிரிவினையின் போது, பொன்னோ, பொருளோ கிடைக்காமல் ஏமாற்றப்பட்டேன். நூற்றாண்டு பழமையான எங்கள் வீட்டு பூஜையறையில், ஒரு பரம்பரை வேல் பூஜையின்றி இருந்தது. அதையாவது கொடுங்கள் என்று கேட்டும், யாரும் கொண்டு வந்து தரக்காணோம். அந்த வேல் வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். என்ன ஆச்சரியம்! ஜூன் 23ந் தேதி என் வீட்டுக்கே வராத என் மூன்று தங்கை களும் வந்து என்னைக் கட்டாயமாக காரில் அழைத்துச் சென்று அந்த வேலை எடுத்துக் கொடுத்தனர். வேண்டாதவரிடமும் விரும்பி வந்து, வேண்டிய வரத்தை நிறைவேற்றித் தரும் பாபா அருளால், சஷ்டிதோறும் எங்கள் வீட்டில் வேல் பூஜை நடந்து, குடும்பப்பாரம்பரிய பூஜை தொடர்கிறது. எல்லாம் சாய்பாபா கிருபைதான்...

- அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

ஈசன் தந்த தீர்த்தம்

நான் காய்கனி அங்காடி வைத்திருக்கும்போது, காலை 5 மணிக்கு எழுந்து குளித்த பின்பு இறைவனிடம் 2 நிமிடம் பிராத்தனை செய்துவிட்டு தண்ணீர் அருந்திய பின்பு திருவண்ணாமலைக்குச் சென்று காய்கனி வாங்கி வரச்செல்வேன். ஒருநாள் காலையில் தண்ணீர் அருந்தும்போது, இந்த தண்ணீரை நாம் தண்ணீர் என்கிறோம். ஆனால் காசி, ராமேஸ்வரத்தில் உள்ள தண்ணீரை தீர்த்தம் என்று சொல்லுகிறார்களே என்று என் மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டு தண்ணீர் அருந்தினேன். என்ன அதிசயம் அன்றே பகல் 11 மணிக்கு என் அங்காடிக்கு வரும் பெண்மணி காசித் தீர்த்தம் குடியுங்கள் என்று ஒரு பாட்டிலில்
கொடுத்தார். உடனே நான் மெய்சிலிர்த்து காசி விஸ்வநாதரை நினைத்து பூரிப்போடு தீர்த்தத்தை குடித்தேன். காலையில் நாம் நினைத்த தண்ணீர் செயல்பாட்டை ஈசன் அறிவுறுத்தியதை நினைத்து மானசீகமாக மன்னிப்பு கோரினேன்.

- R. முத்துமாணிக்கம்,
திருவண்ணாமலை.


குழந்தைச் செல்வம் அருளிய குருவாயூரப்பன்

எனக்கு திருமணம் முடிந்ததில் இருந்தே நான் அனுதினமும் வழிபடும் அந்த குருவாயூரப்பனிடம் எனக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன். அந்த வேண்டுதல் வீண்போகவில்லை. எனக்கு அழகான ஆண் குழந்தையை அருளினான். அந்த குருவாயூரப்பன். அவரது நாமமான ராதாகிருஷ்ணன்  என்ற பெயரையே எனது மகனுக்கு சூட்டினோம். இன்று என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மணமுடித்து பிள்ளைகள் உள்ளனர். என் மகனுக்கும் இரண்டு பிள்ளைகள். அன்பான மருமகள் மற்றும் மருமகன்கள். பாசமுள்ள பேரக்குழந்தைகள் நான் உடல் நலத்தோடும், மகிழ்வோடும் இன்று இருக்கிறேன். இவற்றிற்கெல்லாம் அந்த கிருஷ்ணன், குருவாயூரப்பன்தான் காரணம். அவனருளுக்கு ஈடு இல்லை.

- ஆர். கார்த்திகேயினி ராகவன்,
கே.கே. நகர், சென்னை.


சேர்மன் அருணாச்சலம் தந்த வாழ்க்கை

பதினைந்து வருஷத்திற்கு முன்னாடி என் தந்தையோடு ஏரல் சேர்மன் ஸ்ரீஅருணாச்சல சுவாமி கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்போது பிளஸ்டூ முடித்திருந்தேன். மேற்கொண்டு என்ன படிப்பதா? அல்லது வேலைக்கு செல்வதா? என்ன செய்ய என்றும் படிக்க வைக்க என் பெற்றோரிடத்தில் போதுமான பொருளாதார வசதியும் இல்லை.  அந்த நிலையில்தான் சேர்மன் சுவாமியிடம் வேண்டினேன். வழியின்றி தவிக்கும் எனக்கு நல்வாழ்வு கொடு. காலம் முழுவதும் உன்னை மறவாமல் கை தொழுவேன் என்று மனமுருக வேண்டினேன். அந்த வேண்டுதலின் பலனாக இன்னொருவர் உதவியின் மூலம் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்து முடித்தேன். நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வசூலிக்கும் பணி. இது ஒரு வேலையா என ஏளனமாக பார்த்தனர் பலர். அவற்றையெல்லாம் கடந்து மனதில் நினைத்த உறவுப்பெண்ணை மணந்தேன். இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இன்று தனியார் வங்கி ஒன்றில் மேலாளர் பொறுப்பில் உள்ளேன்.  இந்த முன்னேற்றத்திற்கு காரணம் குலதெய்வம் சுடலைமாட சுவாமியும், சேர்மன் ஸ்ரீஅருணாச்சல சுவாமியும் தான். எந்த தெய்வத்தை வணங்குகிறோம் என்பது முக்கியமல்ல, வேண்டிடும் தெய்வத்தை முழுமையாக நம்பி கைதொழுதுவந்தால் வெற்றி நிச்சயம்.

- கே. சுடர்மணி, கண்ணன்புதூர்,
கன்னியாகுமரி.


சங்கடம் தீர்த்தார் சனீஸ்வரர்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா  புளிங்கொட்டாரம் எனும் குக்கிராமத்தில் பிறந்த நான் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு மருத்துவ படிப்பை (எம்.பி.பி.எஸ்) படித்து முடித்திருந்த நேரத்தில் எங்களது வீட்டில் வறுமை. அது என்னை வாட்டி எடுத்தது. கஷ்டம் என்றால் கஷ்டம் சொல்ல முடியாத கஷ்டம்.  இப்படி இருக்கும் பொழுதுதான் 2007 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு நாள் சனிபகவான் கனவில் தோன்றினார். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய
வரிடம் இதுபற்றி கேட்டபோது ஏதும் பிரம்மை இருக்கும்பா என்று சொன்னார்.  அடிக்கடி இது போன்ற கனவு  வரும்பொழுதுதான் சித்தர் வழிபாட்டில் உள்ள ஒருவரிடம்  ஒரு ஆலோசனை கேட்டேன் அவர் சொன்னார். ‘‘ஏம்பா அடிக்கடி கனவில் சனிபகவான் வருகிறார் என்று சொல்றியே நீ ஒருமுறை குச்சனூர் சனிபகவான் கோயிலுக்கு போயிட்டு வாயேன்’’ என்று சொன்னார்  உடனே 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோயிலுக்கு போனேன். சிறிது மாற்றம் வாழ்க்கையில் நடந்தேறியது. அதன் பின்பு சனி பகவானை வணங்க ஆரம்பித்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு முறை கோயிலுக்கு சென்று இருக்கும் பொழுது அங்கு இருக்கும் அர்ச்சகர் என்னை பார்த்து சொன்னார் ‘‘ஏ, தம்பி உன் வாழ்க்கையில் உள்ள அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, கண்டச்சனி எல்லாம் இன்றோடு விலகிவிட்டது. உன்னை பிடித்தது எல்லாம் விலகிவிட்டதுப்பா...  உன் வாழ்க்கையில் இனி வெற்றிதான்’’ என்று சொன்னார். அதுபோலவே அதன் பின் என் வாழ்வில் நடந்தது எல்லாமே வெற்றிதான். அன்றிலிருந்து இன்றுவரை முழுமனதோடு அவரை மட்டுமே நினைத்து தியானித்து வருகிறேன். சஞ்சலம் நீக்குவார் சனிபகவான் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

- Dr. S.சிவகுமார்,
நெல்லை.


வாசகா்கள் தங்கள் ஆன்மிக அனுபவங்களை
புகைப்படத்துடன் சேர்த்து எழுதி அனுப்புங்கள்.


தினகரன் ஆன்மிக மலா்
229, கச்சோரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்