SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மிக்கோர் பொறுக்கும் தகைமை’

2020-10-29@ 16:20:43

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-68

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்தம்  அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு.
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே.
பாடல் - 46


உலகிலுள்ளோர்கள் தாம் நினைத்ததை அடைவதற்கு செல்வத்தை தேடுதல், அதை அடையும் முயற்சி புரிதல் அதன் பொருட்டு வரும் தடைகளை நீக்குதல் போன்ற பல முயற்சிகளை மனதாலும் வாக்காலும் காயத்தாலும் செய்கிறார்கள்.அதுபோல பல்வகை முயற்சிகளில் உபாசனையும் ஒன்று. உபாசனையானது இறை வழிபாடு செய்து தன் எண்ணத்தை ஈடேற்ற முயல்வதாகும்.

அந்த உபாசனையில் வெற்றி பெறுவதற்கு சில செயல்பாட்டையும் அது தோல்வி அடையாமல் இருப்பதற்கு சில பண்புகளையும் நினைத்ததை நினைத்தவாறே அடைவதற்கு சில பண்புகளையும் பெற வேண்டியதாக இருக்கிறது. இது உபாசனையில் பூரண வெற்றி பெறுவதற்கு ஆலோசனை கூறுவதே இப்பாடல். விதைக்குள் ஆலமரம் போல் இப்பாடலில் சொற்கள் மிகுந்துள்ளது. அதை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இனிப் பாடலுக்குள் நுழைவோம்.

‘‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும் ’’
 ‘‘தகைமை’’ - என்ற சொல் தகுதி, ஒழுக்கம், பண்பை குறிப்பிடுவதாகும். வழிபாடு செய்வார்க்கு இடையூறு விளைவிக்கும், வழிபாட்டின் பயனை அடைய விடாமல் தடுக்கும் பண்புகளையே இப்பாடலில் ‘‘வெறுக்கும் தகைமை’’ என்கிறார். அப்பண்புகள் என்ன என்பதை அதை உடையவர்களை கொண்டு காட்டுகிறார். வீணர், எனது உனது என்று இருப்பார், வஞ்சர் கயவர், அருள் ஒன்றும் இல்லாதவர், அணுகாதவர், அவர் தம் செய்கைகளையே ‘‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும்’’ என்கிறார். அதை இனி ஒவ்வொன்றாய் காண்போம் வீணர் - வழிபாட்டு முறையில் முன்னேற்றத்திற்கான வழியை தெளிவுபடக் கூறினும், அத்தகைய உயர்ந்த பண்பை ஏற்காமல் அதனால் ஏற்படும் பயனை அடையாமல் பிற சமயங்களை உயர்ந்தது என்று வணங்கும் தன்மை உடையவர்களை வீணர் - 63 என்கிறார்.

எனது உனது என்றிருப்பார்.எதுவும் நம் பொருள் இல்லை எல்லாம் உமையம்மையின் அருளால் கிடைப்பது என்பதை உணராமல் இது உன்னுடையது, இது என்னுடையது என்று உரிமைக்காக சண்டையிருபவர்களை நோக்கி ‘‘எனது உனது என்றிருப்பார்’’ - என்கிறார். வஞ்சர் - உமையம்மை நம் நெஞ்சத்தில் பொருந்த முடியாது விலக்கும் தன்மையுடைய இழிவான பண்பே பொய் அதை உடையவரை வஞ்சர் - 84 என்கிறார்.

கயவர் -  மனதினால் கூட நினைத்தல் என்பது பாவமாக கருதி அனைவராலும் வெறுக்கத்தக்க தீயவைகளையே தன்னுடைய கல்வியாகவும், ஒழுக்கமாகவும் செயலாகவும் கொண்டுள்ள மானுடர்களையே ‘‘கல்லாமை கற்ற கயவர்’’- 54 என்கிறார். அருள் ஒன்றும் இல்லாதவர் - தன்னுடைய இன்பத்திற்காக பிறர் துன்பம் பாராது அவர்களை வதைத்து  அதில் அடைந்த பொருட்களைக் கொண்டு இன்பம் துய்க்கும் கருணையற்ற பண்புடையவர்கள் அசுரர்கள். இவர்களையே ‘‘ அருள் ஒன்று இலாத அசுரர்’- 51 என்கிறார்.

அணுகாதவர்கு -  ஒன்றின் பயனை பெறுவதற்கு அதனோடு தொடர்புடைய செயலை செய்வது உலகின் வழக்கு. அது போல இறை அன்பு செய்து இறை அருள் பெற்று அதன் மூலம் தன் தேவையை (ஆசையை) நிறைவு செய்து கொள்ளக் கூடிய பண்பு இல்லாதவரை இறைவனை குறித்து அணுகாதவர் என்கிறார். இதை நாம் அறிந்து கொள்ள அணுகாதவர்குப் பிணியே- 24 என்கிறார்.

மேற்கண்ட யாவரும் வெறுக்கும் தகைமை உடையவர்கள் என்று அவர்களை பிரித்துக் காட்டுவதன் மூலம் உபாசனைக்கு ஆகாத பண்பு என்பதை ‘‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும்’’ என்று கூறுகிறார் பட்டர்.தம்  அடியாரை அடியார் என்பவர் உமையம்மையை வழிபட்டு பூரணமாக அவள் அருளுக்கு பாத்திரமாக உலகறிய ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே ஆவார். அத்தகையவர்கள் அடியவர் என்ற நிலை மாறி அருளின் சிறப்பால் தேவர்களாக உயர்வர். அபிராமி அந்தாதியை பொறுத்தவரை அப்படி கருதத்தக்கவர்கள். ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன் அமரர் தங்கோன் போதிற் பிரமன், புராரி, முராரி, பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர், எண்ணிலர் போற்றுவர் தையலையே - 97. கணக்கிலடங்கா இவர்களையே ‘‘ தம் அடியார்’’ என்கிறார்.

‘மிக்கோர் பொறுக்கும் தகைமை’
 வழிபாடு செய்வார்க்கு ஊக்கமளித்து, உயர்வடையச் செய்யும் பண்பை இப்பாடலில் ‘‘மிக்கோர் பொறுக்கும் தகைமை’’ என்கிறார். அப்பண்புடையவர்களை கொண்டு நமக்கு காட்டுகிறார்.  உணர்வுடையோர், நயந்தோர், தொழும் அடியார் சரணம் புகுவோர், தவம் செய்வோர். பித்தர் இவர்களை பொறுக்கும் தகைமைக் குரியவராக காட்டுகின்றார்.

உபாசனையைப் பொருத்தவரை சில நல்ல பண்புகளைக் கூறி அதை உடையவரை மிக்கோர் என்று குறிப்பிடுகின்றார். உணர்வுடையோர் - பசி உணர்வுடையோர் உணவை மதிப்பர். அது போல இறை நம்பிக்கை உடையோர் உமையம்மையை மிகுந்து கொண்டாடுவர் இதையே உணர்வுடையோர் - 1 என்கிறார்.நயந்தோர் -  அவை என்பது இறை அன்பர்கள் ஒன்றாக கூடி சாத்திரங்களை விவாதிக்கும் இடம். அவர்களை நாடிச் சென்று உமையம்மையின் அருளை பெற முயல்வதை நயத்தல் என்பர். இதை நயந்தோர் - 12 என்பதனால் அறியலாம்.

தொழும் அடியார் - உமையம்மையை  தொழு வோரை உமையம்மையாகவே கருதி அடியவரை தொழுவதை ‘‘தொழும் அடியார்’’ - 91 என்கிறார்.
  சரணம் புகுவோர் -  பண்டை காலத்தில் ஒரு அரசரிடம் மற்றொரு அரசர் தன்னுடைய உடைமைகளை அளித்து தோல்வியை ஒப்புக்கொண்டு பணிவது சரணடைவதாகும். இதையே இறையருளை பெற்றுக்  கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற தன்னுடைய உடல், பொருள், ஆவி, அனைத்தையும் உமையம்மையினிடத்து ஒப்படைக்கின்ற பண்பே சரணம் புகுவதாகும்.இதையே ‘‘ வந்தே  சரணம் புகும்  அடியார்’’ - 34  என்கிறார்.

தவம் செய்வோர் - இறைவியின் கருணையை பெறுவதற்காவே தன்னை வருத்திக் கொள்கிற செயல்களான உணவருந்தாதிருத்தல் (விரதம்) உறங்காதிருத்தல் ஜெபம் முதலானவற்றை செய்வது இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ‘‘தவம்’’ - 53 என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். பித்தர் -  ஜெபம் என்ற வடமொழி சொல்லிற்கு பிதற்றுவது என்பது ஒரு பொருள் உண்டு.

உபாசனையை பொறுத்தவரை உபாசனை தேவதையிடத்து மிகுந்த அன்பு உணர்வு கொண்டு மந்திரத்தை சொல்வதையே பிதற்றுவது, அதை சொல்பவர் பித்தர் எனப்படுகின்றார். இதையே பட்டர். விரும்பித் தொழும் அடியார் வழி நீர் மல்கி மெய்ப்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் - 94 என்கிறார்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்