SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2020-10-20@ 17:44:59

நயினார்கோயில் நாகநாதர் - உளுந்துவடை.

முகலாய மன்னர்களில் ஒருவர் தெய்வம் என்று எந்த மக்கள் நம்பி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்களோ, அந்த கோயில்கள் தன் குறையையும் தீர்க்குமா என்று சோதித்துப் பார்த்தார். ஆமாம், பேச்சிழந்த தன் மகளை எந்த இந்திய தெய்வம் பேச வைக்கிறது என்று பார்க்கலாம் என்று சவால்  விட்டார். அவர் முகாமிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் விரும்பிச் செல்லும் கோயில்களுக்குத் தாமும் செல்வார். தன் மகள் பேச்சுக்குறை  நீங்கவேண்டுமென்று கேட்டுக் கொள்வார். அது நிறைவேறவில்லை என்றால் அவ்வளவுதான், அந்தக் கோயில் தகர்ந்து அழியும். அவ்வாறு தென் மாநிலங்களுக்கு வந்த அவரால் பல கோயில்கள்தான் பாழ்பட்டனவே தவிர, மகள் ஒரு எழுத்துகூட பேச முடியவில்லை. அவர் ராமேஸ்வரம் வந்தார். இந்தப் பகுதியில் உள்ள கோயில் அர்ச்சகர்கள் எல்லாம் தம் கோயில் களுக்கு என்ன நேருமோ என்று பரிதவித்தார்கள். அவர்களில் ராமசுவாமி ஆலய அர்ச்சகர் ஒருவருடைய கனவில் இறைவன் தோன்றினார்.

‘‘சாபக்கேட்டால் மன்னரின் மகள் பேச்சிழந்து இருக்கிறாள்.  அவளை இங்கிருந்து மேற்கே சற்றுத் தொலைவிலுள்ள வில்வ வனப்பகுதியான திருமருதூருக்கு அழைத்துச் சென்றால், அங்கிருக்கும் வாசுகி  தீர்த்தத்தில் அவள் மூழ்கி எழுந்தாளானால், இயல்பாகப் பேசுவாள்’’ என்று அருள் வாக்குரைத்தார்.  மறுநாளே தம் பகுதி கோயில்கள் காப்பாற்றப்படவேண்டிய அவசரத்தில், அந்த அர்ச்சகர், முகலாய மன்னருக்கு அந்த விவரம் தெரியச் செய்தார். உடனே, மன்னர் தன் மகளுடன்திருமருதூருக்கு வந்தார். அர்ச்சகர் சொன்னபடி, வாசுகி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த மன்னரின் மகள், திடீரென பேச ஆரம்பித்தாள்.முதல்முறையாக உடல் குலுங்கியது முகலாய மன்னருக்கு. மருத்துவமில்லை, கஷாய மருந்து இல்லை, அதிர்ச்சி வைத்தியம் கூட  இல்லை, மகள் பேசுகிறாள்! இது என்ன மாயம்? மகேஸ்வரனின் மகத்தான மகிமையைக் கண்டு மெய்சிலிர்த்த அவர், நாகநாதரை நோக்கி  வணங்கினாராம். அத்துடன் தன் சந்ததியினர் அனைவரும் நாகநாதருக்கு சேவகம் செய்வார்கள் என்றும் வாக்கு கொடுத்தாராம்.

வாய் பேச முடியாத அந்தப் பெண் முதன்முதலாக தன் தந்தையைப் பார்த்து ‘நயினா’ என்றதால் இத்தலம் அன்று முதல் ‘நயினா கோயில்’ என்றாகி,  நாளடைவில் நயினார் கோயில் ஆனது. அதன்பின் மன்னருக்கு சாப விமோசனம் கொடுத்த நாகநாதரை மாற்றுமத மக்களும் போற்றி வழிபட  ஆரம்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இத்தலத்தில் நாகநாதசுவாமியும், சௌந்தரநாயகி அம்மனும் திருவருள் புரிந்து வருகின்றனர். ஒரு காலத்தில் இப்பகுதி வில்வ மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. அங்கு  வேட்டை யாட வந்த வேடனை ஒரு வேங்கைப் புலி துரத்தியது. அதற்கு பயந்த வேடன் வில்வ மரத்தின் மீது ஏறினான். புலியிடமிருந்து தப்பிப்பதற்காக தூங்கிவிடாமல் இருக்க, இரவு முழுதும் வில்வ இலைகளைப் பறித்து போட்டுக்கொண்டேயிருந்தான். அதுவரை உக்ரமாக இருந்த புலி சிவலிங்கமாக மாறியது! அந்த லிங்கமே நாகநாதராக அருள்கிறது.  
ஆரம்பத்தில் கிழக்கு முகமாக வீற்றிருந்திருக்கிறார் ஈசன்.

நாமத்தேவர் எனும் தன் பக்தன் ஈசனைத் தரிசிக்க வந்த போது திசை தெரியாமல்  தவித்திருக்கிறார். தன் இசையால் தன் மனக் கவலையை பாடலாக ஈசனிடம் முறையிட, அதில் மயங்கிய ஈசன் அவருக்காக மேற்கு பார்த்து  நிலைகொண்டதாக தலபுராணம் கூறுகிறது. முன்பு இத்தலம் திருமருதூர் என அழைக்கப்பட்டது. அம்பிகை சௌந்தரநாயகி தெற்கு நோக்கி அருள்கிறாள். அம்மனின் வலப்புறம் பள்ளியறை இருக்கிறது. முல்லா காலத்திலிருந்து நாகநாதரை பக்தியுடன் வணங்கி அர்ச்சனை புரிந்து வரும் மாற்றுமத மக்கள், மறக்காமல் இந்தப் பள்ளியறைக் கதவுகளுக்கும் மாலைபோட்டு வணங்கி,  படிக்கட்டில் சர்க்கரை வைத்துப் பிரார்த்தனை செய்து வருவது இன்றைக்கும் நடக்கிறது. இதைத் தவிர பிறந்ததிலிருந்தே நோய்வாய்ப்பட்டு  அவதியுறும் குழந்தைகளை இச்சந்நதிக்கு எடுத்து வந்து ‘இனி இது உன்பிள்ளை! இதனை நீயே எடுத்துக் கொள்வதானாலும் சரி, ஆரோக்கியத்தோடு  என்னிடம் திரும்பக் கொடுப்பதனாலும் சரி,’ என்று மனமார வேண்டிக் கொள்கிறார்கள். அந்த நிமிடத்திலிருந்து அக்குழந்தை நாகநாதருடையது.  ஆச்சரியப் படத்தக்க வகையில் நாகநாதரின் திருவருளால் அக்குழந்தை நோயிலிருந்து மீள்கிறது.

நோயுற்ற குழந்தைகளை ஈசனுக்கு அளிப்பதும், நோய்கள் தீர்ந்தபின் ஈசனிடமிருந்தேஅந்தக் குழந்தையை ஏலத்தில் எடுத்துக் கொள்வதும்  நயினார்கோயில் நாகநாதசுவாமி சந்நதியில் இன்றைக்கும் நடக்கும் பிரார்த்தனை அதிசயம். அத்தகைய குழந்தையை பெற்றோர் நாகநாதர் சந்நதிக்கு  எடுத்து வந்து கொடிமரத்திற்கு அருகே படுக்க வைக்கிறார்கள். குழந்தையை ஊரறிய பகிரங்கமாக ஆலய காவலாளி ஏலம் விடுகிறார். ஒரு ரூபாயில்  ஆரம்பித்து இருபது ரூபாய் வரை ஏலம் கேட்கின்றனர். ஏலத்தொகை இருபது ரூபாயை நெருங்கினால் மற்றவர்கள் ஒதுங்கிவிடுவர். பெற்றோர் இருபது  ரூபாய் தந்து நாகநாதர் வசம் ‘ஒப்படைத்த’ குழந்தையை மீண்டும் பெறுவர். இந்நிகழ்வை விற்று வாங்குதல் என்பர். மாற்றுமத குழந்தைகளும் இந்த  பிரார்த்தனையில் இடம் பெறுகின்றன. இத்திருத்தல பிரசாதமாக உளுந்துவடை திகழ்கிறது.

உளுந்து வடை

தேவையான பொருட்கள்

உளுந்து - 1/ கிலோ
பச்சை மிளகாய் - 8
சீரகம் - 3 டீஸ்பூன்
மிளகு - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் உளுந்தை ஊற வைக்கிறார்கள். ஊற வைத்த உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை க்ரைண்டரில் மையாக அரைக்கிறார்கள்.இந்த மாவில் கறிவேப்பிலை மற்றும் மிளகு,சீரகம் சேர்த்து நன்றாக கலக்குகிறார்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எண்ணெயை  ஊற்றிகாய வைக்கிறார்கள்.. உள்ளங்கை அளவு மாவை எடுத்துக் கொண்டு அதைச் சிறு உருண்டையாக்கி அதன் பின் வட்டமாகத் தட்டுகிறார்கள்..பின் அதன் நடுவில் தண்ணீர் தொட்டு துளை போட்டு வாணலியில் போட்டு இரு புறங்களிலும் நன்கு வேகவிட்டு எடுக்கிறார்கள். மணமணக்கும் உளுந்துவடை பிரசாதம் தயார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்