SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலவனை வழிபட வேதனை விலகும்

2020-10-20@ 10:05:39

?என் தங்கையின் மகன் சொந்தமாக ஜேசிபி வைத்துள்ளான். இன்னும் 2 வருடம் ஈஎம்ஐ கட்டவேண்டும். தொழில் நன்றாக இருக்குமா? அவனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அவனது அப்பாவிற்கு பராலிஸிஸ். அதனால் வேலைக்கு செல்வதில்லை. அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையவும் தொழில் பெருகவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- பிரேமா, குமாரபாளையம்.


சதயம் நட்சத்திரம், கும்பராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தங்கை மகனின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் சுக்கிரன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டின் அதிபதி புதன் அஸ்தங்கதம் பெற்றிருந்தாலும் 11ல் சூரியன் மற்றும் செவ்வாயுடன் இணைந்திருப்பது பலமான நிலையே ஆகும். அவர் செய்கின்ற தொழிலில் நன்றாக அபிவிருத்தி காண இயலும். சனியும் சுக்கிரனும் ஜென்ம லக்னத்திலேயே இருப்பதால் அவ்வப்போது மனதில் லேசான சோம்பல்தன்மை எட்டிப்பார்க்கும். அடுத்தவர்களை நம்பியிருக்காது தானே நேரடியாக தொழிலில் ஈடுபட்டு வந்தால் நல்ல தனலாபத்தினைக் காண இயலும். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானத்தில் ஜென்ம லக்னாதிபதி குருவின் வக்ரம் பெற்ற அமர்வுநிலை திருமணத்தை சற்று தாமதமாக்கும். தானாக வரன் தேடிவரும் என்று அமர்ந்திருக்க இயலாது. கடுமையாக முயற்சித்தால் மட்டுமே திருமணம் நடக்கும். அருகிலேயே பெண் இருந்தும் கண்ணிற்குத் தெரியாமல் இருந்து வருகிறது. 2021 வைகாசி மாத வாக்கில் இவரது திருமணத்தை நடத்திவிடலாம். சனிக்
கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரச் சொல்லுங்கள். கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதானவர்களுக்கு உதவி செய்து வருவதாலும் தனது வாழ்வினில் முன்னேற்றத்தைக் காண இயலும்.

?2012ல் என் மகளுக்கு மறுமணம் நடந்தும் வாழ்க்கை சரியில்லை. எனது மருமகனுக்கும் இது மறுமணம்தான். இவர்களுக்கு ஒரு வருடம் சிகிச்சை எடுத்தும் இன்னும் குழந்தை இல்லை. என் மகள் தன் சம்பாத்யத்தில்தான் குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறாள். வீட்டிற்கு வந்துவிடு என்று சொன்னாலும் ஊர் என்ன பேசும் என்று வர மறுக்கிறாள். அவளது வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் கூறுங்கள்.
- உடுமலைப்பேட்டை வாசகி.


மறுமணம் என்பதற்காக மூன்று வருடம் வயதில் சிறியவராக உள்ளவரை மகளுக்கு மணம் முடித்து வைத்திருக்கிறீர்கள். பரணி நட்சத்திரம், மேஷராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மருமகனுக்கு தற்போதைய கிரஹநிலை செய்கின்ற தொழிலில் அபிவிருத்தியைத் தரும். சிம்மராசியில் பிறந்திருக்கும் அவர் தனது சுயகௌரவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பவர். மகளின் நல்வாழ்வு கருதி நீங்கள் உங்கள் கௌரவத்தை விடுத்து நேரில் சென்று மருமகனிடம் பேசுங்கள். தற்போதைய சூழலில் அவர் செய்து வரும் சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. சதா மருமகனை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசுங்கள். உங்கள் மகளின் ஜாதகப்படி குழந்தை பிறப்பதற்கான நேரம் கடந்துவிட்டபடியால் ஆதரவற்ற குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது நல்லது. சிறிது முன்கோபக்காரர் ஆக இருந்தாலும் உங்கள் மருமகன் தனது மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். 14.12.2020 முதல் அவரது சம்பாத்யம் என்பது நல்லபடியாக அமைவதோடு குடும்பத்தையும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளும் அளவிற்கு அமைந்துவிடும். உங்கள் மகளிடம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் அருகிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்குச் சென்று வணங்கி வரச்சொல்லுங்கள். வீட்டினில் சிறிய அளவிலான வேல் ஒன்றினை வாங்கி வைத்து தினமும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். உங்கள் மகளின் வாழ்வினில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள்.

?36 வயதாகும் என் மகனுக்கு கடந்த ஆறு வருடங்களாக பெண் பார்த்து வந்தும் இதுவரை திருமணம் கூடி வரவில்லை. ஏகப்பட்ட பரிகாரங்களைச் செய்துவிட்டோம். அவன் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்வதால் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள். எந்தவித தீய பழக்கமும் இல்லாத என் மகனுக்கு ஏன் இந்த சோதனை? உரிய வழி காட்டுங்கள்.
- மோகன், திருப்பத்தூர்.


அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் ராகுவின் அமர்வு இருந்தாலும் அது ஒரு பெரிய தோஷம் இல்லை. ஏழாம் பாவக அதிபதி சுக்ரனின் மூன்றாம் இடத்து அமர்வு களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. இருந்தாலும் தற்போது துவங்கியுள்ள சனி தசையின் காலம் அவருக்கு திருமண வாழ்வினை ஏற்படுத்தித் தரும். உங்கள் உறவுமுறையிலேயே சற்று விலகிய சொந்தத்தில் ஏற்கெனவே திருமணமாகி வாழ்வினை இழந்த ஒரு பெண்ணை அவர் வெகுவிரைவில் சந்திப்பார். பரஸ்பரம் புரிதலின் பேரில் அவர்களது திருமணம் நல்லபடியாக நடந்தேறும். நீங்கள் இதுவரை செய்துள்ள பரிகாரங்களின் விவரங்களை மிகப்பெரிய பட்டியலாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு வாழ்வினை இழந்த ஒரு பெண்ணிற்கு மறுவாழ்வு அளிக்க உங்கள் மகனின் ஜாதகம் துணைபோகிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பெண் தேடுங்கள். உடனடியாக அமைந்துவிடும். தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை நாட்களில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்து உங்கள் மகனின் கரங்களால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யச் சொல்லுங்கள். தனது வாழ்க்கைத் துணைவி யாரென்பதை வருகின்ற சித்திரை மாதத்திற்குள் கண்டுபிடித்து கரம்பிடிப்பார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்