SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலங்கள் அருளும் நவசக்தி தலங்கள்

2020-10-20@ 10:01:37

நெல்லை

நவகயிலாயம், நவதிருப்பதி என மகேஸ்வரனுக்கும், மகாவிஷ்ணுக்கும் ஒன்பது முக்கிய தலங்களை தன்னகத்தே கொண்ட நெல்லைச் சீமையில் ஆதிபரமேஸ்வரியான அந்த மகேஸ்வரிக்கும் ஒன்பது தலங்கள் உள்ளன. அந்த தலங்களே நவசக்தி தலங்களாக கண்டறியப்பட்டுள்ளன. ஒன்பது தலங்களிலும் வெவ்வேறு நாமங்கள் கொண்டருள்கிறாள், அகிலாண்டேஸ்வரி.

1. சிவகாமி

சிவகாமி உடனுறை சதாசிவமூர்த்தி - புளியரை

முன்னொரு காலத்தில் இப்போதைய கடலூர் மாவட்டத்தில் சமண மதம் மேலோங்கி இருந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலும் சமணர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இதனால் பயந்து போன கோயில் தீட்சிதர்கள் மூலவர் நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு சேரநாட்டுக்கு(இன்றைய கேரளம்) புறப்பட்டனர். செல்லும் வழியில் அடர்ந்த வனத்தில் இருந்த புளியந்தோப்புக்குள் புகுந்தனர். ஒரு புளியமரத்தின் அருகே சென்றதும் வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டது, அதை அடையாளமாக வைத்து அந்த புளியமரத்தின் அரைப்பகுதியில் இருந்த பொந்தில்(அறை) தில்லை மூலவர் சிலையை மறைத்து வைத்துவிட்டு தில்லைக்கு திரும்பினர். அந்த புளியந்தோப்பு அப்பகுதியிலுள்ள சொக்கலிங்கம்பிள்ளைக்கு சொந்தமானது. அவர் புளிய மரத்திலிருந்த சிலையைக் கண்டு மகிழ்ந்து அப்படியே வைத்து வழிபட்டார். ஆண்டு கள் பல உருண்டோடிச் சென்ற நிலையில் சமணர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் தீட்சிதர்கள் மூலவரைத் தேடி தென்திசை வந்தனர். மூலவரை வைத்த இடம் அவர்களுக்கு மறந்துவிட்டது, வைத்த இடம் தெரியவில்லை. அந்த தீட்சிதர்கள் மனம் வருந்தி நடராஜரை வணங்கினர். அச்சமயத்தில் ஒரு அசரீரி  சாரை சாரையாய் எறும்பு செல்லும் வழி செல்லுங்கள் என ஒலித்தது. தீட்சிதர்களும் அவ்வாறே சென்றனர். அப்போது ஒரு புளியமரத்தில் இருந்த நடராஜர் சிலையை கண்டு எடுத்துச் சென்றனர்.

சில நாட்கள் கடந்தன. அந்த புளியந்தோப்புக்காரர் தான் வழிபட்ட நடராஜரைக் காணாமல் திகைத்தார், அழுதார். அந்நேரம், அவர் நின்ற இடத்தில் நிலம் அதிர்ந்தது. அதிலிருந்து சுயம்புலிங்கம் தோன்றியது. இச்செய்தி எங்கும் பரவியது. அப்போது அப்பகுதியை ஆண்ட அச்சன்கோயில் அரசனின் கனவில் சிவபெருமான் தோன்றி அங்கே கோயில் கட்டுமாறும், உமையாளுக்கும் தனது அருகே சந்நதி அமைத்து சிவகாமி நாமத்தில் வணங்குமாறும் கூறினார். அதன்படியே கோயில் கட்டப்பட்டது. புளியமரத்தில் அரை மரத்தின் பொந்தில்(அறைக்குள்) இருந்த சுவாமி இருந்ததால் புளியறை ஆனது. அதுவே மருவி புளியரை என்றானது. சிவன் வடக்குப்புறமும் அம்பாள் தெற்குபுறமும் நின்று அருட் பாலிக்கின்றனர். சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக இத்தலத்தில் தரிசிக்கலாம். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கேரளா செல்லும் சாலையில் சென்றால் புளியரை ஊரை அடையலாம்.

2. விசாலாட்சி

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் - கீழ ஆம்பூர்

கீழஆம்பூரைச் சேர்ந்த காசிவிஸ்வநாத பிள்ளை, விசாலாட்சி தம்பதியின்  மகன் மதனராஜன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜாங்கம்  மற்றும் பாண்டித்துரை உட்பட எட்டு ஆண்களும், இரண்டு பெண் குழந்தைகளும்  இருந்தனர். நாளடைவில் ராஜாங்கமும், பாண்டித்துரையும் வசதி வாய்ப்பை இழந்து,  திரிசூல மலையில் விறகு வெட்டி குடும்பம் நடத்தினர். ஒரு ஆவணி மாதத்தில்  விறகு வெட்டச் சென்றவர்கள், அத்தியூத்து கரை அருகிலுள்ள ஆலமரத்தடியில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் மழை பெய்தது.  வருத்தப்பட்ட சகோதரர்கள், ‘‘நம்முன்னோர் காசி சென்று தானம், தர்மம்  செய்தனர், ஆனால் நாம் மழையில் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு ஒரு நல்ல வழி  பிறக்காதா?’’ என்று சிவபெருமானை வேண்டினர். அந்நேரத்தில் ஆலமரம்  சாய்ந்து பூமி அதிர்ந்தது. ஆனால், அந்த இடத்தில், சலங்கை ஒலி ஒலிக்க,  பூமியிலிருந்து மேல் நோக்கி ஒரு சிவலிங்கம் வந்தது. மின்னல் ஒளி  லிங்கத்தின் மேல் விழுந்தது. லிங்கத்திலிருந்து சுவாமியும், அம்பாளும்  எழுந்தருளி சகோதரர்களுக்கு காட்சி அளித்தனர்.

‘‘உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், தைரியமாக இருங்கள்,’’ என்று கூறி மறைந்தனர். உடனே  ஏழு செப்பு அண்டாக்கள் பூமியிலிருந்து மேலே வந்தன. அவற்றில் பொற்காசுகள்  இருந்தன. பொற்காசுகளுடன் சிவலிங்கத்தையும் ஊருக்கு கொண்டு வந்து கோயில்  கட்டி வழிபட்டனர். ஆச்சி(பாட்டி) - தாத்தா நினைவாக, காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று  சுவாமிக்கும், அம்பாளுக்கும் நாமம் சூட்டி வழிபட்டனர். அந்த ஊருக்கு சிநேகபுரி என  பெயரிட்டனர். பிறகு ஆம்பூர் என்றானது. ‘ஆம்பு’ என்றால் ‘காஞ்சோன்றி’ என்னும் செடி’ வகையைக் குறிக்கும். இந்த  செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ‘‘ஆம்பூர்’’ என பெயர் வந்திருக்கலாம். தென்காசியிலிருந்து 25 கி.மீ தூரம் அம்பா சமுத்திரம் சாலையில் சென்றால் கீழ ஆம்பூர் ஊர் வரும்.

3. மரகதவல்லி

மரகதவல்லி உடனுறை மூன்றீஸ்வர முடையார் - அத்தாளநல்லூர்
 
கயிலாய மலையில்  சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது வடக்கே தாழ்ந்து, தெற்கே  உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு  அனுப்பினார் சிவன்.  கயிலையில் திருமணம் நடக்கும் நேரத்தில் அகத்தியர் முதலான முனிவர்கள் இவ்விடம் வந்து சிவனையும் அம்பாளையும் நினைத்து வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சி அளித்தார். அதன் பின்னர் நாட்கள் சில கடந்த நிலையில் லிங்க மேனியும், அம்பாள் திருமேனியும் கிடைக்கப்பெற்று அவ்விடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. மூன்று லிங்கத்திருமேனி ஒரு கூட்டப்பட்டது என்பதால் இத்தல சிவநாமம் மூன்றீஸ்வரமுடையார் என்பதாகும். அம்பாள் மரகதவல்லி. இக்கோயில் அத்தாளநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

4. உலகம்மை நாயகி

உலகம்மை நாயகி உடனுறை ஸ்ரீபாபநாசநாதர் - பாபநாசம்

அசுர குருவான  சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன்.  ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை  அறிந்த இந்திரன் அவரை கொன்றுவிட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம்  பிடித்தது. இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் போக பொதிகை மலை அடிவாரம் வந்து தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கோயில் அமைத்து வழிபட்டார். அதன் பயனாக சிவன் இந்திரனின் பாவத்தை போக்கி அருளினார். பாவத்தை போக்கியதால் இத்தல சிவன் பாபநாச நாதர் என்னும் நாமத்தில் வணங்கப்படுகிறார். உலகை இரட்சித்து காப்பதால் இத்தல அம்பாளுக்கு உலகம்மை என்று நாமம். அம்பாசமுத்திரம்  அருகில் உள்ளது பாபநாசம்.

5. ஆவுடைநாயகி

ஆவுடைநாயகி உடனுறை அம்மையப்பன் - சேரன்மகாதேவி

உரோமச  முனிவர் கயிலாய மலையை அடைந்து தனக்கு நித்தியத்துவம் வேண்டுமென்று  ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  சிவபெருமானும் உரோமச முனிவருக்கு காட்சியளித்தார். இத்திருக்கோயிலுக்கு  அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன்  பக்தவச்சலராக காட்சியளித்தார். இரண்டு  சகோதரிகள் சேர்ந்து அம்மையப்பருக்கு கோயில் கட்டுவதற்காக  தாங்கள் செய்து வரும் நெல் குத்தும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு  பகுதியை சேமித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு கோயில் மூலஸ்தானம்  கட்டுவதற்கான பணம் சேரவில்லை. இதுகுறித்து அவர்கள் மிகவும்  கவலையடைந்து சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் மாலை நேரத்தில் முதியவராக அந்த சகோதரிகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டு உணவு  உண்டுவிட்டு அவர்களை வாழ்த்திச் சென்றார். சிவபெருமான்  வந்து சென்ற பிறகு அந்த சகோதரிகளின் இல்லத்தில் செல்வம் கொழித்தது.  சகோதரிகள் இருவரும் மூலஸ்தானத்தை கட்டினார்கள் என்பது வரலாறு. இதற்கு  சான்றாக கோயிலில் உள்ள தூணில் இரண்டு சகோதரிகள் நெல் குத்துவது போன்ற  சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சேரன்மகாதேவியில் உள்ள அம்மைநாதர் கோயிலாகும். திருநெல்வேலியிலிருந்து  சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் சேரன்மகாதேவி உள்ளது.

6. காந்திமதி

காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் -  செப்பறை

தாமிரபரணியின்  வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள  நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார். ஒருமுறை  தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க  முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று  இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின்  அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து  ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை  உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில்  கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த  இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு” எனக் கூறினார்.  அதன்படியே, சிற்பி ஒருவர் நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார்.  வழியில் ஓரிடத்தில் சிலை கனத்தது.

அதற்குமேல் அவரால் சிலையை சுமக்க  முடியவில்லை. சிலையை அவர் செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால்  தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையைக் காணவில்லை. அவர்  பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து  சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ  நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது,  நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். அதன் பக்கத்திலேயே ஒரு குழியில்  எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன்  மகிழ்ந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை  செய்தார். நடராஜருக்கும் தனி சந்நதி அமைத்தார். அவர் கட்டிய கோயில்  வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர்  இப்போதுள்ள கோயிலைக் கட்டினார்.

7. கோமதி

கோமதி அம்பாள் உடனுறை சங்கரலிங்க சுவாமி - கோடரங்குளம்

அன்னை உமையவள், பூலோகத்திற்கு தவமிருக்க வந்தபோது, தேவர்கள் பசுக்களாக  மாறி அவளைத் தரிசிக்க வந்தனர். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே அன்னையை  ‘‘கோமதி’’ என்றனர். ‘‘கோ’’ என்றால் ‘பசு’’. ‘‘மதி’’ என்றால், ‘‘நிலா போன்ற  முகமுடையவர்’’ பல்லாண்டுகளுக்கு முன்பு  கோடரங்குளம் பகுதியில் வசித்த சிவபக்தர் உஞ்சவிருத்தி  (தானம்) பெற்று வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவர் காகத்திற்கு சாதம்  வைத்தபோது அவை சாதத்தை வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். காகம் ஒரிடத்தில் சாதம் வைத்து, மலர் தூவி வழிபட்டதைக் கண்டு தோண்டியபோது  சுயம்பு லிங்கம் இருந்ததைக் கண்டார். அதனருகே அம்பாளின் திருமேனியும் இருந்தது. உடனே பூஜை செய்து வழிபட்டார்.  ஒரு  சமயம் பூஜை செய்ய சென்ற சிவபக்தர், ஊருக்கு வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர்.  அங்கு அவர் லிங்கத்தில் ஐக்கியமானார்.  அதுவே சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.

8. நல்ல மங்கை

நல்லமங்கை உடனுறை ஜமதக்னீஸ்வரர் -  கிளாங்காடு

ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும்  முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். விநாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப்  பகுதிக்கு வேட்டையாட வந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல்  திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான். மன்னனுக்கும்  பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர். எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு  என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல்  உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சில நச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான்.  முனிவர் ஜமதக்னியோ, அது தெய்வீகப் பசு. . . . ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது, என்று
மறுத்தார்.

அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு  கண்ஜாடை காட்டினார். அவ்வளவுதான் தனது கொம்புகளை சூழட்டு சிலுப்பிய  வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து  மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்த பின் மறைந்து போயிற்று, ஆயிரங்கைகள்  கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்து விட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம்  வைத்தான். கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமதக்னி முனிவர் சிவலிங்கத்தின்  முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரம் மாமுனியை சிரச்சேதம் செய்தான் மன்னன். பரசுராமன் பகைவர்களை  பழி தீர்த்தபின் தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஆலயம்  அமைத்தான். ஜமதக்னி வழிபட்ட ஈசன் என்பதால் ஜமதக்னீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

9. நித்ய கல்யாணி

நித்ய கல்யாணி அம்மை உடனுறை வில்வ வனநாதசுவாமி - கடையம்

சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களை அழிப்பதற்காக உமாதேவி இப்பூமியில்  அவதரித்து அவர்களை சம்காரம் செய்தருளினாள். இதனால் அம்மையின் பொன்மேனி கருமேனியாகி விட, இந்த துவாத சாந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி கடும்  தவம் செய்தாள். தேவியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமானும் அவர் முன்  தோன்றி அம்மையின் கரிய மேனியை பொன் நிற மேனியாக்கி, நித்ய கல்யாணியாக  இருக்கும்படி வரம் அளித்து ஆட்கொண்டருளினார். பிற்காலத்தில்  கிழக்கு நோக்கிய சந்நதியில் இருந்த இந்த நித்யகல்யாணி அம்மை மிகுந்த  உக்கிர தேவதையாக இருந்தாளாம். இவளுக்கு பூஜை செய்வதென்றால், கடும் விதிமுறைகளை  தவறாமல் பின்பற்ற வேண்டி இருந்ததாம். இதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் தண்டனைக்கு ஆளாகிவிடுவார்களாம். இதனால் கோயில் பக்கம் செல்லவே அனைவரும் அஞ்சினார்களாம்.

பிற்காலத்தில், தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட ஒரு சந்நதியில் அம்மை பிரதிஷ்டிக்கப்பட்டு,  அம்மையிடம் இருந்த பதினாறு கலைகளில், பதினைந்து கலைகளைப் பிரித்து மற்ற ஒரு  பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டதாம். இப்படி செய்யப்பட்ட பீடமே தரணி பீடம் என்று அழைக்கப்படுகிறது. பதினாறு கலைகளுள் ஒரு கலையுடன் சாந்த தேவியாக கிழக்கு நோக்கி மறு பிரதிஷ்டை  செய்யப்பட்ட பின்னரே அம்மைக்கு எளிதாக பூஜைகள் நடைபெறத் துவங்கின. இங்கே நித்ய கல்யாணி அம்மையானவள் துர்கையாகவும்,  லட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் இருந்து அருட்பாலிப்பதாக ஐதீகம். இங்கு வில்வ வனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் வில்வவன நாதர் எனப்பட்டார். அம்பாசமுத்திரம் - தென்காசி வழித்தடத்தில் உள்ளது கடையம்.

தொகுப்பு: ச. சுடலைகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்