SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்

2020-10-20@ 09:48:52

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தான் படைத்த தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலின் நிறைவாக வாழ்த்து எனும் பகுதியில் ‘‘ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே! ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே!’’ எனப் பாடிப் பரவியுள்ளார். அவர் குறிப்பிடும் ஆறு காவிரியின் கிளை நதியான அரிசிலாறு என்பதாகும். அதன் கரையில் திகழும் சொற்கிழத்தியாம் கலைமகளின் திருக்கோயில் கூத்தனூர் சரஸ்வதி ஆலயமாகும். தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் எனும் பேரூருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்ற கிராமத்தில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்காலக் கல்வெட்டொன்று ‘‘ஸரஸ்வதி தேவியை எழுந்தருளுவித்தார் இவ்வூர் ஐநூற்று… காணியுடைய மலர் உடையார் இந்தக் கவிச்சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தர்’’- என்று கூறுகிறது. எனவே, இக்கல்வெட்டுச் சான்று கொண்டு நோக்கும்போது ஒட்டக்கூத்தரின் குடும்பத்தாரால் இங்குள்ள சரஸ்வதிதேவி பிரதிஷ்டை செய்யப் பெற்றாள் என்பதறிகிறோம். அதனால்தான் தக்கயாகப்பரணியின் வாழ்த்தில் இத்தேவியைக் கூத்தர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் உள்ள கி.பி. 1492ஆம் ஆண்டுக்குரிய மற்றொரு கல்வெட்டு கும்பகோணத்திலிருந்த இஷ்டகா மடத்தைச் சேர்ந்த புருஷோத்தம பாரதி என்பவர் இந்தச் சரஸ்வதி தேவிக்குக் கொடுத்த தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. அச்சாசனத்தில் ‘‘ஞானசரஸ்வதி தேவி’’ என்ற பெயரால் அச்சொற்கிழத்தி குறிப்பிடப்பெற்றுள்ளாள். சோழர் காலத்தில் வடிக்கப்பெற்ற அந்த ஞானசரஸ்வதியின் திருவுருவத்தை இன்றும் நாம் அங்குத் தரிசிக்க முடிகின்றது. அத்தேவி அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தவாறு வலப்பின்கரத்தில் அக்ஷமாலையும், இடப்பின்கரத்தில் நீர்ப்பாத்திரமும், வலமுன் கரத்தால் வியாக்கியான முத்திரையும் காட்டி இடமுன்கரத்தில் சுவடி ஏந்தியவளாய் அருட் பாலிக்கின்றாள்.

இது சோழர்கால ஞானசரஸ்வதியின் திருவடிவமாகும். தற்போது வெள்ளியால் செய்யப்பெற்ற வீணை ஒன்றினை அவள் மடிமீது வைத்து அலங்காரம் செய்கின்றனர். தமிழ்நாட்டுச் சிற்ப மரபில் அத்தேவிக்கு வீணை உண்டா? என்பது பற்றியும் பத்மாசனம், சுகாசனம் என்ற இரு அமர்வு நிலைக்கு மாறுபட்டுக் கால்மீது கால் போட்டவாறு அமர்ந்துள்ள நிலையில் பண்டு அவள் திருமேனிகள் வடிக்கப்பெற்றனவா? என்பது பற்றியும் அறிதல் அவசியமான ஒன்றாகும்.

பல்லவர் காலந்தொடங்கி காலவரிசைப்படி தமிழ் வேந்தர்கள் அத்தேவியின் திருவடிவத்தை எவ்வாறெல்லாம் வடித்து ஆராதித்தனர் என்பதை இனிக் காண்போம். பல்லவர்காலப் பேரழகு வாய்ந்த சரஸ்வதியின் திருவுருவம் ஒன்று செங்கற்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் சுந்தரவரத பெருமாள் கோயிலில் உள்ளது. கி.பி. 750 காலகட்டத்தில் பேரரசனாக விளங்கிய இரண்டாம் நந்திவர்ம பல்லவன் அட்டாங்க விமானத்தோடு இக்கோயிலை எடுப்பித்தான். இவ்வாலயத்துக் கீழ்தளத்தில் உள்ள சுந்தர வரதரைத் தரிசிக்க, தெற்கு மற்றும் வடக்குத் திசைகளில் கைப்பிடிச் சுவர்களுடன் உள்ள இரு படிக்கட்டுகள் உள்ளன. தென்புறம் உள்ள கைப்பிடி சுவரில் அற்புதமான சரஸ்வதியின் திருவுருவம் இடம்பெற்றுள்ளது.

உயர்ந்த காம்புடன் கூடிய மலர்ந்த தாமரை மலர்மேல் வலக்காலை மடித்தும் இடக்காலைத் தொங்கவிட்டவாறும் சுகாசனமாக தேவி அமர்ந்துள்ளாள். வலமுன்கரம் அபயம் காட்ட இடமுன்கரம் தொடைமீது இருத்திய நிலையில் உள்ளது. வல மேற்கரத்தில் அக்கமணிமாலையும், இடமேற்கரத்தில் நீர்ப்பாத்திரமும் (ஜலகெண்டி) ஏந்தியுள்ளாள். தலைக்கு மேலாக மேகத்திரள்களும் அவற்றின் ஊடே சூல்கொண்ட மழை பொழியும் மேகங்களின் உருவகங்களாகத் துதிக்கையால் நீர் சொரியும் இரு யானைத் தலைகளும் காணப்பெறுகின்றன.

கீழே அமர்ந்த கோலத்தில் அடியவர் ஒருவர் மலர்கள் ஏந்தியும், மற்றொருவர் வணங்கிய கோலத்தில் மண்டியிட்டவாறும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கிடைத்துள்ள சரஸ்வதி தேவியின் தொன்மையான வடிவங்களுள் இது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். மரீசி சம்ஹிதை அடிப்படையில் எடுக்கப்பெற்றது இக்கோயிலாகும். அதில் கோயிலின் இப்பகுதியில் சரஸ்வதி தேவியின் உருவம் அமைக்கப்பெற வேண்டும் எனக் கூறப்பெற்றுள்ளது. மேலும், வைணவக் கோயிலான இதன் தென்புற விமானத்தில் தட்சிணா மூர்த்தி, சந்திரசேகரர், உமாமகேஸ்வரர், துர்க்கை, கணபதி ஆகிய வடிவங்கள் காணப்பெறுகின்றன.

முற்காலச் சோழர் காலத்தில் எடுக்கப்பெற்ற திருச்சி மாவட்டத்துத் துடையூர் சிவாலயத்தில் கோஷ்ட தெய்வங்கள் வரிசையில் தென்புறம் முதல் கோஷ்டத்தில் விளங்குவது சரஸ்வதி தேவியின் திருவடிவமாகும். இம்மூர்த்தம் தீச்சுவாலைகளுடன் உள்ள திருவாசி தேவிக்குப் பின்புறம் திகழ, தாமரைப் பீடத்தின்மேல் அர்த்த பத்மாசனத்தில் இருந்தவாறு வலமுன்கரம் சின் முத்திரை காட்ட, முன் இடக்கரம் சுவடி ஒன்றினை ஏந்தியவாறு அமைந்துள்ளது. வலப்பின்கரத்தில் உருத்திராக்க மாலையும் இடப்பின்கரத்தில் நீர்ச்சொம்பும் உள்ளன.

எழில்மிகு இச்சிற்ப வடிவில்தான் சோழர் காலம் முழுவதும் வாக்தேவியான சரஸ்வதியின் திருவுருவங்கள் தமிழகத்துத் திருக்கோயில்களில் (அமர்ந்த கோலத்திலேயே) இடம்பெற்றன.ராஜராஜ சோழன் எடுத்த தஞ்சைப் பெரிய கோயிலில் இடம் பெற்றுள்ள கோஷ்ட தெய்வமான சரஸ்வதியின் திருவுருவம் குறிப்பிடத்தக்கதாகும். அட்டமங்கல வாயில் எனப்பெறும் கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலின் வெளிப்புறம் தரை தளத்தை ஒட்டி மேற்கு நோக்கியவாறு திகழும் கோஷ்ட மாடத்தில் தாமரைப் பீடத்தின்மீது அர்த்த பத்மாசனமாக அமர்ந்தவாறு இடக்கையில் ஏட்டுச்
சுவடியை ஏந்திய நிலையில் இத்தேவி காணப்பெறுகின்றாள்.

சின் முத்திரை காட்டும் வலக்கரம் உடைக்கப்பெற்றுள்ளது. இங்குத் தேவிக்கு இரு கரங்கள் மட்டுமே உள்ளன. சரஸ்வதிக்கு இரு புறமும் இரு பெண்கள் (கங்கை, யமுனை) நின்றவாறு சாமரம் வீசுகின்றனர். திருமுடிக்கு மேலாகக் கொற்றக்குடையும் மரமொன்றும் திகழ அருகே இருபுறமும் விண்ணில் மிதந்தவாறு தேவியைப் போற்றும் சூரிய சந்திரர் உருவங்கள் காணப்பெறுகின்றன.ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன் எடுத்த கங்கை கொண்ட சோழபுரத்து விமானத்து வடபுற வாயிலில் தஞ்சையில் உள்ளது போன்ற சரஸ்வதி தேவியின் திருவுருவம் அமைந்துள்ளது. அகண்ட தாமரைப் பீடம், அதன் மேல் அர்த்த பத்மாசனக் கோலத்தில் தேவி அமர்ந்துள்ளாள்.

வலமுன்கரம் சற்றுச் சிறுத்து சுசிஹஸ்தமாகத் தற்போது திகழ்கின்றது. பண்டு இக்கரம் சின்முத்திரை காட்டும் கோலத்தில் திகழ்ந்து சிதைவு பெற்றமையால் பின்னாளில் இவ்வாறு மாற்றி அமைத்துள்ளனர். இடக்கரத்தில் சுவடியும், வலமேற்கரத்தில் உருத்திராக்க மணிமாலையும், இடமேற்கரத்தில் நீர்ப்பாத்திரமும் உள்ளன. பேரழகு வாய்ந்த திருமுகத்திற்குப் பின்புலத்தில் வேலைப்பாடமைந்த திருவாசி காணப்பெறுகின்றது. திருவாவடுதுறை, திருமங்கலம் போன்ற சிவாலயங்களில் சோழர்காலக் கலைப்பாணியில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த சரஸ்வதி தேவியே காணப்பெறுகின்றாள். அங்கும் வீணை இடம்பெறவில்லை.

திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் (பழம்பெயர் பிழிசூர்) சிவாலயத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1211) கல்வெட்டுச் சாசனத்தில் அக்கோயிலில் தற்போது வழிபாட்டில் திகழும் சரஸ்வதி தேவிக்கு அளித்த வழிபாட்டு நிவந்தம் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. களத்தூர் கிழவன் அரையன் தில்லையுள் வில்லியான குலோத்துங்க சோழ வாணகோவரையன் எழுந்தருளுவித்த சரஸ்வதியாற்குப் பூசைக்கு மூலதனமாக நான்கு வேலி நிலம் அளிக்கப்பெற்றமையை எடுத்துரைக்கின்றது. அங்கும் சரஸ்வதிதேவி அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தவாறு வீணை இன்றி அக்கமணிமாலையும், நீர்ச்சொம்பும் ஏந்தியவளாகவே காணப்பெறுகின்றாள்.

திருவரங்கம் திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் ‘‘ஸ்வஸ்தி'' பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த சரஸ்வதி பண்டாரத்துக்கு (நூலகத்திற்கு) சேஷமான இத்திருமண்டபத்து இவர் உகந்தருளிவித்து திருபிரதிஷ்டை பள்ளித்திருவாராதனம் கொண்டருளுகின்ற ஹயக்ரீவ நாயனார்க்கும், சரஸ்வதி தேவிக்கும், வேத வியாச பகவானுக்கும் திருவாராதனத்துக்கும் அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் உடலாக நூறாயிரம் காசு பண்டாரத்திலே ஒடுக்கவும் ’’ என்று தொடர்கின்றது. இவ்வழிபாட்டிற்காக ஒரு லட்சம் காசு முதலீடு செய்து அதன் வட்டியிலிருந்து ஆராதனை செய்யப்பெற்றது என்பதறிகிறோம். இன்றும் கல்வெட்டுக் குறிப்பிடும் சரஸ்வதி தேவி உள்ளிட்ட அத்திருமேனிகள் அங்குக் காணப்பெறுகின்றன.

திருக்கோயில்களில் நூலகங்கள் ‘‘சரஸ்வதி பண்டாரம்’’என்ற பெயரில் பேணிக் காக்கப்பெற்றதோடு அங்குச் சரஸ்வதி தேவியின் திருமேனியும் வழிபடப்பெற்று வந்தமையைத் தில்லை போன்ற திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தமிழக மன்னர்களோடு நெருங்கிய நட்பு பூண்டுப் பல ஆலயங்களை எடுத்த கெமர் மரபு மன்னர்கள் அமைத்த திருக்கோயில்களில் நூலகக் கட்டடங்கள் இன்றும் அங்கே காணப்பெறுகின்றன.

வடநாட்டில் பாலர் மரபு மன்னர்கள், கர்நாடகத்தில் ஹொய்சாள மரபினர் மற்றும் ஆந்திரத்தில் சில மரபினர் படைத்த திருக்கோயில் சிற்பங்களில் பத்மாசனத்தில் அமர்ந்தவாறோ அல்லது நின்றவாறோ வீணை ஏந்தியவளாகச் சரஸ்வதிதேவி காணப்பெறுகின்றாள். தமிழ்நாட்டு மரபில் சிற்பங்களில் வீணை என்பது சரஸ்வதி தேவியிடம் காணப்பெறவில்லை. கங்கைகொண்ட சோழபுரத்தின் சிவாலயத்து ஸ்ரீவிமானத்து வடபுற கோஷ்டத்தில் பிரம்மா தாடி மீசையுடையவராக நின்ற கோலத்தில் தர்ப்பை புல்கட்டு, நீர்ப்பாத்திரம், ஸ்ரூவம், ஸ்ருக் எனப்பெறும் வேள்விக் கரண்டிகள், அக்கமணி மாலை ஆகியவற்றை ஏந்தியவராக, தன் வலப்பக்கத்தில் சரஸ்வதி தேவியும், இடப்பக்கத்தில் சாவித்திரி தேவியும் நிற்க எழிலார்ந்த கோலத்துடன் காணப்பெறுகின்றார்.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற இவ்வகைக் கோலம் கௌட தேசத்துக் கலைப்பாணி தமிழகக் கலையுடன் சங்கமித்ததால் ஏற்பட்டதாகும். ராஜேந்திர சோழனும் அவன் புதல்வர்களும் வடபுல நாடுகளைக் கைப்பற்றிய போதெல்லாம் அங்கு அவர்களைக் கவர்ந்த எழில்மிகு தெய்வ வடிவங்களைத் தங்கள் வெற்றியின் நினைவாக எடுத்து வந்து கங்கை கொண்ட சோழபுரத்துத் திருக்கோயிலிலும் பிற கோயில்களிலும் பிரதிட்டை செய்து வழிபட்டனர். அத்தகைய சிற்பங்களுள் ஒன்றான உமாபரமேஸ்வரியே சரஸ்வதியாகத் திகழும் அபூர்வ திருமேனி ஒன்று கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கருவறை வாயிலை ஒட்டி பிரதிட்டை செய்யப்பெற்றுள்ளது.

அர்த்த பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ள இத்தேவி தன் வல முன்கரத்தில் அக்கமணிமாலையையும், இடமுன்கரத்தில் சுவடியையும் கொண்டவளாய் வலப்பின்கரத்தில் அங்குசமும், இடப்பின்கரத்தில்பாசமும் ஏந்தியவளாய்க் காணப்பெறுகின்றாள். இத்திருமேனி கௌட தேசத்தில் இருந்து கொண்டு வரப்பெற்றதாய் இருத்தல் கூடும். சாக்த மரபின் தேவி வழிபாட்டில் லலிதா திரிபுர சுந்தரியின் பல்வேறு கோல நிலைகளில் சரஸ்வதி வடிவமும் ஒன்றாகும்.

அபிராமி பட்டர், பாசாங்குசம் தரித்தவளாக அவளைப் பாடுவது இங்குச் சிந்திக்கத் தக்கதாகும்.‘‘கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே’’ என திருஞானசம்பந்தர் சரஸ்வதி தேவியைச் சிவபுரத்துத் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் தன் திருமந்திரத்தில் கலைமகள் பற்றி விவரித்துள்ளார். பின்னாளில் குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லிமாலை எனும் நூலில் பத்துப்பாடல்கள் மூலம் கலைமகளின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார். வள்ளலார் ராமலிங்க அடிகள் தம் திருவருட்பாவில் கலைமகள் வணக்கம் பாடியுள்ளார். தமிழ்நாட்டுச் சமய இலக்கியப் படைப்புகளிலும்,  தல புராண நூல்களிலும் சரஸ்வதி தேவிக்கு வீணை காட்டும் மரபு குறிக்கப்பெறவில்லை. வீணை என்பது சிவபெருமானுக்கே உரியது என்பதனை நூல்களும், கலைப்படைப்புகளும் எடுத்துரைக்கின்றன.

கி.பி. 1800 காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவியோடு வீணையினைக் காட்டும் மரபு ஏற்பட்டது. தஞ்சை மராட்டியர்களின் ஓவியப் பாணியில் வீணை காட்டும் மரபு தொடக்கம் பெற்றது. கி.பி. 1848 -- 1906 வரை வாழ்ந்த தலைசிறந்த ஓவியர் ராஜாரவிவர்மா தான் வரைந்த சரஸ்வதி தேவியின் ஓவியங்களில் கால்மீது கால்போட்டு அமர்ந்தவளாகத் தேவி வீணை வாசிப்பதாகக் காட்டினார். இது மேல்நாட்டு மரபில் வாத்தியங்களை வாசிக்கும் முறையாகும். நம் தமிழ்நாட்டு மரபில் அவ்வாறு அமரும் சிற்பங்களோ ஓவியங்களோ கிடையாது. ஆனால், ரவிவர்மா படைத்த சரஸ்வதி உருவமே நம் அனைவர் மனதிலும் கலைமகள் வடிவமாக நிலைத்துவிட்டது. அதுபோல தமிழ் இலக்கிய மரபில் பாரதியார்தான் ‘‘வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள்’’ எனக் கூறி வாணியின் வீணை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஔிர நிறுத்தல்
அன்னையாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என அம்மாக்கவி பாடியதையே வேதவாக்காகக் கொண்டு ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.
அதுவே வாணிதேவியை நாம் வழிபடும் உன்னத நெறியாகும்.

செய்தி: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

படங்கள்: மதுஜெகதீஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்