SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண தடை நீக்கும் வடுகீஸ்வரர்

2020-10-15@ 09:58:40

புதுச்சேரி திருவாண்டார்கோவில்

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள திருவாண்டார் கோவில் கிராமத்தில் வடுகீஸ்வரர் கோயில் உள்ளது. 22 நடுநாட்டு தலங்களில் 16வது தலமாக இக்கோயில் விளங்குகிறது. அஷ்டபைரவர்களுள் ஒருவரான வடுகபைரவர், முண்டகன் எனும் அசுரனை கொன்ற பழிதீர இந்த தலத்தில் வந்து வழிபட்டுள்ளார். இவ்வாறு வடுகர் வந்து வழிபட்ட ஊர் என்பதால் இந்த ஊர் பழங்காலத்தில் வடுகூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள ஈஸ்வரன் வடுகநாதர் என்று அழைக்கப்படுகிறார். நாளடைவில் இந்த ஊர் ஆண்டவனார் கோயில் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் ஆண்டார்கோயில் என்றாகி, தற்போது திருவாண்டார்கோவில் என மாறியிருக்கிறது.

கோயில் அமைப்பு

பழங்கால வரலாறுகள் பொதிந்து கிடப்பதால் இக்கோயில் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு பார்த்து வீற்றிருக்கும் சன்னதியில், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரம் இல்லை. வெளி பிரகாரத்தில் கோயில் வாயிலில் நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கட்டை கோபுர வாயில்களை கடந்து உள்ளே சென்றால் கொடிமர மேடை, நந்தி பலிபீடங்களை காணலாம். தெற்கு பிரகாரத்தில் நால்வர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னிமூலையில் வலம்புரி விநாயகரும், நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். மேலும் பிச்சாடனர், தட்சணாமூர்த்தி, துர்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரையும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.

வடகிழக்கு பகுதியில் பைரவர் மண்டபமும், கிழக்கே சூரியன் மண்டபமும் உள்ளது. தல விருட்சமாக வன்னிமரமும், தீர்த்தமாக வாமதேவ தீர்த்தமும் உள்ளது. திருமணத்தடை நீங்கும் இக்கோயிலின் நாயகரான வடுக பைரவரை மனமுருக வேண்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் மறையும். திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம் போன்ற பிரச்னைகள் இங்குள்ள வடுகீஸ்வரரை வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் ராகு கால பூஜை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

செல்வது எப்படி?

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 22 கிலோ மீட்டர் தூரத்திலும், விழுப்புரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் திருவாண்டார்கோவில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவது எப்படி?

சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு மிக்கது. பிரதோஷத்தின்போது முதலில் நந்தியபெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தை வணங்க வேண்டும். தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும். பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் ,சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.

அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வலம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை செண்டு திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படி நந்தியையும் ,சிவபெருமானையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம். நந்திபகவானுக்கு அருகம்புல் மாலை, சிவப்பு அரிசி, நெய் விளக்கு ஆகியவற்றை நந்திக்குப் படைத்தது வணங்க வேண்டும். மேலும் ஒரு பிடி அருகம்புல்லை நந்தியின் இரு கொம்பு களுக்கிடையே வைத்து வழிபட, சனியினால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் விலகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்