SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமனுக்கு விளக்கேற்ற நெஞ்சில் துணிவு பிறக்கும்!

2020-10-12@ 09:36:43

?33 வயதாகும் எனக்கு 21 வயதில் கட்டாயத் திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இத்தனை ஆண்டுகளாகத் தனியாகவே வசித்துவருகிறேன். நானும் மற்றவர்களைப் போல் குடும்பமாக வாழ ஆசைப்படுகிறேன். என் குழந்தையைத் தவிர எனக்கென்று எதுவும் இல்லை. எங்களை ஏற்றுக்கொள்ள மனிதாபிமானம் உள்ள யாராவது வருவார்களா? என் எதிர்பார்ப்பு தவறா? என் வாழ்விற்கு வழி காட்டுங்கள்.
- சரண்யா, மதுரை.


சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. விவரம் புரியாத வயதிலேயே திருமணம் நடந்து சரியான வாழ்வு அமையாமல் அவதிப்பட்டு வரும் உங்கள் உள்ளத்தின் எதிர்பார்ப்பு சரியானதே. அதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி சூரியன் கஷ்டத்தைத் தரக்கூடிய எட்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோருடன் இணைந்து அமர்ந்திருப்பது கடுமையான தோஷத்தினைத் தருகிறது. திருமண வாழ்வினைப் பொறுத்தவரை அத்தனை உசிதமான அம்சம் காணப்படவில்லை. எட்டாம் வீட்டில் சூரியன் - செவ்வாயின் இணைவும் சுக்கிரன் - கேதுவின் இணைவும் நல்லதொரு மணவாழ்வினைத் தராது. மீண்டும் ஒரு மணவாழ்வு என்பது நல்லபடியாக அமைவதற்கான அம்சம் உங்கள் ஜாதகத்தில் இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஜாதக பலன்படி தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் தொழில் முறையில் சிறப்பான பலனைத் தந்துவருகிறது. வேலைக்குச் செல்வதை விட சுயதொழில் செய்ய முயற்சியுங்கள். வீட்டில் வெறுமனே அமர்ந்திருந்தால் தேவையற்ற சிந்தனைகள் மனதினை ஆக்கிரமிக்கும். உங்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்யுங்கள். சிறிய அளவிலான உணவகம் அல்லது டைலரிங் போன்ற தொழில்கள் உங்களுக்கு கைகொடுக்கும். தற்போது செய்யத் துவங்கும் சுயதொழில் உங்கள் எதிர்கால வாழ்வினை வளமானதாக மாற்றும். திருவாதிரை நட்சத்திரம், மிதுனராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் நன்றாக உள்ளது. அவரை நன்றாக படிக்க வைத்து நல்ல உத்யோகத்தில் அமர்த்துவதோடு நல்லதொரு வாழ்க்கையையும் அமைத்துத் தர உங்களால் இயலும். உங்கள் சொந்தக்காலில் நிற்க முயற்சியுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பிரதி சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். வாழ்வினில் வெற்றி பெறுவீர்கள்.

?37வயதாகும் என் மகனுக்கு கடந்த 5 வருடங்களாக பெண் தேடியும் ஒன்றும் அமையவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துவிட்டேன். என் மகன் என்னை கேவலமாகப் பேசுகிறான். என் மனைவிக்கும் சில காலமாக உடல்நிலை சரியில்லை. மகனுக்கு திருமணம் செய்யாமலேயே இறந்து விடுவோமோ என்ற பயம் அவரை வாட்டுகிறது. மகனின் திருமணத்திற்கு வழிகாட்டுங்கள்.
- ஈஸ்வரன், வாலாஜாபேட்டை.


உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாக உள்ளதால் தோஷம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் ஏழாம் பாவக அதிபதி சனி
உச்சம் பெற்றாலும் வக்ர கதியில் அமர்ந்துள்ளதால் திருமணத் தடை உண்டாகி வருகிறது. குருவும் வக்ரகதியில் சஞ்சரிப்பது மேலும் தாமதத்தை உண்டாக்குகிறது. அவரது ஜாதக பலன்படி உறவுமுறையில் நீண்ட நாட்களாக விலகியிருந்த ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் அமைவார் என்பதை அறிய முடிகிறது. பெண்ணை வெளியில் தேடாமல் தாயார் வழி உறவினர்கள் வழியில் தேடுங்கள். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை, போக்குவரத்து நின்றுபோன குடும்பமாக இருந்தாலும் பழைய மனக்கசப்புகளை மறந்து போய் பெண் கேளுங்கள். மகனின் திருமணத்தை உங்கள் மனைவி நிச்சயம் பார்ப்பார். மனக்கவலை ஒன்றைத் தவிர அவரது உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏதும் இல்லை. குரு, சனி ஆகியோரின் வக்ர சஞ்சாரம் குரு சாபம் இருப்பதை உணர்த்துகிறது. நீங்கள் குல குருவாக எண்ணியிருக்கும் ஆசார்ய பீடத்திற்கு மகனையும் அழைத்துச் சென்று நமஸ்கரியுங்கள். குருமகான்களின் ஆசிர்வாதம் பூரணமாக கிடைக்கும் பட்சத்தில் உங்கள் மகனின் திருமணம் 23.10.2021க்குள் நிச்சயமாகிவிடும்.

?என் மகன் தற்போது பி.காம். படிப்பை முடித்திருக்கிறார். அரியர் ஏதும் இல்லை. மேற்கொண்டு படிப்பைத் தொடரலாமா? அவன் நடவடிக்கையில் தற்போது தீய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவன் எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருக்கிறது. அவனது வாழ்வு சிறக்க நல்ல வழி கூறுங்கள்.
- மீனாட்சி, தஞ்சாவூர்.


கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் பயம் நியாயமானதாகவே தோன்றுகிறது. அவரையும் அறியாமல் கூடாநட்பில் விழுந்திருக்கிறார். ஜென்ம லக்னாதிபதி சனியும், நல்வழியைக் கற்றுத்தரும் குருவும் வக்ரகதியில் சஞ்சரிப்பதோடு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுவின் தசாபுக்தி காலமும் இணைந்து அவரை வேண்டாத வழியில் நடக்க வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த நேரம் இன்னும் ஒன்றரை ஆண்டிற்குள் முடிவிற்கு வந்துவிடும் என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உத்யோகத்தைக் குறிக்கும் பத்தாம் பாவகம் பலமாக அமைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் அவரை மேற்கொண்டு படிக்கச் சொல்லுங்கள். முதலில் சற்று சிரமப்பட்டாலும் போகப்போக சரியாகிவிடும். 2021ம் ஆண்டின் இறுதியில் நல்ல ஆசிரியர் ஒருவருடனான தொடர்பு இவரை நல்வழிப்படுத்தும். அதுவரை உங்கள் மகனின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதோடு அவரை பொறுமையாகக் கையாள வேண்டியதும் அவசியமாகிறது. அரசுத்தரப்பு வங்கி சார்ந்த பணியில் இணைந்து வளமான வாழ்வினை எதிர்காலத்தில் காண்பார். ஞாயிற்றுக்கிழமைதோறும் ராகு கால வேளையில் சரபேஸ்வரருக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மகனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

?எனக்கு அடிக்கடி உடலில் உபத்திரவங்கள் வருகிறது. வீட்டில் அக்னி மூலையில் படுக்கை அறை, ஜல மூலையில் கிச்சன் என மாறியிருக்கிறது. பலரும் இதுதான் காரணம் என்கின்றனர். இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?
- நாராயணசாமி, கோவை.


ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. படுக்கை அறை என்பது அக்னி மூலையில் இருப்பதால் உடல் ஆரோக்யம் கெடும் என்ற கூற்று உண்மைதான். இருந்தாலும் வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்னையை சமாளிக்க உங்கள் ஜென்ம லக்னம் துணையாக இருந்துள்ளது. மேலும் தற்போதைய உங்களின் வயதும் உடல் ஆரோக்யப் பிரச்னையை எதிர்கொள்ள துணைபுரியவில்லை. 78வது வயதில் இருக்கும் நீங்கள் உடல் ஆரோக்யம் கருதி அக்னிமூலையில் அமைந்திருக்கும் படுக்கை அறையைப் பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து உறங்குங்கள். அக்னி மூலையில் படுத்து உறங்குவதால் உடல் ஆரோக்யம் கண்டிப்பாக வலிமையை இழக்கும். முடிந்த வரை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள். அக்னி மூலையில் அமைந்துள்ள அந்த அறையை படிப்பதற்கு ரீடிங் ரூம் ஆக பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க ஈசான்ய பாகத்தில் (வடகிழக்கு மூலையில்) தண்ணீர்க் குடம் ஒன்றினை வைத்து அதில் உள்ள நீரை தினமும் குடிப்பதற்கு உபயோகப்படுத்தி வாருங்கள்.  உங்கள் ஜாதக பலன்படி 14.01.2021 முதல் உடல்நிலையில் அதிக கவனம் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளீர்கள். தினமும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 16 முறை சொல்லி தந்வந்திரி பகவானை வணங்கி வாருங்கள். உடல் ஆரோக்யம் சீரடையும். “ஓம் நமோ பகவதே வாஸூதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசனாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ:”

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்