SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும்

2020-10-08@ 09:44:53

நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறு கூறும் சேக்கிழார்பெருமான் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில் ஒவ்வொருவர்தம் வரலாறு உரைத்த பின் நிறைவுப் பகுதியில் மூன்று கடைப்பாடல்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களில் அந்நாயனார் சிவனார் கழல் அடைந்த திறத்தைச் செப்பியுள்ளார். பெரும்பாலும் சிவலோகம் அல்லது சிவபுரி அடைந்தார் என்றும், சிலரை கயிலை சார்ந்தார் என்றும், சிலரை மலரடி அல்லது சேவடி நீழல் சார்ந்தார் என்றும், திருநிழற்கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் என்றும், அடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழுதிருந்தார் என்றும் பலபட உரைத்துள்ளார். நாவுக்கரசு பெருமான் திருப்புகலூர்ஈசன் திருவடியில் ஒன்றியமையையும், காழிப்பிள்ளையாரோ நாயன்மார் சிலரும்,அடியார் சிலரும் துணைவர தம் மணவாட்டியின் கரம் பற்றியவாறு  நல்லூர்பெருமணமாம் திருக்கோயிலில் எழுந்த சோதியுள் நுழைந்த திறமும் கூறியுள்ளார். அறுபத்து மூவருள் ஒன்பது பேர் மட்டும் தில்லை மன்றுளாடும் பெருமானின் கழல் சேர்ந்த மாண்புதனை எடுத்துரைத்துள்ளார்.

இயற்பகை நாயனாரின் உண்மையான அன்பின் திறம் கண்ட சிவபெருமான் நாயனார் தம் மனைவியோடு எம்பால் வருக எனக்கூறி உமாதேவியோடு விண்ணில் காட்சிதந்து அருளி அவரை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தன்னுடன் வருக எனக்கூறி பொற்பொது எனப்பெறும் தில்லைச் சிற்றம்பலத்திற்குள் ஈசனார் புகுந்தார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார். இதனை, ‘‘பழுதிலாய் நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுகென்று, நீடு பேறளித்து இமையோர் ஏத்தப் பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது அதனுட் புக்கார் ‘‘ எனவும், ‘‘ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்’’ என்றும் அவர் குறிப்பதிலிருந்து இயற்பகையார் தில்லைக்கூத்தப் பெருமானோடு சிவலோகம் எய்தினார் என அறியமுடிகிறது.

ஏனாதி நாயனாரை அதிசூரன் வஞ்சனையால் வாளால் வீழ்த்தியபோது நாயனார் முன்பு தோன்றிய சிவபெருமான் அவர் முன்பு தோன்றி தன்னைப் பிரியாத நிலையை அவர்க்கு அருளி பின்பு பொன்னம்பலத்திற்குள் புகுந்தார் என்பதை சேக்கிழார் பெருமான் எடுத்துரைத்துள்ளார். இதனை, ‘‘என்றும் உடன் பிரியா அன்பருளிப் பொற்றொடி யாள் பாகனார் பொன்னம் பலம் அணைந்தார்’’எனப் பெரிய புராணம் குறிக் கின்றது. இங்கு உடன்பிரியா நிலையையும், பொன்னம்பலம் புகுந்தமையையும் காண்கிறோம்.

திருநாவுக்கரசு பெருமானாரையே நாளும் நினைந்து சிவப்பணி மேற்கொண்ட அப்பூதியடிகளார் நிறைவாகத் திருத்தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தனின் திருவடியில் ஒன்றினார் என்பதை சேக்கிழார் பெருமான், ‘‘செவ்விய நெறியதாகத் திருத்தில்லை மன்றுள் ஆடும் நவ்வியங் கண்ணாள் பங்கர் நற்கழல் நண்ணினாரே’’எனக் குறித்துள்ளார். சத்தி நாயனாரும் தான் மேற்கொண்ட சிவப்பணி நிறைவுற்று முதுமை பெற்று தில்லை மன்றில் ஆடும் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தவர் என்பதைப் பெரியபுராணம் ‘‘மன்றுள் ஆடுவார் செய்யப் பாதத் திருநிழல் சேர்ந்தனர்’’எனக் குறிப்பிடுகின்றது. செருத்துணையார் பொன்னிநதி வளஞ்செய்யும் மருகல்நாட்டுத் தஞ்சாவூரில் பிறந்து ஆரூர் ஆழித்தேர் வித்தகருக்கு அரும்பணிகள் பல ஆற்றி நிறைவாகத் தில்லை கனகசபையில் திருக்கூத்தாடும் பெருமானின் தூக்கிய திருவடியின் நிழலினை அடைந்து முக்தி பெற்றார் என்பதை திருத்தொண்டர்புராணம், ‘‘பொன்மன்றுள் எடுத்த பாத நிழலடைந்தே இறவா இன்பம் எய்தினார்’’எனக் கூறுகின்றது.

திருநின்றவூரில் மனத்திலே கோயில் கட்டி பெருமானை அங்கு புகச்செய்த பூசலார், அந்த ஈசனுக்கு பல காலம் பூசனை செய்து நிறைவாகத் தில்லைப் பொது எனப்பெறும் சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானின் கழலணிந்த திருப்பாத நீழலில் புகுந்தார் என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு. இதனைப் பூசலார் நாயனார் புராணம்,

‘‘அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்
 நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்
 பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாட்பேணிப்
 பொன்புனை மன்றுளாடும் பொற்கழல் நீழல் புக்கார்’’
என்று உரைக்கின்றது.
என் தோள் ஈசனாகிய சிவபெருமானுக்கு எண்பது மாடக் கோயில்களையும் செங்கண் மாலுக்கு எட்டு மாடக் கோயில்களையும் எழுப்பியவனான கோச்செங்கணான் எனும் சோழமன்னன் நற்றொண்டுகள் பல புரிந்து நிறைவாகத் தில்லை மன்றுளாடும் பெருமானின் திருவடி நிழற்கீழ் நிலைபெறும்பெரும்பேறு பெற்றார். முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து வாய்நூற் பந்தலால் பெருமானுக்குக் கோயில் செய்த அப்பெரு மகனின் சிறப்புரைக்கும் சேக்கிழார்பெருமான்,‘‘தேவர் பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன்
 பூவலயம் பொதுநீக்கி ஆண்டருளிப் புவனியின்மேல்
 ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடிபோற்ற
 மேவினார் திருத்தில்லை வேந்தர்
திருவடி நிழற்கீழ்’’
எனப் பாடிப் போற்றியுள்ளார்.

திருநாளைப்போவார் என அழைக்கப்பெற்ற மேற்காநாட்டு ஆதனூரினராகிய நந்தனார் தீயின்கண் உட்புகுந்து திருமஞ்சனம் கொண்டு மாமறையவர் கோலத்துடன் பொன்னம்பலத்தின் எல்லையில் புகுந்த அளவிலேயே ஒருவரும் காணாதவாறு பேரம்பல வெளியில் கரைந்தார். இதனைக் கூறிய சேக்கிழார் பெருமான் திருநாளைப் போவார் புராணத்தின் நிறைவுப் பாடலில்,
‘‘மாசுஉடம்பு விடத்தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
 ஆசில் மறைமுனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தி ….’’
எனப் போற்றிப் பரவியுள்ளார்.

இவ்வாறு இயற்பகையார் எனும் புகார் நகரத்து வணிகரும், ஏனாதிநாதர் எனப்பெறும் எயினனூர் ஈழக்குல சான்றாரும் அப்பூதி அடிகளார் எனப்பெறும் திங்களூர் ஆதிசைவ அந்தணரும், காவிரிநாட்டு வரிஞ்சையூர் எனும் ஊரினரான சத்தியார் எனப்பெறும் வேளாளரும், மருகல் நாட்டுத் தஞ்சாவூரினராகிய செருத்துணையார் எனும் வேளாளரும், தொண்டைநாட்டுத் திருநின்றவூரினராகிய பூசலார் எனும் வேதியரும், சோழர்குடியில் பிறந்த கோச்செங்கணானும் தில்லை அம்பலவனின் பொற்தாள் நீழலில் நிலையாய் இருக்கும் பேறு பெற்றனர். ஆனால், சிவமறையோரிலிருந்து சான்றார் வரை இப்பேரருளாளர்களுக்குக் கிட்டாத பெரும்பேறு ஆதனூர் புலையரான நந்தனாருக்குக் கிட்டியது. பரசிவம் எனும் ஆகாச சிவனாராகிய பெருமானின் தில்லைப் பெருவெளியோடு தன்னைக் கரைத்துக்கொண்டு அவன் தாளில் ஒன்றியவர் திருநாளைப்போவாராவார்.

சாதிகளைக் கடந்ததுதான் சைவநெறி. நாயன்மார் ஆகிய இந்த எண்மரிலிருந்து வேறுபட்ட நிலையில் தில்லைக்கூத்தனின் தாளடைந்தவர் ஆனாயநாயனாராவார். பொன்னி நாட்டின் வடபால் அமைந்த மேற்கு மழநாட்டில் மங்கலம் எனும் மூதூரில் ஆயர்குலம் எனும் இடையர் குலத்தில் உதித்த ஆனாயர் வேய்ங்குழலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தினை வாசிக்கும் இயல்பினைப் பெற்றிருந்தார். நாளும் பசுக்கூட்டங்களை மேய்ப்பவரான இந்த இடையர் தம் இசையால் அனைத்துயிர்களையும் மெய்மறந்திடச் செய்யும் இயல்பு பெற்றிருந்தார்.

ஆயர்குல (இடையர்குல) இச்செம்மல் எத்தகைய கோலத்துடன் திகழ்ந்தார் என்பதை அவர் புராணம் உரைத்த சேக்கிழார்பெருமான் நான்கு பாடல்களில் விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். தலையில் வாசமலர் பிணை, கண்ணித்தொடை, பாசிலை மென்கொடி ஆகியவற்றைப் புனைந்தவராக, காதுகளில் கோலமலர் சூட்டி, நெற்றியில் திருநீறு தரித்தவராக, மார்பில் முல்லைப்பூ மாலை அழகுசெய்ய இடுப்பில் மரவுரி தரித்து பட்டு ஆடையுடன் திகழ்ந்தார் என்றும், அவர் காலில் தோல் செருப்பு அணிந்து கையில் வெண்கோலும், வேய்ங்குழலும் கொண்டு ஆநிரைகளை மேய்க்கச் சென்றார் என்று கூறியுள்ளார். அவர் கோலநிலை காட்டும் நான்கு பாடல்களில் நான்காம் பாடலாக,
‘‘சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும்
மேவும் இசை வேய்ங்குழலின் மிக விளங்க வினை செய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடை
ஆன்நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார் நிரை
காக்கப் புறம்போந்தார்’’

என்று கூறி அவர் செருப்புடன் திகழ்ந்த கோலத்தை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.செருப்பு தரித்த இக்கோலத்தோடு ஆனாயர் தங்குழலில் ஐந்தெழுத்தின் திறமதனை இன்னிசையோடு வாசிக்கத் தொடங்கினார். அவர்தம் குழலிலிருந்து வெளிப்பட்ட இசை வௌ்ளமானது அனைத்து வகை உயிர்களின் செவியிலும் கற்பகத் தருவின் விளைதேனைத் தௌ்ளமுதுடன் கலந்து வார்த்தார் போன்று புகுந்தது. விலங்கினங்கள் பகைமறந்து ஒன்றி நின்றன. குழலொலி மிகமிக அது வையகம் முழுவதும் கடந்து விசும்பின் வழியே நிறைவாக தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் ஐயனின் திருச்செவியினை அடைந்தது.

இசையுருவே ஆன கூத்தன் கருணையே வடிவமான உமையம்மையோடு நீள்விசும்பில் தோன்றி ஆனாயரை நோக்கி ‘‘அன்பனே குழல் வாசித்துக் கொண்டிருக்கும் இந்நிலையிலேயே (திருக்கோலத்துடன்) நம்பால் அணைவாய்’’என்று கூறி அருளினார். அதன்படி கூத்தப் பெருமானுடன் செருப்பு அணிந்த கோலத்துடன் குழல்தனை இசைத்தவாறே தில்லைப் பொன்னம்பலமாகிய பொதுவினுள் ஏகினார். மீண்டும் ஆனாய நாயனார் புராணம் பாடிய சேக்கிழார்பெருமான் கூறியுள்ளமையை ஆழ்ந்து நோக்குவோம். அப்புராணத்தின் பதினெட்டாம் பாடலில் நாயனாரின் கோலநிலையை எடுத்துரைக்கும்போது, ‘‘சேவடியில் தொடுகோலும், செங்கையினில் வெண்கோலும், மேவும்இசை வேய்ங்குழலின் மிகவிளங்க’’ என்று கூறுபவர் நிறைவில் நாயனார் முன்பு தோன்றிய ஈசன், ‘‘திருக்குழல் வாசனை கேட்க இந்நிறைநிலையே நம்பாலணைவாய்’’ எனக்கூற, நாயனாரும், ‘‘அந்நிறைநிலை பெயர்ப்பார் ஐயர் திருமருங்கணைந்தார்’’ என்றும், ‘‘அண்ணலார் குழற்கருவி அருகு இசைத்து அங்கு உடன்செல்லப் புண்ணியனார் எழுந்தருளிப் பொற்பொதுவின் இடைப்புக்கார்’’என்றும் கூறுவதை ஈண்டு சிந்தித்தல் வேண்டும். கூறியதை மீண்டும் மீண்டும் கூறாமல் இருப்பதும், குறிப்பால் தெளிவுற உணர்த்துவதும் அவர்தம் தமிழின் உயர்சிறப்பாகும். ‘‘இந்நிறைநிலையிலேயே’’என்பது மலர் மாலைகள் சூடியமையையும், மரவுரியும், பூம்பட்டும் இடுப்பில் தரித்தமையையும், காலில் தோல் செருப்பு அணிந்தமையையும், வெண்கோலும், வேய்ங்குழலும் கையில் கொண்டவாறு ஐந்தெழுத்தினை வாசித்துக் கொண்டிருந்த நிலையைச் சுட்டுவதாகும்.

இவை அனைத்தையும் நோக்கும்போது செருப்பணிந்த கோலத்தோடு தில்லை மன்றுள் புகுந்தவர் இவர் ஒருவரே என்பது ஐயம்திரிபற விளங்கும். செருப்பு அணிந்தவாறே ஈசனோடு ஒன்றியவர்கள் ஆனாயரும் கண்ணப்பரும்தான். ஏழே நாளில் சிவகதி பெற்ற உடுப்பூர் வேடராகிய திண்ணனார் (கண்ணப்பர்) தன் செருப்புக் காலால் காளத்தி மலைமேல் இருந்த குடுமித் தேவரின் (லிங்கப் பெருமானின்) தலைமிசை சிவகோசரியார் இட்டுச்சென்ற மலர்களைத் தள்ளினார். பின்பு பெருமானின் இரண்டாம் கண்ணிலிருந்து குருதி வந்தபோது தன் கண்ணை அகழ்ந்து அவ்விடத்தில் வைக்க அடையாளமாக செருப்பணிந்த தன் காலை அக்கண்மிசை வைத்தவாறு தன் செயலில் முனைந்தார். பின்பு பெருமான் அருளால் செருப்பணிந்த காலுடன் அவர்தம் வலப்பக்கத்தில் நிலையாக நிற்கும் பேறு பெற்றார்.

பெரியபுராண நாயன்மார் தம் வரலாற்றை விளக்கிடும் சிற்பக் காட்சிகளைத் தன்னகத்தே கொண்ட தாராசுரம் சிவாலயத்தில் ஆனாய நாயனாரின் புராணத்தை விளக்கிடும் சிற்பக் காட்சியும், கண்ணப்பர் புராணம் காட்டும் சிற்பக் காட்சிகளும் உள்ளன. ஆனாயர் குழலிசைக்க அனைத்து உயிர்களும் மெய்மறந்து நிற்க விடை மீது சிவபெருமான் எழுந்தருளும் காட்சி அங்கு காணப்பெறுகின்றது. அதுபோலவே கண்ணப்பர் காளத்தியப்பரை காலால் மிதித்தவண்ணம் தம் கண்ணை அகழ்ந்தெடுக்க முற்படும் காட்சியும், இராஜகம்பீரன் திருமண்டபத்தில் வில்லும் அம்பும் ஏந்திய நிலையில் மரவுரி தரித்து செருப்புக் காலுடன் அக்கோயிலின் மூலவரை வணங்கி நிற்பவராக உள்ள பேரெழில் வாய்ந்த சோழர் காலச் சிற்பமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருவெண்காட்டுத் திருக்கோயிலின் சோழர்காலச் செப்புத் திருமேனி ஒன்றில் செருப்புக் காலுடன் கண்ணப்பர் அகழ்ந்த கண்ணைக் கையில் கொண்டவாறு நிற்கும் எழிலாற்காட்சி காணப்பெறுகின்றது.

தில்லை அம்பலவன் திருக்கூத்து ஆடும் பொற்சபை சென்று அவன் திருநடங் காணும்போது கனகசபாபதியின் தூக்கிய திருவடி நிழலில் இவ்வருளாளர்கள் ஒன்றிய திறத்தை ஒருகணம் சிந்திப்போமாயின் நிச்சயம் உடல் சிலிர்க்கும். திருக்காளத்தி மலையின் தேவனும் தில்லைப் பொன்னம்பலத்துக் கூத்தனும் அடியார்பால் கொண்ட அன்பின் திறத்தால் அவர்கள் அணிந்த செருப்புக்களுடன் அவர்களைத் தன் கோயிலில் இணைத்துக் கொண்டான். அன்பே சிவம். அதுவே நாம் வணங்கும் தெய்வம்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்