SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினம்

2020-10-08@ 09:19:23

குறளின் குரல்:133

வெகுளாமை என்றொரு அதிகாரத்தையே படைத்தவர் வள்ளுவர். கோபம் கொள்வது தவறு என அந்த அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் மூலம்வலியுறுத்தியவர். 'தன்னைத் தான் காக்கின் சினம்காக்க’ என்றும், `செல்லிடத்துக் காக்கின் சினம் காக்க’ என்றும் அறிவுரை வழங்கியவர். 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என சினத்தின் தீமையை விளக்கி எச்சரித்தவர்.ஆனால் சில குறட்பாக்களில் வள்ளுவரே சினம் கொண்டு சீறுகிறார். இது முரணானதா? அல்ல. தனிப்பட்ட முறையில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது தேவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அறச்சீற்றம் மிக மிக அவசியம். சமுதாயத்தில் அறச் சீற்றம் மங்குமானால் நெறிமுறைகள் அழிந்துபோகும். சமுதாயம் நிலைத்தடுமாறும்.குற்றவாளிகளைத் தண்டிக்கும்போது அரசனுக்குக் கோபம் அவசியம். கோபமே கொள்ளாமல் இருந்தால் தண்டனை வழங்குவது எப்படி சாத்தியமாகும்? அதனால்தான்,

‘கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்’
(குறள் எண்:550)


எனக் குறளெழுதினார் வள்ளுவர். கொலைபோன்ற குற்றம் செய்பவர்களைத் தக்கபடித் தண்டிப்பது, பயிரைக் காக்கக் களைகளை நீக்குவதைப் போன்றது என்றார்.சான்றோர் கோபம் கொள்வதும் உண்டென்றும் அப்படிக் கோபம் கொண்டால் அக்கோபத்தைத் தாங்க இயலாது என்றும் ஒரு குறளில் அவர் பேசுகிறார்.

‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது’
குறள் எண்:29)


நற்குணங்களாகிய மலையின் மேல் ஏறிநிற்கும் சான்றோர் வெகுண்டால் அந்தக் கோபத்தைத் தாங்க இயலாது என்கிறார்.... திருக்குறளில் வள்ளுவர் தன்னையும் மீறிக் கோபம் கொள்ளும் இடங்களைப் பார்ப்போமா? அந்த இடங்களில் எல்லாம் அவரின் அறச் சீற்றம் பளிச்செனப் புலப்படுவதைக் காணலாம்.

‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’
(குறள் எண்:214)

உலகப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவி செய்பவனே உயிர்வாழ்பவன் ஆவான். பிறர்படுகின்ற துன்பம் அறிந்தும் உதவி செய்யாமல் வாழ்பவன் செத்தவனாகக் கருதப்படுவான். இவன் மட்டுமா செத்தவன்? உயிரோடு வாழும் பிணங்களில் இன்னொருவனும் உண்டு.

‘விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்
இல் தீமை புரிந்தொழுகு வார்’
(குறள் எண் 143)


நம்பியவனின் மனைவியிடத்துக் கெடுதல் செய்து வாழ்பவன் உயிருடன் இருந்தாலும் இறந்தவனே ஆவான் என்கிறது வள்ளுவம். `பிறன் இல் விழையாமை’ எனத் தனி அதிகாரமே எழுதி, பிறன்மனை நோக்காத பேராண்மையைப் போற்றியவர் அல்லவா வள்ளுவர்?

‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.’
(குறள் எண் 196)


பயனற்ற பேச்சைப் பேசி வெட்டி அரட்டை அடிப்பவர்களை மனிதர்கள் என அழைத்தல் பொருந்தாது. அவர்கள் நெல்லின் இடையே இருக்கும் பதரைப் போன்றோர் ஆவர். பதர் பார்ப்பதற்கு நெல்லைப் போன்றே இருக்கும். ஆனால் உள்ளீடாக அதில் ஒன்றும் இராது. சிலவகை மனிதர்களைச் செத்தவர்கள் என்றும் பதர் என்றும் சினந்து சொன்ன வள்ளுவர், சிலரைப் பேய் என்றும் வைகிறார்! அவரின் கோபம் உச்சத்தில் இயங்கும் இடம் அது!

' உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.’
(குறள் எண் 850)


உலகோர் அனைவரும் உண்டென்று சொல்லும் ஒன்றை இல்லை என மறுப்பவனைப் பேய் என வசைபாடுகிறது வள்ளுவரின் உள்ளம்!

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’
(குறள் எண் 1062)


பிச்சையெடுத்தாவது உயிர் வாழும் நிலைமையை உருவாக்குகிறான் இறைவன் என்றால் அந்த இறைவன் பிச்சையெடுப்பவனைப் போலவே திரிந்து கெடட்டும் என எழுதுகிறார். கடவுள் வாழ்த்து எழுதித் திருக்குறளைத் தொடங்கிய வள்ளுவருக்குக் கடவுள் மேலேயே கோபம் வரும் இடம் இது. வானம்பாடி திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதி டி.எம். செளந்தரராஜன் பாடியுள்ள பாடலும் இப்படி இறைவன்மேல் கோபம் கொண்டு எழுதப்பட்டதுதானே?
'கடவள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
- அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
- அவன்

பெண் என்றால் என்னவென்று உணர வேண்டும்!’
'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?’
(குறள் எண் 420)


செவியால் உணரும் கேள்விச் செல்வம் பற்றி அறியாமல் வாய்ச்சுவையை மட்டுமே அறிந்த மனிதர்கள் இருந்தால் என்ன, இல்லை இறந்தால்தான் என்ன எனச் சீறுகிறது வள்ளுவரின் மனம்.

'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்
பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.’
(குறள் எண் 166)


பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டுத் தடுக்கிறவனின் சுற்றம் உடையும் உணவும் கிடைக்காமல் கெட்டழியும். இது வள்ளுவர் விடும் சாபம்!

'தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.’
(குறள் எண் 964)


தன்னிலையிலிருந்து தாழ்ந்தவர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிரைப் போன்றவர்கள் என்று சீறுகிறார் வள்ளுவர்.
‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’
(குறள் எண் 969)


இந்தக் குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் மானம் என்ற சொல்லுக்குத் தரும் உரை விளக்கம் இதோ: `தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.’தன்னிலை தாழ்ந்து இழிந்தவர்களைத் தலையிலிருந்து உதிர்ந்த மயிரோடு ஒப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை.

'வசையொழிய வாழ்வாரே வாழ்வார்
இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.’
(குறள் எண் 240)


தோன்றில் புகழொடு தோன்றுக என்று புகழைக் கொண்டாடும் வள்ளுவர், புகழின்றி
வாழ்பவர் இறந்தவர்க்குச் சமம் என்கிறார்.
`சொல்லப் பயன்படுவர் சான்றோர்
கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.’
(குறள் எண் 1078)


சொன்னாலே சான்றோர் கொடை
கொடுப்பர். ஆனால் கீழ்மக்கள் கரும்பைச்
சாறு பிழிவதுபோல், வலியவன் வந்து
வருத்தினால்தான் எதையாவது அளிப்பார்கள்
எனச்சொல்லிகொடை தராத கீழ்மக்களைச் சாடுகிறார்.
`ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.’
(குறள் எண் 1003)

பொருள் தேடுவதை மட்டுமே விரும்பிப் புகழைத் தேடுவதை விரும்பாத ஆடவர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா? அவர்கள் பூமிக்குப் பாரம் என்கிறார்!

'உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சி
கற்ற செலச் சொல்லாதார்.’
(குறள் எண் 730)


கற்றவற்றைத் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் இந்த உலகில் இருந்தாலும் இல்லை என்றே கருதப்படுவான் என்கிறார். இந்தக் குறளோடு அவ்வையாரின் மூதுரையையும் ஒப்பு நோக்கலாம்.

'கவையாகிக் கொம்பாகிக் கானகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்.’
கிளைகளையும் கொம்புகளையும் கொண்டதாய்க் கானகத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் மரங்களல்ல. கற்றோர் நிறைந்த சபையில் தன் கருத்துகளைச் சொல்ல மாட்டாமல் நிற்பவனும் பிறர் குறிப்பறிந்து செயல்படாதவனுமே மரங்களாவர்.

வள்ளுவர் இறந்தவர்க்கு இணை என்று யாரைச் சொன்னாரோ அவரையே அவ்வையார் மரம் என்று சொல்கிறார். அறச்சீற்றம் சமுதாயத்திற்கு வேண்டும் என்ற கருத்தை மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் காண்கிறோம். பாஞ்சாலியை நகரத் தெருக்களின் வழியே துகிலுரிவதற்காக இழுத்துச் செல்கிறான் துரியோதனனின் தம்பி துச்சாதனன். அப்போது பொதுமக்கள் அச்செயலைக் கண்டிக்காமல் புலம்புகிறார்கள். வெறுமே புலம்புவதால் பயன் என்ன? அந்தச் செயல் தவறு என அனைவரும் சேர்ந்து குரல்கொடுக்க வேண்டாமா? அதைத் தடுத்து நிறுத்த முயலவேண்டாமா?

'நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார்பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?’ என்பது பாரதி வாசகம். ஆங்கிலேயரின் அக்கிரமங்களைப் பார்த்து அறச்சீற்றம் கொண்ட தியாகிகளின் கோபத்தினால் தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது? அவர்கள் பெட்டைப் புலம்பல் புலம்பி எந்தச் செயலும் செய்யாதிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் நமக்குக் கிட்டியிருக்குமா? எல்லா குணநலன்களின் ஒட்டுமொத்த வடிவமான ராமபிரானே கோபம் கொள்ளும்போது, கோபமும் தேவை என்ற நீதிதானே வலியுறுத்தப்படுகிறது? கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கிறபோது கண்டுகொள்ளாதிருப்பதும் கோபம் கொள்ளாதிருப்பதும் சரியல்ல.

திருமாலின் பத்து அவதாரங்களிலும் கோபம் என்ற குணம் கரைகடந்து பெருகுவதைக் காண்கிறோம். கிருஷ்ணாவதாரத்தில் கம்சனைக் கொல்வதற்காகவும் ராமாவதாரத்தில் ராவணனை வதம் செய்வதற்காகவும் நரசிம்மாவதாரத்தில் இரணியனின் உடலைக் கிழிப்பதற்காகவும் தெய்வங்கள் கோபம் கொள்கின்றன.
தாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரில் ஈடுபடும் படைவீரர்கள் எதிரிமீது கோபம் கொள்ளவில்லை என்றால் எப்படிப் போரை நிகழ்த்த இயலும்? 'கோபம் கொள்' என்கிறது ராமகிருஷ்ண பரமஹம்சரின் பாம்புக் கதை. ஒரு முனிவரிடம் பாம்பொன்று உபதேசம் கேட்டது. யாரையும் கடிக்காதே என்றார் சத்துவ குணமே வடிவான அந்தத் தூய தவ முனிவர். மிகுந்த விஸ்வாசத்தோடு அந்த உபதேசத்தைப் பாம்பு பின்பற்றி நடக்கத் தொடங்கியது.

பிறகென்ன? அது கட்டாயம் கடிக்காது என்பதைப் பலரும் தெரிந்துகொண்டு விட்டார்கள். அவர்களுக்கு அந்தப் பாம்பின் மீதிருந்த அச்சம் போய்விட்டது. சிறுவர்கள் அதன்மீது கல்லை விட்டெறிந்தார்கள். பாவம் என்ன செய்யும் அது? முனிவரின் உபதேசப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதால் ஒளிந்து ஒளிந்து வாழத் தொடங்கியது. என்றாலும் உடலெங்கும் பட்ட அடிகளால் மிகவும் நொந்துவிட்டது.

மறுபடி ஒருநாள் பாம்பிருந்த அதே வழியாக வந்தார் அதே முனிவர். முனிவரை வணங்கிய பாம்பு, கண் கலங்கிய வாறே முறையிட்டது. 'உங்கள் உபதேசப்படி நடந்த எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?’முனிவர் பாம்பைக் கனிவோடு பார்த்தார். பின் கலகலவென்று சிரித்தவாறே கூறினார்.

'நான் கடிக்காதே என்றுதான் கூறினேனே தவிர, கோபித்துக் கொள்ளாதே என்று கூறவில்லையே?’கோபம் நமக்குத் தேவைதான். கோபமே கொள்ளாமல் இருப்பது சாத்தியமல்ல. அப்படி அறச்சீற்றம் கூட வராமல் கோபமே கொள்ளாதிருத்தல் நற்குணமும் அல்ல. அல்லவை தேய்ந்து அறம் பெருக வேண்டுமானால் நல்லவர்கள் கோபப் படவேண்டிய இடத்தில் கோபப்படத் தான் வேண்டும் என்று அறிவுறுத்துகிறது வள்ளுவம்.

எந்தெந்த இடங்களில் கோபம் கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் தாமே கோபம் கொண்டு எழுதிய குறட்பாக்கள் மூலம் மறைமுகமாக நமக்கு அறிவுறுத்தவும் செய்கிறார். அகிலத்தில் நடக்கும் அக்கிரமங்கள் அனைத்தையும் நோக்கி அறச்சீற்றம் கொள்வோம். அதுவே வள்ளுவம் காட்டும் அறவழி.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்