SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரங்குன்றுறை பெருமாளே!

2020-10-07@ 09:59:01

க்ஷேத்ரக் கோவைத் திருப்புகழில் அருணகிரிநாதர் ஒன்பதாவதாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் பரங்கிரி எனப்படும் திருப்பரங்குன்றம். ‘‘பரங்கிரிதனில் வாழ்வே’’ இத்தலத்தில் 14 திருப்புகழ்ப்பாக்களை இயற்றியுள்ளார்.முருகப்பெருமான் தெய்வானையை மணந்த திருத்தலம். வள்ளி தெய்வானை இருவரையும் மணந்த பின்னர் முருகப் பெருமான் இங்கு வந்து கொலுவீற்றிருந்த அழகை வர்ணித்து ‘கொலு வகுப்பு’ என்ற தனி வகுப்பையும் இத்தலத்திற்கெனப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

கயிலையைப் போல், அயன், அரி, அரன் முதலான சகல தேவர்களும் இங்கு வந்து கூடியதால் இத்தலத்தை ‘‘சிவ பர கிரி’’ என்று அழைக்கிறார். ‘‘சிவபரகிரியினால் ஒரு சிவன் வடிவொடு திருந்த முருகோன் இருந்த கொலுவே’’ என்று வகுப்பை நிறைவு செய்கிறார்.
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும்,
இருவரும்,-5

மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்- 10

பற்றாகின்று, நின் காரணமாக;
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா- 15
- பரிபாடல்


பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்’’.
‘‘சீதள முந்து மணந்தயங்கும் பொழில்
சூழ்தர விஞ்சையர் வந்திறைஞ்சும் பதி
தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறைபெருமாளே ’’
என்பார் அருணகிரிநாதர்.

மதுரைக் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்து ஒன்பது பேருக்கும் தலைமைத்தானம் வகித்தவர் நக்கீரர். இவர் தினமும் திருப்பரங்குன்றம் சென்று அங்கு சரவணப் பொய்கையில் நீராடி, ஐந்தெழுத்தை ஜபித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடவுளருள் சோமசுந்தரரையும், மன்னர்களுள் பாண்டியனையும் தவிர மற்றோரைப் பாடமாட்டேன் என்ற விரதம் பூண்டிருந்தார். இதைக் கேள்வியுற்ற முருகன் ஒரு திருவிளையாடல் நடத்தத் தீர்மானித்தான். உக்கிரன், அண்டாபரணன் எனும் இரு பூதகணங்களை ஏவி, நக்கீரரிடம் ஒரு குற்றம் கண்டு பிடித்து, மலைக் குகையில் சிறையிடுங்கள் என்று ஏவினான்.

பூதகணங்கள் அரச மரத்து இலை ஒன்றைக் கிள்ளி நீரில் போட்டன. அது, பாதி நீரிலும், பாதி தரையிலுமாக விழ, நீரில் விழுந்த பாகம் மீனாகவும், தரையில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. குளக்கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த நக்கீரரின் கவனம் சிதறியது. அவற்றை இணைத்துக் கொண்டிருக்கும் நரம்பு போன்ற பாகத்தைக் கிள்ளி எறிந்து விட்டால் இரண்டுமே உயிர் பிழைக்கும் என்ற நல்லெண்ணத்துடன் அவ்வாறே செய்தார். ஆனால் அக்கணமே மீனும் பறவையும் குருதி கக்கி, துடிதுடித்து இறந்தன.

உடனே பூத கணங்கள், ‘எங்கள் தடம்பன் உறையும் இத்தலத்தில் கொலை பாதகம் செய்யத் துணிந்தாயோ’ என்று கேட்டு நக்கீரரைக் கொண்டு போய் மலைகக் குகையில் அடைத்தன. அங்கு ஏற்கனவே கற்கி முகி என்ற பெண் பூதத்தால் அடைத்து வைக்கப்பட்ட 999 பேர்கள் இருந்தனர். இன்னும் ஒருவர் வந்த பின் உங்கள் ஆயிரவரையும் சேர்த்து உண்ணுவேன் என்று சொல்லியிருத்தது நக்கீரர் வந்த பின் ஆயிரம் பேராகி விட்டோமே என்று பயந்து நடுங்கினர் அனைவரும். வேலால் கிரி தொளைத்த முருகப் பெருமானுக்குக் கவிமாலை சூட்டாததால் தான் இது நேர்ந்தது என்றெண்ண தேன் சொட்டும் திருமுருகாற்றுப்படை எனும் நூலைப் பாடினார் நக்கீரர். ‘‘உலகாம் உவப்ப’’ என்று முருகப் பெருமான் அடி எடுத்துக் கொடுத்ததைப் பின் வருமாறு பாடுகிறார் அருணகிரியார்.

‘‘அடிமோனை சொற்கிணங்க உலகாழவப்ப
என்றுன் அருளால் அளிக்கு கந்த பெரியோனே’’

என்கிறார்.

‘‘பழமுதிர் சோலை மலை கிழவோனே’’ என்று பாடி நினைவு செய்தார் நக்கீரர்’’ அவனிதனில் கிழவனென, வரச் சிறிது நாளாகும்’’ என்றான் முருகன் பரங்கிரிப் புராணத்தில் இது பற்றிய குறிப்பு வருகிறது.

‘‘சுவையூறுந் தமிழ்மாலை உலகமென எடுத்தோதித் தென்னூல் ஈற்றின்
நுவலியது ‘கிழவோனே’ எனக்கூற நெடுங்காலம் நோன்பு கோடி
புலியிலிளைத் தறிவரிய குமரவேள் அவன் கனவு பொருந்தத் தோற்றி
அவனிதனிற் கிழவனென வரச் சிறிது நாளாமென் றரைந்து போனான் ’’

என்பது அக்குறிப்பு.

நக்கீரர் உடனே விழித்தெழுந்து ‘‘குன்றம் எறிந்தாய் குரை கடலிற்சூர்தடிந்தாய் புன்றலைய பூதப் பொரு படையாய்  என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே உளையாய் என் உள்ளத்துறை’’ எனும் அருமைப் பாடலைப் பாடினார். முருகனும் நாம் எண்ணிய காரியம் நிறைவேறிற்று என மகிழ்ந்து தனது வேலாயுதத்தாற் பாறையைப் பிளந்து நக்கீரரைக் குகையினின்றும் வெளியேற்றினார் இந்த பாறைக்கு ‘வேலெறிப் பாறை’ என்ற ஒரு பெயர் இருந்தது என்பர்.

வேல்வகுப்பில்‘‘பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொருகவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்’’ (வேல்வகுப்பு )
கவிப்புலவன் = நக்கீரர். திருமுருகாற்றுப்
படையை இசை என்றதனால் அது இசையுடன் பாடப்பட்டது என்று அறிகிறோம்.
‘‘கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே’’ என்கிறார்.

திருப்புகழில். எனவே திருமுருகாற்றுப் படையை அந்தணர்கள் வேதம் கூறுவது போன்ற இசையுடனும், நிறுத்திய உச்சரிப்புடனும் ஓத வேண்டும் என்று தெரிகிறது.

‘‘அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ’’
- பூதவேதாள வகுப்பு.
‘‘எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்’’

- வேடிச்சி காவலன் வகுப்பு.

(குதிரைகளைப் பராமரிக்கும் போர் வீரர்களை ராவுத்தன் என்று கூறுவர். இங்கு குதிரை (இவுளி) முக அரக்கியை அழித்த முருகனை ராவுத்தன் என்று அருணகிரிநாதர் அழைத்திருப்பது மிகப் பொருத்தமாய் விளங்குகிறது!)கந்தர் அந்தாதியில் ‘‘தேவசேனையின் கலவி இன்பத்தைவிட நக்கீரர் சொல் உனக்கு அதிகம் தித்தித்ததோ?’’ என்று கேட்கிறார்.திருப்பரங்குன்றத்தில் மலைமேல் வள்ளி தெய்வானையுடனான முருகன் கோயில் இருந்தது பற்றி பரிபாடல், மதுரைக் காஞ்சி, அகநானூறு போன்ற 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மதுரை மக்கள், பாண்டியனுடனும், சுற்றத்தாருடனும், அமைச்சர்களுடன் சேர்ந்து பெருங்கூட்டமாக மலை ஏறி அங்குள்ள முருகனை வலம் வந்ததாகப் பாடியுள்ளனர் புலவர்கள். அடிவாரத்தில் சிவாலயங்களே விளங்கின என்பர் ஆராய்ச்சியாளர்கள். சிவனும், திருமாலும் எதிர் எதிரேயும் நடுவில் முருகன் தெய்வானையுடனும், நாரதருடனும் புடைப்புச் சிற்பங்களாகவே இன்றும் விளங்குகின்றன.

பரிவாரத் தெய்வமாகவே விளங்கிய முருகப் பெருமான் இன்று மூலவராகவே கருதப்படுகிறார் அருகே மகிஷாசுரமர்த்தினியைத் தரிசிக்கலாம். கையில் கரும்பைப் பிடித்தவாறு அபூர்வமான விநாயகர் தோற்றமும் உள்ளது. சிவலிங்கத்திற்கும் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் அருகில் சென்று பார்க்க அனுமதியில்லை; அதே போன்று தேவியருடன் விளங்குவதாகக் கூறப்படும் திருமாலையை கண்டு வணங்க முடியவில்லை.

திருப்பரங்குன்றத் திருப்புகழொன்றை
முருகப் பெருமானுக்குச் சமர்ப்பிக்கிறோம் :-
‘‘தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே’’


பொருள் :

உலகத்தவர்களிடம் சென்று ‘‘உங்கள் பரந்தகை பதுமநிதி, கொடையில் நீர் மேகம் தமிழ்ப் புலவர்களுக்கு நீர் புகலிடம் ’’ என்றெல்லாம் கூறித் தவித்து, இரந்து, உள்ளம் புணிபட்டுத் தளரும் இப் பம்பரம் போன்றவனை, (அவர்கள் ஒன்றும் தராததால்) ஊஞ்சலில் வைத்த குடத்தை ஒத்து அலைபவனை, துன்பத்துக்கு ஈடாய மண் உடல் உடையவனை, உடைந்த பானை போன்றவனை, ஐந்து இந்த்ரியங்களுடன் கூடியவனை நொடிப்போதில் வந்து திருத்தி தண்டை அணிந்த உன் திருவடிகளுக்குத் தொண்டு செய்யும்படி அருள்வாயாக
பாடலின் பிற்பகுதியைப் பார்ப்போம் ?-

‘‘படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே’’.


பொருள் :

படைப்பதற்கு பிரமன், அழிப்பதற்குச் சங்கரன், காப்பதற்கு லட்சுமி மணாளன் என அவரவர் தொழிலை நியமித்து, சூரபத்மாதியர் குறித்த அவர்தம் பயங்களை நீக்கி, எப்போதும் மேம்பட்ட பொருளாக விளங்கும் வேலாயுதக் கடவுளே! மதுரைக்கு மேற்கே அழகிய திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் மேலான கங்கா தேவியின் மைந்தனே!

குறவர் குலப் பொற்கொடி போன்ற வள்ளியை முன்பு தினைப் புனத்தில் தனது செம்மையான கரங்களைக் குவித்துக் கும்பிட்ட பெருமாளே.
(பணியா? என, வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே.)

- கந்தர் அநுபூதி.

(வள்ளியை முருகன் கும்பிட்டார் என்பது பூரண சரணாகதி அடைந்த ஜீவாத்மாவைப் பரமாத்மா ஆட் கொள்ள வந்தது என்பதைக் குறிக்கிறது)
‘மன்றலங் கொந்து மிசை’ எனத்துவங்கும் பாடலில் பரங்குன்றத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறார்.
‘‘சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண்
கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.’’

சென்று, முன்பு, மலை நிலத்தோர் வளர்த்த வள்ளியை அழைத்து வந்து, வளர்கின்ற செண்பகமும் பசும் பொன் மலரும் நெருங்கி நிற்கும் சோலையானது, சந்திரனும், சூரியனும், மேகங்களும் தங்கும்படியாக உயர்ந்துள்ள அழகிய திருப்பரங்குன்றத்தில் உறையும் பெருமாளே !
‘‘உன் சிலம்பும் தனக தண்டையும் கிண்கிணியும்
ஒண் கடம்பும் புனையும் அடி சேராய்’’
(திருவடியில் சேர்த்தருளுக) என்றும் பரங்கிரி முருகனை வேண்டுகிறார்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்