SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணை முகிலின் கண்ணீர் மழை

2020-10-07@ 09:45:22

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-55

சன்மார்க்க தீபமாக விளங்கியவர் திருவருட் பிரகாச வள்ளல் பெருமான். அவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள் ‘திரு அருட்பாவாகப் போற்றப்படுகிறது.
இவ்வுலகத்தினர் வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல்கள் இன்றி வாழப் பொருள் அளித்த புரவலர்கள் பொருள் வள்ளல்’’ என புகழப் பெறுகிறார்கள். அன்பும், பண்பும், அருளும்  பொருந்தி அவனியோர் வாழ ஏற்ற வழிகாட்டிய ஆன்றோர்கள், அருள்வள்ளல்கள் என அழைக்கப் பெறுகின்றார்கள்.

அத்தகைய ஞானியர்க்குள்ளே ராமலிங்க அடிகள் சிறப்பு பெற்று விளங்குவதாலேயே ‘வள்ளலார்’ என்றே இவர்  பெயர் விளங்குகின்றது. ஐம்பத்தொன்று வருடங்களே இப்பூவுலகில் வாழ்ந்த புண்ணியர் ஆற்றிய பணிகளோ அளவிடற்கரியது.

‘தாங்கள் யார்? என்று அவரிடம் கேட்டால் நாம் தெரிந்துகொள்ளும் செய்தி என்ன தெரியுமா ?
அகத்  தேகருத்து புறத்தே   வெளுத்திருந்த
உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி அவரைச்  சன்மார்க்க
சங்கம்  அடைவித்திட  அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திடுதற்கு என்றே என்னை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்கப்
பெற்றேன் ! அருளை உற்றேனே !

அழுக்கு மிகுந்த நெஞ்சத்தையும், அலங்காரம் பொலியும் தோற்றத்தையும் கொண்டு இவ்வுலகில் பலர் வாழுகின்றனர். அப்படிப்பட்டவர்களைத் திருத்தி அறவழியில் வாழச் செய்து அவர்கள் இக  உலகிலேயே இறை உலகைக் காண ஏற்ற வழி வகுத்திடவே இறைவன் என்னை அனுப்பியுள்ளான் என்கின்றார் வள்ளலார்.

சிதம்பரத்தலத்திற்கு அருகில் உள்ள மருதூரில்தான் மகான் ராமலிங்கர் புரட்டாசி மாதத்தில் அவதரித்தார். அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் மாலை ஐந்து மணியளவில் ஐந்தாவது மகனாகத் தோன்றிய ராமலிங்கருக்கு ஐந்து  மாதமே நிறைந்திருந்த பொழுதில் அன்னை தந்தையர் குழந்தையோடு சிதம்பரம் நடராஜர்  தரிசனத்துக்குச் சென்றனர்.

கோயிலில் தீட்சிதர் ஆடும் கடவுளுக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் அகப்புறம் உள்ள சிதம்பர  ரகசியத்திரையை விலக்கினார். மறுவினாடி கைக்குழந்தை ‘கலகல’ என்று சிரித்தது. சின்னக் குழந்தையின் தீட்சண்யத்தைக் கண்டு தீட்சிதர் அதிசயித்தார். சின்னம்மாள் - இராமையா தம்பதிகளிடம் ‘தெய்வீகப் பிரசாதம்’ உங்கள் கைகளில் மழலையாக வடிவம் கொண்டுள்ளது என்று வாழ்த்தினார்.

கைக்குழந்தைக்கு
ஐந்தே மாதத்தில்
அம்பல  ரகசியமே
அம்பலம் ஆகிவிட்டதோ ?
அல்லது
பின்னாளில்  தன் மூலம்
‘வடலூரில் ஒரு சிதம்பரம்
வரப் போவதை அறிந்து
வாய் திறந்து சிரித்ததோ

ராமலிங்கரின் தந்தை காலமாகிவிடவே அண்ணனின் அரவணைப்பில் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் தான் வள்ளலார் வாழ்ந்துவந்தார். ஏழே வயதில் கண்ணாடியில் தன் உருவம் தெரியாது தணிகை முருகனின் வடிவத்தைக் காணும் பெரும் பேறு பெற்றார். சென்னை கந்த கோட்ட முருகனை தினசரி வழிபட்டு ஒன்பது வயதிலேயே ‘தெய்வ மணி மாலை’ என்ற அதி அற்புதமான அருந்தமிழ் நூலொன்றை அருவியெனப்
பாடினார்.

‘திரு ஓங்கி ’ எனத் தொடங்கும்
தெய்வமணிமாலை’யே
ஒன்பது வயதில்
உதடுகள் திறந்து
வள்ளலார் ஓதிய தமிழ் !
ஆன்மிக முத்தாரம் ஆன
அப்பாடலே
ஆறாயிரம் திருஅருட்பாவிற்கான
அச்சாரம் !

வள்ளல்பெருமானைக் கருணைமுகில் என்று உருவகித்தால் அவரின் பாடல்களான திரு
அருட்பாவைக் ‘கண்ணீர் மழை’ என்றுதான் சொல்ல வேண்டும்.
அறிவினான் ஆகுவதுண்டோ? பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை
என்கின்றார் திருவள்ளுவர்.

அக்குறளுக்குத் தன் வாழ்க்கையின் மூலமே உரை எழுதியவர்தான் ராமலிங்கர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அவர் தூண்டில், கண்ணி போன்றவற்றைக் கண்டு துடித்தார். ஓரறிவுத் தாவரம் வாடியதைக் கண்டே வருத்தப்படும் அவர் பசிநோய் முற்றிலுமாக நீங்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

பரம்பொருளைக் கூட ‘பசித்தபோது எதிர் கிடைத்த பாற்சோற்றுத் திரளே ’என்று பாடுகிறார் என்றால் அவர் உயிர் இரக்கத்தின் உச்சியை நாம் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக ஞானிகள் அனைவருமே தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள்தான். பெரும்பாலும் அவர்களின் உபதேசம் கருணை, இரக்கம், பரோபகாரம் பற்றியேதான் இருக்கும். வள்ளல் பெருமான் உபதேசத்தோடு நின்று விடவில்லை,

‘ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்’ என்று அழுத்தம் திருத்தமாக அறை கூவல் விடுத்த அவர் களத்தில் இறங்கிக் காரியமும் செய்தார்.
    ‘அன்னமிடும் தருமச்சாலையை வடலூரில் அமைத்து ஏழைகளின் பசியாற்றினார்மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் தூய்மையுடன் துலங்க வேண்டும் மானுட இனம் என்று மொழிந்தார். செயல்வடிவிலும் அதற்கு உருவம் கொடுத்த ஒரே உத்தமராக ராமலிங்க அடிகளார் திகழ்ந்தார். திடலாக விரிந்திருந்த வடலூர்ப் பெரு வெளியில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை, சமரச சன்மார்க்க சங்கம் என்ற மூன்று அமைப்புகளை அவரே நிறுவி பொதுச் சேவையில் ஈடுபட்டார்.

மனம் தூய்மை அடைவதற்கு சபை, வாக்கு வண்மைபெற சங்கம், ‘காயம்’ என்னும் உடற்பிணியைப் போக்க அன்னமிடும் தருமச் சாலை என முப்பெரும் அமைப்புகளை நிறுவி ‘மக்கள் பணியே மகேசன் பணி’ எனத் தானே எடுத்துக் காட்டாகித் திகழ்ந்த ஒப்பற்றவர் அடிகளார். அன்னம் இடுதலும் ஜோதி  வழிபாடும் அடிகளாரின் முக்கியக் கொள்கையாக விளங்கியது.

1872ல் தைப்பூசத்தில் ஒளி வழிபாட்டை முதன் முதலாக நிகழ்த்தினார் வள்ளலார்.அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை! என்ற பக்தி முழக்கம் திசை எட்டும் பரவியது.பக்தி உலகில் பல அடியார்களில் ஒருவர் வள்ளலார்.சீர்திருத்தத்துறையில் சில பேர்களில் ஒருவர் வள்ளலார் . ஜீவகாருண்யத்திலோ தனி ஒருவராகச்  சுடர்விடுபவர் வள்ளலார்.இரக்கம், அன்பு, கருணை, பரிவு ஆகிய குணங்கள் ஒன்றாகி உருப்பெற்றவரே ராமலிங்கர்.

சிறு குழந்தையாகக் கூட உருப்பெறாத ஐந்து மாத சிசுவாக இருந்தபோதே சிதம்பர ரகசியம் கண்ட அவர் இறுதிவரை  சிதம்பர வெளியோடு ஒன்றியிருந்தார். அவரைப் புகைப்படம் எடுக்க சில அன்பர்கள் முயன்ற போது ஒளி உடம்பாக அவர் இருந்ததினால் வடிவம் நிழற்படத்தில் வரவில்லை.

வள்ளலார் பிறந்தது மருதூரில் !
பின்னர் வளர்ந்தது சென்னையில் !
சில காலம் இருந்தது கருங்குழியில் !
சிறந்தது வடலூரில் !
சித்தி பெற்றது மேட்டுக்குப்பத்தில் !
ஆனால்  அவர்
கையொப்பம் இட்டதோ
‘சிதம்பரம் இராமலிங்கம்’ என்று !

பணத்திற்கும். புகழுக்கும் ஆசைப்படாத பண்பாளராக வள்ளலார் விளங்கினார்.அவரின் அற்புதமான பாடல்களை உடனிருந்து கேட்ட அன்பர்கள் இக் கவிதைகளை எழுத்து வடிவில் உருவேற்றிப் புத்தகமாக வெளியிட்டால் பலருக்கும் வழிகாட்டுமே! என்ற போதும் அச்சுப்புத்தகம் ஆக்க அவர் அனுமதியை வழங்கவில்லை.பிறகு உண்ணா நோன்பிருப்போம் என அவர் அன்பர்கள் சொன்னதால் இரக்க சுபாவம் மிக்க ராமலிங்கர் ‘திரு அருட்பா’ நூலாக வெளிவர இசைந்தார்.

1874ம் ஆண்டு ஜனவரி முப்பதில் தைப் பூசத்திருநாள் வந்தது. இருவருடங்களுக்கு முன்பு ஒளி வழிபாட்டை துவக்கிய தைப்பூச நன்னாளிலேயே கற்பூரம் போலத் தன் மேனியை ஒளியோடு ஒன்றிடச்செயது சித்தி பெற்றார்.வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் அவரின் சித்திவளாகத் திருமாளிகை உள்ளது. மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகானை மனதார வணங்கி அவர் காண விழைந்த சமுதாயத்தை  உருவாக்குவோம்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்