SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலியறிதல்

2020-10-06@ 10:01:08

குறளின் குரல்-132

திருக்குறளில் நாற்பத்தெட்டாம் அதிகாரமாக இடம் பெற்றிருக்கும் `வலியறிதல்', அவரவரும் தத்தம் வலிமையின் அளவு இன்னதென உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்தை முன்வைக்கிறது.

ஒருவரின் வலிமை என்பது ஒன்றல்ல. பல. ஒருவரின் ஒட்டுமொத்த வலிமையில், அவரது ஆற்றலின் வலிமை, அவரது பொருளாதார வலிமை, அவரின் நண்பர்களின் வலிமை எனப் பலவகை வலிமைகள் உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தின் தன்மையையும் கணக்கிட்டு அதற்கேற்ப வாழ்வில் செயல்படுதல் வேண்டும்.

பேச்சாற்றல் நிறைந்த ஒருவரிடம் யாராவது எதிர்த்துப் பேசுவார்களா? பெரிய பணக்காரர்களை யாரேனும் பகைத்துக்கொள்ள விரும்புவார்களா? புகழ்பெற்ற அரசியல்வாதியை நெருங்கிய நண்பராகக்கொண்ட ஒருவரிடம் யாரேனும் வாலாட்டுவார்களா? எனவே, எல்லாவகை வலிமையும் சேர்ந்தே ஒருவரது வலிமை கணக்கிடப்படுகிறது. இந்த அத்தனை வலிமைகள் பற்றியும் `வலியறிதல்' என்ற அதிகாரத்தில்
பேசுகிறார் வள்ளுவர்.  

திருவள்ளுவர் லட்சியவாதி என்றும் நடைமுறையில் அனுசரிக்க இயலாத பல கருத்துக்களைச் சொல்பவர் என்றும் நம்மில் பலர் கருதுகிறோம். அது உண்மையல்ல. முற்றிலும் இன்றைய உலகியலை அறிந்து நாம் பின்பற்றத் தகுந்த நமக்கேற்ற கருத்துக்களையே அவர் சொல்கிறார்.

ஈகையைப் போற்றுகிற வள்ளுவர், தான தர்மங்களை ஆதரிக்கிற வள்ளுவர், 'உன் சக்திக்கு மீறி தர்மம் செய்யாதே, அதனால் உனக்குச் சிரமங்களே நேரும்’ என்று சொல்லியிருக்கிறார் என்றால் நம்புவோமா?
 
எந்த அளவு உலகியலைப் புரிந்துகொண்டு அவர் பேசியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பேற்படும். 'எப்படியும் நீ செய்கிற ஈகை உனக்கு நன்மை தரும். எனவே, இருப்பதையெல்லாம் கொடுத்துவிடு!’ என்றல்லவா அவர் சொல்லியிருப்பார் என நாம் எதிர்பார்க்கிறோம்? அப்படி அவர் சொல்லவில்லை என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி.

உலகியலைக் கூர்ந்து கவனித்த அவர், தனக்குக் கூடச் சேமித்து வைத்துக் கொள்ளாமல் தானம் செய்து அழிந்தவர்களின் வாழ்வை நேரில் கண்டிருக்கக் கூடும். தான தர்மங்கள் முதலிய நற்செயல்களே ஆயினும் அவற்றுக்கும் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஓர் அளவுண்டு என்ற முடிவுக்கு அதனால் அவர் வந்திருக்க வேண்டும். தன்னை மீறிய தானத்தால் ஒருவரின் பொருளாதார வலிமை குறைந்துவிடும் என்பதையும் அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவரவரும் தத்தம் பொருளாதார வலிமையின் அளவுக்கு உள்பட்டுத் தானமளித்தலே சிறப்பு என்கிற இயல்பான கருத்தோட்டத்தை அவர் தம் நீதிநூலில் வைக்கிறார்.

'ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.’
(குறள் எண் 477)

எதைப் பிறருக்குக் கொடுத்தாலும் நமது பொருளாதார நிலையையும் மனத்தில் கணக்கிட்டுக்கொண்டே கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுப்பதுதான் பொருளைத் தாம் காத்துக்கொண்டு, பிறருக்குக் கொடுக்கும் முறையான வழி எனத் தெளிவாக அறிவிக்கிறார்.

'உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.'
 (குறள் எண் 480)


தனது பொருளாதார நிலையைச் சரிவர எண்ணிப் பாராது, பிறருக்குச் செய்யும் உதவியால் ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் கெடும் என்றும் சொல்லி எச்சரிக்கிறார்.

'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்றும் 'தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்’ என்றும் தமிழில் வழங்கப்படும் அனுபவப் பழமொழிகள் தெரிவிக்கும் கருத்து வள்ளுவத்தோடு தொடர்புடையது.

தானம் செய்வது என்பது சூதாட்டமல்ல. சூதாட்டத்திலாவது ஒருவேளை ஆட்டம் ஒருவருக்குச் சாதகமாக அமைந்தால் பணயம் வைத்த பொருளை இழக்காமல் இருக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால், தானத்தில் கொடுத்த பொருள் திரும்பி வர வழியே கிடையாது. எனவே, தானம் செய்வது நல்லதுதான் என்றாலும் தன் பொருளாதாரத்தை நன்கு சிந்தித்தபின்தான் தானம் செய்ய வேண்டும்.

தன்னிடமிருக்கும் அனைத்துப் பொருளையும்  சூதாட்டத்தில் வைத்துத் தோற்றார்கள் நளனும் தர்மபுத்திரனும். அதுபோல் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்துவிட்டால் பிறகு, ஒருவன் வாழ்வது எப்படி? வாழ்ந்தால்தானே தொடர்ந்து தானம் செய்ய இயலும்?

ஒரு செல்வந்தன் செய்கிற தானத்திற்கு இணையாக ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதனும் தானம் செய்வானானால் அது மெச்சத் தகுந்ததா இல்லை கண்டிக்கத் தகுந்ததா? செல்வந்தனைப் போலவே தானம் செய்து நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஓட்டாண்டியாக ஆவது சரிதானா? வள்ளுவர் நம்மை யோசிக்க வைக்கிறார்.

'தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை' - என ஈட்டிய பொருளை 'முன்னோர், தெய்வம், விருந்தினர், உறவினர், தான்’ என ஐந்தாக வகுத்துக் கொண்டு செலவு செய்ய வேண்டும் எனக் கறாராக நெறிப்படுத்தியவர் அல்லவா வள்ளுவர்? அவர் எப்படி வரம்பு மீறித் தானம் செய்வதை ஆதரிப்பார்? அவ்விதம் தானம் செய்வது கூடாது என்றே அவர் கூறுகிறார்.

'வலியறிதல்’ என்ற அதிகாரத்தில் பல வலிமைகளைப் பற்றிப் பேசும் அவர் ஒவ்வொருவரின் பொருளாதார வலிமையைப் பற்றியும் யோசிக்கச் சொல்கிறார். 'அவரவரால் இயன்ற அளவு தானம் செய்வதே சிறப்பு, எல்லாவற்றையும் தானம் செய்வது சிறப்பல்ல!' என்று அடித்துச் சொல்கிறார்.பொருளாதார வலிமையைப் பற்றி மட்டுமல்ல, எல்லா வலிமையைப் பற்றியுமே `வலியறிதல்' அதிகாரம் பேசுகிறது.

'வினைவலியும் தன் வலியும் மாற்றான்
வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.’
(குறள் எண் 471)


ஒரு செயலைச் செய்ய முற்படும்போது செய்யும் செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, எதிரியின் வலிமை, துணை நிற்பவர் வலிமை ஆகிய நான்கையும் சீர்தூக்கி அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

'ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.’
(குறள் எண் 472)
 

தம்மால் செய்ய முடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்தில் சிந்தித்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

'உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.’
(குறள் எண் 473)


தம் ஆற்றல் இவ்வளவு என அறியாமல் ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கி, பின்னர் செயலைத் தொடர முடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

'அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.’
(குறள் எண் 474)


மற்றவர்களோடு ஒன்றுபட்டு நடக்காமல் தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக்கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். ஒருவர் தன் ஆற்றலின் அளவு எத்தகையது என்று சரியாக உணராது, தன்னைப்பற்றி மிகையாக நினைத்துக் கொண்டு ஒரு துறையில் ஈடுபடத் தொடங்குவாரானால் அவர் தோல்வி அடைவது நிச்சயம்.
 
ஒரு பத்திரிகை நடத்துவது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவது மாதிரி. அதன் பொருளாதார சிரமத்தைச் சரியாக உணராது, முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனையும் கேளாது, தம் வலிமையைப் பெரிதாக எண்ணிக்கொண்டு சிற்றிதழ்களைத் தொடங்கிச் சொந்த வாழ்வின் பொருளாதார வளத்தைக் கெடுத்துக்கொண்ட இலக்கிய வாதிகளுக்கான உதாரணங்கள் தமிழில் நிறைய உண்டு.

'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.’
(குறள் எண் 475)


மயிலிறகு ஏற்றிய வண்டியே என்றாலும் அந்த வண்டியின் அச்சுக்கு அதிகமாக மயிலிறகு ஏற்றப்பட்டால் முறிந்துபோகும்.

'நுனிக் கொம்பர் ஏறினார் அதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.’
 (குறள் எண் 476)


ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால் அம்முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

ஒரு நகரில் ஓர் உணவகம் தொடங்கினார் ஒரு செல்வந்தர். மிகச் சிறப்பாக நடந்தது அது. தன் ஆற்றலில் அவர் அளவுகடந்த நம்பிக்கை வைத்தார். அதே நகரில் பல இடங்களில் தன் உணவகத்திற்குக் கிளைகள் தொடங்கினார்.

எண்ணற்ற ஊழியர்கள். சரியாக நிர்வகிக்க இயலவில்லை. அதனால் உணவின் தரமும் குறைந்தது. மக்கள் வருகை குறையத் தொடங்கியது.

பெரும் நஷ்டமேற்பட்டுத் தொழிலை மூடித் தலையில் துண்டு போட்டுக்கொண்டார். நுனிக் கிளையில் ஏறியவர் மேலும் ஏற ஆசைப்பட்டதால் வந்த விளைவு இது. முதலில் தொடங்கிய அந்தத் தலைமை உணவகத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் அவர் ராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம். வள்ளுவர் சொல்வதைக் கேட்க மனமில்லையே?

'ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை.’
(குறள் எண் 478)


வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும்
துன்பத்தையே அடைகிறார்கள்.

இந்தக் கருத்தையே கே. பாலசந்தரின் பாமா விஜயம் திரைப்படத்தில் இடம்பெறும் `வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா!’ என்கிற திரைப்பாடல் சொல்கிறது. வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் நிம்மதி இருக்காது என்ற கருத்தை அந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.’
(குறள் எண் 479)


தன்னிடமுள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கை இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் அழிந்துவிடும். வள்ளுவர் கஞ்சத் தனத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் சிக்கனத்தை வலியுறுத்துகிறார். நம் முன்னோர்கள் மிகுந்த சிக்கனத்தோடுதான் இருந்தார்கள்.

வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் முன்பெல்லாம் முதல் பிள்ளைக்குத்தான் சட்டை வாங்குவார்கள். அந்தச் சட்டை அவனுக்குப் பொருந்தாமல் போகிறபோது இரண்டாம் பிள்ளை அதை எடுத்துக்கொள்வான். அவனும் வளர்ந்துவிடுகிறபோது, மூன்றாம் பிள்ளைக்கு அது உரியதாகிவிடும்.

அண்ணன் சட்டையைத் தம்பி உபயோகிப்பதைத் தம்பிகள் பெருமையாகக் கருதிய காலம் அது. தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துப் புதிய புதிய பொருட்களுக்குக் குழந்தைகள் ஆசைப்படாத காலம்.

கமலா ஆரஞ்சு வாங்கினால் இப்போது தூக்கி எறியப்படும் அதன் தோல் முன்பெல்லாம் ரசமாகவோ துவையலாகவோ உருமாறி விடும். பூசணிக்காயின் விதைகளை வெய்யிலில் காயவைத்து உரித்து அதன் உள்ளே உள்ள பருப்பை வறுத்து உண்பதுண்டு.

சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகள் வராத காலம். மளிகைப் பொருட்களெல்லாம் முக்கோண வடிவில் பழைய நாளிதழ்க் காகிதத்தில் சணல்நாரால் பொட்டலம் கட்டி வரும். அந்தச் சணல் நாரைப் பிரித்துத் தனியே நூல் கண்டாகக் கட்டி வைத்து எதையேனும் கட்டுவதற்கு அந்தச் சணல் நூலையே வீடுகளில் பயன்படுத்துவார்கள்.

மளிகைப் பொருட்களைக் கட்டிவந்த காகிதத்தைப் பிரித்து அடுக்கி மாதக் கடைசியில் பழைய நாளிதழ்களைப் போடும் கடையில் இந்தக் காகிதங்களையும் சேர்த்து எடைக்குப் போடுவார்கள். விஷயம் அதிகமாக இருந்தால் மட்டுமே இன்லண்ட் கவரில் கடிதம் எழுதுவார்கள். இல்லாவிட்டால் அஞ்சலட்டையில்தான் கடிதம் எழுதுவார்கள். அரிசி களைந்த தண்ணீரும் சாப்பிடப் பயன்பட்ட வாழை இலைகளும் பசுமாட்டிற்கு உணவாக வழங்கப்படும்.
 
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் சிக்கனம் இருந்தது. அதோடு அடுத்த உயிர்களைப் பற்றிய பரிவோடு கூடிய சிந்தனையும் இருந்தது. `தண்ணீரை வீண்செய்தால் மகாலட்சுமி வீட்டைவிட்டுப் போய்விடுவாள். தண்ணீரை அளவோடு தேவைக்கு மட்டும் பயன்படுத்து!’ என்று குழந்தைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள்.

மகாத்மா காந்தி சிக்கனத்தைப் பின்பற்று பவர். எந்தப் பொருளையும் அதன் கடைசிப் பயன்பாடு வரை உபயோகிப்பவர். அவரிடம் எழுதி எழுதி ஏறக்குறையத் தீர்ந்துபோன ஒரு சிறிய பென்சில் இருந்தது. அது தொலைந்துபோய்விட்டது. கட்டிலுக்கடியில் எல்லாம் தேடி அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்து அதன்மூலம் எழுதத் தொடங்கினார் அவர்! வேறு பென்சில் பயன்படுத்தக் கூடாதா என வியப்போடு அவரைக் கேட்டார்கள். `இதில் இன்னும் எழுதும் அளவு ஊக்கு இருக்கிறதே, அப்படியிருக்க வேறு பென்சிலைப் பயன்படுத்துவது ஆடம் பரம் அல்லவா?' என்றார் காந்தி அடிகள்!
 
முன்பெல்லாம் ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என மூன்று வகைப் பெட்டிகள் இருந்தன. மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தால் கட்டணம் குறைவு. காந்தி எப்போதும் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்வார். 'ஏன் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: 'நான்காம் வகுப்புப் பெட்டி இல்லையல்லவா? அதனால்தான்!’

மகாத்மா காந்தியின் வாழ்க்கையே வள்ளுவத்தின் விளக்கம்தான்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்