SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமன்னர்கள் ஏத்தும் மாமலை

2020-10-06@ 09:49:53

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும். திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்) இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும். பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும், திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும், பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.

தமிழால் ஏற்றம் பெற்றவன் இப்பெருமானாவான். தற்போது திருப்பதி திருமலை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்தாலும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் கூறும் நன்னாட்டிற்கு வட எல்லையாகத் திருவேங்கட மலையே திகழ்ந்துள்ளது. சங்கத் தமிழ்நூல்களும், அந்நூல்களின் உரையாசிரியர்கள்தம். குறிப்புகளும் தமிழ் நாட்டின் வட எல்லையில் திகழ்வது திருவேங்கட மாமலையே என்பதை உறுதிசெய்கின்றன. பண்டைய தமிழகத்தில் திகழ்ந்த மிகப்பழமையான வைணவத் திருப்பதிகளாக நான்கு திருவூர்கள் குறிக்கப்பெறுகின்றன.

பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும் காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.

சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக் குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார். ‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.

இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும். எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும். கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன. திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள் தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார். ‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப் பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.

பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மூலஸ்தானங்களில் முற்காலத்தில் கருங்கல்லால் வடிக்கப்பெற்ற திருமேனிகள் இடம் பெற்று திகழவில்லை. படாசாதனம் எனும் சுண்ணாம்புச் சுதையால் அமைக்கப்பெற்ற திருவடிவங்களே இடம் பெற்றிருக்கும். இன்றும் நாம் அத்தகைய மூலவர்
திருவடிவங்களைத் திவ்ய பிரபந்த தலங்கள் சிலவற்றில் காண முடிகிறது. பின் வந்த பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற அரசர்கள் காலத்தில் செங்கல் கோயில்களைக் கற்கோயிலாகப் புதுப்பிக்கும்போது அதை வடிவங்களை நீக்கி கல்திருமேனிகளை இடம் பெறச் செய்துள்ளனர்.

பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும், பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும் பொன்னாலாகிய பூ ஆடையைப்பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.

சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது, தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும். தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல், ‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது. வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன. அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

திருப்பதி திருமலைக்கோயிலின் தல புராணம் (தெலுங்கிலும், வடமொழியிலும் உள்ளவை) அத்திருக்கோயிலைத் ‘‘தொடர்மால்’’ அல்லது ‘‘தோடர்மால்’’ என்ற அரசனே கட்டுவித்து வழிபட்டதாகக் கூறுகின்றது. இன்று திருமலை வேங்கடவன் கோயிலில் தொடர்மால் என்ற தெலுங்குக் குறிப்புடன் ஓர் உருவச்சிலை உள்ளது. திருக்கோயில் வழிபாட்டில் அனைத்து முதல் மரியாதைகளும் அச்சிலைக்கே நடைபெறுகின்றன. தமிழில் ‘‘தொண்டைமான்’’ என அழைக்கப்பட்ட வேங்கட நன்னாட்டின் தொல் குடி தமிழ் மன்னர்களில் ஒருவரைத்தான் தெலுங்கில் ‘‘தொடர்மால்’’ எனக் குறிப்பிட்டு அக்கோயிலுக்கு உரியவராகப் போற்றுகின்றனர்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் எல்லா காலங்களிலும், எல்லா அரச மரபினர் காலத்திலும் தொண்டைமான் மரபினர் அழியாமல் சிற்றரசர்களாகவும், போர்த்தளபதிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர். குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் வரை சென்று (ஒடிசா மாநிலம் வரை சென்று) பெருவெற்றி எய்திவன் அம்மரபைச் சார்ந்த கருணாகரத் தொண்டைமான் ஆவான். இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, புதுகை போன்ற இடங்களில் தொண்டைமான் மரபு அரச குடும்பத்தினர் வாழ்வது பண்டைய அரச மரபின் எச்சமே.

திருப்பதி திருமலைக் கோயிலுக்குப் பல்லவர்கள் சோழப்பெருமன்னர்கள், யாதவராயர்கள், பாண்டியர், விஜயநகர அரசர்கள் எனப் பல மரபினரும் அருங்கொடைகளை நல்கியுள்ளனர். திருமலை வேங்கடவன் கோயில், திருச்சானூர் (திருச்சுகனூர்) பத்மாவதி அம்மையார் கோயில், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் என்ற மூன்று கோயில்களிலும் பல கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. தொல்லியல் அறிஞர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி என்பார். 1922  1933 வரை அங்குள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து  நூல் எழுதியுள்ளார். திருப்பதி வட்டாரத்தில் திகழும் கல்லெழுத்துச் சாசனங்களில் 90 விழுக்காடு சாசனங்கள் தமிழில் தான் உள்ளன.

அவற்றின் எண்ணிக்கை பற்றி முரண்பட்ட கருத்துக்களே தற்போது உள்ளன. வீர நரசிங்க தேவ யாதவராயர் காலத்து கீழ்த்திருப்பதி கோயில் தமிழ்க் கல்வெட்டில் ஏரிநீர் பங்கீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும். நீரை நிலஅளவு விகிதத்தில் பங்கு விழுக்காடு அளவில் தான் பாசனம் பெற வேண்டும் என்ற அற்புதமான செய்தி கூறப்பெற்றுள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் மங்கல இசைக்கருவியான நாதஸ்வரத்தை ‘‘நாகஸ்வரம்’’ என்றே குறிப்பிட்டு அக்கருவியின் பழம்பெயர் அது தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மரபின் தொண்டைமான் வேந்தர்களின் குலதெய்வமாக விளங்கியவர் தான் நெடியோனாகிய வேங்கடவன் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால், நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர். பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர். 11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.

கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர். கி.பி. 1130ல்  ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச்சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். 1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.   விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று. இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீவேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்