SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வையகம் பொலிவுற அருள்வாய் வைத்திய நாதா!

2020-10-06@ 09:40:41

அருணகிரி உலா-106

‘‘ஐயன் அளந்தபடி இரு நீழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி . . .’’ எனும் அபிராமி அந்தாதிச் செய்யுளும்,
‘‘எக்குலம் குடிலோடுலகி யாவையும்
இற்பதிந்திரு நாழி நெல்லால் அறம்
எப்போதும் பகிர்வாள் குமரா என உருகேனோ’’

- எனும் திருப்புகழ் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

க்ஷேத்ரக் கோவைப் பாடலில்,
‘‘கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ......     
சிவகாசி’’
என்று துவங்கும் அருணகிரி நாதர், அடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள தலம் ராமேஸ்வரம். ‘கொந்துலாவிய ராமேஸ்வரம்’ என்று பாடுகிறார். திரள் திரளாகப் பொருள்படும்.காசி - ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திரள் திரளாக இங்கு வருவதை என்றும் காணலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் வங்கக் கடலிலுள்ள ராமேஸ்வரம் எனும் தீவில் அமைந்துள்ளது. ராமநாதசுவாமி திருக்கோயில். அம்பிகை பர்வதவர்த்தினி. இந்தியாவிலுள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று இங்குள்ள சுவாமி லிங்கம். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும் கூரைக் கொட்டகையின் கீழ் விளங்கிய இக்கோயில் பல்வேறு அரசர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று நாம் காணும் பெரிய கோயிலாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இங்குள்ள பிரதான தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கடல்நீர்) ஆனால் ஒரே கோயிலுக்குள் 22 தீர்த்தம். வேறெங்கும் காண முடியாது. இவை தவிர 32 தீர்த்தங்கள் ஊரைச் சுற்றியுள்ள தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சி மடம் முதலானஊர்களில் அமைந்துள்ளன. 1212 தூண்களுடன் 690 அடி நீளமும் 435 அடி அகலமும் கொண்ட கோயிலின் மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது.

சிவபக்தனான ராவணனை அழித்ததால் உண்டான பிரும்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு ராமபிரான் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். வடக்கிலிருந்து பூஜைக்குத் தேவையான லிங்கம் எடுத்து வர அனுமனை அனுப்பிவைத்தார். அனுமன் லிங்கம் கொண்டு வருகையில் ‘‘நீ பூஜை செய்வதற்கு ஒரு லிங்கம் வேண்டாமா?’’ என்று நாரதர் கேட்க, இன்னுமொரு லிங்கம் எடுத்துவரத் திரும்பிச் சென்றான் அனுமன். அதற்குள் கால தாமதமாகிவிட்டது. அனுமன் வரக் காணாததால் சீதை கடல் மணலால் லிங்கம் அமைத்துத்தர, ராமபிரான் அதை வழிபட்டார். (ஏமாற்ற மடைந்த அனுமன் ராமர் பூஜை செய்த அந்த லிங்கத்தை வாலைச் சுற்றி இழுத்த போது அனுமன் வால் அறுபட்டதாம். அறுபட்ட வாலை உடைய அனுமனின் தனிக் கோயில் அருகிலுள்ளது).

ஆஞ்சநேயர் தாமதமாகக் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு ‘விஸ்வநாதர்’ எனப் பெயர் சூட்டப்பட்டு தனிச் சந்நதியில் கோயில் கொள்ளச் செய்தனர். அனுமன் சிரமப்பட்டுக் கொண்டு வந்த லிங்கம் என்பதால், கோயிலின் முதற்பூஜை அவருக்கும் விசாலாட்சி அம்மைக்குமே செய்யும்படி ராமர் ஆணையிட்டார். இன்றும் அதற்குப் பிறகே ராமநாதனுக்குப் பூஜை நடக்கிறது. அனுமன் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவாயிலின் வலப்பதிகம் உள்ளது.

மதுரையிலுள்ளது போலவே, அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நதி சுவாமி சந்நதிக்கு வடப்பால் அமைந்துள்ளது. அம்பிகையின் பீடத்திற்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த சக்ரம் உள்ளது. ராமநாதர் சந்நதியின் முன்புறம் முருகப் பெருமானும், விநாயகரும் வீற்றிருக்கின்றனர். ராமேஸ்வரத் திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.

வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ......  யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ


நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ்...... மயில்வீரா

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.


நோய்களும், விலை மாதர்கள் மயக்கினால் வரும் இன்னல்களும், தவிர்க்க முடியாத முதுமையும் என்னை விட்டு நீங்காவோ என்று பாடலின் முற்பகுதியில் வருந்துகிறார். (இதை நம் போன்ற சாதாரண மானுடர்களுக்காகவே பாடியிருக்கிறார் என்ற உட்கருத்தை நாம் உணர வேண்டியது அவசியம்)பிற்பகுதியில் பல அழகிய புராணக் குறிப்புகள் வருகின்றன.

நான்முகன் ‘அரிஓம்’ எனத் தொடங்கி வேதத்தை ஓத முற்பட்டபோது முருகப் பெருமான் அதன் பொருள் என்னவென்று கேட்டார். ஆதாரம் உரைக்க முடியாது திகைத்த பிரம்மனைக் கீழே வீழ்த்தி, நான்கு சிரங்களும், சிகைகளும் பொடிபடும் படியாகக் குட்டினார் முருகன். அவன் தாய் மற்றும் மாமன் ஆகியோரின் பெருமையைத் தொடர்ந்து பாடுகிறார்.

‘‘நறுமணம் வீசுகின்ற கொன்றை மாலையை அணிந்த கூந்தலை உடைய மங்கல வடிவுடைய வரும், நித்யகல்யாணியுமாகிய பார்வதி தேவி முதலில் பெற்றருளிய மைந்தனாம் விநாயகன் மகிழ்ச்சியுறும் தோழனே! வனத்தில் வசித்த ஞானாம்பிகையாகிய வள்ளியைத் தினைப்புனத்தில் மணந்து மகிழ்ந்தவனே!  பெரிய ஓசையுடன் ஓலமிடுகின்ற தாடகை, சுபாகு, வளர்ந்த ஏழு மராமரங்கள், வாலி, நீலி, பகன், விராதன், ஒலி மிக்க கடல், வலிமை மிகுந்த ராவணன் முதலான அவுணர்கள் போரில் பொடிபட்டு அழியும்படி கனல் பொறி சிந்தும் கணைகளை விட்ட பெருமை உடையவரும், வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களை ஏந்திய திருக்கரங்களை உடையவரும் திருமகளைத் தாங்கிய மார்பினனாகிய திருமாலின் மருகனே என்றிவ்வாறெல்லாம் வேதங்கள் புகழ ராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானே! என்று போற்றுகிறார்.

தற்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பூமி பூஜையின் போதுராமேஸ்வரத்திலிருந்து மணல் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்கங்களின் வடிவங்களை அக்னி தீர்த்தக்கரையில் சங்கர மடத்தில் தனித்தனி விமானங்களுடன் பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

க்ஷேத்திர கோவைத் திருப்புகழில், அடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தலம் வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயில். ‘‘தனி வந்து பூஜை செய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர்’’ என்று பாடுகிறார் (ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற நான்கு வேத வல்லுநர்களின் கூட்டம் கூடியுள்ள புள்ளிருக்கு வேளூர்) புள் = ஜடாயு. இருக்கு = ரிக் வேதம், வேள் = முருகவேள், ஊர் = சூரியன். இந்நால்வரும் இறைவனாகிய வைத்தியநாதரைப் பூஜித்த திருத்தலம். அம்பிகை தையல் நாயகி. இங்குள்ள செல்வ முத்துக்குமாரசுவாமி சந்நதி மிகச் சிறப்பு வாய்ந்தது. அருணகிரியார் இவர் மேல் ஆறு பாடல்கள் பாடியுள்ளார்.

‘‘வரத்துறை நீதர்க்கொரு சேயே,
வயித்திய நாதப் பெருமாளே,
உனைச் சிறிதேனும் போற்றுத் தெரியாமல்,

மரக்கட்டை போல இருந்து கொண்டு ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் நான் கெட்டுப்போகலாமா (போகலாகாது)’’ என்று உருகுகிறார். (ஞானச் செல்வங்களை சாதகனுக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்டு திரைபோல நிற்கும் இருட்டாகிய மும்மலங்கள்)
‘‘ஞான வெற்புகந் தாடும் அத்தர், தையல்
 நாயகிக்கு நன்பாகர், அக்கணியும்
 நாதர், மெச்ச வந்தாடு முத்தமருள் பெருமாளே ’’
என்று ஒரு திருப்புகழில் பாடுகிறார்.

(ஞானம் எனும் மலையில் மகிழ்ந்து விளையாடுபவர், தையல் நாயகி எனும் திருநாமமுடைய தேவியைத் தமது பாகத்தில் கொண்டவர், அக்கு மாலையை (ருத்ராட்ச மாலை (அ) எலும்பு மாலை) அணிந்துள்ள தலைவராம் சிவபெருமான் மெச்ச வந்து விளையாடும் பெருமாளே! அவருக்கு முத்தம் அளிக்கும் செல்வ முத்துக்குமரனே!கோயிலில் ஜடாயு குண்டம் என்று ஒன்று உள்ளது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமபிரான் இத்தலத்தில் சிதையடுக்கி ஜடாயுவின் உடலை வைத்துத் தகனம் செய்ததனால் இப்பெயர் பெற்றது. திருப்புகழில் ஜடாயு - சம்பாதி பற்றிய குறிப்பும் உள்ளது.

‘‘தொழுதெணா வயனர் சூழு கா - விரியும் வேளூர் முருகா அமரர் பெருமாள்’’ (வயனர் = பறவைகள்)தொழுது வணங்கித் தியானித்த ஜடாயு - சம்பாதி எனும் பறவை வடிவினர் சூழ்ந்து பரவும் வேளூரில் சோலைகள் விரிந்து பரந்துள்ள (கா - விரியும்) வேளூரிலுள்ள முருகப் பெருமானே! குமர குருபரரைத் தடுத்தாட் கொண்டு வேளூர் வரச்செய்த முருகன் ‘பொன் பூத்த குடுமி’ என அடி எடுத்துக் கொடுக்க அவர் முத்துக்குமாரன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் நூலிலிருந்து ஒரு செய்யுளைக் காண்போம்.

‘‘விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ்  புலராமே
விம்மிப் பொருமி விழுந்தழு தலறியுன் மென் குரல் கம்மாமே
கரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக் கண்மலர் சிவவாமே
கலுழ்கலு ழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமே
உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே
ஒருதா ளுந்தி யெழுந்திரு கையும் ஒருங்கு  பதித்துநிமிர்ந்
தருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை ......’’

என்பது நம் செல்வக்குழந்தை முத்துக்குமரனின் செங்கீரைப் பருவம் பற்றிய குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ் பாடல்! மாதந்தோறும் வரும் கிருத்திகை, கிருத்திகை சஷ்டி ஆகிய நாட்களில் மட்டுமே முத்துக்குமரனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அர்த்தஜாம பூஜா காலத்தில் செல்வ முத்துக்குமரனுக்கு வழிபாடு நடந்த பின்னரே சுவாமிக்கு வழிபாடு நடைபெறுகிறது.

இதற்குப் புழுகாப்பு என்று பெயர். நேத்ரப்பிடி சந்தனம் இப்பூஜையின்போது சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. உயிர்களின் நோய்களைத் தீர்க்கும் பொருட்டு உமை அம்மை, தையல் நாயகியாய் வடிவு பூண்டு, தலைய பாத்திரமும், சஞ்சீவியும், வில்வ மரத்தடி மண்ணும் கொண்டு தம்முடன் வர, இறைவன் எழுந்தருளி மருத்துவராயிருந்து அருள்செய்த திருத்தலம் இது.

கோயிலில் தரப்படும் சந்தனக் குழம்பு, மருந்துருண்டை உட்கொண்டு சித்தாமிர்தக் குலித்து நீரைப் பருகி வந்தால் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இது அங்காரக க்ஷேத்ரம் அவருக்குத் தனி சந்நதி உண்டு..
‘‘கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர் மதியம்
உள்ளார்ந்த சடை முடி எம் பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடா யென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே ’’
- சம்பந்தர் தேவாரம்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்