SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

2020-10-06@ 09:29:00

281. மந்த்ராய நமஹ (Manthraaya namaha)

திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனைத் தரிசித்த பெரியாழ்வார், அந்தப் பெருமாளின் சயனம் உணர்த்தும் தத்துவத்தைப் புரிந்து கொண்டார். தனது வலக்கையைத் தலைக்கு அணையாக வைத்தபடி, இடக்கையைத் தன் திருவடி நோக்கி நீட்டிக் கொண்டல்லவா அரங்கன் துயில் கொள்கிறார்? தலையை நோக்கி இருக்கும் வலக்கையினாலே, தன் தலையிலுள்ள கிரீடத்தைக் காட்டும் அரங்கன், “பக்தனே! நான் எவ்வளவு பெரியவன் என்பதை இந்தக் கிரீடத்தைப் பார்த்துப் புரிந்து கொள்!” என்கிறார். திருவடியை நோக்கி நீண்டிருக்கும் இடது திருக்கரத்தால், “பக்தனே! நான் பெரியவன் என்பதை உணர்ந்து விட்டாய் அல்லவா? எனது திருவடிகளை வந்து பிடித்துக் கொள்! உன்னைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து நான் காப்பாற்றுகிறேன்!” என்று அரங்கன் சொல்கிறார்.

 விரைவில் முக்தி அடைந்து, வைகுண்டத்தில் இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பெரியாழ்வார், அரங்கனிடம் தனக்கு முக்தியாகிற வைகுண்டத்தை அருளும்படி பிரார்த்தனை செய்தார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!”
என்ற பாடலைப் பாடி அரங்கனிடம் சரணாகதி செய்தார்.

“அரங்கனே! காப்பாற்ற வல்லவனான உன்னை நான் சரணடைவதற்கு ஒரு காரணம் உள்ளது. எனது மரணத் தறுவாயில் எனது புலன்கள் யாவும் சோர்வடைந்து, தளர்ந்திருக்கும் நிலையில் நீ ஒருவன் தான் எனக்குத் துணையாக இருக்கப் போகிறாய்! ஞானம், பக்தி வைராக்கியம் உள்ளிட்டவற்றில் உயர்ந்தோரான மகான்களுக்கு அடியேன் நிகரானவன் அல்லன்.

எனினும், நீ அடியேனைக் கைவிடாமல் அருள்வாய் என நம்பி உன்னை அடைந்துள்ளேன்!” என்றார் பெரியாழ்வார். “பெரிய மகான்களுக்கு அருளும் நான் உங்களையும் கைவிட மாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது?” என்று அரங்கன் கேட்க, “கைம்முதலற்றவனும் வேறு புகலற்றவனுமான கஜேந்திரன் என்னும் யானையை நீ ஓடோடிச் சென்று காத்தாயே! அதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் நீ காப்பாய் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் திடமாகி நிலைகொள்கிறது!” என்றார் பெரியாழ்வார்.

அதற்கு அரங்கன், “பெரியாழ்வாரே! முக்தி என்பது மரணத்துக்குப் பின் பெற வேண்டிய ஒன்றாகும். இப்போதே ஏன் முக்தி கேட்கிறீர்கள்? பூமியில் நூறாண்டு வாழ்ந்து நிறைய பாடல்கள் பாடி மக்களை எல்லாம் திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. அதனால் அக்கடமையை நிறைவேற்றி விட்டு, உயிர் பிரியும் தருவாயில் வாருங்கள்! முக்தி அளிக்கிறேன்! கஜேந்திரன் கூட உயிர்போகும் தறுவாயில் தானே என்னை அழைத்தான்?” என்று குறும்புத்தனமான புன்னகையோடு பதிலளித்தார்.

அதற்குப் பெரியாழ்வார், “இல்லை
அரங்கா! மரணத் தறுவாயில் கபம், வாதம்,
பித்தம் முதலியவற்றால் நான் அல்லல்
படும் போது உன்னை நினைக்க இயலுமோ?

அதனால்தான் அப்போது (கரண களேபரங்கள் தளர்ந்திருக்கும் போது) நீ என்னைக் காக்க வேண்டும் என்பதை இப்போதே (கரண களேபரங்கள் தெளிவோடு இருக்கிற இப்போதே) உனக்குச் சொல்லிவைத்தேன்!” என்று விடையளித்தார்.“அவ்வாறு நான் காக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?” என்று அரங்கன் வினவ, “நீ வைகுண்டத்தையும் பாற்கடலையும் விட்டுவிட்டு அரங்கத்தில் வந்து பள்ளி கொண்டிருப்பதே எங்களை எல்லாம் காக்கத் தானே? அதனால் நீ காப்பாற்றியே தீர வேண்டும்!” என்றார் பெரியாழ்வார். “நிச்சயம் உம்மைக் காத்தருள்வோம்!” என்று புன்னகையுடன் விடையளித்தார் அரங்கன்.

“உடலும் மனமும் தெளிவாக இருக்கும் இளம் வயதில் என்னைத் தியானிப்பவர்கள், இறக்கும் தறுவாயில் என்னை மறந்தாலும்
நான் அவர்களை மறவாது காத்தருள்வேன்!” என்றும் உறுதியளித்தார், அரங்கன். இதே கருத்து வராகப் பெருமாள் பூமிதேவிக்குச் சொன்ன
ஸ்லோகத்திலும் இடம்பெறுகிறது:

“ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே
ஸதியோநர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்தா விச்வருபம் சமாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”
‘மந்தா:’ என்றால் நினைப்பவர். ‘த்ராயதே’ என்றால் காப்பது. தன்னை நினைப்பவரை
(மந்தாவை), பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பதால் (த்ராயதே), திருமால் மந்த்ர:

(மந்தாரம் + த்ராயதே = மந்த்ர:) என்று
அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 281-வது திருநாமம்.
“மந்த்ராய நமஹ:” என்று தினமும்
சொல்லிவரும் அன்பர்களைத் திருமால் நிச்சயம் காத்தருள்வார்.
 
282. சந்த்ராம்சவே நமஹ (Chandhraamshave namaha)

தமிழகத்தில் வாழ்ந்த கோபிலர், கோப்பிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் கண்ணன் செய்தருளிய லீலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். குளிர்நிலவாய் அருளமுதைப் பொழிந்து, அடியார்களின் மனங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தும் அந்தக் கண்ணபிரானை நேரில் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார்கள் அம்முனிவர்கள்.

அதனால் தமிழகத்தில் இருந்து கண்ணன் வாழ்ந்து வந்த துவாரகையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள். அவர்களை வழிமறித்த நாரதர், “எங்கே செல்கிறீர்கள்?” என்று வினவினார். “மதுரையில் தோன்றிய மாயக் கண்ணன் மாமன்னனாய் இப்போது ஆட்சி செய்து வரும் துவாரகையை நோக்கிச் செல்கிறோம்!” என்று விடையளித்தார்கள் முனிவர்கள்.“அடடா! கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து விட்டு வைகுண்டம் சென்று விட்டானே! உங்களுக்கு அது தெரியாதா?” என்று வினவினார் நாரதர். “ஐயோ! இனி நாங்கள் கண்ணனைத் தரிசிக்க இயலாதா?” என்று கதறியபடி கோபிலர், கோப்பிரளயர் இருவரும் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தார்கள்.

அவர்களின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்த நாரதர், அவர்களைத் தேற்றி, “நீங்கள் இவ்விடத்துக்கு அருகிலுள்ள மன்னார்குடி எனப்படும் செண்பகராண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று திருமாலைக் குறித்துத் தவம் புரிவீர்களாக! அங்கே உங்களைத் தேடி வந்து திருமால் காட்சியளிப்பார்!” என்று கூறினார். நாரதரின் அறிவுரைப்படி கோபிலர், கோப்பிரளயர் இருவரும் மன்னார்குடியில் கடுந்தவம் புரிந்தார்கள்.

அவர்களின் தவத்துக்கு உகந்த திருமால், வைகுண்டத்தில் தான் இருக்கும் தோற்றமாகிய ‘பரவாசுதேவ’ வடிவத்துடன் அவர்களுக்குக் காட்சி தந்து, “முனிவர்களே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “நீ கிருஷ்ணாவதாரத்தில் என்னென்ன லீலைகள் செய்தாயோ, அவை அனைத்தையும் நாங்கள் தரிசிக்க விழைகிறோம்!!” என்று முனிவர்கள் பிரார்த்திக்க, கண்ணன் செய்த முப்பது விதமான லீலைகளை அவர்களுக்கு மன்னார்குடியில் காட்டிய திருமால், நிறைவாக, ருக்மிணி சத்தியபாமாவோடு ராஜகோபாலனாகவும் காட்சி தந்தார்.

(முதலில் அம்முனிவர்களுக்குக் காட்டிய பரவாசுதேவத் திருக்கோலம், அதன் பின் முப்பது கிருஷ்ண லீலைகள், நிறைவாக ராஜகோபாலத் திருக்கோலம் என மொத்தம் முப்பத்திரண்டு வடிவங்களில் மன்னார்குடியில் திருமால் தரிசனம் தந்ததன் நினைவாக, இன்ய்ம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பரவாசுதேவன் மூலவராகவும், கண்ணன் காட்டிய முப்பது லீலைகள் பிராகாரத்தில் வரைபடங்களாகவும், ராஜகோபாலசுவாமி உற்சவ மூர்த்தியாகவும் திகழ்வதைக் காணலாம்.)

கோபில கோப்பிரளயருக்குக் காட்சி தந்து லீலைகளையும் செய்து காட்டிய ராஜகோபாலன், அவர்களைப் பார்த்து, “முனிவர்களே! இங்கிருந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றீர்களானால், கடற்கரைக்கு அருகே ராஜாமடம் என்கிற ஊர் வரும். அங்கே நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை காட்சி அளிப்பேன்!” என்று கூறினார்.

“இங்கேயே எங்களுக்குத் தரிசனமும் தந்து உனது லீலைகளையும் காட்டி விட்டாயே! எங்களை நீ ராஜாமடத்துக்குச் செல்லச் சொல்வதன் நோக்கம் என்ன?” என்று முனிவர்கள் வினவ, “நீங்கள் இங்கே எனக்காகக் கடுந்தவம் புரிந்துள்ளீர்கள் அல்லவா? அதனால் மிகவும் களைத்துப் போயிருக்கிறீர்கள்! உங்கள் களைப்பைப் போக்க விழைகிறேன்! அதற்குத் தான் உங்களை ராஜாமடத்துக்கு வரச் சொன்னேன்!” என்றார் ராஜகோபாலன்.

இறைவனின் கட்டளைப்படி ராஜாமடத்துக்கு இரு முனிவர்களும் சென்ற நிலையில், குளிர்ந்த நிலவு போல் அங்கே இவர்களுக்கு ராஜகோபாலன் காட்சி தந்தார். அவரைத் தரிசித்த மாத்திரத்தில் முனிவர்களின் களைப்பு தீர்ந்தது, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. “இறைவா! குளிர்மதிபோன்ற உனது முக ஒளியால் எங்கள் களைப்பை எல்லாம் நீக்கி விட்டாயே!” என்று பரவசப்பட்ட முனிவர்கள், “நீ என்றென்றும் இங்கே கோயில் கொண்டிருந்து, உன்னைத் தரிசிக்க வரும் அடியார்களுக்கெல்லாம் முழு மதி போன்ற இம்முகத்தைக் காட்டி, சந்திரன் தன் கிரணங்களால் அமுதைப் பொழிவது போல், உன் பார்வையால் குளிர்ந்து கடாட்சித்து அவர்கள் மேல் அருள் அமுதைப் பொழிய வேண்டும்!” என்று வேண்டினார்கள்.

அதை ஏற்று, இன்றும் மன்னார்குடியில் கோயில் கொண்டிருக்கும் ராஜகோபாலனைப் போலவே, பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடத்திலும் ராஜகோபாலன் முழுமதி போல் காட்சி தந்து நம்மைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிறார்.‘அம்சு:’ என்றால் கிரணம். சந்திரனின் கிரணங்களைப் போல் குளிர்ச்சியும் ஆனந்தமும் தரவல்ல திருமேனி ஒளியோடு திருமால் திகழ்வதால், ‘சந்த்ராம்சு:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 282-வது திருநாமம்.

“சந்த்ராம்சவே நமஹ:” என்று தினமும்
சொல்லிவரும் அன்பர்களைத் திருமால்
குளிரக் கடாட்சிப்பார்.
 
283. பாஸ்கரத்யுதயே நமஹ (Bhaaskara-dhyuthaye namaha)

ஒருவன் இறைவனுக்குத் தீங்கிழைக்க நினைத்தாலோ, அல்லது இறைவனையே எதிர்த்து நின்றாலோ கூட இறைவன் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தனை யாரேனும் துன்புறுத்த நினைத்தால், இறைவனால் அதைப் பொறுத்துக்கொள்ள இயலாது. எத்தனையோ புராணச் சம்பவங்கள் இறைவனின் இந்த இயல்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று பிரகலாதனின் சரித்திரம்.

இரணியன், “கடவுள் இல்லை!” என்றும், “நானே கடவுள்!” என்றும் சொல்லிக் கொண்டு வந்தான். “நாராயண நாமத்தை யாரும் ஓதக் கூடாது, ‘ஹிரண்யாய நமஹ:’ என்று என்னையே துதிக்க வேண்டும்!” என்றான். கோயில்களை இடித்தான், புண்ணிய நூல்களை எரித்தான். வேதங்களை இகழ்ந்தான்.

இவற்றை எல்லாம் பொறுத்து வந்த திருமால், பக்தப் பிரகலாதனை இரணியன் துன்புறுத்திய போது, அதைப் பொறுக்க மாட்டாமல் வெகுண்டெழுந்தார். நரசிம்மராக வடிவம் கொண்டு தூணைப் பிளந்து தோன்றி இரணியனை வதம் செய்தார்.இரணியனை வதைத்த பின்னும் நரசிம்மரின் கோபம் தணிந்தபாடில்லை. அவரது திருமேனியிலிருந்து கோப அக்னியின் ஜ்வாலை பொங்கி வந்தது. அதனால் நரசிம்மருக்கு அருகில் செல்லவே தேவர்கள் எல்லோரும் பயந்தார்கள். லக்ஷ்மி தேவியும் கூட அவரது கோப அக்னியைக் கண்டு அஞ்சினாள்.

அப்போது நரசிம்மர் பிரகலாதனையும் மற்ற தேவர்களையும் நோக்கி, “என் பக்தனுக்குத் தீங்கிழைத்த இரணியன் மேல் வந்த கோபம் தான் இது. அவனைத்தான் இந்தக் கோபம் சுட்டெரிக்குமே ஒழிய உங்களுக்கு எப்போதும் நான் குளிர்நிலவாய் அருள்புரிவேன். அருகே வாருங்கள்!” என்று அழைத்தார்.

அப்போது பிரகலாதன் நரசிம்மருக்கு அருகில் சென்றான், குளிர்நிலவாய் அவனுக்கு அருள்புரிந்தார் நரசிம்மர். மகாலட்சுமியும் ஆசையுடன் நரசிம்மரின் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். எனினும் தேவர்கள் நரசிம்மருக்கு அருகில் செல்ல அஞ்சினார்கள். “பிரகலாதனுக்கும் லட்சுமிக்கும் குளிர்ந்திருக்கும் இவர் நம்மைச் சுட்டெரித்து விட்டால் என்ன செய்வது?” எனக் கலங்கினார்கள் தேவர்கள்.

அப்போது, நரசிம்மர் தனது இரு கரங்களாலும் “வாருங்கள்!” என்று தேவர்களை நோக்கிச் செய்கை காட்டினார். அவ்வாறு செய்கை காட்டித் தேவர்களை அழைத்துவிட்டு, “நீங்கள் வராவிட்டால் நான் உங்களை நோக்கி வருகிறேன்!” என்று சொல்லித் தன் இடது திருவடியை முன்னே எடுத்து வைத்தார். நரசிம்மரின் கருணையை உணர்ந்து தேவர்கள் அருகில் வந்து அவரைத் துதித்தார்கள், அவரின் கருணை மழையில் நனைந்தார்கள்.

இவ்வாறு பிரகலாதனுக்கும் தேவர்களுக்கும் அருள்புரிந்த திருக்கோலத்தோடு செகந்திராபாத் நாளா பஜாரில் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார். தேவர்களைத் தன் அருகில் அழைத்தது போலவே, இரு கைகளாலும் “வா! வா!” என்று பக்தர்களான நம்மை அழைத்துக் கொண்டும், “நீ வராவிட்டால் நான் உன்னிடம் வருவேன்!” என்று தெரிவிக்கும்படி இடது திருவடியை நம்மை நோக்கி முன்னே வைத்துக் கொண்டும் திகழ்கிறார் அந்த நரசிம்மர். அதே நேரத்தில் அவரிடம் சுட்டெரிக்கும் சூரியனைப் போன்ற உக்கிரமான தன்மையையும் நாம் காணமுடியும்.

இப்படி ஒருபுறம் பக்தர்களுக்குக் குளிர்நிலவாய் இருந்து கொண்டு அவர்களை “வா! வா!” என்று அழைப்பதால், இந்தப் பெருமாளை “வா வா சிம்மா” என்று பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள். மறுபுறம் அதே நரசிம்மப் பெருமாள் இரணியன் போன்ற தீய சக்திகளுக்குச் சூரியனாய் இருந்து அவர்களைச் சுட்டெரிக்கிறார்.
‘பாஸ்கர:’ என்றால் சூரியன். ‘த்யுதி:’ என்றால் ஒளி. சுட்டெரிக்கும் சூரியன் போன்ற தனது ஒளியால் தீய சக்திகளைச் சுட்டெரிப்பதால் திருமால் ‘பாஸ்கரத்யுதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 283-வது திருநாமம்.

(இறைவனின் திருமேனி ஒளி என்பது ஒன்று தான். ஆனால் அதுவே நல்லோர்க்கு நிலவொளியாகவும், தீயவர்க்குச் சூரிய ஒளியாகவும் தெரிகிறது. நல்லோர்களுக்கு அது நிலவொளியாக இருப்பதை இதற்கு முந்தைய திருநாமமான சந்த்ராம்சு: (282) காட்டுகிறது. தீயவர்களுக்கு அது சூரிய ஒளியாக இருப்பதை இந்தத் திருநாமம் பாஸ்கரத்யுதி: (283) காட்டுகிறது. இவ்விரண்டு தன்மைகளையும் செகந்திராபாத் நாளா பஜார் நரசிம்மரின் தோற்றம் நமக்குக் காட்டுகிறது.)“பாஸ்கரத்யுதயே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குச் சூரியனைப் போன்ற பொலிவைத் திருமால் அருள்வார்.

284. அம்ருதாம்சூத்பவாய நமஹ (Amruthaamshoodhbhavaaya namaha)

கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் கோமளவல்லி நாதனான ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாளிடம், 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
வடமொழிக் கவிச்சக்கரவர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். குடந்தை சார்ங்கபாணி கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்கையில், இறைவனைப் பார்த்து அன்போடும் உரிமையோடும், “வில் பிடித்த பெருமானே! வில்லூரில் இருந்து வந்திருக்கும் என்னைக் கண்திறந்து கடாட்சிப்பாயாக!” என்று கேட்பாராம்.

அந்த அளவுக்கு சார்ங்கபாணிப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டிருந்த ஸ்ரீநிதி சுவாமிகள், சார்ங்கபாணியின் தேவியான கோமளவல்லித் தாயாருக்கு ஒரு சுப்பிரபாதமும், சார்ங்கபாணிப் பெருமாளைக் குறித்து அபர்யாப்தாம்ருத விம்சதி, அம்ருத சார்தூலம் என்ற இரண்டு துதிகளும் இயற்றி அருளினார்.

அவற்றுள் அம்ருத சார்தூலத்தின் எட்டாவது ஸ்லோகத்தில் ஒரு சுவையான சம்பவத்தைக் கவிநயத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார்
ஸ்ரீநிதி சுவாமிகள்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து ஹாலஹால விஷம் உண்டானது. அந்த நச்சுப் புகையைக் கண்டு அஞ்சிய தேவர்கள் நாலாப் புறமும் சிதறி ஓடினார்கள். அந்த விஷத்தின் வெப்பம் சுற்றியிருந்தோர் அனைவரையும் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தேவர்கள் தவித்த நிலையில், “மிருத்யுஞ்ஜயன் என்று போற்றப்படும் சிவபெருமானால் தான் இந்த விஷத்திலிருந்து உங்களைக் காக்க இயலும்! அவரிடம் போய்ச் சரணடையுங்கள்!” என்று அறிவுறுத்தினார் திருமால்.

தேவர்களும் சிவபெருமானிடம் சென்று பிராத்திக்க, அந்த ஹாலஹால நஞ்சை உண்டு தேவர்களை எல்லாம் காத்தார் சிவன். ஆனால் சிவனின் கழுத்துக்குள் நுழைந்த அந்த நஞ்சின் வெப்பமும் வீரியமும் அவரை மிகவும் துன்புறுத்தியது. அமுதைக் கொண்டு விஷத்தை முறிக்கலாம் என்று சிலர் சொல்ல, பாற்கடலில் இருந்து தோன்றிய அமுதத்தைப் பருகிப் பார்த்தார் சிவன். அப்போதும் விஷத்தின் வீரியம் தணியவில்லை.

சாதாரண அமுதைப் பருகினால் இந்த விஷத்தை முறிக்க இயலாது, ஆராவமுதைப் பருகுவோம் என்று தீர்மானித்தார் சிவன். குடந்தையில் கோயில் கொண்டிருக்கும் சார்ங்கபாணிப் பெருமாளுக்கு ‘ஆராவமுதன்’ என்ற பெயருண்டு. அந்தப் பெருமாளிடம் வந்த சிவன், “உன் கூற்றின்படி நான் விஷத்தை உண்டேன்! ஆனால் அந்த விஷத்தின் வீரியத்தால் எனது தலை சுற்றுகிறது. இந்த விஷத்தை முறிக்க ஆராவமுதமான நீயே வழிகாட்ட வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார்.

திருமாலின் மனத்திலிருந்து சந்திரன் உருவானதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த வகையில், தன் மனத்திலிருந்து உருவான சந்திரனைப் பரமசிவனுக்கு அளித்த சார்ங்கபாணிப் பெருமாள், “இதை உங்கள் தலைமேல் வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார். அந்தச் சந்திரனைப் பரமசிவன் தலையில் வைத்த அடுத்த நொடியே விஷத்தின் வீரியம் அனைத்தும் தணிந்து விட்டது. இவ்வாறு தனக்குச் சந்திரனை அளித்து விஷத்தின் வீரியத்தைத் தணித்த சார்ங்கபாணிப் பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, குடந்தையில் சார்ங்கபாணி கோயிலைச் சுற்றி கும்பேசுவரர், நாகேசுவரர், சோமேசுவரர், தேனுபுரீசுவரர், பாணபுரீசுவரர், ஐராவதேசுவரர், காசி விச்வேசுவரர் எனப் பற்பல வடிவங்கள் தாங்கிக் கொண்டு சிவபெருமான் திகழ்கிறார்.

 ஒரு கவியின் கற்பனை நயத்தோடு கூடிய இக்கதையைத் தெரிவிக்கும் வில்லூர்

சுவாமிகளின் வடமொழி ஸ்லோகம்:
“ஸ்வாமின்! த்வத் வசஸா விஷம்
கில மயா பீதம் சிரோ கூர்ணதே
த்வத் சித்தாத் அம்ருதாம்சும் ஏகம் உதிதம் குர்யாம் சிரஸ்யஜ்ஞஸா
இத்தம் ப்ரார்த்தித லாபத: அதிமுதித: சம்புஸ்து அனேகாக்ருதி:
நைகாகாரகத: புரே அத்ர பகவன் த்வாம் ஸர்வத: ஸேவதே ”

இப்படிக் குளிர்ந்த அமுதமயமான கிரணங்களை உடைய சந்திரனை உருவாக்கியவராகவும், அந்தச் சந்திரனைக் கொண்டு மக்களின் மனங்களை எல்லாம் குளிர்விப் பவராகவும் திகழும் திருமால், ‘அம்ருதாம்சூத்பவ:’ என்றழைக்கப்படுகிறார்.

அம்ருத: = அமுதம்
அம்சு: = கிரணம்
அம்ருத: + அம்சு: = அம்ருதாம்சு: = அமுதமயமான கிரணங்களை உடைய சந்திரன்
உத்பவ: = உருவாக்கியவர்
அம்ருதாம்சு: + உத்பவ: = அம்ருதாம்
சூத்பவ: = அமுதமயமான கிரணங்களை உடைய சந்திரனை உருவாக்கியவர்.
அம்ருதாம்சூத்பவ: என்பதே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 284-வது திருநாமம்.
“அம்ருதாம்சூத்பவாய நமஹ:” என்று
தினமும் சொல்லிவரும் அன்பர்களைத் திருமால் குளிரக் கடாட்சிப்பார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்