SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்றாடம் ஐந்து வேள்விகள்

2020-10-06@ 09:20:17

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-54

திருவிழா கொண்டாடும் தினம்போல ஒவ்வொரு நாளும் மனநிறைவும் மகிழ்வும் வாழ்வில் விளங்க வேண்டும்! ஆம்! அனுதினமும் ஆனந்தமாக அமைய வேண்டும் என நாம் அனைவருமே ஆசைப்படுகின்றோம்!அப்படி என்றால் ஐந்து யக்ஞங்களை நாள்தோறும் நாம் செய்ய வேண்டும் என்கிறது யஜூர்வேதம் ! வேதம் சொல்வதையே அருளாளர்கள் அனைவரும் தம் உபதேசங்கள் மூலமும், பாடல்கள் வாயிலாகவும் வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு வேள்வி செய்வது என்றாலே பொருளாதாரமும், பொழுதும் பொருந்தி வரவேண்டுமே! அப்படியிருக்க நாள்தோறும் ஐந்து யக்ஞங்கள் செய்வது ஆகக்கூடிய காரியமா? என்று அங்களாய்க்கின்றீர்களா?மறையும், மகான்களும் இயற்றச் சொல்லும் வேள்விகள் மிகவும் எளிதானவை. நாம் அவசியம் செய்ய வேண்டியவை.அனைவரும் அனுதினமும் கடைபிடிக்க வேண்டிய அறநெறிக் கோட்பாடுகள்தான் அந்த ஐந்து வேள்விகள்.

நம் அனைவருக்கும் இந்த மானுட வாழ்வை வழங்கிய இறைவனை இதயப் பூர்வமாக நன்றியுடன் தொழ வேண்டும். தினசரி செய்ய வேண்டிய முதல் வேள்வி இதுதான். ‘தேவ யக்ஞம்’ என்று வேதம் இதை வரையறுக்கின்றது. கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்

 - என்று வள்ளுவருமே இதை வலியுறுத்து கின்றார்.  இரண்டாவது நம்மைப் பெற்றெடுத்து ஆளாக்கிய பெருந்தகைகளை தாய் தந்தையரை நல்லபடியாக பராமரிப்பது. இதுவே பிதுர் யக்ஞம்.
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
 - என்கின்றனர் நம் ஆன்றோர்கள்.

மூன்றாவது மனுஷ யக்ஞம். அதாவது நம்மோடு சமுதாயத்தில் வாழும் சக மனிதர்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கேற்று அவர்களுக்கு உதவிபுரிவது.

இதையே திருக்குறள்...
‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்றும்
 ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’
என்றும் குறிப்பிடுகின்றது.

நான்காவதாக வேதம் நமக்குச் சொல்லும் யக்ஞம் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்களின் பசியாற்றுதல். திருவருட்பாவில் ராமலிங்க அடிகளார் இந்த வேள்வியைக் குறித்து சிறப்பாக அறிவுரை வழங்கியுள்ளார்.‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ - என்றும்‘ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல்வேண்டும் என்றும் பாடியுள்ளார்.

யாவர்க்கும் மிக அவசியமும், தேவையுமான குருநாதரைக் கொண்டாடுவது தான் ‘பிரம்மயக்ஞம்’ என்று பேசப்படும் ஐந்தாவது வேள்வி. நமக்கு இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதை நன்னெறிக் கல்வி மூலம் நம் ஆசிரியர்களும், மகான்களும் தானே போதிக்கின்றனர்? அவ்வாறு வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய பெரியவர்களை ஆசான்களைப் போற்றுவதுதான் ‘பிரம்ம யக்ஞம்’.

ஆண்டிற்கு ஒரு பாடல் என திருமூலர் பாடிய அரிய நூல் ‘திருமந்திரம்’ ஐந்தாவது வேள்வியான ஆசானைப் போற்றுதலை திருமூலர் கீழ்க் கண்டவாறு போற்றுகின்றார்.

‘தெளிவு குருவின் திருமேனிகாண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே!

அன்றாடம் செய்ய வேண்டிய ஐந்து வேள்விகள் மிக அவசியமானது என்பதை இப்போது அறிந்து கொண்டு விட்டீர்களா? மகான்கள் போதித்த இந்த நன்னெறிகள் நேர் வழிகாட்டும் கைகள். திசைகாட்டும் தீபங்கள். வளரும் தலைமுறையினர்க்கு இந்த ஐந்து அறிவுரைகள் எடுத்துச் சொல்ல வேண்டியது பெற்றோர்களும், கல்வியாளர்களும்தான். இளமையிலேயே மேற்கண்ட அற வழிகளைத் தெரிந்து கொண்டால் வல்லரசாக நம்பாரதம் விரைவில் மாறும்.

மகாகவி பாரதியார் வளரும் தலைமுறைக்கு மேற்சொன்ன அறநெறிகருத்துக்களையே அறிவுரையாகத் தருகின்றார்.

உயிர்களிடத்து அன்பு வேணும்! தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேணும்!
வைரம் உடைய நெஞ்சு வேணும்! -
இது வாழும் முறைமையடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை! -
நெல்லு வயலில் உழுது வரும் மாடு!
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு!
இவை ஆதரிக்க வேணு மடி பாப்பா!
பொய் சொல்லக் கூடாது பாப்பா! -
 என்றும் புறம் சொல்லல் ஆகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா! -
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!

ஆண்டவன் படைப்பிலேயேஇறந்த உயர்ந்த சிருஷ்டியாகக் கருதப்படுவது ஆறறிவு கொண்ட மனித குலம் தான்.

‘எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிது அரிது காண்’... என்றும்
 
‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’... என்றும்
 
 ‘வாய்த்தது ஈதோர் பிறவி இதை
 மதித்திடுமின்’... என்றும்
- புலவர் பெருமக்கள் பாடுகின்றனர்.

பெறுதற்கு மிகவும் அரிதான மானிடப் பிறப்பில் தோன்றியுள்ள நாம் அதற்கேற்ப உயரிய வாழ்க்கைக் குறிக்கோள்களை ஏற்று அடுத்தவர்களை வாழ்வித்து நாமும் வாழ வேண்டும். கடற் பரப்பில் திசை தெரியாது திரியும் கப்பல்களைக் கலங்கரை விளக்கம் ஒளிகாட்டி கரைசேர்ப்பது போல் ஞானியர்கள்தான் நமக்கு பொன்னான புத்திமதிகளைக் கூறி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ ஆட்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒளிவிட, தினந்தோறும் திருவிழா நாளாக அமைய ஐந்து வழிமுறைகளை அவசியம் கடைபிடிப்போம் !

பொழுது புலர்ந்தது!
என் உள்ளமென்கமலம்பூத்தது!
பொன்னொளி பொங்கியது எங்கும்!
தொழுது நிற்கின்றனன்!
செய்பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும்! என்வல்ல சற்குருவே!

‘முமுதும் ஆனான்’ என ஆகமவே
 மொழியெலாம் அறைகின்ற முன்னவனே!
எழுதல் அரிய சீர் அருட்பெருஞ்ஜோதி
 என்தந்தையே! பள்ளி எழுந்தருளாயே!

அருட்பிரகாசர் பாடியுள்ள அனைவர்க்குமான இந்த அரிய பாடலை அனுதினமும் பாடுவோம்! அறநெறியைக் கூடுவோம்!

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்