SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீராமானுஜரின் திருமலை யாத்திரை

2020-10-05@ 10:57:22

வைணவத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ராமானுஜர் கி.பி.1017ல் ஸ்ரீ பெரும்புதூரில் ஆருலகேசவ சோமயாகி - காந்திமதி தம்பதியருக்கு மகனாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ந்தார். 16-ம் வயதில் தனது தந்தையை இழந்த ராமானுஜர், தமது 17வது வயதில் தஞ்சம்மாள் என்பவரை திருமணம் செய்தார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் தொடர்பான பல்வேறு விஷயங்களில், ராமானுஜருக்கும், யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்தார்.

இறையருளாலும் தன் அறிவுக்கூர்மையாலும் வேதாந்த சங்கரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்த ராமானுஜருக்கு ஒரு குறையும் இருந்தது. அதுதான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. அதாவது அஷ்டாக்ஷர மந்திரம். இதை கற்கவேண்டி, ராமானுஜர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோஷ்டியூரில் வாசம் செய்யும் நம்பிகளிடம் சென்றார்.

நம்பிகளைச் சந்தித்து தன் இஷ்ட பூர்வத்தைத் தெரிவித்தார். நம்பிகள், பிறகு பார்க்கலாம் என்று ராமானுஜரை திருப்பி அனுப்பிவிட்டார். இதுபோல் 18 முறை சொல்லி, ராமானுஜரின் பொறுமையையும் உறுதியையும் சோதித்தார் நம்பிகள். இறுதியில், ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இந்த ரகசிய மந்திரத்தை எவருக்கும் கூறிவிடாதே என்றார் நம்பிகள். ஆனால், விருப்பமுள்ளவர்கள் இந்த மந்திரத்தினால் நன்மை அடையும் பொருட்டு அருகில் இருந்த சவுமிய நாராயணர் கோயில் தளத்தின் மேல் ஏறி நின்று மக்களை அழைத்து, அந்த உபதேசத்தை வெளியிட்டார் ராமானுஜர்.

ஆச்சார்யரின் உத்தரவை மீறினால் தமக்கு நரகம் தான் என்பதையும் மீறி, அன்பர்கள் நன்மை பெற வேண்டும் என்பதே ராமானுஜரின் விருப்பம். ராமானுஜரின் பரம சிஷ்யர் கூரத்தாழ்வார், ராமானுஜரை விட்டுப் பிரியாமல் வாழ்ந்து வந்தார். கூரத்தாழ்வாரின் ஆச்சார்ய பக்தியை அளவிட்டுக் கூற முடியாது. சிவ பக்தனான சோழ மன்னன், ராமானுஜரின் வைஷ்ணவ பிரச்சாரத்தை விரும்பாமல், அவரை தண்டிக்க விரும்பினான். ஆனால் கூரத்தாழ்வார் தானே ராமானுஜர் என்று கூறி, தண்டனையை ஏற்றுக்கொண்டு தமது இரு கண்களையும் இழந்தார். ஒருநாள் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டுக் கொண்டிருந்தார் கூரத்தாழ்வார். எட்டாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான கிருஷ்ணனின் அடியார்கள் என்கிற ஆசையால் பரமபதவாசிகள் தங்கள் நாட்டு எல்லையில் வந்து எதிர்கொள்ள, அடியார்கள் பரமபதத்தைக் கிட்டினார்கள் என்று அருளிச்செய்கிறார்.

குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக்
கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

பொருள்: அடியார்களுக்காக அவதரித்த கோவிந்தனுக்கு என்றே இருக்கும் குலத்தையுடைய அடியார்கள் என்று ஈஸ்வரனைப் போலே கிரீடம் முதலியவைகளையுடைய நித்யஸூரிகள் தங்கள் நிலைக்கேற்ப இவர்களை வந்து எதிர்கொள்ள, அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவனாய் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் சர்வேஸ்வரனுடைய ஸ்ரீவைகுண்டத்திலே புகுவதற்கு கொடியாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய மதிள்களையுடைய கோபுரவாசலில் புகுந்தார்கள். இந்த பாசுரத்தில் முன்னாலே பரமபதம் சென்றவர்கள்.

பிற்பட்டு வருபவர்களை எதிர்கொண்டு உபசரித்து வரவேற்பர். ஸ்ரீராமானுஜருக்கு பிற்பட்டு நாம் பரமபதம் செல்ல நேர்ந்தால் உடையவர் அங்கிருந்து நம்மை வரவேற்று உபசரிக்கும்படியும், அதனால் நமக்கு அபசாரம் விளையுமாதலால் நாமே பரமபதத்துக்கு முன்னே செல்ல முற்பட வேண்டும் என்று எண்ணி, நம்பெருமாள் முன்பு ஸ்லோகங்களைச் சொல்லி உருக்கமாக பாடினார். பெருமாள் அவர் முன்தோன்றினார்.

‘‘இந்த அழுக்கு உடம்பை விடுவித்து, என் ஆத்மாவுக்கு வைகுண்டத்தைத் தந்தருளவேண்டும்’’ என்று கூரத்தாழ்வார் வேண்டினார். இந்த வரம் விட்டு வேறே வேண்டிக்கொள்ளும் என்று பெருமாள் சொல்ல, அடியேன் வேண்டியதை தந்தருள வேண்டும் என்று கூரத்தாழ்வாரும் பிரார்த்திக்க, உடனே பெருமாள், ‘‘உமக்கும், உம்முடைய திருநாமம் சொல்பவருக்கும், உம்முடைய சம்பந்தம் பெற்றவர்க்கும் மேல் வீடு தந்தோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். கூரத்தாழ்வார் வரம் பெற்றதை ராமானுஜர் கேட்டறிந்து மனம் வேதனைப்பட்டாலும், உம்முடன் சம்பந்தம் உடையவர்களுக்கும் மோட்சம் தந்தோம் என்று பெருமாள் கூறியதைக் கேட்டறிந்த ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் கட்டளையை மீறியதால் கிடைத்த நரகம் கூரத்தாழ்வாரோடு சம்பந்தம் கொண்டதால் மோட்சம் பெற நமக்கும் வழி கிடைத்தது. கூரத்தாழ்வாரின் அனுக்கிரகத்தால்தான் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

சில காலம் சென்றன.திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோயில் அரையராக (அரையர் - வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாசுரங்களை பக்தி பாவத்தோடு பாடும் ஆண் தொண்டர்) திருப்பணி செய்துவந்தார். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் திருமாலின் தெற்கு வீடு என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கோயில் அரையராக ராமானுஜர் சேவைசெய்து வந்தார்.

ஒருமுறை திருவரங்கம் பெரிய கோயிலில் கூரத்தாழ்வார், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருக்குருகைப்பிரான் பிள்ளான், கிடாம்பி ஆச்சான், அனந்தாழ்வார் முதலானோர் இருக்க, திருவாய்மொழி பதிகங்களுக்கு அர்த்தம் விளங்க பாசுரங்களை சொல்லிக் கொண்டிருந்தார் ராமானுஜர்.
அப்போது....

‘‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே’’
‘‘எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே’’
என்னும் திருவாய்மொழிக்கு அர்த்தம்

அருளிச்செய்கிறபோது திருவுள்ளம் நெகிழ்ந்து, சிஷ்ய கோஷ்டியினரை நோக்கி, புஷ்ப மண்டபமான பெரிய திருமலையிலே திருவேங்கடமுடையானுக்கு உகப்பாகத் திருநந்தவனம் வைத்து புஷ்பங்களை உண்டாக்கித் திருமாலைக் கட்டிச் சாத்துவார் யாரேனும் உண்டோ? என்று கேட்டார் ஸ்ரீராமானுஜர். அப்போது அனந்தாழ்வார் என்னும் சீடர் எழுந்திருந்து ‘அடியேன் கைங்கர்யம் செய்ய போகிறேன்.

என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள். விடைகொள்கிறேன்’ என்று கூறி, தண்டன் ஸமர்ப்பித்துத் திருமலைக்கு சென்றார். திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானின் திருவடி தொழுது, திருநந்தவனம் அமைத்தார். அத்திருநந்த வனத்திற்கு ‘ஸ்ரீராமானுஜ நந்தவனம்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளும் நாண்மலர்கொண்டு மாலை கட்டி திருவேங்கடமுனையானுக்கு சமர்ப்பித்து வந்தார் சீடர் அனந்தாழ்வார்.

(ஒருநாள் அனந்தாழ்வார் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு சர்ப்பம் அவரைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த அடியார்கள், ‘‘சுவாமி, உங்களை சர்ப்பம் தீண்டிவிட்டது. சர்ப்பத்தின் விஷம் தலைக்கேறும்முன் வைத்தியம் செய்துவிட்டு பிறகு பூப்பறிக்கலாம்’’ என்றனர். அதற்கு அனந்தாழ்வார், ‘‘அன்பர்களே! அடியேன் வலிமையுடையவனாக இருந்தால் வழக்கம்போல இந்த சுவாமி புஷ்கரணியில் நீராடி ஏழுமலையானை சேவிக்கப் போகிறேன்.

சர்ப்பம் வலிமையுடையதாக இருந்தால் வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியில் நீராடி, பரமபதநாதனுக்கு சேவை செய்யப் போகிறேன். அடியார்கள் மரண பயம் அடைவதில்லை’’ என்றார். திருமலையான் அவரை தன்வசமே வைத்துக்கொண்டான். ‘‘வேம்’ என்றால் ‘சுட்டெரிக்கும் தீ’ ’’ என்பது பொருள்; வேங்கடம் என்பது நம் பாவ வினைகளைச் சுட்டெரித்துப் புனிதர்களாக்கும் தலம். )

அனந்தாழ்வார் ‘ஸ்ரீராமானுஜ நந்தவனம்’ வைத்து பெருமாளுக்கு மாலை கட்டி சாத்தி வருவதை அறிந்து மிகவும் மகிழ்ந்த ஸ்ரீராமானுஜர் திருவேங்கடமுடையானைக் கண்டு தரிசித்து அவரது திருவடி தொழுது தமது சீடர்களுடன் சேர்ந்து மங்களா சாஸனம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் பொருட்டு ஸ்ரீரங்க பெருமாளை வணங்கிவிட்டு திருவேங்கடயாத்திரையை மேற்கொண்டார். முதலில் பெருமாள் கோயிலுக்கு சென்று திருக்கச்சி நம்பிகளை முன்னிட்டுக் கொண்டு பேரருளாளரான தேவாதிராஜனை மங்களாசாஸனம் பண்ணிப் பின்பு திருமலையாத்திரை பற்றிப் பேரருளாளனிடம் கூறினார். அவரும்
‘சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை’
‘‘சென்று வணங்கமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், -
என்றும் கடிக்கமல நான்முகனும் கண்
மூன்றத் தானும், அடிக்கமலம் இட்டேத்துமங்கு.’’
எனக்கூறி விடைகொடுத்தருளினார்.

ஸ்ரீராமானுஜரும் சீடர்கள் புடைசூழ யாத்திரை மேற்கொண்டு சில தினங்களில் கீழ்த்திருப்பதி சென்றடைந்தனர். திருமலை ஆழ்வாரையும் திருத்தாழ்வரையிலே எழுந்தருளியருக்கிற பாராங்குசர் பரகாலர் முதலான ஆழ்வார்பதின்மரையும் வணங்கிவிட்டு, திருப்பதியிலேயே விடல தேவன் என்னும் அரசனைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அங்குள்ள மடத்தில் அமர்ந்திருந்தார். பல தலங்களுக்கு நடந்தே சென்று வந்திருந்ததால் அனைவருக்கும் கடுமையான பசி உண்டாயிற்று. அப்போது ராமானுஜரின் சீடரும், திருமலையில் அவர் பெயரில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவருமான அனந்தாழ்வார் நான்கு அடியார்களுடன் ராமானுஜரிடம் வந்தார்.

தம் குருவான ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜரும் தன் சீடனை மார்புறத் தழுவிக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார் அனந்தாழ்வார். அனைவரும் உண்டு மகிழ்ந்ததும் அனந்தாழ்வார் ராமானுஜரிடம், ‘‘சுவாமி! தங்கள் வருகையை எதிர்பார்த்து திருமலை நம்பி சுவாமிகள் மலைமீது ஆவலுடன் காத்திருக்கிறார். தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும்’’ என்று கூறினார்.

அதற்கு ராமானுஜர், ‘‘அனந்தாழ்வானே, இத்திருவேங்கடமலை நித்திய சூரிகளும் தவசிரேஷ்டர்களும் உலவும் மலை. இம்மலையில் நான் கால் வைத்து நடப்பது அபசாரமாகாதா?’’ என்று கேட்டார். அதற்கு அனந்தாழ்வார், ‘‘சுவாமி, திருவரங்கத்தில் தங்களுடன் திருப்பணி செய்துகொண்டிருந்த என்னை, இத்திருமலையில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யுமாறு தாங்கள்தானே அனுப்பி வைத்தீர்கள். அடியேன் இம்மலையில் கால் வைத்து ஏறும்போது தாங்கள் வரக்கூடாதா? தங்களைப் போன்றவர்கள் வருவதால்தான் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்’’ என்று கூறி ராமானுஜரையும் சீடர்களையும் அழைத்தார்.

அதன்படி ராமானுஜர் திருமலையின் வீதியிலே வரும்போது, அவருடைய உறவினரும் குருவுமான திருமலை நம்பி எதிரில் வர, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ‘‘சுவாமி, அடியேனை வரவேற்கத் தாங்களே வரவேண்டுமா?  யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்தால் போதாதா?’’ என்று ராமானுஜர் கேட்டார். அதற்கு நம்பி, ‘‘ராமானுஜா, நானும் அப்படித்தான் நினைத்தேன். வீதியில் வந்து நான்கு திசைகளிலும் பார்த்தேன். அங்கு என்னைவிடச் சிறியவன் யாரும் இல்லை. அனைவரும் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருந்தனர்.

அதனால்தான் நானே வந்தேன்’’ என்றார். நம்பியின் சொற்களைக் கேட்ட ராமானுஜர், ‘‘சுவாமி, தங்களை விட உயர்ந்தவர் வேங்கடவன் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை’’ என்று சொல்லி உள்ளம் உருகினார். திருமலை நம்பி, ‘‘ராமானுஜா, நீயும் உன் சீடர்களும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். கோனேரியில் நீராடி வேங்கடவனை வணங்கிவிட்டு திருவமுது செய்யலாம்’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட ராமானுஜர், ‘‘சுவாமி, தாங்கள் மறந்துவிட்டீர்களா? அனந்தாழ்வாரிடம் அறுசுவையான உணவைக் கொடுத்தனுப்பி இருந்தீர்களே? அந்த தேவாமிர்தத்தைப் போன்ற திருவமுதை உண்டுவிட்டுத்தானே வருகிறோம்’’ என்றார். ராமானுஜர் கூறியதைக் கேட்ட திருமலை நம்பி ஆச்சரியத்துடன், ‘‘ராமானுஜா, நான் அனந்தாழ்வானிடம் உணவு கொடுத்தனுப்பவில்லையே’’ என்று கூறி அனந்தாழ்வாரை அழைத்தார்.

அனந்தாழ்வாரோ, ‘‘இப்பொழுதுதானே தங்களைப் பார்க்கிறேன்’’ என்றார். இதைக்கேட்டு ராமானுஜர் அதிசயித்தார். உடனே திருமலை நம்பி, ‘‘ராமானுஜா, தன் குழந்தை பசியோடிருப்பதை எந்தத் தாயாவது பொறுத்துக்கொள்வாளா? அதுபோல் நீயும் உன் சீடர்களும் பசியோடிருப்பதை அறிந்த திருவேங்கடமுடையான் அனந்தாழ்வார் வடிவத்தில் வந்து உங்கள் அனைவருக்கும் தாமே உணவு பரிமாறியிருக்கிறார். ராமானுஜா, நீ வைணவத்தை வாழ்விக்கப் பிறந்தவன். வைணவத்துக்கு உடையவன்; பக்தர்களுக்கும் உடையவன். உன் பக்தியே பக்தி, உன் பாக்கியமே பாக்கியம்!’’ என்று அன்புடன் கூறினார். ஸ்ரீராமானுஜரின் மற்றொரு திருநாமம் ‘உடையவர்’ என்பதாகும்.

பின்பு சீடர்கள் புடைசூழ, வராகப் பெருமாளை மங்களாசாஸனம் பண்ணி, அவாவறச் சூழந்தான் திருவாசலிலே தண்டனிட்டும், பின்பு ஸ்ரீபலி பீடத்தடியிலே தண்டனிட்டும் யமுனைத்துறைவர் என்கிற திருப்பூமண்டபத்தையும் வணங்கி, ப்ரதக்ஷிணமாக எழுந்தருளி, ஒரு மார்கழி மாத துவாதசி திதியில் சூரியோதய காலத்தில் பாரதபுண்ய பூமியிலுள்ள ஸகல புண்ணிய தீர்த்தங்களும் வந்து சேரும். சுவாமி புஷ்கரணீ என்று மிகவும் பிரசித்திப்பெற்ற சுவாமி புஷ்கரணியில் தீர்த்தம் ஸ்வீகரித்து செண்பகத்திருவாசலிலே புகுந்து ஸாஷ்டாங்கமாக தண்டன் ஸமர்ப்டாங்கமாக தண்டன் ஸமர்ப்பித்தார்.

அதன்பின்பு திருமடைப்பள்ளி யாகசாலை திருமாமணி மண்டபத்தையும் ஸேவித்து, வேங்கடத்தரியையும் (நரசிம்மனையும்) வணங்கி, ஆனந்த நிலையம் என்னும் திவ்விய விமானத்தையும் கண்ணாலே பருகுவாரைப் போலே அனுபவித்து, கோயிலுக்கு உள்ளே சென்றார் ஸ்ரீராமானுஜர். பின்பு ‘அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயக்கும்’ குலசேகரன் படியைக் கடந்து உள்ளே சென்று, ‘திலதமுலகுக்காய் நின்ற தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனான எண்ணம் புகுந்து தித்திக்கும் செந்தாமரைக்கண் செங்கனிவாய் நாற்றோள் அமுதையும், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தண்டை முதலான திருவடிக்காப்புகளையும், கிரீடம் வரை பாதாதி கேச திவ்யாபரண திவ்வியாலங்கார சோபைகளையும் திருமார்பு நாச்சியாரையும் திருவாழி திருச்சங்குகளையும் ஆதிராஜ்ய ஸூசகமான திருமுடி ஒளியையும் வைத்த கண் வாங்காமல், இமையாமல் மறுபடியும் மறுபடியும் வணங்கி, அனுபவித்துஉலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே!
அலர்மேல் மங்கையுறை மார்பா!
புகலொன்றில்லா அடியேன்
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’
என்று அடிக்கீழ் அமர்ந்து புகுந்து, பூவார் கழல்களைக் கிட்டி அஞ்சலி பண்ணி அனுபவித்து நின்றார். மயிர்கூச்செரிய, கண்கள் குளமானார்! இம்மலைக்கு வந்து நின்ற பயன் பெற்றேன் என்று இவருக்கு எம் பெருமான் தீர்த்த ப்ரஸாதங்களையும், தன் பூவார் பொன்னங்கழலான திருவடிகளையும் ப்ரஸாதித்தார்.

ஸ்ரீராமானுஜரும் அமுதக்கடலில் மூழ்கியவராய், ஆனந்தபரவசராய் என்னே இது! பூலோக வைகுண்டமாயிருந்தது ! என்று எல்லோரிடமும் சொல்லி வியந்து கொண்டாடி இவ்விடம், விண்ணோர் நிலமாகையாலே இந்த விண்ணோர் வெற்பில் நிகரில் அமரர் முனிக் கணங்கள் என்றருளிச் செய்த நித்யஸூரிகளன்றே இங்கு வசிப்பர். நாம் இம்மலைமேல் இருக்கவொண்ணாது என்று, அப்போதே மலையினின்றும் இறங்கமுற்பட்டபோது, பெரிய திருமலை நம்பி திவ்விய தேசங்களிலே மூன்று நாட்கள் வசிக்க வேணும் என்பது முன்னோர் அநுஷ்டானம் என்று சொல்ல, உடையவரும்(ஸ்ரீராமானுஜர்) சம்மதித்து, மூன்று நாளும் எம்பெருமான் தீர்த்தம் தவிர ஒன்றும் அமுது செய்யாமல் அப்பொழுதைக்கப் பொழுது என் ஆரா அமுதமான அப்பனை ஸேவித்திருப்பேன் என்று அவனையே நம்மாழ்வாரைப் போலே ‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலை’யாய் உண்டு மகிழ்ந்து, அப்பனுக்குத் திருப்பல்லாண்டு பாடி நின்றார்.

‘‘உண்ணுஞ் சோறு பருகுநீர்
தின்னும்வெற் றிலையுமெல்லாம்கண்ணன்,
எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர்வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக்கோளூரே.’’
அப்போது, திருவேங்கடமுடையான்

இவருக்கு தன் பூவார் கழல்களை சிரோபூஷணமாக்கி, உமக்கும் உம்முடையார்க்கு உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தந்தோம் என்று நம் தெற்கு வீட்டில் (ஸ்ரீ ரங்கத்தில்) சொன்னோமே என்று நினைவுபடுத்த உடையவரும் (ஸ்ரீராமானுஜர்) மகாபிரசாதம் என்று மகிழ்ந்து ஏற்று பிரியாவிடை கொண்டு கீழ்த் திருப்பதிக்கு எழுந்தருளினார்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்