SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெய்வீக அம்சம் நிறைந்த ஜாதகம்..!

2020-10-05@ 10:51:47

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியின் மூலம் என் ஜாதக பலன்களை அறிந்துகொண்டேன். அதன்படி நடந்துவருகிறது. தற்போது இரண்டு வயது ஆகும் என் பேரனின் ஜாதக பலன்களை அறிய விரும்புகிறேன். கேதார கௌரீ விரதம் நாளில் பிறந்த என் பேரனின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற விபரம் தெரிவிக்கவும்.
- ஸ்வாமிநாதன், திருச்சி.


தீபாவளியை ஒட்டி வரும் கேதார கௌரீ விரத நாளில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகம் பார்வதி - பரமேஸ்வர அருளினை நிரம்பப் பெற்றதாகக் காணப்படுகிறது. ஜோதிடத்தில் பித்ரு காரகன் சூரியன், மாத்ரு காரகன் சந்திரன் என்று சொல்வார்கள். பித்ரு காரகன் ஆன சூரியனின் பிரத்யதிதேவதை பசுபதி என்றழைக்கப்படும் பரமேஸ்வரன்.

மாத்ருகாரகன் ஆன சந்திரனுக்கு உரிய பிரத்யதிதேவதை கௌரீ என்றழைக்கப்படும் பார்வதி தேவி. உங்கள் பேரனின் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் ஜென்ம லக்னத்திலேயே பார்வதி-பரமேஸ்வரரின் இணைவு பிரமாதமான அம்சத்தினைத் தந்திருக்கிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் பாவக அதிபதியும், ஜெயலாப ஸ்தானம் ஆகிய 11ம் பாவக அதிபதியும் ஒன்றாக இணைவதோடு ஜென்ம லக்னாதிபதி ஆகிய சுக்கிரனின் இணை வினையும் பெற்று அமர்ந்திருக்கிறார்கள்.

சூரியன் நீசம் பெற்றாலும், சுக்கிரனின் ஆட்சி பலம் நீசபங்க ராஜயோகத்தினைத் தருகிறது. இது மிகச்சிறப்பான ராஜயோகத்தினைத் தரும். இவற்றோடு 5ல் செவ்வாய், பத்தில் ராகு போன்ற அம்சங்களும் நல்ல வலிமையைத் தருகின்றன. இது மட்டுமல்லாது வாக்கு ஸ்தானத்தில் புத்திகாரகன் புதனோடு நற்சிந்தனையைத் தரும் குருவும் இணைவு பெறுவதால் வாக்குபலம் என்பது பிரமாதமாய் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் தனது வாக்குத் திறமையாலும், நல்வார்த்தைகளாலும் மக்களின் மனதை கொள்ளை கொள்பவராகத் திகழ்வார்.

அத்தோடு உலகளாவிய அளவில் புகழ் பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாய் அமைந்துள்ளது. பேரனுக்கு பள்ளிக் கல்வியோடு சரியான வயதில் உபநயனம் செய்வித்து வேத, ஆகமங்களை கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள். 11வது வயது முதல் அவரது வாக்குத்திறமை பளீரென வெளிப்படக் காண்பீர்கள். இறையருள் நிரம்பப்பெற்ற உங்கள் பேரன் எதிர்காலத்தில் மக்களின் குறை தீர்ப்பவராகவும் நல்வாக்கும் குணமும் கொண்டவராகவும் தெய்வீக அம்சம் நிறைந்தவராகவும் வாழ்வார் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது.

?36 வயதாகும் என் இரண்டாவது மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. +2 வரை படித்துள்ளான். பூவேலை, மாலை கட்டுவது போன்ற வேலை செய்து வருகிறான். எப்பொழுதும் மது குடித்துக்கொண்டே இருக்கிறான். அவன் திருந்தி வாழ்ந்தால் போதும். நிரந்தரமாக வேலை செய்வானா? அவனது திருமணம் எப்பொழுது நடைபெறும்?
- சீனிவாசன், ராணிப்பேட்டை.


நீங்கள் அனுப்பியுள்ள விபரங்களின் அடிப்படையில் உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்து ஆராய்ந்து பார்த்ததில் தற்போது நடந்து வருகின்ற நேரமானது அவரது தொழிலை நிரந்தரமாக்கிக் கொள்ள துணை புரிகிறது. மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசாமல் அவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வாருங்கள். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தின்படி நல்ல திறமைசாலியான மனிதர் என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில் எளிதில் யாராலும் புரிந்துகொள்ள முடியாத வகையில் நடந்து கொள்வார்.

உள்ளூரில் அவரது தொழில் சிறப்பாக அமையாது. சென்னை, வேலூர் முதலான பெருநகரப் பகுதிகளில் அவரது தொழிலை அமைத்துக்கொள்ள முயற்சிக்கச் சொல்லி வலியுறுத்துங்கள். ஐந்தில் கேதுவின் இணைவு ஸ்திரமற்ற மனநிலையைத் தருகிறது. அதோடு 12ம் வீட்டில் இணைந்திருக்கும் கிரகங்கள் அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சற்று தாமதத்தை உண்டாக்குகிறது. அவரை சொந்தமாக தொழில் செய்ய ஊக்குவித்து வாருங்கள். புஷ்ப வேலையையே அவர் தனது தொழிலாக அமைத்துக் கொள்ளலாம்.

உள்ளூரில் அவரால் தொழில் தொடங்க இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமண வாழ்வினைப் பொறுத்த வரை ஏழாம் வீட்டின் அதிபதி நான்கில் உச்சம் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் இவரது தொழில் சார்ந்த பெண் மனைவியாக அமைவார். சனியின் உச்ச பலமும் சஞ்சார அம்சமும் இவரது வாழ்க்கைத் துணையைப்பற்றி ஒரு சில அறிகுறிகளைச் சொல்கிறது. ஏற்கெனவே திருமணமாகி வாழ்வினை இழந்த பெண்ணாக அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக அமைவார்.

இவரது ஜாதக கணிதத்தின்படி 13.05.2021ற்குப் பின் திருமணம் என்பது நடக்கும். பெற்ற மகனின் நிலையை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்காமல் அவரது எதிர்கால நலன் கருதி ஆகவேண்டிய பணிகளில் கவனத்தைச் செலுத்துங்கள். நிச்சயமாக அவரை நல்வழிக்குக் கொண்டுவர இயலும் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?என் மகனுக்கு ஜனவரியில் திருமணம் நிச்சயம் ஆகி மே மாதத்தில் நின்றுவிட்டது. அவன் ஜாதகத்தில் தோஷம் ஏதும் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும். ஸ்திரபுத்தியோடு எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ்வானா?
- வீரராகவன், சென்னை.


தங்கள் குமாரனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது மனக்குழப்பத்தை தந்து வருகிறார் என்பது தெரிகிறது. நிச்சயிக்கப்பட்ட திரு மணம் நின்றுபோனதற்கான காரணத்தை நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் அனுப்பவில்லை. மீண்டும் ஒருமுறை பெண் வீட்டாரிடம் பேசிப் பார்ப்பது நல்லது. தற்போது நடந்து வரும் நேரம் என்பது திருமணத்திற்கு உகந்ததாக இருப்பதால் வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தசாபுக்தி கணக்கின்படி 04.02.2022ற்குள் திருமணத்தை நடத்தினால்தான் உண்டு.

அதன்பிறகு திருமணயோகம் என்பது குதிரைக்கொம்பு ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கும் ராசிக்கும் அதிபதி ஆகிய புதன் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான நிலையே ஆகும். சுக ஸ்தானம் என்பது மிகவும் வலுப்பெற்று இருப்பதால் சுகமாக அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். லக்ன கேதுவின் நிலையும் ஏழில் ராகுவின் அமர்வும் திருமண விஷயத்தில் குழப்பத்தினை உண்டாக்குகின்றன.

ஏழாம் பாவக அதிபதி குரு மூன்றில் இருப்பது தோஷம் என்றாலும், குருவின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தோஷம் நிவர்த்தி ஆகிறது. எட்டில் சனியின் அமர்வு அதிகப்படியான பொருள் விரயத்தினைத் தருகிறது. கையில் பணம் இருந்தால் அநாவசியமாக செலவாகிவிடும். ஜீவன ஸ்தான அதிபதியும் குருவே என்பதாலும் அவரது மூன்றாம் இடத்து அமர்வு ஒருசில சிரமத்தைத் தந்தாலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி என ஐந்து கிரகங்களின் பார்வை ஜீவன ஸ்தானத்தின்மீது விழுவதால் சம்பாத்யம் என்பது ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்துகொண்டிருக்கும்.

சுகமான வாழ்விற்கு குறை என்பது என்றுமே உண்டாகாது. அதே நேரத்தில் சுகவாசியான வாழ்வு என்பது அவரது சோம்பல்தன்மையையும் கூட்டிவிடும். அவரை எப்போதும் தனிமையில் இருக்க விடாதீர்கள். ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள். சுகமாக உட்கார்ந்து இருந்தால் சிந்தனையில் குழப்பம்தான் மிஞ்சும்.

அவருடைய ஜாதகத்தைப் பொறுத்தவரை சுகவாழ்வு என்பது நன்றாக இருப்பதாலும் தற்போதைய நேரம் சாதகமாக உள்ளதாலும் உடனடியாக திருமணத்தை நடத்திவிடுவது நல்லது. வளமான வாழ்வு என்பது நிச்சயம் உண்டு. புதன் கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து வரச் சொல்லுங்கள். நல்லதொரு மாற்றம் நிகழக் காண்பீர்கள்.

?40 வயதாகும் என் மகனுக்கு மனநிலையில் லேசான பாதிப்பு உள்ளது. இன்னும் திருமணம் ஆகவில்லை. பி.ஈ., படிப்பு முடித்து சில தனியார் நிறுவனங்களில் வேலை செய்தார். தற்போது வேலை ஏதுமில்லை. வேலைக்கு முயற்சி செய்வதுவுமில்லை. அவருக்கென குறைந்த மூலதனத்தில் ஏதேனும் தொழில் தொடங்கலாமா? எங்களுக்கு வயதாகிவிட்டபடியால் அவரது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.
- விநாயகம், வியாசர்பாடி.


உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் அவர் மூலம் நட்சத்திரம் ,தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்தவர் என்பதையும் தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தியின் காலம் நடந்து வருகிறது என்பதையும் அறிய முடிகிறது. அவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் பாவகத்தில் செவ்வாய், குரு மற்றும் சனியின் இணைவு இவருடைய பூர்வ ஜன்ம கர்மாவில் உள்ள குறைகளையும் உங்கள் பரம்பரையில் முன்னோர்கள் செய்த ஒரு சில வினைகளின் பயனை இவர் அனுபவித்து வருவதையும் சொல்கிறது.

மனநிலையில் உண்டாகியிருக்கும் பாதிப்பு என்பது லேசாகத்தான் உள்ளது. அதனை மிகப் பெரிய விஷயமாக எண்ணி பயம் கொள்ளாதீர்கள். அதையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. இரண்டில் கேது, எட்டில் ராகு என்ற அம்சம் இருப்பதால் இவரால் தனித்து பணம் சார்ந்த விவகாரங்களைக் கையாள இயலாது. காசு, பணம் விஷயத்தில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் தனித்து வியாபாரமோ, சுய தொழிலோ செய்ய இயலாது. அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் புதன் - சுக்கிரன் இணைவு என்பது பலத்தைத் தருகிறது.

நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சியுங்கள். அந்தப் பெண்ணின் துணையோடு இவரது வாழ்க்கையும் தொழிலும் சம்பாத்யமும் நல்லபடியாக அமையும். ஃபேன்சி ஸ்டோர், ஸ்டேஷனரி போன்ற தொழில்கள் இவருடைய ஜாதக பலத்தின்படி கை கொடுக்கும். 01.02.2021க்குப் பிறகு நேரம் கைகொடுப்பதால் சிறிய அளவிலான முதலீட்டுடன் இதுபோன்ற வியாபாரத்தைத் துவக்கி அவருக்குத் துணையாக நீங்கள் தொழிலை கவனித்து வாருங்கள். திருமணத்திற்குப் பின் மருமகளை நம்பி நீங்கள் உங்கள் மகனின் வாழ்வினை ஒப்படைத்து விடலாம்.

தொழில் தொடங்குவதற்கு முன் மகனை திருமலை திருப்பதிக்கு அழைத்துச் சென்று முடிகாணிக்கை செய்வித்து வெங்கடேசப் பெருமாளை சேவித்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகனுக்கு சுகமான வாழ்வு என்பது உண்டு என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது. ?நாங்கள் எங்கள் பகுதியில் மிகப்பெரிய அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறோம்.

என் மகன் தன்னோடு படித்த எங்களுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத எல்லோரும் எள்ளி நகையாடும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக முரண்டு பிடிக்கிறான். அவன் திருந்துவானா? ஏன் இப்படி? களத்திர தோஷம் உள்ளதா? கலப்புத் திருமணம் என்பது அவன் ஜாதகத்தில் உள்ளதா?
- அன்புஎழில், சிதம்பரம்.


களத்ர தோஷம் என்பது வேறு, கலப்புத் திருமண அம்சம் என்பது வேறு. நீங்கள் அனுப்பியிருக்கும் பிறந்த தேதி மற்றும் நேரத்தினை வைத்துக் கணிதம் செய்ததில் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கடக லக்னம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் காலை 06.05 மணிக்குப் பிறந்தால் மிதுன லக்னம்தான் வரும். கடக லக்னம் என்பது வரவே வராது.

முதலில் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறந்த நேரம் காலை 06.05 மணி என்பது சரியாக இருந்தால் அவரது ஜன்ம லக்னத்தில் சூரியன், சுக்கிரன் மற்றும் கேதுவின் இணைவு உண்டாகியிருக்கிறது. ஏழாம் பாவகத்தில் ராகுவின் அமர்வு உள்ளது. ஏழாம் பாவக அதிபதி குரு மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளார். இந்த நிலை களத்ர தோஷத்தைத் தரும்.

ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் கேதுவின் இணைவும் ஏழில் ராகுவின் சஞ்சார அம்சமும் கலப்புத் திருமண யோகத்தினையும் தருகிறது. அந்தஸ்து, கௌரவம் பாராமல் மகனின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அவரது ஜாதக பலத்தினையும் கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள். மகனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையட்டும்.

தொகுப்பு: சுபஸ்ரீ  சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்