SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவெண்காட்டான் அருளால் திருமணம் கைகூடும்!

2020-10-05@ 10:01:00

?17 வருட திருமண வாழ்க்கையில் என் கணவர், தன் குடும்பம் தன் மக்கள் என வாழ்ந்ததே இல்லை. தன் அண்ணன்கள் குடும்பம், அண்ணன் பிள்ளைகள் என்று, தான் சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்கே செலவழித்து வருகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து என் பெற்றோர் வீட்டிற்கே வந்துவிட்டேன். என் குடும்பப் பிரச்னை தீர வழி கூறுங்கள்.
 - ராணிப்பேட்டை வாசகி.


ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ஐந்தாம் பாவக அதிபதி சுக்கிரன் அமர்ந்திருப்பதும் ஏழாம் பாவக அதிபதி குருவின் அமர்வு நிலையும் சாதக பாதக அம்சங்களைக் கலந்து அளிக்கிறது. முதல் வாழ்வு விவாகரத்தாகி இரண்டாவது திருமண வாழ்வில் கணவர் சரியாக குடும்பத்தை கவனிப்பதில்லை என்று எழுதியுள்ளீர்கள். உங்கள் ஜாதகப்படி ஜென்ம லக்னாதிபதி புதன் எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாயோடு இணைந்திருப்பதால் பிரச்னைகள் உங்கள் கண்களுக்கு பூதாகரமாகத் தெரிகிறது. உங்கள் தாயார் சொல்வது போல் நீங்கள்தான் பொறுத்துப்போக வேண்டும். கணவர் தன் அண்ணன்களின் பிள்ளைகளுக்கு செலவு செய்வதால் உங்கள் பிள்ளைகளின் மீது பாசமில்லாமல் இருக்கிறார் என்று எண்ணக்கூடாது. குரு மற்றும் சனி ஆகியோரின் வக்ர சஞ்சார நிலை உங்கள் மனதில் இதுபோன்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. உங்கள் உறவினர்களில் 70 வயதினைக் கடந்த தம்பதியரை விரைவில் சந்திப்பீர்கள். அவர்கள் மூலமாக உங்கள் மனதில் உள்ள பிரச்னைகள் காணாமல் போகும். 01.05.2021 முதல் உங்கள் குடும்ப வாழ்வு சுமுகமாக செல்வதாக உணர்வீர்கள். வயதான முதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்து வாருங்கள். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு இறைவனின் அருளால் விரைவில் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

?வெளிநாட்டில் வேலை செய்யும் என் மகனுக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. எனக்கு பெரும் கவலையாக உள்ளது. உரிய வழி காட்டுங்கள்.
 - கிருஷ்ணமூர்த்தி, சீர்காழி.


விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாக உள்ளதால் தோஷம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் ஏழாம் பாவக அதிபதி சூரியன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பது போல ராசி சக்கரத்தில் குறிப்பிட்டிருந்தாலும் பாவக ஸ்புடத்தில் 12ல் அமர்ந்திருப்பதும் உடன் வக்ரம் பெற்ற புதன் இணைந்திருப்பதும் திருமணத்தில் தடையை உண்டாக்கி வருகிறது. இருப்பினும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் நன்றாக உள்ளதால் விரைவில் திருமணம் நடந்துவிடும். உங்கள் மகன் பிறந்த ஊரில் இருந்து வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தொலைதூரத்தில் உள்ள பெண்ணாக அமைவார். வெளிநாட்டில் வேலை செய்யும் உங்கள் மகனிடம் தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வரச் சொல்லுங்கள். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருவெண்காடு திருத்தலத்திற்குச் சென்று மகனின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவெண்காட்டு ஈஸ்வரனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகனின் திருமணம் முடிந்த கையோடு தம்பதியராக அழைத்து வந்து தரிசனம் செய்ய வைப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். பரமேஸ்வரனின் திருவருளால் உங்கள் மகனின் திருமணம் வருகின்ற ஜூன் மாத வாக்கில் நடந்துவிடும்.

?என் மகன் வெளிமூலம் பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுகிறான். மலம் கழிக்கும்போது ரத்தம் வருகிறது. அதற்கு எந்த கோயிலுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்?
 - அனுசுயா, திருப்பூர்.


ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. மூன்றாம் பாவகத்தில் சனியின் வக்ர சஞ்சாரமும், லக்னத்தில் கேதுவின் அமர்வும் எட்டாம் வீட்டில் சுக்கிரன் பெற்றுள்ள சாரமும் அவருக்கு இந்த சிரமத்தினைத் தந்திருக்கிறது. என்றாலும் பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம். தற்காலிகமாக மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டு வரச்சொல்லுங்கள். அவருடைய ஜாதகக் கணக்கின்படி 15.07.2021 வாக்கில் உடல்நிலை சரியாகிவிடும். சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டு வரச்சொல்லுங்கள். ஒரேயொரு துளசி இலையை பிரசாதமாகச் சாப்பிடுவதும் நல்லது. கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை 18 முறை சொல்லி ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வரச் சொல்லுங்கள். மாதந்தோறும் வருகின்ற மூலம் நட்சத்திர நாளில் ஏதேனும் ஒரு பிரம்மச்சாரிக்கு வஸ்திரம், தாம்பூலம் ஆகியவற்றுடன் போஜனம் அளித்து நமஸ்கரித்து வர அவரது உடல்நிலை சீரடைவதோடு உங்களின் எதிர்பார்ப்பான நிரந்தர உத்யோகம் என்பதும் வெகுவிரைவில் சாத்தியமாகிவிடும். “ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தநம்.”

என் மகளிடம் பிடிவாதம், கோபம், எடுத்தெறிந்து பேசுவது என்பது அளவிற்கு அதிகமாக உள்ளது. அவளது ஜாதகத்தில் சனி, ராகுவின் சேர்க்கையை நினைத்து மிகவும் பயமாக உள்ளது. அவளது வாழ்க்கை நன்றாக அமைய நான் என்ன செய்ய வேண்டும்?
 - உமா, சென்னை.


அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. லக்னம் மற்றும் ராசிக்கு அதிபதி ஆகிய செவ்வாய் ஜென்ம லக்னத்திலேயே ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் இயற்கையிலேயே மிகவும் வீரம் கொண்டவராக இருப்பார். ஆண்மகனாக பிறக்க வேண்டியது பெண்ணாகப் பிறந்துவிட்டாள் என்று நீங்கள் எண்ணுகின்ற வகையில் அவரது செயல்பாடுகள் அமையும். சனி மற்றும் ராகு இணைந்திருப்பது போல ராசிக் கட்டத்தில் காணப்பட்டாலும் பாவக ஸ்புடத்தில் ராகு இடம் மாறி அமர்ந்துள்ளதால் நீங்கள் கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை. பாவகச் சக்கரத்தில் மூன்றில் ராகுவும் ஒன்பதில் கேதுவும் அமர்ந்திருப்பது அவரது மன உறுதியை இன்னமும் வலுப்படுத்தும். உங்கள் மகளை சாதாரண பெண்கள் போல் எண்ணாமல் ஆண்மகனாக எண்ணிப் பாருங்கள். அவரது தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் பக்கபலமாக துணை நில்லுங்கள். உத்யோக ஸ்தானம் என்பது மிகவும் வலிமையாக உள்ளதால் நன்றாக படிக்க வைத்து உயர்ந்த உத்யோகத்திற்கு அனுப்புவதை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய முயற்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலே நடவடிக்கைகளில் மாற்றத்தைக் காண இயலும். வேகமும் வீரமும் அதிகம் கொண்டவர் என்பதைத் தவிர உங்கள் மகளின் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. செவ்வாய் தோறும் சுப்ரமணிய சுவாமிக்கு நெய் விளக்கேற்றி வைத்து ஸ்கந்த குரு கவசம் சொல்லி வணங்கி வாருங்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர நாளில் ஒருபொழுது விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசித்து மகளின் பெயரில் அர்ச்சனை செய்து வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். வெகுசிறப்பான எதிர்காலம் என்பது உங்கள் மகளுக்காக காத்திருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்