SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டியதை தந்திடும் வேங்கடவன் தலங்கள்

2020-10-01@ 11:23:26

இடர்தீர்த்த பெருமாள் -நாகர்கோவில்

நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம் பகுதியிலுள்ளது இடர்தீர்த்த பெருமாள் கோயில். இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருட்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் தென்னகத்தை ஆண்டு வந்த குலோத்துங்க சோழ மன்னன் நாக தோஷத்தால் அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பலனளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசித்து வந்தான். அன்றிரவு அவனது கனவில் திருப்பதி தேவஸ்தானத்தில் நின்றருளும் வேங்கடவன் வந்தார். உனது இடர் தீர்ந்து போகும் இனி அச்சம் வேண்டாம் என்று கூறினார். அதன்படி அவனது இடர் தீர்ந்து போனது. தான் கனவில் கண்ட அதே ரூபத்தில் வேங்கடவனுக்கு சிலை வடிவம் கொடுத்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கோயில் எழுப்பினான். இடரை தீர்த்தவர் என்பதாலே குலோத்துங்க சோழ மன்னன், இத்தல பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் என நாமம் இட்டு வணங்கினான்.

மூலவர்: இடர்தீர்த்த பெருமாள்
தாயார்: ஸ்ரீ தேவி, பூ தேவி.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கோயில் உள்ளது.

ஆப்பூர்

சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இங்கு மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. ஆச்சரியமாக இத்தல பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.
மூலவர்: வெங்கடாஜலபதி

திருவாழ்மார்பன்: திருப்பதிசாரம்

சப்த ரிஷிகள் கூடி யாகம் செய்தனர். அவர்கள் மகா லட்சுமியுடன் மகாவிஷ்ணு காட்சி தரவேண்டினர். அதன் பேரில் மகாலட்சுமியை மார்பில் ஏந்தியபடி மகாவிஷ்ணு காட்சியளித்தார். திருமகளை மார்பில் வாழ வைத்ததாலே இத்தல பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்ற நாமம் உண்டாயிற்று. குறுநாட்டுக்காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவெண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

குழந்தை வரம் வேண்டி கணவன், மனைவி இருவரும் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு காட்சியளித்த நம்பியம் பெருமாள்‘‘ கலங்காதே, யாமே உமக்கு மகனாக பிறப்பேன். பருவம் பதினாறு ஆகும் போது நீ உன் மகனை அழைத்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்கு செல்ல வேண்டும் என்றார்.

நம்பி அருளால் உதயநங்கை கருவுற்றாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அந்தக்குழந்தை தான் நம்மாழ்வார். பெருமாளின் அறிவுறுத்தலின்படி அந்த குழந்தையை ஆழ்வார் திருநகரி அழைத்துச் சென்று புளியமரத்தடியில் நிற்க. நம்மாழ்வார் திடீரென ஞானமுத்திரையுடன் பத்மாசனத்தில் எழுந்தருளினார்.

மூலவர்: திருவாழ்மார்பன்
தாயார்: மரகதவல்லி நாச்சியார், சுவாமியின் மார்பில் மகாலட்சுமிநாகர்கோவிலிருந்து 4 கி.மீ தொலைவில் நெல்லை செல்லும் சாலையில் வடக்குப்புறமாக உள்ளடங்கிய ஊர் திருப்பதிசாரம்.

ஸ்ரீவெங்கடாசலபதி - வாசுதேவ நல்லூர் பெருமாள் பெயரிலேயே அமைந்திருக்கும் திருத்தலமாக வாசுதேவநல்லூர் உள்ளது. ஸ்ரீதேவி - பூதேவி ஸமேத ஸ்ரீவெங்கடாசலபதி இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். அலர்மேல்மங்கைத் தாயார் தனிச்சந்நதியில் அருள் புரிகிறார்.
மூலவர்: ஸ்ரீவெங்கடாசலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி
மதுரை - தென்காசி சாலையில்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர்
அமைந்திருக்கிறது.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கும் சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும். உற்சவரின் திருநாம ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகும். ஒவ்வொரு கோயிலிலும் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு பிரதி திருவோண நட்சத்திரத்தன்று கருட சேவை சாதிக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்களின் மனக்குறை மட்டுமல்லாது மன நோயாளிகள் பூரணமாக நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.மூலவர் - வெங்கடாஜலபதி

ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி நன்னகரம்

ஸ்ரீதேவி - பூதேவி ஸமேதராக ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஸ்தலமாக நன்னகரம் விளங்குகிறது. குலசேர பாண்டியன் எனும் பெயருடைய பாண்டியன் ஒருவன் அரசாண்ட காலத்தில் கர்க முனிவர் அவனுடைய அரசவைக்கு எழுந்தருளினார். அவன் மனம் குழப்பத்திலும் துயரத்திலும் சூழ்ந்திருந்த காலம் அது.

அப்போது கர்க மஹரிஷி, ‘‘உன் மனத்திலிருக்கும் கவலைகளும் துயரங்களும் நீங்குவதற்கு, தென்வாரி வளநாடு சென்று அங்கே திருவேங்கடமுடையானுக்கு ஒரு கோயிலை நிர்மாணிப்பாயாக’’ என்று உத்தரவிட்டார். அவ்வண்ணமே, முனிவரின் ஆணையைச் சிரத்தில் தரித்துக் குலசேகரன் இவ்வூரிலிருக்கும் திருக்கோயிலை எழுப்பினான். (கர்க்க மஹரிஷியின் கோத்திரத்தில் வந்த முனிவர் ஒருவரையே இங்கு கர்க முனிவர் என்று கூறுகிறார்கள் எனலாம்.

திருநெல்வேலி - தென்காசியிலிருந்து வழியாக நன்னகரம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலரதி கோயில் இருக்குமிடத்தை அடையலாம்.
மூலவர்: ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி

ஸ்ரீநரசிம்மர் - கீழ்ப்பாவூர்

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்து வரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் அவர் கூறினார்.

நால்வரும் பெருமாளைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். அந்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. இதையடுத்து பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்யா சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். பிற்காலத்தில் பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர். அந்தப்புனிதத்தலமே தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.
மூலவர் : நரசிம்மர்.
தாயார் : அலர்மேல்மங்கை.

திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் கீழப்பாவூர் உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் - கருங்குளம்

நெல்லைச் சீமையிலிருந்த சுபகண்டன் எனும் சிற்றரசன், தீராத ஒரு நோயால் அவதியுற்றான். “திருமலைக்குச் சென்று அங்கு விரதமிருந்து வேங்கடவனை வழிபட்டால் நோய் விலகும்” என்று அவனது அரண்மனைப் புரோகிதர் அறிவுரை கூறினார். சுபகண்டனும் அங்ஙனமே திருமலைக்குச் சென்று விரதமிருந்து பெருமாளை வணங்கினான். சுபகண்டனுக்கு நோய் தீர்ந்தது.

ஒரு நாள் இரவு, அப்பன், சுபகண்டனின் கனவில் எழுந்தருளினார். “அன்பனே! நமக்கு ஒரு சந்தனத்தேர் செய்து சமர்ப்பாயாக!” என்று சோதிவாய் திறந்து கூறினார். சுபகண்டனும் அவ்வாறே ஒரு சிறிய சந்தனத்தேர் செய்து சமர்ப்பித்தான். முடிவில் சந்தனத் தேர்க்கால்கள் மிச்சமாயின. பெருமாள் மீண்டும் கனவில் வந்து தோன்றி, “தெற்கே நம்மாழ்வார் அவதரித்த மீதாமிரபரணிக் கரையில் இந்த இரு தேர்க்கால்களையும் எழுந்தருளப்பண்ணி ஒரு கோயில் கட்டுவீராக. அங்கே மார்த்தாண்டேஸ்வரம் எனும் ஊரில் நாமே இந்தத் தேர்க்கால்களின் வடிவில் எழுந்தருள்வோம்.

திருமலையில் நமக்குச் செய்யும் பிரார்த்தனைகளை அங்கும் செய்து கொள்ளலாம்.” என்று வழிகாட்டினார்.அதன்படி சுபகண்டன் தாமிரபரணிக் கரையில் இருந்த மார்த்தாண்டேஸ்வரத்தை(கருங்குளம்) அடைந்தான். அங்கிருக்கும் மார்த்தாண்டேஸ்வரராகிய சிவபெருமானை வணங்கி தனக்கு வழிகாட்டும்படி வேண்டிக் கொண்டான்.

ஒரு பசுங்கன்று சுபகண்டனை வழி நடத்திக்கொண்டு ஓர் ஆலயத்தின் முன் நின்றது. எம்பெருமானுக்காகவே புதிய ஆலயம் ஒன்று ஆயத்தமாக இருந்தது. இப்படி ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஆலயத்தையும், அதைச் செய்து முடித்த அடியவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டியருளிய அப்பனின் பேரருளையும் எண்ணி வியந்தான். வகுளகிரி என்னும் சிறிய குன்றின் மேல் கோயில் அமைந்திருக்கிறது.

மகிழ மலர் மாலையைத் தரித்திருப்பதால் நம்மாழ்வாருக்கு ‘வகுளாபரணர்’ என்பதும் திருநாமமாயிற்று. இப்பகுதியில் மகிழ மரங்கள் நிரம்பியிருந்ததால் வகுளகிரி என்று இந்தத் திருப்பதிக்குப் பெயராயிற்று.மறுநாள் பிரதிஷ்டையை நினைத்துக் கொண்டே சுபகண்டன் உறங்கியிருந்தான். விடியற்காலையில் கண்விழித்த பொழுது, ஏற்கனவே பெருமான் எழுந்தருளிவிட்டதை (பிரதிஷ்டையாகி விட்டதை) அறிந்து கொண்டான்.

பெருமாள் தன்னைக் கருவியாகக் கொண்டு தானே வந்து கோயில் கொண்டதை எண்ணியெண்ணி மகிந்தான்,தாமிரபரணியாற்றில் புனித நீராடி, இக்கோயிலுக்கு வழிகாட்டிய ஸ்ரீகுலசேகராம்பிகை ஸமேத மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி, அவரிடம் உத்தரவு பெற்று, வகுளகிரி மலையின் மீதிருக்கும் பெருமாளை வணங்க வேண்டும் என்று கூறுவர்.

இச்சிவாலயம் அடிவாரத்தில் உள்ளது.வகுளகிரிக் குன்றின் மேலிருக்கும் திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் என்று பெயர். அதன் வலப்பக்கம் இருக்கும் திருக்கோயிலுக்கு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் என்று பெயர்.மூலவர்: ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்.திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்வார்திருநகரி அருகில் கருங்குளம் உள்ளது.

ஸ்ரீவெங்கடாசலபதி - கிருஷ்ணாபுரம்

16ம் நூற்றாண்டு கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்ப கலைக்கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடுகிறது.

அவன் எண்ணத்தில் உருவான கற்பனை கதை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகளை வீரனின் விலாவில் வடியும் ரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. அந்த சிலை வடிவை தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

மூலவர் : வெங்கடாசலபதி
தாயார் : பத்மாவதி
திருநெல்வேலிச் சீமையில் திருநெல்வேலியிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ. தொலைவில் தாமிரபரணியாற்றின் கரையின் தென்பகுதியில் கிருஷ்ணாபுரம் அமைந்திருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் புன்னையடி

முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் ‘‘புன்னையடி’ என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னை மரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார்.

எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர். கடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில் ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.
மூலவர்: ஸ்ரீனிவாசப்பெருமாள்.
தாயார்: ஸ்ரீ தேவி, பூதேவி
திருச்செந்தூரிலிருந்து சாலை வழியாக வன திருப்பதி என்றழைக்கப்படும் புன்னையடியைச் செல்லலாம்.

திருவேங்கடநாதப்பெருமாள் இடையக்கோட்டை திருவேங்கடநாதப்பெருமாள் தானே வெளிப்பட்ட திருமேனியுடன் (ஸ்வயம்வ்யக்த விக்கிரகம்) வேடசந்தூருக்கு வடமேற்காக 23 கி.மீ. தொலைவிலிருக்கும் இடையக் கோட்டையில் அருள் புரிகிறார். இடையர் குலத்தில் கண்ணனாக அவதரித்த எம்பெருமான், மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இடையர் ஒருவருக்குத் தரிசனம் தந்து பூமியிலிருந்து வெளிப்பட்டார். ஸ்ரீதேவி-பூதேவியுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

மூலவர்: திருவேங்கடநாதப்பெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி
வேடசந்தூரிலிருந்து வடமேற்காக 23 கி.மீ தொலைவில் உள்ளது இடையக்கோட்டை.

ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் சிந்துப்பட்டி

விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட சிந்துப்பட்டியின் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புளிய மரங்கள் அடர்ந்திருந்த இப்பகுதியில், சந்திரகிரி பகுதியிலிருந்து வந்த நாயக்கர்கள் தங்கள் திருவாராதன மூர்த்திகளை (பூஜை செய்து வந்த மூர்த்திகளை) பெருமாள் உத்தரவின்படி பிரதிஷ்டை செய்தார்கள்.

பெருமாளின் திருநாமம் ஸ்ரீவெங்கடேசன், தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேல் மங்கை என்பதாம்.கோயிலின் த்வஜஸ்தம்பத்தில்(கொடி மரத்தில்) அழகர் மலையைப் போல் கருப்பண்ண சுவாமி எனும் காவல் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு
நோக்கியபடி அருள் புரிகிறார்.

மூலவர்: ஸ்ரீவெங்கடேசன்
தாயார்: ஸ்ரீஅலர்மேல் மங்கை
வழி: மதுரை - திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் சிந்துப்பட்டி அமைந்திருக்கிறது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் - திண்டுக்கல் (மலையடிவாரம்)

திண்டுக்கல் மலையடிவாரத்தில் அழகிய கோயிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அலர்மேல் மங்கைத் தாயார் என ஸ்ரீமகா லட்சுமி தாயார் சந்நதிகள் இருக்கின்றன. திண்டுக்கல் மலையடிவாரத்தில் இருக்கிறது இந்தக்கோயில்.

மூலவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள்
தாயார்: அலர்மேல் மங்கைத்தாயார்
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி மலையடிவாரத்திற்கு உள்ளது.

ஸ்ரீவெங்கடாசலபதி-தலைமலை

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவெங்கடாசலபதி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இங்கு அருள் புரிகிறார். 850 அடி உயரமுள்ள இந்த, ‘தலைமலை’ எனும் திருமலை சிரகிரி என்று கூறப்படுகிறது. இம்மலையில் பல தெய்வீக மூலிகைகள் மலிந்திருப்பதால் இம்மலையின் முதன்மை கருதியே ‘தலை
மலை’ என்று பெயரிட்டனர் போலும்.

மூலவர்: ஸ்ரீவெங்கடாசலபதி
தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி
நாமக்கல் மலவட்டத்தில்(செவிந்தப்பட்டி அஞ்சல், தொட்டியம் வழி) முசிறி-நாமக்கல் பாதையில் மணமேடு என்ற கிராமத்தில் வடக்குப் பக்கம் வந்தால், நீலயாம்பட்டி என்னும் ஊர் வருகிறது. நீலயாம்பட்டியிலிருந்து ஒரு மணி நேரம் நடந்து சென்றால் மலையடிவாரத்தை அடையலாம்.

ஸ்ரீவெங்கடாசலபதி - சாத்தூர்

விருதுநகருக்குத் தெற்கில் 26 கி.மீ. தொலைவில், வைப்பாறு எனும் புண்ணிய நதியின் வடகரையில் சாத்தூர் ஸ்ரீதேவி - பூதேவி சமேத வெங்கடாசலபதி திருக்கோயில் அமைந்திருக்கிறது.அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருக்குளம் என்று அமைந்த திருக்கோயில் இது. எம்பெருமானை சாத்தூரப்பன் என்று வாத் ஸல்யத்துடன் அழைத்துச் சேவிப்பது மரபு. எட்டையபுரம் ஜமீன்தார்கள் இத்திருக்கோயிலில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இத்தலத்து எம்பெருமானைப் பாடியிருக்கிறார். மகாகவி சுப்பிரமணிய பாரதியும் இந்தப் பெருமாளை வணங்கியிருக்கிறார்.

மூலவர்: ஸ்ரீவெங்கடாசலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி
விருதுநகரிலிருந்து 26 கி.மீ. தொலைவில்
சாத்தூர் அமைந்திருக்கிறது

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்