SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாகவி பாரதியின் தெய்வீகப் பார்வை

2020-10-01@ 10:54:28

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53

நம்முடைய நாடு சுதந்திரம் பெற, தன் பாட்டு திறத்தால் பெரும் பங்காற்றியவர் மகாகவி பாரதியார். அதனால் அவரை ‘தேசிய கவிஞர்’ என்றே பலபேர் தெரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் பாரதியார் பல கோணங்களில் பளிச்சிடும் ஒரு வைரம்.மறுமலர்ச்சிக் கவிஞராக, பெண்விடுதலைப் பாவலராக, சீர்திருத்தவாதியாக, தெய்வீகப் புலவராக, தத்துவ வித்தகராக, காவியக் கவிஞராக, விடுதலை வீரராக  எக்கோணங்களில் பார்த்தாலும் முழுமையாகவே அவர் முகம் காட்டுகிறார். அவருடைய தெய்வீகப்பற்று ஆன்மிக அருளாளர்களின் குரலாகவே அவரது |கவிதைகளில் எதிரொலிக்கிறது.

பக்தி உடையர் காரியத்தில் பதறார்!
மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மையைப்போல்
மெல்லச் செய்து பயனடைவார்!
சக்தி தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்?
வித்தைக்கு இறைவா! கணநாதா
மேன்மைத் தொழிலில் பணிணையே!

‘அவனின்று ஓர் அணுவும் அசையாது’ என்னும் நம் இந்திய ஞானியரின் இணையற்ற வாசகமே பாரதியாரின் பாடல்கள் அனைத்திற்கும் அடிநாதமாக ஆதார சுருதியாக விளங்குகிறது.ரஷ்ய நாட்டின் புரட்சியைப் பாடும்போது கூட ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டிடை கடைக்கண் வைத்தாள். அங்கே ஆகா என் எழுந்ததுபார் யுகப்புரட்சி !’ என்று பாடுகிறார் என்றால் அவர் எழுப்பிய கவிதை மாளிகைக்கு அடித்தளம் ஆன்மிகமே என்று அறுதியிட்டுக் கூறலாம் அல்லவா! பாரதியை ‘வேதாந்த சிமிழுக்குள் அடக்கி விடாதீர்கள்’ என்று சிலர் கூறினாலும் வேதாச்த்தையே சிமிழுக்குள் அடைத்த வேந்தர் அல்லவா மகாகவி !

‘ என் கவிதை ஆற்றலின் ஜீவ நாதமாக தெய்வத்தின் அருள் அல்லவா விளங்கு
கிறது?’ என்று பாடுகின்றார் பாரதியார்.
‘பாட்டினிலே உரைப்பதுவும் அவள் சொல்லாகும்’ என்றும்
‘சக்தி தாசன் என புகழ் வளரும் சுப்ரமண்ய பாரதி’ என்றும்தன்னை இந்த உலகிற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். வாழையடி வாழையாக பாரத மண்ணில் தோன்றி வரும் ஞான பரம்பரையிலே நானும் ஒருவன் ஒன்று அறுதியிட்டு உறுதியாக ‘பாரதி அறுபத்து ஆறு’ என்ற பாடலிலே தன்னை அறிமுகம் செய்து கொள்கின்றார்.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
 யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்!
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணி என் மாசக்தி வையத் தேவி !

பரந்து விரிந்த பாரதியாரின் பக்திப் பார்வையில் இந்த பாரத தேசமே அவருக்குப் பராசக்தியாகத் தெரிந்தது. நாடு பெறப்போகும் சுதந்திரமும் அவருக்கு சுதந்திர தேவியாகவே சுடர்விட்டது.பரம் பொருள் ஒன்று தான் ! நாம் அனைவரும் அப் பரம்பொருள் பெற்றெடுத்த பாலகர்கள்! நமக்குள் ஏற்றத் தாழ்வுகள் அடியோடு இல்லை! சரிநிகர் சமானமாக ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி வாழ்வோம்! இவ்வுலகம் இன்பக்கேணி! என்றுபாடும் பாரதியார் ஒரு படிமேலே போய் நம் புராண இதிகாச நிகழ்வுகள் எல்லாம் பாரத தேவியின் செயல்கள் என்றே பாடுகின்றார்.அவரின் தெய்வீக பக்தியே அரும்பாகி, மொட்டாகி, மலராகி தேசபக்தியாகக் கனிந்தது.

அவரின் கவிதைகளுக்கு ‘தேச தேவாரம்’ என்றே திருப்பெயர் சூட்டி மகிழலாம்.வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று பாட்டின் வகைகள் நான்கும் பொருந்திவர, ஒரு பாட்டின் முடிவு வார்த்தையே அடுத்த பாட்டின் ஆரம்பமாக அமைய அந்தாதி முறையிலேயே பாரதியார் பாடிய அற்புதப் பனுவலே விநாயகர் நான்மணிமாலை. இமைப் பொழுதும் பயனின்றி இராமல் இலக்கியத்திலே ஈடுபடுதலும், இந்நாட்டிற்கான பணிகளிலே உழைத்தலும், இறை அருளிலே ஒன்றுதலும் ஆகிய மூன்றையும் விநாயகரிடம் தன் முறையீடாக வைக்கிறார்.

நமக்குத் தொழில் கவிதை!
நாட்டிற்கு உழைத்தல்!
இமைப்பொழுதும் சோராதிருத்தல்  
உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம் குடியை
வாழ்விப்பான்!
சிந்தையே! இம்மூன்றும் செய்.

கணபதி, கந்தன், தேவி, கண்ணன், கதிரவன், கலைமகள் என பல மூர்த்தியர் பற்றி பக்திப் பரவசம் ததும்ப பாடல்கள் பல பாடியுள்ள பாரதியார், மகாபாரதத்தின் ஒரு பகுதியான பாஞ்சாலி சபதத்தை உணர்ச்சி பொங்கி வழியும் உன்தை காவியமாகவே வடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடியுள்ள பரந்தாமனை- கண்ணபெருமானை தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு குழந்தை, காதலன், காதலி, விளையாட்டுப் பிள்ளை இவ்வாறாக பன்னிரண்டு கோணங்களில் கண்டு ‘கண்ணன் பாட்டு’ என்ற காவியத்தையும்
வடித்துள்ளார்.

பாஞ்சாலி சபதத்தின் காப்புச் செய்யுளாக அவர் பாடும் துதி ‘பிரம துதி! உருவம் , தொழில், பெயர் என ஒன்றும் இன்றி விரவும் மெய்ப் பொருளே பிரம்மம் என்று பேசப்படுகிறது.அத்தகைய ஒன்றை கடவுள் வணக்க முதற்பாடலாகப் பாடுவதே பாரதியாரின் பரம் பொருள் பக்தியை  ஆன்மிக ஆழத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.

‘ஓம்’ எனப் பெரியோர்கள்  என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர்
தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே  மனம்
நாடறியதாய்  புந்தி தேடரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய்- வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைந்தாய்
நின்றிடும் பிரம்மம் என்பார்!  அந்த
நிர்பலப் பொருளினை நினைத்திடுவேன்
நன்று செய் தவம் யோகம்- சிவ
ஞானமும் புந்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவ சக்தி  எனை
மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூல் இதுதான்  புகழ்
ஏய்ந்தினி தாய் என்றும் இலகிடவே!

விசுவ ரூபமாய் விண்ணை மறெத்து கிளைகள் வியத்து, விழுதுகள் பரப்பி விளங்கும் ஆலமரம், ஒரு நுண்ணிய விதைக்குள் தன்னை மறைத்த தன்மை போல பாரதியாரின் ஆன்மிகச் செறிவை மேற்கண்ட ஒரு காப்புச் செய்யுளே நமக்கு காண்பிக்கிறதல்லவா !செந்தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு தெய்வீக வாழ்த்துப்பாடலை மகாகவி பாரதியார் மட்டுமே பாடியுள்ளார் என்பது நாம் அறிந்து கொண்டு ஆனந்தப் பட வேண்டிய அற்புதமான ஒரு அம்சம்.

ஔவையாரின் ஆத்திச் சூடியைப் போல் பாரதி தமிழ் உலகிற்கு அளித்த ஒரு அரிய கொடை ‘புதிய ஆத்திச்சூடி’அந்த புதிய ஆத்திச்சூடி நூல்தான் புதிய கடவுள் வாழ்த்து ஒன்றை தன் மணிமுடியில் சூடி இருக்கிறது.பாரதியாரின் அந்த புதுமைப்பாடல். தேசிய பாரதியின் இந்த தெய்வீகப் பார்வையே ஒருமைப் பாட்டின் உன்னதத்தை  உயரிய ஆன்மிக மகத்துவத்தை நம் அனைவருக்கும் அனுதினமும் போதிக்கும்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்